PUBLISHED ON : ஜூன் 07, 2026

முன்கதைச் சுருக்கம் : தன் அத்தை மகன், ராஜாமணியை சந்திக்க, அவன் வீட்டுக்கு சென்ற நித்யா, அங்கு அவன் இல்லாததால், அத்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள். வீட்டில் பணிபுரிந்த சகுந்தலாவை, தன் அப்பா ரகசியமாக திருமணம் செய்து கொண்ட தகவலை தெரிவித்தாள். 'இதுபோல் நடக்கும் என்று எதிர்பார்த்தது தானே' என்று அதை அலட்சியப்படுத்தினாள், அத்தை.
நித்யாவின், அத்தை மகன், ராஜாமணியை ஒரு கட்டத்திற்குள் அடக்கி விட முடியாது; எந்தக் கட்டத்திற்குள்ளும் அடங்காதவன் அவன். மேகம் மாதிரி உருமாறிக் கொண்டே இருப்பவன். மேகத்தை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு, ராஜாமணி ஞாபகம் தான் வரும். அவன் அமைதியானவனோ, துள்ளிக் குதிப்பவனோ இல்லை. ஆர்ப்பரிக்கக் கூடியவனா என்றால், அதுவுமில்லை. கோபக்காரனா என்றால், அவன் கோபப்பட்டே, அவள் பார்த்ததில்லை.
ராஜாமணியும், நித்யாவும் ஒன்றாகத்தான் வளர்ந்தனர். அவன், லயோலா கல்லுாரியில், பி.காம்., சேர்ந்த போது, நித்யா வீட்டில் தங்கியிருந்து தான் கல்லுாரிக்குப் போய்க் கொண்டிருந்தான்.
ராஜாமணியின் அப்பாவுக்கு அடிக்கடி 'டிரான்ஸ்பர்' ஆகும் உத்தியோகமானதால், அவனை தன் அண்ணனிடம் தான் விட்டு வைத்திருந்தார், அவன் அம்மா, அதாவது, நித்யாவின் அத்தை.
'நீங்க நல்லா கண்டிஷனா வளர்ப்பீங்கண்ணே... உங்ககிட்ட இருந்தா, என் பையன் கெட்டுப்போக மாட்டான்!'
அத்தை சொன்ன மாதிரி, ராஜாமணியை கண்டிஷனாகத் தான் வளர்த்தார், அப்பா. கல்லுாரிக்கு போகும்போது, எண்ணி எண்ணித்தான் காசு கொடுப்பார்.
அவனது படிப்பிலும் தலையிட்டார், அப்பா. விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க ஆசைப்பட்டவனை வற்புறுத்தி, பி.காம்., சேர வைத்தார்...
'அது என்னடா, விஷுவல் கம்யூனிகேஷன். இந்த மாதிரி கூத்தாடிப் படிப்பையெல்லாம் விட்டுட்டு, அழகா ஆபீசராகுற வழியப் பாரு...' என்றார்.
இத்தனைக்கும் அத்தையும், மாமாவும் தான் அவனது படிப்பிற்கும், சாப்பாட்டிற்கும் பணம் அனுப்பினர். ஒரே பையன் என்று பார்த்துப் பார்த்து வளர்த்தனர். அவனுக்கு எந்தக் குறையும் வைக்கக்கூடாது என்று நினைத்தனர். அவன் ஏதாவது கேட்க மாட்டானா, வாங்கித் தர மாட்டோமா என்று ஏங்கினர். ராஜாமணி புத்தகங்களைத் தவிர வேறு எதுவுமே வாங்கியதில்லை. மற்றொரு சமயம், மாமா அவனுக்கு இருசக்கர வாகனம் ஒன்று பதிவு செய்வதற்காக வாகன விற்பனை நிலையம் சென்று போன் செய்தார்.
'உனக்கு என்ன கலர் வண்டி வேணும்?'
'என்ன வண்டிப்பா?'
'டூ-வீலர்!'
'என்ன விலைப்பா?'
'லட்சத்து நாப்பதாயிரம் ரூபாய்...'
'இப்போ இதெல்லாம் தேவையாப்பா? வண்டி இருந்தா, வீணாக ஊர் சுத்தத் தோணும். முதல்ல படிப்பை கவனிக்கிறேம்ப்பா. சம்பாதிக்கிறப்போ வண்டியெல்லாம் வாங்கிக்கிறேன்...' என்றான்.
எந்த அனாவசிய செலவும் அவன் செய்ததில்லை. தேவையற்று ஒரு பொருள் வாங்கியதில்லை.
'பற பற... உயரப்பற... இன்னும் மேலே பற!' என்பது தான் அவன் லட்சியம்.
இப்படி அவன் பேசியதையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான், நித்தியாவுக்குள்ளும் லட்சியங்கள் தோன்றின; உயரப் பறக்கணும் என்று நினைத்தாள்.
'டிகிரி முடித்த பிறகு, நான், 'பிலிம் இன்ஸ்டியூட்'ல தான் சேரப் போறேன்...' என்றான், ஒரு முறை.
நிச்சயம் அவன் எண்ணம் நிறைவேறும்; நிறைவேற வேண்டும் என்று நினைத்து கொண்டாள். அவனின் பேச்சிலும், பார்வையிலும் ஒரு கவித்துவம் உண்டு என்பதை அவள் அறிவாள். அது, அவனது செய்கைகளிலும் எதிரொலிக்கும்.
முதன்முதலாக அதை உணர்ந்த அந்த மழைநாளை நினைத்து பார்த்தாள், நித்யா. அப்போது, அவள், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவன் பட்டம் பெறப்போகும் நேரம். பள்ளி விடுமுறை நாள். தனக்கு மிகவும் பிடித்தமான கைப்பிடி சுவரில் அமர்ந்து, வெளியில் பெய்யும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், நித்யா. மழையில் தெப்பலாக நனைந்தவாறு, ராஜாமணி உள்ளே வந்து கொண்டிருந்தான். சட்டென்று, அமர்ந்திருந்த கைப்பிடிச்சுவரை விட்டிறங்கி, வாசலுக்கு வந்தாள்.
சுருள் சுருளான கேசத்திலிருந்து மழை நீர் முகத்தில் வழிந்தோட அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
'என்ன பண்ற?' என்று கேட்டான்.
'வேடிக்கை பார்க்கிறேன்...' என்றாள்.
'எதை?'
'மழையை!'
'வேடிக்கை பார்க்கவா, மழை?'
அவளுக்கு புரியவில்லை.
'வெளியே வா!' என்றான்.
'நனைஞ்சிடுவேனே?'
'நனையத்தானே மழை!'
'ஆஹா...' என்று உள்ளுக்குள் வியந்தாள்.
'நாம சின்னவங்களாக இருந்த போது காகிதத்தில் கப்பல் செய்து, ஓடி ஓடி மழையில் நனைந்து மிதக்கவிட்டதெல்லாம் மறந்திட்டியா?'
'எத்தனை அருமையான நாட்கள் அவை. அதே வயசு இருந்திருக்கக்கூடாதா?'
ஆழமான பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது.
'ஏன் இந்த வயசுக்கென்ன? மனசு அதே மனசு தானே? மனசென்ன முந்தியா போகும்? நம் உடலுக்கு வயசாகலாம், மனசுக்கு வயசாகாது!'
அன்று தான் அவனை முற்றிலும் புரிந்து கொண்டாள், நித்யா. குடும்பத்தில் எல்லாரையும் விட, அவன் தனித்துவமானவன் எனத் தெரிந்து கொண்டாள். தனித்தே நின்றான். அவனது அறிவாலும், ரசனையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டாள். தானும், அவனைப் போல் ஆக வேண்டும்; அவனைப் போல் சிந்திக்க வேண்டும் என்றே அவன் படித்த புத்தகங்களையெல்லாம் படித்தாள். படித்ததை, பார்த்ததை பற்றியெல்லாம் பேசினர்.
ராஜாமணி பி.காம்., முடித்ததும், ஜாம்ஷெட்பூரில் எம்.பி.ஏ., முடித்து விட்டு வந்தபோது, அவன் அப்பா, பணி ஓய்வு ஆகி, சென்னைக்கே வந்து சேர்ந்தார். மாமாவும், அத்தையும், நித்யா வீட்டின் அருகில் இருக்க வேண்டுமென்றே, அடுத்த தெருவில் வீடு வாங்கிக் கொண்டனர். நித்யா, கல்லுாரியில் நுழைந்த போது, ராஜாமணி, தன் கனவுத் தொழிற்சாலைக்குள் நுழைந்து, ஆதர்ச இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்து விட்டான்.
ராஜாமணி, நித்யா வீட்டில் தங்கி இருந்தவரை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பர். அவர்கள் பேசுவது பிடிக்காத, அம்மா எப்போதும் கடுகடுப்பாள்...
'இவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு தானே இந்த ஆட்டம் போடுற! அத்தை பையன்னா எப்பப் பார்த்தாலும் பேசிக்கிட்டே இருக்கணுமா? அப்படி என்னடீ பேச்சு இருக்குது உங்களுக்குள்ள?'
'ஒண்ணுமில்லம்மா. கதை, கவிதைன்னு...'
'ஒருநாள் உங்கப்பன் உன் முதுகுத் தோலை உரிக்கப் போறான். அப்பத்தான் தெரியும் உனக்கு...'
அந்த ஒரு நாளும், வந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த அப்பா, சத்தம் போட்டார்...
'கல்யாணத்துக்கு முன்னாலேயே என்ன பேச்சும், இழைசலும் வேண்டிக் கிடக்கு. எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறமா வெச்சுக்குங்க!'
அதைக் கேட்டதும் இவளுக்கு பகீரென்றது.
'கல்யாணமா, ராஜுவுடனா!'
நித்யாவால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அதுபோன்ற எண்ணம் அவளுக்குள் ஏற்படவே இல்லை. ராஜுவின் ஆங்கில ஆசிரியை, ஸ்வேதா ஹரீஷ் அவனை எப்படி உருவாக்கினாரோ அது போலத்தான், நித்யாவையும் உருவாக்கினான், ராஜாமணி.
மாற்றி யோசிக்கக் கற்றுத் தந்தவன்; வாழ்க்கை என்ற பயாஸ்கோப்பின் பல்வேறு கோணங்களைக் காட்டியவன், ராஜாமணி.
அறிவும், அழகும், அமைதியும், அடக்கமும் கொண்ட நிறைகுடம், ராஜாமணி. அப்படிப்பட்டவனை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள்?
அவளும், ராஜாமணியை விரும்பத்தான் செய்கிறாள்; நேசிக்கத்தான் செய்கிறாள். ஆனால், அந்த விருப்பமும், நேசமும் அப்பா சொன்ன மாதிரியோ, அத்தை - மாமா நினைக்கிற மாதிரியோ அல்ல.
இது வேறு வகையான நேசம்; வேறு வகையான விருப்பம். 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்பது போன்றது; அறிவார்த்தமானது. இப்படிப்பட்ட நேசத்தில் ஆண் - பெண் என்ற பேதம் எதுவும் கிடையாது. மேலும், சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தாலும், அவன் அனைத்தையும் கற்றுக் கொடுத்தாலும் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், ஒரு மூத்த அண்ணன் என்ற உணர்வு தான் தோன்றியதே தவிர, காதல் என்ற உணர்வு ஏற்படவே இல் லை.
இரண்டு நாட்களுக்கு பின், ராஜாமணி வீட்டுக்கு வந்த போது, இவளாகவே பேச்செடுத்தாள்...
'அப்பா ஏன், அப்படி பேசினார், ராஜு?'
'எப்படி?'
'எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறமா வெச்சுக்குங்கன்னு சொன்னாரே...'
'ஏதோ, அவருக்கு தோணினதை சொல்லியிருக்காரு...'
ஒரு பெரிய விடுதலை உணர்வுடன் கேட்டாள், அவள்.
'அப்படின்னா உங்களுக்கு தோணலை இல்லியா?'
'ஏன், உனக்கு தோணலையா, நித்யா?'
'இல்லை, ராஜாமணி. ஒருபோதும் உங்களை நான் அப்படி நினைத்ததே இல்லை!'
பட்டென்று போட்டு உடைத்து விட்டாள்.
உடைந்த சில்லுகள், அவன் நெஞ்சைக் கண்ணாடித் துண்டுகளாக அறுத்தன. நொறுங்கிப் போனான்.
'என்ன சொல்கிறாள், இவள்? என்னை நேசிக்கவே இல்லையா? விரும்பவே இல்லையா? நான், அவளை மனதினுள் வைத்து ஆராதித்துக் கொண்டிருப்பதைப் போல், அவள் என்னை ஆராதிக்கவில்லையா? அப்படியானால் இத்தனை நாளும் பேசியது, பழகியது?'
சட்டென்று தன்னை உதறிவிட்டுக் கொண்டான், அவன்.
'என்ன நினைப்பு இது? ஒரு சராசரி மனிதனைப் போல் இப்படியெல்லாம் நினைக்கிற அளவிற்கு கீழே இறங்கி விட்டேனா? அந்த அளவிற்கா பக்குவமற்றுப் போய் விட்டேன்? எப்பேர்பட்ட மனிதர்களும் இந்த விஷயத்தில் தடுமாறித்தான் போவரோ! ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்ல என்றாகுமோ! மாமன் மகள், அத்தை மகன் என்றால், காதலித்தே தீர வேண்டுமா என்ன? கல்யாணம் பண்ணிக்கொண்டே ஆக வேண்டும் என்பது கட்டாயமா அல்லது எழுதப்படாத சட்டமா?'
தன்னை நினைத்து வெட்கப்பட்டான். மிகவும் வேதனைப்பட்டான். நித்யாவின் மனதைப் புரிந்து கொள்ளாமல் தனக்குள் கற்பனைக் கோட்டை கட்டியதற்காக வருத்தப்பட்டான்.
'என்ன, ராஜு? ஏன் இவ்வளவு நேரம் பேசாமல் இருக்கீங்க?'
நித்யாவின் குரல் கேட்டு, தன்னை உலுக்கி விட்டுக் கொண்டான், ராஜாமணி.
'ஐயம் சாரி, நித்யா. வெரி சாரி...' என்றான்.
அவளுக்கு அழுகை வந்தது. உள்ளுக்குள் துக்கம் புரண்டது. சற்று முன் அவன்பட்ட அவஸ்தையை இப்போது அவள் படலானாள்.
'எப்பேர்ப்பட்ட மனிதன் இவன். இவன் மனதை நோகடித்து விட்டோமே! இவனை ஏன் என்னால் விரும்ப முடியவில்லை? ஒரு பெண் காதலிப்பதற்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் கொண்ட உன்னையே என்னால் காதலிக்க முடியவில்லை என்றால், வேறு யாரையும் என்னால் காதலிக்க முடியாது.
அம்மாவையும், அப்பாவையும், நித்தம் நித்தம் அவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தையும் பார்த்துப் பார்த்து, எனக்கு கல்யாணத்தின் மீதே நம்பிக்கை போய்விட்டது. வெறுப்புதான் வருகிறது. அப்பா மாதிரி ஆளைக் கல்யாணம் செய்து கொள்கிற பெண்ணின் வாழ்க்கை என்னவாகும் என்பது தெரிகிறது.
'ஆனால், ராஜு போன்ற ஒருவனோடு வாழும் வாழ்க்கை நிச்சயம் வரமாகத்தான் இருக்கும். ஆனால், முடியவில்லையே என்னால்?'
'ஐயம் சாரி, ராஜு. ரியலி வெரி சாரி...' என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
பதறிப்போனான், அவன்.
'என்ன நித்யா இது? இதுல உன் தப்பு என்ன இருக்கு? எதுக்காக இப்படி உடைஞ்சுப் போற?'
'உங்களை நினைக்கிற போதே, ஒரு பெரியண்ணன் நினைப்பு தான் வருதே தவிர, வேறு மாதிரி நினைக்கத் தோணலியே...' என்றாள்.
அவளின் குரலின் தொனியும், பேச்சும் அவனைப் பெரிதும் சங்கடப்படுத்தியது. ஒரு விநாடி அமைதியாக இருந்து பின், பேசத் துவங்கினான்...
'என்ன சொல்ற, நித்யா? காதல்ன்றது பூ பூக்குற மாதிரி. 'டக்'குன்னு மனசுக்குள்ள நுழையணும். யோசிச்சு யோசிச்சு கணக்கு போட்டு பார்த்தெல்லாம் வரக்கூடாது. என் மேல், நீ வெச்சிருக்கிற அன்பு எனக்கு புரியுது, நித்யா. அதை நினைத்தபடியே ஒரு மாமாங்கம் வாழ்ந்து விடுவேன்!'
சொல்லிய அவன் குரல் கரகரத்தது. மனது, நித்யாவிடமே நிலைத்து நின்றது. நித்யா பிறந்து, தொட்டிலில் இட்டுப் பேர் வைத்த நாளிலிருந்து, அவள் தனக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தான். சின்ன ரோஜாப்பூ மாலையாக தொட்டிலில் சுருண்டுக் கிடந்தவளைக் காட்டி, 'உன் பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்கா பாருடா, ராஜா...' என, அம்மா சொன்னது அடிமனதில் இன்னும் தங்கி இருந்தது.
— தொடரும்இ.ரங்கநாயகி
