PUBLISHED ON : ஜூன் 28, 2026

முன்கதைச் சுருக்கம்: க ல்லுாரியிலிருந்து திரும்பிய, நித்யாவின் அருகில், தன் காரை நிறுத்திய, பிரபல கிரிக்கெட் வீரர், சித்தார்த் கவுதம், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினான். அவன் யாரென்றே தெரியாத நிலையில், திடீரென இப்படி கேட்டதும், பதட்டமானாள், நித்யா. வீட்டிற்கு வந்ததும், தன் தங்கை சுசீலாவிடம், சித்தார்த் பற்றி கேட்டறிந்தாள். அவன், தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியதும், சுசீலாவும் அவள் அம்மாவும் அதிர்ந்தனர். விஷயம் அறிந்த, நித்யாவின் அப்பா, அவளை கேவலமாக பேச, நித்யாவும் ஆத்திரமடைந்து, எதிர்த்து பேசினாள். நி த் யாவுக்கும், அவள் அப்பாவுக்கும் வாக்குவாதம் முற்றியது. வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அப்பாவை எதிர்த்து நின்றாள், நித்யா.
''இந்த வீட்ல நான் இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா, கல்யாணம் பண்ணி முறையா வெளிய அனுப்பிடுங்க, போயிடறேன்.''
''முறையைப் பத்தி உனக்கு என்ன தெரியும். நேத்து வரைக்கும், ராஜாமணி கூட இழைஞ்சுகிட்டிருந்த. அவன் வாங்கிக் கொடுத்ததையெல்லாம் வாங்கிக்கிட்ட. ஆனா, இன்னிக்கு வந்து, அவனை அண்ணன்ங்குற. வேற எவனையோ பிடிச்சுக்கிட்டு இவனை உதறி விடுற. நீ, முறையைப் பத்தி பேச வந்திட்ட.''
''பத்துக் குழந்தைகளை பெத்தப்புறம் கட்டனவளை ஏமாத்தி, வேலைக்காகக் கூட்டி வந்தவளை கட்டின நீங்க முறை பற்றியோ, என்னைப் பற்றியோ பேசவே கூடாது. அந்தத் தகுதியை நீங்க எப்பவோ இழந்துட்டீங்க.''
ஓங்கி அவள் கன்னத்தில் ஓர் அறைவிட்டார், அவள் அப்பா.
மறுமுறை அறைய ஓங்கின கையை, சட்டென்று தடுத்துப் பற்றினாள், நித்யா.
''நிறுத்துங்க. நீங்க அடிக்கிற அடியெல்லாம் வாங்கிக்க நான் அம்மா இல்ல. இன்னொரு முறை என் மேல கை வச்சீங்க... மரியாதை கெட்டுடும்.''
கையை உதறினார்.
''எப்போ இந்த அளவுக்கு பெரியாளாயிட்டியோ, இதுக்கு மேல இந்த வீட்ல உனக்கு இடமில்லை. வெளிய போடி நாயே!''
''போக மாட்டேன்,'' என்றவள், ''எப்போ என்னை பெத்தீங்களோ... கல்யாணமாகிற வரை இங்கே இருக்கிற தகுதி எனக்கு இருக்குது. ஒண்ணு கல்யாணம் பண்ணி நீங்களே அனுப்பி வெச்சிடுங்க. இல்லாட்டி நானாக ஒரு வழி கிடைச்சுப் போகிற வரை இங்க தான் இருப்பேன்.''
உறுதியாகச் சொல்லிவிட்டு, உள்ளே திரும்பிப் போனவளை, ஏதும் செய்ய இயலாத நிலையில் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிக் கொண்டு போனார், அவள் அப்பா. முதல் முறையாக, அம்மா அவளை சற்று மரியாதையாகவும், பிரியமாகவும் பார்த்தாள்.
அறைக்குள் வந்தவளை மிகவும் ஆச்சரியமாக ஏறிட்டாள், சுசீலா.
''என்னக்கா... இப்படி பேசிட்ட. இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்துச்சு உனக்கு?''
''ரவுத்திரம் பழகச் சொன்ன, பாரதியார் ஞாபகம் வந்துச்சு. தைரியம் தானாகவே ஏற்பட்டுச்சு. 'மோதி மிதித்து விடு பாப்பா... அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' தான்!
''நீ லார்வா, ப்யூப்பாவெல்லாம் படிச்சிருக்க இல்ல, சுசீ? எப்பவுமா கூட்டுப் புழுவாக இருந்துக்கிட்டிருக்க முடியும்? கூட்டை உடைச்சுக்கிட்டு வெளிய வந்தா, சிறகு முளைச்சப்புறம் பறக்க வேண்டியது தானே!''
''சிறகு முளைச்சிடுச்சாக்கா உனக்கு?''
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்த மாதிரி இருந்தது, அவளுக்கு. எத்தனை புத்திசாலித்தனமான கேள்வி; ஆழமான கேள்வி. நிஜமாகவே சிறகு முளைத்து விட்டதா? ஒரு விநாடி திகைத்து, மவுனித்து பின் சொன்னாள்...
''தெரியலம்மா. பொறுத்திருந்து தான் பார்க்கணும்.''
அன்றிரவு அவள் சாப்பிடவும் இல்லை, துாங்கவும் இல்லை. இதுபோன்றதொரு கட்டத்தில் நிறுத்தப்படுவோம் என்று, அவள் நினைக்கவே இல்லை. தனக்கு இந்த நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவுமில்லை. இரவெல்லாம் யோசித்து வழி ஒன்றும் புலப்படாமல், லேசாக கண்ணயர்ந்தாள்.
ம றுநாள் காலை எழுந்த போதே நேரமாகியிருந்தது. எதுவும் சாப்பிடாமல் குளித்து உடைமாற்றி, கல்லுாரிக்கு கிளம்பினாள். ஓட்டமும், நடையுமாக தெருக்கோடியை அடையும் முன்னரே அதே கருப்பு நிற கார் அவளை உரசுகிற மாதிரி வந்து நின்றது. காரின் கண்ணாடி ஜன்னலை இறக்கியவன் மிக அழகானப் புன்சிரிப்போடு, ''ஹாய்,'' என்றான்.
அவளையும் அறியாமலே ஆழ்மனதில் சந்தோஷம் துள்ளிக் குதித்தது. முகம் தானாகவே மலர்ந்தது. 'சித்தார்த் கவுதம்' என்ற பெயர் உதடுகளால் உச்சரிக்கப்பட்டு, ரத்த நாளங்களில் ஓடி இதயத்தை அடைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தது. தன்னையும் மீறி, 'ஹாய்' என்றாள்.
''தயவு செய்து சட்டென்று காரில் ஏறிக் கொள். நேற்று மாதிரி யார் கண்ணிலாவது பட்டுவிட்டால், கூட்டம் கூடிவிடும்.''
தன் அருகில், முன் பக்கக் கதவை திறந்து விட்டான். அவன், தன் வாழ்க்கையில் மறுக்க முடியாதவன் என்பது அவளுக்கு புரிந்து போயிற்று. சட்டென்று ஏறிக்கொண்டாள்.
''காலையிலிருந்து உன்னை எதிர்பார்த்து உன் தெருவை நுாறு முறை சுற்றி, சுற்றி வந்து விட்டேன்.''
''என் வீடு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சு?''
''கிட்டத்தட்ட ரெண்டு மாசமா உன்னை, 'பாலோ' பண்றேன்.''
''மை காட்... எனக்கு தெரியாதே... நான் கவனிக்கவே இல்லையே!''
''கவனிச்சிருந்தா நான், 'பாலோ' பண்ணியிருக்கவே மாட்டேன். உன்னுடைய இந்த, அப்பாவித்தனமும், குழந்தை முகமும் தான் என்னை உன் பின்னால அலைய வச்சுச்சு.''
தன் இடது கையை நீட்டி, அவளது வலது கையைப் பற்றிக் கொண்டான்.
அவளது உடல், உள்ளம் எல்லாம் சிலிர்த்தது. இதுவரை அனுபவித்தே இராத புதிய உணர்வாக தெரிந்தது.
''ஐ லவ் யூ, நித்யா... லவ்யூ ஸோ மச்!''
''ஐ ஆல்ஸோ,'' என்ற வார்த்தைகள் அவளையும் மீறி, அவளிடமிருந்து வெளிப்பட்டது.
வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது, நித்யாவிற்கு.
சி றகுகள் அவளுக்கு இல்லை. மனதிற்கு முளைத்திருந்தன. 'பற... மேல பற... இன்னும் உயர உயரப் பற!' என, அடிக்கடி, ராஜாமணி சொல்வது, நினைவுக்கு வந்தது. அப்படித்தான் பறந்தாள். 'தானாக உதிர்பவற்றிற்கும், கீழே விழுபவற்றிற்கும் ஆசைப்படாதே என்பானே!'
அவள் எந்த ஆசையுமே பட்டதில்லை. நகை, புடவை, சுடிதார் என, எதற்கும் ஏங்கியதில்லை. முகத்திற்கு பவுடர் கூட பூசியது இல்லை. வெறுமனே குளித்து, உடுத்தி, தலை சீவி, நெற்றியில் சின்னதாக கருப்பு ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதோடு சரி.
இயற்கையோ, இறைவனோ இந்த விஷயத்தில் அவளது வாழ்க்கையை சமனாக்கி விட்டது. பெற்றவர்களின் வெறுப்புக்கு ஆளானவளுக்கு அபரிமிதமான அழகைக் கொடுத்து, ஈடு கட்டிவிட்டது.
அப்படிப்பட்ட பொன்னிறம்! கன்னங்கள் 'பளபள'க்கும், கண்கள் மின்னும், மெல்லிய செண்பகப்பூ போன்ற நாசியும், ரோஜா இதழ் போன்ற உதடுகளும், 'கருகரு'வென்று அலையோடும் கூந்தலும், ஐந்தடி நாலங்குல உயரமும் கொண்ட மிக நேர்த்தியான தோற்றம் அவளுடையது.
' 'எ னக்குத் தெரிந்து பிரமாதமான உலக அழகி, இங்கிலாந்து இளவரசி, டயானா. நம்ம நாட்டுல, ஐஸ்வர்யா ராய், இந்த ரெண்டே பேர் தான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். உன்னைப் பார்த்தப்புறம் அந்த அபிப்பிராயம் மாறிப்போச்சு. வெளி உலகத்துக்கு தெரியாமல், கண்ணுக்குப்படாமல் உன்னை மாதிரி இன்னும் எத்தனை அழகிகளோ! நீ மட்டும் என் கண்ணுல படாமல் இருந்திருந்தால், உன்னை, 'மிஸ்' பண்ணியிருப்பேன், இல்லையா?''
சித்தார்த்தின் கேள்வியால் கலைந்து, அவனை ஏறிட்டாள்.
''அப்படின்னா என் அழகு தான் உங்களுக்குப் பிடிச்சுச்சா?''
''நான் ஏற்கனவே சொல்லிட்டேன். உன்னை எனக்குப் பிடிச்சதன் காரணம், உன் குழந்தை முகமும், வெகுளித்தனமும் தான்!''
''குழந்தை முகம் சரி, வெகுளி ன்னு எப்படி சொல்றீங்க?''
''முதல்ல உனக்கு நான் யாருன்னே தெரியல. ரெண்டாவதாக நான் மாசக் கணக்குல உன்னைச் சுத்தி வந்தேன், நீ கவனிக்கல. உனக்காகவே உங்க காலேஜ், 'அனிவர்சரி பங்ஷனுக்கு சீப் கெஸ்டா' வர ஒத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட மொத்த காலேஜ் பொண்ணுங்களும் என்கிட்ட, 'ஆட்டோகிராப்' வாங்குனாங்க. என் கூட போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆனா, நீ மட்டும், 'மிஸ்ஸிங்!' யாருக்காக அந்த பங்ஷனுக்கு ஒத்துக்கிட்டேனோ அவ வரல.''
''அன்று என்னால வர முடியல.''
''ஏன் அன்னிக்கு உங்க வீட்டுல சண்டையா?''
அவன் கேள்வியில் அதிர்ந்தாள், நித்யா.
''இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?''
''ஒரு பையன், ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்டுட்டான்னு வச்சுக்க, அவளைப் பத்தின அத்தனை விபரங்களையும் எப்பாடு பட்டாவது கண்டுபிடிச்சுடுவான். சாதாரணப் பையன்களே கண்டுபிடிப்பாங்கன்னா, என்னால முடியாதா என்ன?''
''அது சரி,'' என்றவளே தொடர்ந்தாள்...
''நானும், ராத்திரி உங்களைப் பற்றி தங்கச்சிகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்.''
''யாரு, சுசீலாகிட்டயா?''
கண்கள் அகல மேலும் ஆச்சரியமானாள், நித்யா.
''சுசீலாவை பத்தியெல்லாம் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க?''
''ஏன், நாராயணன், பானுமதி பத்தி கூடத்தான்!''
''அப்படின்னா, ராஜாமணி?''
''தெரியும்!''
''பார்த்திருக்கீங்களா?''
''இல்லை, கேள்விப்பட்டது தான்!''
''என்ன கேள்விப்பட்டீங்க?''
''அவர் ஒரு, 'ஜென்டில்மேன்'னு!''
''எஸ்.''
''ஆமாம், அவரை ஏன் உன்னால விரும்ப முடியாமல் போச்சு?''
''இது என்ன கேள்வி? ஒருத்தரை விரும்புறதுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். விரும்ப முடியாததற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? விரும்ப முடியலன்றதைத் தவிர.''
''சரியான பதில்,'' என்று கூறி புன்னகைத்தான்.
''நான் உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா?''
''கேளு.''
''நீங்க ஏன் என்னை விரும்புறீங்க?''
''நீ சொன்ன மாதிரி நான் ஆயிரம் காரணமெல்லாம் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு காரணத்தை தான் என்னால சொல்ல முடியும்.''
''சொல்லுங்க.''
''ஷேக்ஸ்பியர் சொன்னாரே, 'ஹவ் ப்யூர், ஹவ் டியர்'ன்னு அதே தான் பதில்.''
''நீங்க, ஷேக்ஸ்பியரெல்லாம் படிச்சிருக்கீங்களா?''
''ஹேய்... நான் ஆங்கில 'லிட்ரெச்சர் ஸ்டூடண்ட்!' உன் மேல வெச்சிருக்கிற மாதிரி, 'கிரிக்கெட்' மேலேயும் அப்படிப்பட்ட மோகம். ஸ்கூல்ல விளையாடினேன்; காலேஜ்ல விளையாடுனேன். அப்புறம், 'டோர்னமென்ட், லீக், ஸ்டேட்'ன்னு படிப்படியா முன்னேறி, 'டெஸ்ட் மேட்ச்' வரை வந்துட்டேன், 'ஓப்பனிங் பேட்ஸ்மேன்'னும், நல்ல 'விக்கெட் கீப்பர்'ன்னும் பேர் எடுத்திட்டேன். இப்போ, ஜனங்க என்னைக் கொண்டாடுறாங்க.''
''கொண்டாடலை, ஆராதிக்குறாங்க. 'போர்'ன்னு கேட்டா மறுநிமிடம், பால் 'பவுண்டரி லைனை' தாண்டுமாம். 'சிக்ஸர் சிக்ஸர்'ன்னு கத்தினா, பந்து சந்திராயன் கணக்கா வானத்தைத் தொட்டு, 'கேலரி'யில் விழுமாம்!''
''ஹோ! ஒரே ராத்திரியில் இவ்வளவு விஷயம் சேகரிச்சுட்டியா? நான் நினைச்ச மா திரி இல்ல. நீ, செம 'ஸ்பீட் அண்ட் இன்டலிஜென்ட்'டா, இருக்கே.''
''உபயம் சுசீலா. அவ உங்க பயங்கர ரசிகை!''
''சரி... அப்ப அவளையும் கட்டிக்கிடட்டுமா?'' குறும்பாகச் சிரித்தபோது, மிக அழகாகத் தெரிந்தான்.
' டைட்டானிக் பட, 'ஹீரோ'வையெல்லாம் மிஞ்சின அழகு இவன்...' என்று நினைத்துக் கொண்டாள். உள்ளம் பூரித்தது.
'இவன் எனக்கு சொந்தமாக போகிறானா? இது, நிஜம் தானா? லட்சக்கணக்கான இளம் பெண்களைக் கவர்ந்தவன். ஏங்க வைத்தவன். அவன் மனதை நான் கவர்ந்திருக்கிறேனா? ஆயிரமாயிரம் கோபியர் இருந்தாலும், கிருஷ்ணனின் மனம், ராதையிடம் அல்லவோ சென்றது.
'ராமன், வீதியில் நடந்து சென்ற போது அத்தனை இளம் பெண்களின் மனங்களும் பின் தொடர்ந்தாலும், ராமனின் மனம் உப்பரிகையில் நின்றிருந்த, சீதையிடம் அல்லவா சென்றது. 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்' என்ற ஒப்பற்ற வரிகள் அவர்களின் பார்வை சங்கமித்ததால் தானே பிறந்தன.
'அதெல்லாம் சரி... இவர் ராமனா, கிருஷ்ணனா? ராமனாக இருக்க வேண்டுமே?'
''ஹேய்... என்ன யோசனை? இப்படி அடிக்கடி, 'சைலன்ட்' ஆனா, நான் என்ன செய்யிறது?''
''இல்ல, நீங்க ராமனா, இல்லாட்டி கிருஷ்ணனான்னு யோசிச்சேன்.''
''என்ன நினைக்குற?''
''ராமனா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.''
''ஏன், உனக்கு ராமரைப் பிடிக்குமா?''
''ரொம்பப் பிடிக்கும். கிருஷ்ணரையும் பிடிக்கும். ரெண்டு பேருமே, கடவுள் தானே. எப்படி பிடிக்காமல் போகும்?''
''கடவுளாகப் பார்க்காதே... கேரக்டர்களாகப் பார்த்து சொல்லு.''
''கேரக்டராகப் பார்த்தா... ராமர் தான்.''
''எனக்கு கிருஷ்ணரைத்தான் பிடிக்கும்.''
''ஏன், ராமரைப் பிடிக்காதா?''
''பிடிக்கும். ஆனா, கிருஷ்ணரைத்தான் ரொம்ப பிடிக்கும்.''
''ஏன்? ''
— தொடரும்இ.ரங்கநாயகி
