தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (6)

உனக்காகவே நான்! (6)

உனக்காகவே நான்! (6)


PUBLISHED ON : ஜூன் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: நித்யா, பிறந்தபோதே, அவளது அத்தை மகன், ராஜாமணிக்கு தான், அவளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தனர், அவர்கள் இருவரது குடும்பத்தினரும். ராஜாமணி மனதிலும் அதே எண்ணத்தை வளர்த்திருந்தனர். ஆனால், நித்யாவோ, ராஜாமணியை, தன் மூத்த அண்ணனாக கருதுவதாக கூறியதும், முதலில் வருத்தமும், சங்கடமும் அடைந்தான், ராஜாமணி. பிறகு, நித்யாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தான், ராஜாமணி. தொ ட்டிலில் குழந்தையாக இருந்த நித்யாவை, அன்று எப்படி பார்த்தானோ, அதே மாதிரி தான் இன்றும் பார்த்தான். அவனுக்குள், நித்யாவைப் பற்றின ஆசையை ஊட்டி வளர்த்தது, அவனது அம்மா தான். அம்மா போட்ட விதை அது!

பசுமையாக அவனுக்குள் ஓங்கி வளர்ந்திருந்த விருட்சத்தை, தன் ஒரே வார்த்தையில் வெட்டி, வீழ்த்தி விட்டாள், நித்யா.

தன்னை உலுக்கி விட்டுக் கொண்டான்... 'சீ, என்ன இது? சராசரி மனிதன் போல் நினைக்கிறேன். நித்யாவிடம் சமாதானமாக பேசிவிட்டு, இப்படியெல்லாமா நினைப்பது? இந்த எண்ணம் இனி எட்டிப் பார்க்கவே கூடாது...' என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

நித்யா, பிளஸ்2 முடித்து, கல்லுாரியில் சேர்ந்து படிக்க விரும்பினாள். ஆனால், அவள் அப்பா, முட்டுக்கட்டை போட்டார். ராஜாமணி தான், அவளை கல்லுாரியில் சேர்த்து, படிக்க வைப்பதாக உறுதி அளித்த பிறகே, ஒப்புக் கொண்டார்.

நித்யாவை அழைத்து போய், கல்லுாரியில் சேர்த்து, அவள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்த்து, புது, 'டிரஸ்' வாங்கி கொடுத்தான்.

இன்று வரை அவள் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொண்டு வருகிறேனோ, இனியும் அதையே தொடர வேண்டும். நண்பனாய், சேவகனாய், நல்லாசிரியனாய் இருக்க வேண்டும். இதுவரை, அவள் நடந்து வந்த பாலைவனத்திலிருந்து மீட்டு, பசுஞ்சோலையை காட்டுபவனை கண்டுபிடிக்க வேண்டும். நித்யாவுக்கு ஏற்றவனாக, மனதைக் கவர்ந்தவனாக அமைய வேண்டும் என்று உறுதி எடுத்தான், ராஜாமணி.

அன்று முடிவு செய்ததை இன்று வரை கடைப்பிடித்தும் வருகிறான்.

ப ழைய நினைவுகளிலிருந்து மீண்டு, வீடு தேடி வந்த நித்யாவிடம் பேச, ஒரு நாற்காலியை நகர்த்தி, அவளை அமரச் சொல்லி, மறு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

''என்ன சொன்ன, திரும்ப சொல்லு?'' என்றான்.

''அப்பா, அந்த சகுந்தலா டீச்சரை திருக்கழுக்குன்றத்துல வச்சு கல்யாணம் செய்துக்கிட்டிருக்காரு!''

''சரி, அதுக்கென்ன இப்போ?''

''என்ன இப்படி சொல்றீங்க?''

''இது என்ன புது செய்தியா, நித்யா?''

''இல்ல கல்யாணமே பண்ணிக்குவாருன்னு நினைக்கல.''

''அதுவும் எதிர்பார்த்தது தானே. இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படறே! ஏற்கனவே இதுபோல் பேசித்தானே, மாமா உன்னை வெறுக்கவும் ஆரம்பிச்சாரு. உனக்கு செய்யுறதையெல்லாம் நிப்பாட்டுனாரு. நீ, யாருக்காக அப்பாவை எதிர்த்தே? உங்கம்மாவுக்காகத்தானே. ஆனா, அவுங்க அதைப் பாராட்டினாங்களா? உனக்கு ஆதரவாக ஒரு வார்த்தையாச்சும் பேசினாங்களா? வெறுப்பைத் தானே கொட்டினாங்க?''

எல்லாவற்றையும் கேட்டவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தாள், நித்யா.

''யோசிச்சுப் பாரு, நித்யா. இது, உன் அம்மாவோட பிரச்னை. அதில், நீ நுழைவதே தப்பு. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிரச்னை என்றால், அதை சரி பண்ணிக்கொள்ள வேண்டியவர்கள் அவர்கள் தான். யார் சொன்னாலும் மாறுபவர்களா அவர்கள்?''

அவள் சற்று யோசித்தாள்.

''சொல்லி யாரையும் திருத்த முடியாது, நித்யா. யாரையும் மாற்றி விடவும் முடியாது. அவரவர்கள் நிலைப்பாட்டில் அவரவர்கள் நிற்பர். தாங்கள் செய்வது தான் சரி என்று வாதாடுவர். முதலில் அவர்களை திருத்த நீ யார்?''

பளாரென்று கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது, அவளுக்கு. சட்டென்று, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

''என்ன அப்படி பார்க்கிறாய்? எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்க கற்றுக்கொள். முயற்சி செய். முயன்றால் முடியாததொன்றும் இல்லை.''

சற்றுத் தெளிந்தாள், நித்யா. அவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள்.

''நீ புரிந்து கொண்டுவிட்டாய், நித்யா. நிச்சயமாக உன் வீட்டுச் சூழலை உன்னால் நீந்தி கடக்க முடியும். நீந்திக் கடப்பது பெரிதல்ல. மூழ்கி முத்தெடுக்க வேண்டும். இனி, நீ படிப்பில் கவனம் செலுத்து. ஒரு வருஷம் பாக்கி இருக்கிறது. உன் இலக்கு டிகிரி எடுப்பதோடு நின்று விடாமல் மேலே, இன்னும் மேலே என்று போக வேண்டும். நீயும், சுதா மூர்த்தி மாதிரி, கமலா ஹாரிஸ் மாதிரி வருவாய் என்பது என் நம்பிக்கை; வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.''

உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ரப்பர் பந்து மாதிரி துள்ளி எழுந்தாள், நித்யா. முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பை எரிய விட்டது. உதடு பூஞ்சிரிப்பில் விரிந்தது.

''பத்து பாட்டில் குளூக்கோஸ் ஏறின மாதிரி இருக்கு. 'ஆல் தி பெஸ்ட்' கிளம்பு. உன், ஹிட்லர் அப்பா வருவதற்குள் வீடு போய் சேர்,'' என்று கூறி, நித்யாவை அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தான், ராஜாமணி.

படியிறங்கிய அவளது நடையின் வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான்.

நீ ரு பூத்த நெருப்பு என்பரே... அப்படித்தான், நித்யாவின் நினைப்பு அவனுக்குள் இருந்தது. யாகம் வளர்த்து முடித்த பின்பும் யாகக் குண்டத்தினுள் கணகணக்கும் அக்னியாக இருந்தான், அவன்.

சில நாட்கள் வெளியூர் எங்காவது சென்று வந்தால், ஒரு தெளிவு ஏற்படும் என்று நம்பினான், ராஜாமணி. எங்கு போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, மொபைல் போன் ஒலித்தது. டைரக்டரின் பெயரைக் கண்டதும் முகமும், மனமும் பளீரிட்டது.

''யெஸ் சார்,'' என்றான்.

''இந்த சார், மோரெல்லாம் வேணாம்ன்னு எத்தனைதரம் சொல்றது.''

''வேறு எப்படி சார்?''

''என்னை, பாலுன்னு கூப்பிடு.''

''சரி, சார்.''

''திரும்ப சாரா?''

''சாரி, பாலு.''

''அதுதான் சரி. நாம உடனடியா, குலுமணாலி கிளம்புறோம். நீ, நான், 'கேமராமேன்' கவுதம், மூணே பேர் தான்.''

''ஷூட்டிங்கா, பாலு,'' என்றான்.

''படிப்பிடிப்புக்காக, 'லொக்கேஷன்' பார்க்க,'' என்று சிரித்தார், பாலு.

''நானே, மனசு சரியில்லை. கொஞ்ச நாள் எங்கேயாவது வெளியூர் போனா நல்லாயிருக்கும்ன்னு நினைச்சேன். நீங்க கூப்புடறீங்க.''

''என்ன ஆச்சு?''

ஒரு விநாடி மவுனமாக இருந்தான். டைரக்டரே பேசினார்...

''ஏன், நித்யா கூட சண்டையா?''

''ஐயய்யோ, நித்யா கூட என்னால சண்டையெல்லாம் போடவே முடியாது. அவளும் அப்படிப்பட்ட பெண் இல்ல.''

''பின்ன?''

தயங்கி தயங்கி சொன்னான்.

''நித்யா, 'ரிஜெக்டட் மீ' பாலு.''

''வா...ட்?''

''என்னை அவள் அப்படி நினைக்கவே இல்லையாம். என்னை பார்க்கிற போதே ஒரு, 'பிக் பிரதரை' பார்க்கிற எண்ணம் தான் வருதாம்.''

''அவ மனசுல வேற யாராவது இருக்காங்களா?''

''அப்படியெல்லாம் இல்லை. நிஜமாகவே அவ என்னை அப்படி நினைக்கல. நான் தான் அவளை அப்படி நினைச்சுட்டு இருந்திருக்கேன்.''

''வேறு பிரச்னையாக இருந்தால் பேசித் தீர்க்கலாம். ஆனால், இதை எப்படி?''

''எப்படியும் முடியாது! அவ, மனசுல என்னைப் பத்தி வேறு ஒரு பிம்பம் இருக்கிறது தெரியாமல் நானாகக் கற்பனையை வளர்த்துக்கிட்டது என் தப்புதானே! நானே தான் சரி பண்ணிக்கணும்.''

''குலுமணாலி உன் மனசுக்கு இதமாக இருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்துல கார் வரும்.''

''ஓ.கே., பாலு. கார் வரும்போது நான் ரெடியா இருப்பேன். ''

மொ பைல் போனை, 'ஆப்' செய்து, சட்டைப் பையில் திணித்தபடி, ''அம்மா, சூடா ஒரு கப் காபி குடு. நான் துணியெல்லாம், 'பேக்' பண்ணிக்கிட்டு, குலுமணாலி கிளம்பறேன்.''

''நித்யாகிட்ட சொல்லிட்டியா?''

''இல்ல. போகும் போது சொல்லிட்டுப் போறேன்.''

''அதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு, நித்யா கூட, 'ஹனிமூன்' போக வேண்டிய இடம்.''

சடாரென்று அவன் முகம் மாறியது. எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி, மனதை ரணமாக்குவது தானே விதி செய்கிற சதி.

அவன் முகம் போன போக்கைப் பார்த்த அம்மா, திடுக்கிட்டாள்...

''என்னடா?''

''அம்மா, நித்யா பத்தின அந்த எண்ணத்தை இனிமேல் மறந்திடு.''

''என்னடா சொல்ற?''

''அம்மா, 'ப்ளீஸ்' புரிஞ்சுக்கோம்மா. ஆபீஸ்லேயிருந்து கார் வந்துடும். நான் கிளம்பணும். சுருக்கமா சொல்லணும்ன்னா, நித்யா என்னை ஒரு நண்பனாக கூட நினைக்கலம்மா. அண்ணனாக நினைக்கிறாளாம். என்னைப் பற்றின மாறுபட்ட எண்ணம் எதுவுமே கிடையாதாம். உடைச்சு சொல்லிட்டா. இதுக்கப்புறம் அவளைத் தொந்தரவு பண்றது நியாயமில்ல. நாம் அவ மேல வெச்சிருக்கிறது உண்மையான அன்புன்னா, அவ விருப்பத்தை மதிக்கணும். அவ விருப்பப்படுறதை அடைய செய்யணும். அவ்வளவு தான். நானும், உடைச்சு சொல்லிட்டேன். தயவு செய்து இதைப் பத்தி, நித்யா கிட்ட கேட்டு அவளை சங்கடப்படுத்தாத.

''அவ என்னைப் பெரியண்ணன்னு சொல்லிட்டா. அப்ப நீ அவளுக்கு அம்மா தானே! அத்தை என்பதை மறந்திட்டு, அம்மாவாக நடந்துக்க. பாவம், தாய்ப்பாசம் அறியாதவளுக்கு இனி தாயாக இரு. நான் திரும்பி வர்ற வரைக்கும், 'கப் சிப்'ன்னு உன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருமா. வந்தப்புறம் பேசிக்கலாம். கிளம்புறேன்மா. நித்யா கல்லுாரி போயிருப்பா. அங்கு போய் சொல்லிட்டு போறேன்,'' என்றபடி வெளியேறினான், ராஜாமணி.

' எ க்ஸ்க்யூஸ்மீ...' என்றவாறு, வகுப்பறை வாசலில் வந்து நின்ற ராஜாமணியை, அத்தனைப் பேரும் திரும்பிப் பார்த்தனர்.

'ஹை... யாரிவன்? பளீரிடும் முகமும், காந்தக் கண்களும், முன் நெற்றியில் விழும் முடியும், நல்ல உயரமும், படித்தவனாகவும் தெரிகிறானே... யாரை தேடி வந்திருக்கிறான்' என்று நினைத்தனர், மாணவியர்.

''மேடம், நித்யாவிடம் பேச வேண்டும்,'' என்றான்.

பேராசிரியையின் அனுமதி கிடைத்ததும், வகுப்பறை விட்டு வெளியில் வந்த நித்யா, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

''என்ன, ராஜு? நீங்க காலேஜுகெல்லாம் வந்ததே இல்லையே?''

''வருகிற சந்தர்ப்பம் இதுவரை ஏற்படல. இப்ப ஏற்பட்டுச்சு. வந்திருக்கேன்!''

''அப்படி என்ன சந்தர்ப்பம்?''

''படப்பிடிப்புக்காக, 'லொகேஷன்' பார்க்க, குலுமணாலி போறேன். அதான் சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். வர பத்து நாளுக்கு மேல் ஆகும்,'' என்றவன், சட்டைப் பையில் கைவிட்டு, கற்றை, 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான்.

''எதுக்கு?''

''செலவுக்கு.''

''இவ்வளவா?''

''இருக்கட்டும். திடீர்ன்னு எதுக்காச்சும் தேவைப்பட்டால் என்ன செய்வ?''

வாங்கிக் கொண்டாள்.

''ஹிட்லர் இல்லாத சமயமாக பார்த்து முடிஞ்சா போன் பண்றேன். பேசு,'' என்று கூறி சென்றான், ராஜாமணி.

''ம்...'' என்றாள்.

திரும்பிப் போனவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். மனசு மிகவும் சங்கடப்பட்டது. அழுகை வந்தது; அடக்கிக் கொண்டாள்.

மீ ண்டும் வகுப்புக்கு போகப் பி டிக்கவில்லை. அப்படியே கிளம்பி வெளியில் நடந்தாள். கல்லுாரி வாயிலைக் கடந்து பஸ் ஸ்டாப்பில் நின்றபோது, கருப்பு நிற, ஹம்மர் கார் அவளைக் கடந்து சென்றது. சிறிது துாரம் சென்று நின்று திரும்பி அவளருகில் வந்தது.

காரின் கண்ணாடி ஜன்னலை இறக்கியவன், பளீரென்ற புன்சிரிப்புடன், ''ஹலோ,'' என்றான்.

அவள் தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

''பின்னால் யாரும் இல்லைங்க. உங்களைத் தாங்க.''

''என்னையா?''

''யெஸ், நீங்க தானே, நித்யா?''

''ஆமா.''

''பி.காம்., செகண்ட் இயர்?''

''யெஸ்.''

''ஐயம், சித்தார்த் கவுதம்!''

''ஏன் புத்தரை விட்டுட்டீங்க?''

''ஏன்னா புத்தராக பிடிக்கல; ஆசையெல்லாம் விட முடியாது!''

சிரித்து விட்டாள்.

'ஆமாம், யார் இவன்? எதற்காக என்னைப் பற்றின விபரமெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான்...' என்று யோசித்தாள்.

''நான் யாருன்னு தானே யோசிக்கிற? கார்ல ஏறுங்க சொல்றேன்.''

''சாரி, தெரியாதவங்க கூப்பிட்ட உடனே அப்படி காரில் ஏறும் வழக்கமெல்லாம் எனக்கு கிடையாது.''

''எக்ஸாக்ட்லி. நான் எதிர்பார்த்த பதில். 'ஐ லவ் யு சோ மச்!' நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?''

அவன் கேட்ட கேள்வியில் குப்பென்று வியர்த்தது. ஆனாலும், மனதிற்குள் ஒரு சிலிர்ப்பு ஓடிற்று; இதுவரை அவள் உணர்ந்தறியாதது!



- தொடரும்இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us