PUBLISHED ON : ஜூலை 12, 2026

முன்கதைச் சுருக்கம்: தன்னை திருமணம் செய்து கொள்ள, நித்யா சம்மதித்ததும், அவளது அப்பா - அம்மாவிடம் பெண் கேட்டு, அவளது வீட்டிற்கு சென்றான், சித்தார்த். நித்யாவின் அப்பா, வழக்கம் போல் எடுத்தெறிந்து பேச, நித்யா அம்மாவின் ஆசீர்வாதத்துடன், அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான். ராஜாமணி வீட்டுக்கு சென்று, அவனது பெற்றோரிடமும், ஆசீர்வாதம் வாங்கலாம் என்று, சித்தார்த் கூறியதும், அவனது பெருந்தன்மையை எண்ணி வியந்தாள், நித்யா.
'ஹாய் ஆன்ட்டி...' என்று மிகவும் இயல்பாக, உரிமையாக, ராஜாமணி வீட்டினுள் நுழைந்தான், சித்தார்த் கவுதம். அவனைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டியும், நித்யாவும் உள்ளே வந்தனர்.
அத்தைக்கும், மாமாவிற்கும் பணிவாக கை கூப்பியவன், சொன்னான்...
''நீங்கள், 'டிவி'யில் எல்லாவற்றையும் பார்த்திருப்பீங்க. ராஜாமணிக்கு சொந்தமானதை நான் அபகரிச்சுக்கல. நித்யா உங்க வீட்டு மருமகளாவதை நான் தடுக்கல. அது இல்லை என்று ஆனதற்கு அப்புறம் தான், நான், நித்யாவையே சந்திச்சேன். ரெண்டு நாளுக்கு முன்னால தான் காலேஜ் வாசல்ல பஸ்சுக்கு காத்துக்கிட்டிருந்தவ முன்னால காரை நிறுத்தி வலியப் பேசினேன். அப்ப அவளுக்கு நான் யாருன்னு கூடத் தெரியல. அன்னிக்கு ராத்திரி, அவ தங்கை, சுசீலாவிடம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டிருக்கா.''
அத்தையும், மாமாவும் ஒரு வார்த்தை பேசாமல் மவுனமாக இருந்தது, நித்யாவை சங்கடப்படுத்தியது. ஆனாலும், சித்தார்த் கவுதம் பேசி முடிக்கட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
சித்தார்த் கவுதமே தொடர்ந்து பேசினான்...
''நிஜம்மா சொல்லணும்ன்னா என்னை விட, ராஜாமணி தான், நித்யாவிற்கு தகுதியானவன். எல்லாவகையிலும் ஏற்றவன். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்த பிறகே, நான் உள்ளே நுழைந்தேன். ராஜாமணிக்குக் கிடைக்க வேண்டியதை நான் தட்டிப் பறிக்கவில்லை, ஆன்ட்டி. இதை நீங்க தெரிஞ்சுக்கணும்.''
''நீங்க என்ன சொல்றீங்க? ராஜாமணியும், நித்யாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையா?'' என்று, அதிர்ச்சியோடு, நித்யாவை ஏறிட்டுப் பார்த்த, மாமாவிடம் நிதானமாகச் சொன்னாள், நித்யா...
''ஆமாம், மாமா. எப்பவுமே ராஜாமணிகிட்ட நான் அந்த மாதிரி நினைச்சுப் பழகல. அவரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணினதே இல்ல.''
''இது, ராஜாமணிக்கு தெரியுமா?''
''தெரியும் மாமா. அவர் குலுமணாலி போறதுக்கு முன்னால சொல்லிட்டேன்.''
''அப்படியா!'' என்ற மாமாவின் முகத்தில் தெரிந்த வேதனை, இவளை சங்கடப்படுத்தியது. அத்தை கன்னங்களில் கண்ணீர் வழியாதிருக்க துடைத்துக் கொள்வதைப் பார்த்தாள்.
'எத்தனை பேரைக் கஷ்டப்படுத்துகிறோம்?' என்பதால் ஏற்பட்ட பெருமூச்சு, நித்யாவிடமிருந்து வெளிப்பட்டது.
''ஸோ... 'அங்கிள் அண்ட் ஆன்ட்டி!' நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வரணும். நான், ராஜாமணிகிட்டயும் பேசறேன். அவர் கட்டாயம் வருவார். எங்க இருந்தாலும், நித்யா நல்லா இருக்கணும்ன்னு நினைப்பார். அவரை மாதிரி ஒரு, 'பர்பெக்ட் ஜென்டில்மேனை' நான் பார்க்கப் போவதே இல்லை.''
''என்ன இருந்து என்னப்பா... அதிர்ஷ்ட்டமில்லையே!'' என்ற, அத்தையை இடைமறித்தான், சித்தார்த் கவுதம்.
''நீங்க நினைக்கறது தப்பு ஆன்ட்டி. ஒண்ணு இல்லேன்னு ஆயிடுச்சுன்னா, கடவுள் அதைவிடப் பெரிசா ஏதோ தரப்போறார்ன்னு அர்த்தம்!''
''இல்லப்பா, இவளைத் தொட்டில்ல போட்ட நாளிலிருந்து இவளுக்கு அவன், அவனுக்கு இவள்ன்னு சொல்லிச் சொல்லியே வளர்த்தோம்ப்பா.''
''இதப்பாரு, ராஜம். திரும்பத் திரும்ப அதையே பேசிக்கிட்டிருக்கக்கூடாது. அது தான் இல்லைன்னு ஆயிடுச்சு இல்ல, விடு,'' என்ற மாமா, சித்தார்த் கவுதமை ஏறிட்டார்.
''தம்பி, நாங்க பழங்காலத்து ஆளுங்க. எங்களுக்கு இந்த, 'கிரிக்கெட்'டெல்லாம் தெரியாது. தெரு அமர்க்களப்படுறத வச்சு, நீங்க ரொம்பப் பிரபலமானவர்ன்னு தெரியுது. இப்ப நாங்க என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க?''
''நித்யாவோட அம்மாவும், அப்பாவும் கல்யாணத்துக்கு வரப்போறதில்ல.''
''ப்ச்சூ... அவரைப் பத்தித்தான் தெரியுமே தம்பி.''
''அதனால், நீங்க தான் அவளுக்கு அப்பா, அம்மாவாக இருந்து நடத்திக் கொடுக்கணும்.''
''சந்தோஷமா செய்யுறோம் தம்பி.''
''நித்யாவை அவளுடைய அப்பா வெளிய விரட்டிட்டாரு. நான் கையோட கூட்டிக்கிட்டு வந்துட்டேன். என் கூட பெங்களூருக்கு அழைச்சிட்டு போகலாம்ன்னு...''
''வேணாம் தம்பி. கல்யாணம் வரை அவ இங்க இருக்கட்டும். கல்யாணத்துக்கு நாங்க அவளைக் கூட்டிக்கிட்டு வரோம்.''
''கல்யாணம் திருப்பதியில ஆன்ட்டி. எல்லாம், 'அரேஞ்ஜ்' பண்ணிட்டு, நான் உங்களுக்கு கார் அனுப்புறேன். ராஜாமணிகிட்டேயும் பேசறேன். கல்யாணத்தை சிம்பிளா பண்ணிட்டு, ரிசப்ஷனை கிராண்டா வெச்சுக்கலாம்.''
''உங்க இஷ்டம் போல செய்ங்க தம்பி. பொண்ணுக்கு, அப்பா-அம்மாவா நாங்க இருந்து எல்லாம் செய்யுறோம். உங்க லெவலுக்கு எங்களால் முடியாம போனாலும், எங்க பொண்ணுக்கு என்ன செய்யணுமோ அதை நாங்க செய்வோம்.''
''எதுவும் வேணாம்ன்னா கேக்கமாட்டேன்றீங்க. சரி, உங்க இஷ்டம். அத்தை, மாமா, ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க. ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன். வா, நித்யா,'' என்று, நித்யாவின் தோள் மீது கைபோட்டு லேசாக அணைத்து இழுத்துக் கொண்டான்.
அதை எதிர்பார்க்காத, நித்யா சற்று நெளிந்தாலும், அவனுடன் சேர்ந்து, அத்தை-மாமா காலில் விழுந்து வணங்கினாள்.
''பட்டதெல்லாம் போதும்மா. இனி உன் வாழ்க்கையில் சந்தோஷத்தை தவிர, வேறு எதுவும் உனக்குத் தெரியக் கூடாதும்மா,'' என்று வாழ்த்தினர்.
''வரட்டுமா, நித்யா,'' என்ற, சித்தார்த், ரிஷப் ஷெட்டியை பார்த்தான்.
''யெஸ், சித்,'' என்று குறிப்பறிந்து முன்னால் வந்தான், ரிஷப் ஷெட்டி.
''உடனடியாக, நித்யாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கிக் கொடுத்து, 'சிம்' நம்பரை நோட் பண்ணிக்க.''
''டன்,'' என்றான், ரிஷப்.
''வரேன் நித்தி. மொபைல்ல கூப்புடறேன். உடனடியா பெங்களூரு போறேன். எனக்கு அப்பா-அம்மா இல்ல. கோடீஸ்வர பாட்டியின் ஒரே பேரன் நான். இத்தனை நேரம் பாட்டி, 'டிவி' பார்த்து விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டிருப்பாங்க. ஆனாலும், நேர்ல போய் அவங்களுக்கு விஷயத்தை சொல்லணும். வரேன், அங்கிள். வரேன், அத்தை,'' என்றவன், நித்யாவுக்கு காற்று மூலம் முத்தத்தை வழங்கிவிட்டு, வெளியேறினான்.
அவன் கார் கிளம்பியதும், மீடியா வேன்களும் கிளம்பி போயின. ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. அனைத்தும் திரைப்படக் காட்சிகளாக தோன்றின.
''புயலடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு,'' என்றாள், அத்தை.
''முதல்ல, நித்யாவை கூட்டிட்டுப் போய் சாப்பாடு போடு, ராஜம். குழந்தை எப்ப சாப்ட்டாளோ என்னவோ?''
''இப்ப பசிக்கல. அப்புறமா சாப்பிடறேன்,'' என்றாள், நித்யா.
''ஆமாண்டியம்மா. இனிமேல் உனக்கு பசிக்காது, தாகம் எடுக்காது. பாலும் கசந்ததடி, சகியே படுக்கை நொந்ததடி... சோலைக்கிளி மொழியும், நெஞ்சில் குத்தலெடுத்ததடி...'' என்று அத்தை அவளைக் கட்டியணைத்து பாட, ''போங்க, அத்தை,'' என்று தன்னை அணைத்திருந்த அத்தையின் கைகளை விலக்கிவிட்டு உள்ளே ஓடினாள், நித்யா.
அத்தையும், உள்ளே போக திரும்பிய போது, பத்ரி வந்தான், கையில் பெட்டி ஒன்று இருந்தது.
''என்னடா அது?'' என்று கேட்டார், மாமா.
''மொபைல் மாமா. இந்தியாவுலேயே விலை உயர்ந்த மொபைல். 'வெர்டு அயர்ன் பிலிப்'ன்னு பேரு. அஞ்சு லட்ச ரூபாய்.''
''அஞ்சு லட்சத்துக்கெல்லாம் மொபைல் இருக்காடா?''
''ஐயோ, மாமா. நீடா அம்பானி வெச்சிருக்கிற போன் விலை தெரியுமா, மாமா உங்களுக்கு?''
''அது யார்ரா, நீடா அம்பானி?''
''அது யாருன்னு தெரியாமலா இருக்கீங்க? உலக கோடீஸ்வரரில் ஒருத்தரான, முகேஷ் அம்பானியின் மனைவி. அவங்க மொபைல், 24 கேரட் தங்கத்தால் ஆனது. உள்ள இருக்குற 'பீச்சர்ஸ்' எல்லாம் 'பிளாட்டினம் கோட்டிங்' பண்ணப்பட்டது. விலையைக் கேட்டீங்கன்னா அசந்து போயிடுவீங்க.''
''அப்படி என்னடா விலை?''
''இந்திய ரூபாய்ல பார்த்தீங்கன்னா, 430 கோடி.''
''என்னது?''
''ஆமாம், மாமா.''
''அந்த, 430 கோடி இருந்தா, எத்தனைக் கோடி மக்களுக்கு வாழ்க்கை கிடைக்கும்?''
''இது உங்க சித்தாந்தம். அதெல்லாம் இப்ப எடுபடாது. ஆமா, நித்யா எங்க?''
''ஏன்டா?''
''தல, இந்த மொபைல்ல, நித்யாகிட்ட கொடுக்கச் சொன்னாரு.''
''தலயா யாருடா அது?''
''உங்க வீட்டு மாப்பிள்ளையாக போறவரு. அவரு, பேட்டோட மைதானத்துல இறங்குனா, அப்படி விசில் பறக்கும். எங்க, 'ஹீரோ,' மாமா அவரு.''
''இனிமே, நித்யாவோட, 'ஹீரோ'டா!''
''அதுவும் சரிதான்,'' என்று அவன் ஒப்புக்கொள்ளவும், நித்யா வரவும் சரியாக இருந்தது.
''நித்யாக்கா, இந்தாங்க மொபைல். சித்தார்த் கவுதம் கொடுக்கச் சொன்னாரு. 'சிம் கார்டு' போட்டாச்சு, ராத்திரி கூப்பிடறாராம். வீடியோ கால் பேசறேன்னாரு.''
''இதை எப்படி உபயோகப்படுத்தறதுன்னு எனக்கு தெரியாதே!''
''இது என்ன கம்ப சூத்திரமாக்கா. உட்காருங்க இப்படி,'' என்று கூறி, விபரமாக சொல்லித்தந்தான். பிறகு, ''நான் கிளம்பறேன். வரேன் மாமா,'' என்று வெளியேறினான். அவன் போனதும் மாமா கேட்டார்...
''நித்யா இந்த மொபைல் விலை என்னன்னு தெரியுமாம்மா?''
''எனக்கு மொபைல் போனே தெரியாது மாமா.''
''அஞ்சு லட்ச ரூபாயாம்!''
''என்ன மாமா சொல்றீங்க?''
''ஆமாம்மா. பத்ரி தான் சொல்லிட்டுப் போறான். பார்த்து உபயோகப்படுத்தும்மா. ஜாக்கிரதையா வச்சுக்க.''
நித்யாவிற்கு மனதெல்லாம் என்னவோ செய்தது. அத்தை, மாமாவின் பெருந்தன்மையும், உயர்ந்த உள்ளமும் புரிந்தது.
சின்னக் குழந்தையிலிருந்து தன் மகனுக்கென்றே வளர்க்கப்பட்டவள். எப்போது வீட்டிற்கு வந்தாலும், 'வாடி, மருமகளே...' என்று அழைக்கப்பட்டவள். இன்று வேறொருவனோடு வந்து நின்றதைப் பார்த்த அவர்கள் மனது எவ்வளவு வேதனைப்படும். இன்னொருவரானால் எத்தனை கொதித்துப் போயிருப்பர். ஆனால், அத்தையும், மாமாவும் தங்கள் வருத்தத்தை சிறிது கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல், வரவேற்று ஆசீர்வதித்தனரே! இந்தப் பொன்னான மனம் கொண்ட அத்தை எப்படி நேர்மாறான குணம் கொண்ட அப்பாவுக்குத் தங்கையாகப் பிறந்தார். அத்தை மட்டுமா? அவருக்கு ஏற்றவராக அல்லவா மாமாவும் இருக்கிறார்.
உடனே, ராஜாமணியை நினைத்துக் கொண்டாள். இதனால் தான், ராஜாமணியும் விசால மனம் படைத்தவராக இருக்கிறார்.
ராஜாமணி தெளிந்த நீரோடை போன்றவன். அன்பும், அறிவும் சேர்ந்து உருவானவன். பண்பையும், கலாசாரத்தையும் மறக்காதவன். ஆடம்பரமற்றவன், எளிமை விரும்பி. அதிர்ந்து கூடப் பேசாதவன்.
ஆனால் -
சித்தார்த் கவுதமோ ஆர்ப்பரிக்கும் அருவி. பேரும் புகழும் கொடுத்திருக்கும் துணிச்சல். 25 வயதில் உலகம் முழுதும் பாராட்டப்படும் பெருமிதம். பணக்காரத்துவத்தை வெளிப்படுத்தும் பேச்சு; பாவனை!
ஒப்பிட்டுப் பார்த்த போது அவளுக்குள் ஒருவித பயம் ஏற்பட்டது. ராஜாமணி, வீட்டில் வளர்க்கப்படும் பசு மாடு என்றால், சித்தார்த் கவுதம் சீறிப் புறப்படும், ஜல்லிக்கட்டுக் காளை!
இதுவரை பசு மாட்டுடன் பழகிய தன்னால், ஜல்லிக்கட்டுக் காளையை சமாளிக்க முடியுமா?
'சித்தார்த் கவுதம் உலகப் புகழ்பெற்றவனாக இருக்கலாம். சிறந்த, 'கிரிக்கெட்' வீரனாக இருக்கலாம். அவனது குண நலன்கள் தெரியாது. விருப்பு வெறுப்புகள் புரியாது. எதையுமே தெரிந்து கொள்ளாமல், எங்கிருந்தோ வந்து, 'ஐ லவ் யூ' சொன்னவனின் பின்னால், வீட்டை விட்டு வெளியே வந்தது தப்போ!'
முதல் முறையாக மனதில் குழப்பம் ஏற்பட்டு தடுமாற ஆரம்பித்தாள், நித்யா.
இன்னும் ஒரே இடம் தான் பார்க்க மீதமிருந்தது. குலுமணாலியை விட்டுத் தள்ளி இருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்பதால், இன்று அதைப் பார்த்துவிட்டு நாளை சென்னைக்கு விமானம் ஏறலாம் என்று கூறியிருந்தார், டைரக்டர், பாலு.
காலையில் சீக்கிரமாகவே எழுந்து குளித்துத் தயாரான நிலையில், ஒருவித படபடப்புடன் அறையினுள் நுழைந்த, பாலுவை ஏறிட்டான், ராஜாமணி.
— தொடரும்இ.ரங்கநாயகி
