தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (7)

உனக்காகவே நான்! (7)

உனக்காகவே நான்! (7)


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: வீ ட்டில் பணிபுரிந்த, சகுந்தலாவை, தன் அப்பா திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டு, அதிர்ந்தாள், நித்யா. இந்த விஷயத்தை உடனே அத்தையிடமும், ராஜாமணியிடமும் கூறுவதற்காக, அவர்கள் வீட்டுக்கு சென்றாள், நித்யா. அத்தையும், ராஜாமணியும் அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நித்யாவை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தான், ராஜாமணி. படப்பிடிப்புக்காக, 'லொக்கேஷன்' பார்க்க, குலுமணாலி போக இருப்பதால், ராஜாமணியையும் உடன் வருமாறு அழைத்தார், இயக்குனர், பாலு. அவனுக்கும், ஒரு மாறுதல் தேவைப்படவே, அவருடன் செல்ல ஒப்புக்கொண்டான். கல்லுாரியிலிருந்து வீடு திரும்பிய நித்யாவை, காரில் பின் தொடர்ந்தான், பிரபல கிரிக்கெட் வீரர் சித்தார்த் கவுதம்.

நித்யா படிக்கும் கல்லுாரியின் எதிர்புறம் பேருந்து நிறுத்தம் ஒன்று உண்டு. அதில், எப்போதும் இளைஞர் கூட்டம் நிறைந்திருக்கும். கல்லுாரியிலிருந்து வெளிவரும் மாணவியரைப் பார்க்க கூடும் கூட்டம் அது. தினமும் வரும், பார்க்கும், போகும், வேறெந்த தவறும் செய்யாத கூட்டம். கண்ணியமான இளைஞர்கள்; உயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தோற்றத்திலேயே தெரியும். கல்லுாரி பெண்களை துாரத்திலிருந்து பார்ப்பதைத் தவிர, அருகில் போய் பேச மாட்டார்கள்.

நித்தம் நிற்கிற மாதிரி நின்றிருந்தவர்களில் ஒருவன், ''என்னடா... புதுசா, 'ஹம்மர்' கார் நிக்குது?'' என்றான்.

''யாரோ, 'ஸ்மார்ட்டா' ஒருத்தன், அந்தக் கட்டுப்பெட்டி, நித்யாகிட்ட பேசிக்கிட்டிருக்கான்டா.''

''டேய், அது, சித்துடா... சித்தார்த்டா!'' என, ஆச்சரியமாக கத்தினான் ஒருவன்.

அடுத்த வினாடி, அத்தனை பேரும், 'சித்தார்த், நம்ம தல சித்தார்த்...' என்று சாலையைக் கடந்து, தன்னை நோக்கி ஓடிவர ஆயத்தமானதைக் கண்ட, சித்தார்த், ''ஓ.கே., 'ஸீ யூ லேட்டர்' நித்யா,'' என, சடாரென்று காரில் ஏறி பறந்தான்.

சாலையைக் கடந்து வந்த இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர். சித்தார்த்துடன், 'செல்பி' எடுத்துக்கொள்ள ஓடி வந்தவர்களின் முகங்கள் வாடிப் போனது.

''ஏங்க, உங்களுக்கு சித்தார்த்தை தெரியுமா?'' என, நித்யாவைப் பார்த்து நேரிடையாக கேட்டான், ஒருவன்.

''தெரியாது, யார் அவர்?'' என்றாள், நித்யா.

''என்னங்க இப்படி கேக்குறீங்க? உங்ககிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாரு.''

''நிஜமாவே எனக்கு அவரு யாருன்னு தெரியாதுங்க.''

''விளையாடாதீங்க. பிரபல கிரிக்கெட் வீரர். சென்னை, 'சூப்பர் கிங்ஸோட' 'ஓப்பனிங் பேட்ஸ்மேன்'. சின்னக் குழந்தைக்குக் கூட, சித்தார்த்தை தெரியும். நீங்க தெரியாதுங்கிறீங்க.''

''நான் கிரிக்கெட்டெல்லாம் பார்க்குறதில்லீங்க.''

தலையில் அடித்துக் கொண்டனர்.

''சுத்த வேஸ்ட்டுங்க நீங்க. இந்தக் காலத்துல இப்படியா?''

அவள் மவுனித்தாள்.

''ஆமா, அவரு உங்ககிட்ட என்ன கேட்டாரு?''

''கார்ல ஏறிக்குங்க, 'லிப்ட்' தரேன்னு சொன்னாரு.''

''நீங்க என்ன சொன்னீங்க?''

''அப்படி போற வழக்கமெல்லாம் என்கிட்ட இல்லைன்னு சொன்னேன்.''

மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டனர்.

''நீங்க கட்டுப்பெட்டின்னு தெரியும். ஆனா, இந்த அளவுக்கு இருப்பீங்கன்னு நினைக்கலீங்க!''

''ஏங்க, அவ்வளவு பெரிய பிளேயரா அவரு?''

மீண்டும் தலையில் அடித்துக் கொண்டனர்.

'கிரிக்கெட்டும் தெரியாது, விளையாடுபவரையும் தெரியாது. இந்த லட்சணத்துல காலேஜ் ஒரு கேடு...' என்று அலுத்துக் கொண்டனர்.

அதைக் கேட்டதும், நித்யாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது.

''நான் காலேஜுக்கு படிக்க தான் வரேன்; நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நடந்துக்க இல்லை,'' என்று சொல்லி, பேருந்துக்கு கூட காத்திராமல், பரபரவென்று நடக்க ஆரம்பித்தாள்.

''ம்ஹும். நாமெல்லாம் அவரு பார்க்க மாட்டாரா, ஒரு வார்த்தை பேச மாட்டாரான்னு ஏங்கிக்கிட்டிருக்க, இது மூஞ்சியப் பார்த்து வந்தாரே,'' என்றவாறே வருத்தமும், கோபமுமாக நகர்ந்து போயினர்.

அ தே வருத்தத்துடனும், கோபத்துடனும் வீட்டுக்குள் நுழைந்தாள், நித்யா. இவள் போனபோது, தங்கை சுசீலா தோசை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். சமையலறையில் அம்மா தோசை வார்ப்பது தெரிந்தது. இவளைக் கண்டதும், சுசீலாவின் முகம் மலர்ந்தது.

''வாக்கா... தோசை சாப்பிடுக்கா,'' என்றாள், சுசீலா.

'ஏய்...' என்ற அதட்டல், சமையல் அறையில் இருந்து வந்தது...

''வாயை மூடிக்கிட்டு சாப்புட்றீ, நீ. அவளுக்கு மாமன்காரன் வாங்கித் தருவான். அவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டுத்தானே இந்த ஆட்டம் ஆடுறா, உனக்கோ, எனக்கோ, உன் தங்கச்சிக்கோ எந்த மாமனும், மச்சானும் கிடையாது. இந்த துரோகி முகத்தை பார்த்து ரெண்டு வேளை சோறு கொட்டறேனே, அதுவே அதிகம்,'' என்று சொல்லிக்கொண்டே, கொண்டு வந்த தோசையை பொத்தென்று, சுசீலாவின் தட்டில் போட்டாள், அம்மா.

சுசீலா அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள். கண்கள், 'சாரிக்கா...' என்று கெஞ்சின.

''போடி பைத்தியம். இதென்ன புதுசா? இதுக்கு நீ என்ன செய்வ. சாப்ட்டு முடிச்சுட்டு வா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''

பேச்சு அம்மா காதில் விழாதவாறு கிசுகிசுப்பாகவே நடந்தது.

''நீ போக்கா, பின்னாலேயே வர்றேன்.''

வந்தாள். மெல்லிய குரலில் ஆரம்பித்தாள், நித்யா...

''சித்தார்த் கவுதம்ன்றது யாருடீ?''

''ஐயய்யோ, என்ன கேக்குற நீ? சிவாஜி யாரு, ரஜினி யாருன்னு கேக்குற மாதிரி இருக்குது. அவுங்களாவது நம்ம இந்திய லெவல்ல தான் பிரசித்தம். ஆனா, சித்து பற்றி உலகத்தின் எந்த மூலைல போய் கேட்டாலும் சின்னக் குழந்தை கூட சொல்லும். 'வாட் எ ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்'னு. 'சிக்ஸர்'ன்னு கேட்டா, 'சிக்ஸர்' அடிப்பாரு. 'போர்'ன்னு கத்தினா பந்து, 'பவுண்டரி லெவல' தாண்டும். அவர் மட்டையை சுழற்றும் விதம், 'ராக்கெட்'டை இயக்குற மாதிரி இருக்கும். 'ஹெலிகாப்டர் ஷாட்' 'ஏரோப்பிளேன் ஷாட்'லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.

''இந்திய அணியில், குண்டப்பா விஸ்வநாத்துக்கு அப்புறம், 'ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்' இவர் தான். விஸ்வநாத் மாதிரியே முட்டி போட்டு 'ஸ்கொயர் கட்' அடிப்பாரு பாரு... 'ஆடியன்ஸ்' அப்படியே சாமியாடுவாங்க. 'பிளையிங் கிஸ்ஸஸ்' பறக்கும்.

''ஆட்டம் மட்டும் இல்லக்கா. ஆளும் அத்தனை அழகா இருப்பாரு. செம்ம கலரு. கர்நாடகாவை சேர்ந்தவரு. ஆமா, நீ ஏன் திடீர்ன்னு அவரைப் பத்தி கேக்குற. கிரிக்கெட்டைப் பத்தின அரிச்சுவடி கூட உனக்குத் தெரியாதேக்கா. 'டிவி'ல கூட பார்க்கிறவ இல்லையே.''

''அதனால் தான் யாருன்னு கேட்டேன். நான் வீட்டுக்கு வர பஸ் ஸ்டாப்புல நின்னுகிட்டிருந்தேனா. திடீர்ன்னு என் பக்கத்துல ஒரு பெரிய கருப்பு கலர் கார் வந்து நின்னுச்சு...'' என்று ஆரம்பித்து, முழுவதும் சொல்லி முடிக்கிற வரை, நம்ப முடியாதவளாக, ஆனால், நம்பியே ஆக வேண்டிய நிலையில் கண் அகலக் கேட்டுக் கொண்டிருந்தாள், சுசீலா. அக்காவைப் பார்த்து பெருமையாகவும் இருந்தது; பொறாமையும் ஏற்பட்டது. நினைக்க நினைக்க கோபமும் வந்தது.

''புஸ்தகம், புஸ்தகமா கொடுத்து, மாமா உன்னை, ரொம்ப கெடுத்து வச்சிருக்காருக்கா. உலக அறிவே இல்லாம வெறும் எழுத்தறிவால மழுங்கடிச்சிருக்காரு. ஆனா, அவரு மட்டும் சினிமா, டிராமான்னு தெரிஞ்சு வச்சுக்குவாரு. தன் பொண்டாட்டி கூட்டுப் புழுவா இருந்தாப் போதும்ன்னு நினைக்கிறாரோ?''

சட்டென, நித்யாவின் முகம் இறுகிற்று.

''இதப்பாரு, சுசீலா. ராஜுவைப் பத்தி அப்படியெல்லாம் பேசாத. அவர் எனக்கு புருஷனுமில்ல, நான் அவரு பொண்டாட்டியுமில்ல. அவரை நான் கட்டிக்கப் போறதுமில்ல.''

அதிர்ந்து போனாள், சுசீலா. யாரோ ஓங்கி கன்னத்தில் அறைந்த மாதிரி உணர்ந்தாள்.

''என்னக்கா திடீர்ன்னு இப்படி சொல்ற. பொறந்ததிலிருந்து நீ அவருக்கும், அவர் உனக்கும்ன்னு சொல்லி சொல்லித்தானே வளர்த்தாங்க.''

''அவங்களா சொல்லிட்டா... நாங்க சொல்ல வேணாமா?''

''ராஜு மாமா உன்னைப் பத்தி என்ன நினைக்கிறாருன்னு எல்லாருக்கும் தெரியும்.''

''சரி, அவரு நினைச்சுட்டாப் போதுமா? நான் நினைக்க வேணாமா?''

''நீ நினைக்கலியா? அப்ப அவரு அவ்வளவு செஞ்சாரு. அப்பா, அம்மா உனக்கு செய்யாததை எல்லாம் செய்தாரு.''

''அப்பாவும், அம்மாவும் செய்யாததை ஒரு பெண்ணுக்கு வேறு யாரு செய்வாங்க.''

''யார் செய்யணும்?''

''கூடப் பொறந்த அண்ணன் தான் செய்யணும். ஆனா, நம்ம அண்ணன் செய்ய மாட்டான். அப்பா, அம்மாவுக்கு பயந்தவனாச்சே,'' என்றாள், சுசீலா.

''அதைத்தான், ராஜு அண்ணன் செய்யிறாரு.''

''ராஜு அண்ணனா!''

''ஆமா, நான் அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். அப்படி நினைச்சுத்தான் பழகிக்கிட்டிருக்கேன். இனியும் அப்படித்தான் நினைப்பேன்!''

''அடி செருப்பால,'' என்ற அம்மாவின் குரல் கேட்டு, இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர்.

''ஏன்... ராஜாமணிய விடப் பணக்காரனா வேற எவனாச்சும் கிடைச்சுட்டானா? இந்த வேப்பங்கொம்பு வேணாம்ன்னு, அந்தப் புளியங் கொம்பைப் புடுச்சிட்டியா?''

இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு, முகம் முழுவதும் கோபத்தில் சிவக்க, அம்மா கேட்ட விதம், சுசீலாவுக்கு பயத்தை உண்டாக்கியது.

அம்மா நின்ற விதமும், கண்களின் கோபமும், முகத்தில் படர்ந்த சிவப்பும், நித்யாவிற்கு ஒருவித அருவருப்பை ஏற்படுத்தியதே தவிர, சுசீலா மாதிரி பயப்படவில்லை.

'இவர்களெல்லாம் ஏன் இப்படி நினைக்கின்றனர். எதோடு எதை முடிச்சு போடுகின்றனர். வாழ்க்கைக்கான உயர் தகுதி பணம் மட்டுமே என்று ஏன் கருதுகின்றனர். எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டாள், அம்மா.

'ஏன், ராஜாமணியை விடப் பணக்காரனா வேற எவனாச்சும் கிடைச்சுட்டானா?'

எத்தனை மோசமான கேள்வி. எப்படிப்பட்ட அவமானம். ஒரு பெண், அதிலும் தான் பெற்ற பெண் பணத்திற்காக எத்தனை ஆண்களோடும் இருப்பாள் என்பதை எப்படி ஒரு பெண்ணால், அதுவும் ஒரு தாயால் சொல்ல முடிகிறது? அதற்கு எவ்வாறு மனசு துணிந்தது? இதைத்தான், பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்கின்றனரோ? சின்ன வயதில் அறியாமல் செய்துவிட்ட ஒரு தவறுக்கு இன்னும் தண்டனையா?

''என்னடி கேக்குறேன்; முழிச்சுக்கிட்டு நிக்குற?''

அவளிடம் இருந்து பதில் வராது போகவே மேலே பேசினாள்...

''உங்கப்பனுக்கு, அத்தைக்கெல்லாம் கூடத் தெரியுமா?''

''தெரியாது!''

''உன் மேல உசுர வெச்சுக்கிட்டு உ னக்காகவே வந்து போய்க்கிட்டிருக்கானே ஒரு ஏமாந்தாங்கொள்ளி... அவனுக்காவது தெரியுமா?''

''தெரியும்!''

''எப்போ தெரியும்?''

''ரெண்டு மூணு நாளைக்கு முன்!''

''என்ன சொன்ன?''

''இப்போ சுசீலாகிட்ட என்ன சொன்னனோ, அதையே தான் சொன்னேன்.''

''அவன் என்ன சொன்னான்? 'எங்கிருந்தாலும் வாழ்க'ன்னு பாட்டு பாடினானா? அப்படிப் பாடக் கூடியவன் தானே அவன்! அவனை விட உசத்தியா உனக்கு எவன் வ ருவான்? அவனுக்கு இருக்கிற பஞ்சு மனசு வேற எவனுக்கு இருக்கும்? இருக்கிறதை விட்டு, பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு, உங்கப்பன் கிட்ட உதைபட்டு சாகப் போற.''

'அப்படி விதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்...' என்று நினைத்துக் கொண்டாளே, தவிர சொல்லவில்லை.

ஆனால், விஷயம் அன்றிரவு அப்பா காதுக்கு போய்விட்டது. அவர், அவளை நேராகக் கூப்பிட்டெல்லாம் ஒன்றும் கேட்கவில்லை; கண்டிக்கவில்லை. நடுக்கூடத்தில் நின்று உரத்த குரலில் கத்தினார்.

''என் பொண்ணு இல்லைன்னு என்னிக்கோ நான் அவளை தலை முழுகிட்டேன். ஒவ்வொரு ஆம்பிளையா மாத்தறவளுக்கு பேர் வேற. இப்போவெல்லாம் காலேஜ் பொண்ணுங்க தங்கள் கைச்செலவுக்கு தப்பான வழியில் சம்பாதிக்கிறாங்களாமே... அப்படி இவளும் சம்பாதிக்கிறாளோ என்னவோ!''

அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும் வெகுண்டெழுந்தாள், நித்யா.

சரேலென்று அறையை விட்டு வெளியில் வந்தாள். கோபமான குரலில், ''அப்பா...'' என்றாள்.

''யாருடி உனக்கு அப்பன்? நான் தான் உன்னை என்னிக்கோ தலை முழுகிட்டேனே. நான் உனக்கு அப்பனுமில்ல, நீ எனக்கு பொண்ணுமில்ல. இன்னொரு தரம் அப்பான்னு கூப்பிட்ட, செருப்பு பிஞ்சிடும் நாயே!''

''நீ எனக்கு பொண்ணுமில்ல... நான் உனக்கு அப்பனுமில்லன்னு சொல்லிட்டீங்கல்ல. பிறகு என்னைப் பத்தி ஏன் அப்படிப் பேசுனீங்க? அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?''

''நீ இந்த வீட்ல இருந்து நான் சம்பாதிச்சுப் போடுற சோற்றைத் திங்குற வரைக்கும் கேட்க எனக்கு உரிமை இருக்குது. இந்த வீட்டை விட்டு ஓடிப்போ. நான் கேட்க மாட்டேன்.''

வழக்கம் போல், வாக்குவாதம் நீண்டது.



- தொடரும்இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us