PUBLISHED ON : ஜூலை 19, 2026

முன்கதைச் சுருக்கம்: நி த்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை அவள் வீட்டில் சொல்லி, அவள் அம்மாவின் ஆசீர்வாதம் பெற்று வெளியே வந்த, சித்தார்த், அங்கு கூடியிருந்த ஊடகங்களுக்கும், விஷயத்தை தெரிவித்தான். அங்கிருந்து கிளம்பி, ராஜாமணி வீட்டுக்கு சென்று, நித்யாவின் அத்தை-மாமாவிடமும், தன் விருப்பத்தை தெரிவித்து, அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றான். உடனடியாக, பெங்களூரு திரும்பி, தன் பாட்டியிடம் விஷயத்தை கூற வேண்டும் என்றவன், நித்யாவை, ராஜாமணி வீட்டிலேயே விட்டு சென்றான், சித்தார்த். நித்யாவுடன் பேசுவதற்காகவே, விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்றை வாங்கிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தான், சித்தார்த்.
''என்ன, பாலு?''
''நீ, 'டிவி' பார்க்கலையா?''
''இல்லையே என்ன விஷயம்?''
''முதல்ல, 'ஆன்' பண்ணு... சொல்றேன்!''
'ஆன்' பண்ணிக் கொண்டே, ''எந்த சானல்?''
''எல்லா சானல்லையும், 'பிளாஷ்' ஆவுது பாரு!''
பார்க்கப் பார்க்க, ராஜாமணிக்கு அதிர்ச்சியை விட, திகைப்பு தான் ஏற்பட்டது. 'நித்யாவா, நம்ம நித்யாவா... அதுவும், சித்தார்த் கவுதமா? எப்படி இது சாத்தியமாயிற்று? கண்ணெதிரில் பார்க்கும் ஆங்கில சானல்கள் உட்பட அத்தனை சானல்களுமா பொய் சொல்லும்? அவனால், நம்பவே முடியவில்லை.
டைரக்டர் பாலுவின் குரல், அவனைக் கலைத்தது.
''என்ன, ராஜு... இடிந்து போயிட்டியா அல்லது ஸ்தம்பித்து போயிட்டியா?''
''ரெண்டுமில்ல, பாலு. என்னால் இதை நம்ப முடியல.''
''எல்லா சானல்களையும் காட்றாங்க. எப்படி பொ ய்யா இருக்க முடியும்?''
''பொய்யின்னு சொல்லல, பாலு. நித்யாவுக்கு, 'கிரிக்கெட்' தெரியாது. ஒரு, 'மேட்ச்' கூட அவ பார்த்ததில்ல. வீடு விட்டா காலேஜ், காலேஜ் விட்டா வீடுன்னு இருந்தவ. அவளுக்கு ரொம்ப பிடிச்ச புத்தக கண்காட்சிக்கு கூட அவளுடைய அப்பா அவளை அனுப்பினதில்ல. அத்தனைக் கட்டுப் பெட்டியா வளர்ந்தவ எப்படி இப்படி?''
''இதைப்பாரு, ராஜு... 'படபட'ன்னு பேசற பொண்ணுங்கள நம்பிடலாம். ஆனா, இந்த அமுக்குவான்கள் இப்படித்தான். வாயைத் திறக்காமலேயே இருந்து நம்மள ஏமாத்திடுவாங்க. சித்தார்த் கவுதமை மனசுல வெச்சிக்கிட்டு தான், நித்யா உன்னை வேணாம்ன்னு சொல்லியிருக்கா.''
''இல்ல, பாலு,'' என்று தலையாட்டி மறுத்தான், ராஜாமணி. ''நித்யா அந்த மாதிரிப் பொண்ணில்ல. அவ, சித்தார்த் கவுதமை சந்திக்க சந்தர்ப்பமே இல்ல. என்னால் அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சு இதுல இருக்கு. எப்படி நிகழ்ந்ததுன்னு நேரா போய் கேட்டாத்தான் தெரியும்.''
''சரி கிளம்பு!''
''கிளம்புறதா? இன்னும் ஒரு, 'ஸ்பாட்' பார்க்கணுமே!''
''அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு. உன் மனசு துடிக்கலியா, ராஜு?''
''துடிச்சது, பாலு. அறுந்து போன பல்லியின் வால் மாதிரி துடிச்சுச்சு. ஆனா, இன்னிக்கு இல்ல. நித்யா என்னை, 'பிக் பிரதர்' மாதிரி தான் நினைக்கிறேன்னு சொன்னாளே... அன்னிக்கு. அன்னிக்கு பூரா கால் போன போக்குலல்லாம் சுத்தினேன். எங்கேயாவது போயிடணும்ன்னு தோணினப்போ தான் நீ, 'லொக்கேஷன்' பார்க்க, குலுமணாலி போகணும்ன்னு சொன்ன. உடனே, கிளம்பிட்டேன்.''
''அப்போ கூட, நித்யா இதை பத்தி உன்கிட்ட சொல்லலியா?''
''இல்லப்பா.''
''ரொம்ப அழுத்தமான பொண்ணா இருப்பா போலிருக்கு.''
''இல்ல, பாலு. அவ ரொம்ப வெகுளிப் பொண்ணு. நீ, அவளைத் தப்பாப் புரிஞ்சுட்டிருக்க.''
''நீ தான் அவளை தப்பா புரிஞ்சுட்டிருக்க. கிளம்பு போகலாம். நேராப் போயி அவளைப் பார்த்து, 'சுடசுட' நாலு வார்த்தை கேட்டாத்தான் என் மனசு அடங்கும்.''
''ஐயய்யோ, பாலு, 'ப்ளீஸ்' அப்படியெல்லாம் ஒண்ணும் கேட்டுடாத. அவ நொறுங்கிப் போயிடுவா.''
''நீ, நொறுங்கிக் கிடக்கறியே, கீழே போட்ட கண்ணாடி மாதிரி. உன் மனசு சில்லு சில்லா உடைஞ்சு கிடக்குதே!''
''பாலு, இதுல அவ தப்பு என்ன சொல்லு? நான், அவ மேல ஆசைப்பட்டா, அதே மாதிரி அவளும் என் மேல ஆசைப்படணும்ன்னு எழுதியா வெச்சிருக்கு?''
''எப்படி உன்னால அவளை விட்டுக் கொடுக்காம இப்படிப் பேச முடியுது, ராஜு? உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இப்படி கூட ஒரு மனுஷனான்னு மனசு சிலிர்த்துப் போகுது. நீ, எனக்கு நண்பனா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்.''
''ஐயோ, பாலு... இது மனுஷத்தனம். மனுஷங்க இப்படித்தான் இருக்கணும். இப்படி இல்லாம நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் மாறுபட்டு இருக்குறதால, ஒரு மனுஷன்கிட்ட இருக்க வேண்டிய சாதாரண நல்ல குணமெல்லாம் தெய்வீகமாகப்படுது.''
''யப்பா... கிளம்புப்பா.''
''நான் ரெடி,'' என்று தன், 'சூட்கேஸை' துாக்கி கொண்டு எழுந்து நின்றான், ராஜாமணி.
''ஒரே நிமிஷம். நானும், ரூமுக்குப் போய் என் துணிமணிகளை அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடறேன்.''
கால் மணி நேரத்தில், தன் மேனேஜரை அழைத்து, ''நானும், ராஜாமணியும் அவசரமா சென்னை போறோம். நீ இருந்து ஹோட்டல் 'பில்லை'யெல்லாம் செட்டில் பண்ணிவிட்டு வா,'' என்று சொல்லி, இருவரும் காரில் ஏறி, விமான நிலையத்தை அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திலும் கார் வந்து காத்திருந்தது. டிரைவரை கீழே இறங்க கூறி, பஸ் பிடித்து வரச் சொன்ன பாலு, தானே காரை ஓட்டினான். சிறிது துாரம் போனதும், ராஜாமணி மெல்லிய குரலில் கேட்டான்...
''ஏதாவது ஒரு, 'பொக்கே' கடையில் நிறுத்துறியா, பாலு?''
''எதுக்கு?''
''வெறுங்கையோடவா போறது...நித்யாவுக்கு, 'பொக்கே'வாவது குடுத்து, 'விஷ்' பண்ண வேண்டாமா?''
சடாரென்று திரும்பி, பாலு அவனைப் பார்த்த பார்வையில் இருந்தது பரிதாபமா, ஆச்சரியமா, சோகமா அல்லது எல்லாம் கலந்த ஒன்றா என்பதை, ராஜாமணியால் யூகிக்க முடியவில்லை.
''என்ன பாலு அப்படிப் பார்க்கற?''
'யார் பெத்த மவனோ, நீ யார் பெத்த மவனோ...' என்று பாடத் துவங்கிய பாலுவை, இடைமறித்தான், ராஜாமணி.
''இந்தப் பாட்டுக்கெல்லாம் நான் தகுதி இல்ல, பாலு.''
''ஆமா... இதுக்கு நீ தகுதியில்ல. 'பொக்கே' கொண்டு போய் கொடுத்து, 'எங்கிருந்தாலும் வாழ்க'ன்னு பாடு. அதுக்கு தான் நீ தகுதி. உன்னை கன்னாபின்னான்னு திட்டணும்ன்னு தோணுது. ஆனா, மனசு வரமாட்டேங்குது,'' என்றபோது, பாலுவின் கண்கள் கலங்கின. அதை மறைக்க அவன் காரை நிறுத்தி கீழே இறங்கி, ''நீ இரு ராஜு. நான் போய், 'பொக்கே' வாங்கிட்டு வரேன்,'' என்றான்.
பாலு நகர்வதைப் பார்த்த, இவன் கண்களும் கலங்கின. இந்த மென்மையான மனசும், உணர்ச்சிவயப்படுகிற இயல்பும் இருப்பவர்களால் தான் படைப்புலகில் முத்திரை பதிப்பவர்களாக இருக்கின்றனர். எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என, முக்கால்வாசிபேர், பாலு போன்றவர்களே. பெயரும், புகழும் பெற்றவர்களே.
சிந்தனையை கலைக்கிற மாதிரி மிகப் பெரிய, 'பொக்கே'வுடன் வந்தான், பாலு. அவ்வளவு பெரிய பூங்கொத்தைப் பார்த்து, மலைத்துப் போனான், ராஜாமணி.
''அம்மாடி! பெரிய, 'பொக்கே'வா இருக்கிறதே!''
''பெரிய மனசுக்காரன் கொடுப்பது பெரிசாத்தான் இருக்கணும்,'' என்றான், பாலு.
''பெரிய மனசுக்காரன் வாங்கினதும் பெரிசாகத்தான் இருக்கு,'' என்றான், ராஜாமணி.
இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது. இறுக்கமும், கனமும் குறைந்தன.
வீட்டு வாசலில், ராஜாமணியை இறக்கிவிட்டு, ''நான், கிளம்பட்டுமா?'' என்று கேட்டான், பாலு.
''உள்ளே வந்திட்டுப் போயேன்.''
''வேணாம். இப்ப வீடு கொஞ்சம் இறுக்கமா இருக்கும். உன்னை மாதிரி உன், அப்பா-அம்மா இருக்கமாட்டாங்க. உன்னைப் போல் எடுத்துக்க மாட்டாங்க. தலைமுறை இடைவெளி. நாலஞ்சு நாள் போனா தணியும். விறகு அடுப்பில் கட்டைகளை வெளியே இழுத்ததும் நெருப்பு குறைந்து அணைகிற மாதிரி அணையும். அப்போ வரேன்.''
''சரி,'' என்று பின்பக்க இருக்கையிலிருந்து தன், 'சூட்கேஸை' எடுத்துக் கொண்டு இறங்கினான், ராஜாமணி.
காரைக் கிளப்பி, 'பை...' சொல்லி, பாலு தெருமுனையில் திரும்பி மறைகிற வரை பார்த்துக் கொண்டு நின்றவன், இரும்பு கேட்டை திறந்து உள்ளே வந்து அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவு திறக்கப்பட்டதும் எதிரில் நின்றவளைக் கண்டதும், அவன் முகம் இயல்பாய் மலர்ந்தது. அவளை சிறிது கூட எதிர்பார்க்காத ஆச்சரியத்தில், 'நி...த்...யா...' என்ற போது, உதடுகளில் இயற்கையான புன்னகை ஒன்று ஓடியது.
அந்த நேரத்தில், ராஜாமணியை சிறிது கூட எதிர்பார்க்காத, நித்யா தலையை குனிந்து கொண்டாள். அது வெட்கமா அல்லது குற்ற உணர்வா என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலைமையை இயல்பாக்க முயன்றான், ராஜாமணி.
''ஏய், ஏன் இப்படி தலையை தொங்க போட்டுக்குற. தைரியமா நிமிர்ந்து நில்லு. சித்தார்த் கவுதமெல்லாம் கிடைக்கணும்ன்னா நீ எவ்வளவோ புண்ணியம் பண்ணியிருக்கணும். இல்லேன்னா இதுவரை, நீ பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கடவுள் ஈடுகட்டியிருக்கணும்.''
அவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
''எப்பேர்ப்பட்டவன் உனக்கு கிடைச்சிருக்கான். அதை நினைச்சு சந்தோஷப்படாமல் இப்படியா தலை குனியறது. 'கமான்... பீ சியர்புல்' நித்யா,'' என்றவன், உண்மையான மகிழ்ச்சியுடன், 'பொக்கே'வை நீட்டினான்.
''ஐ விஷ் யு ஆல் தி பெஸ்ட்!''
''அம்மாடி எவ்வளவு பெரிய, பொக்கே!'' என்று அதை ரசித்தாள், நித்யா.
அதற்குள், ராஜாமணியின் அம்மாவும் உள்ளேயிருந்து வந்தாள்.
''வாப்பா, நீ வரப்போறதை சொல்லவே இல்லையே.''
''மா...'சர்ப்பிரைஸ்'மா. நித்யா கொடுத்த 'சர்ப்பிரைஸு'க்கு, பதில் 'சர்ப்பிரைஸ்'மா.''
''உனக்கு எல்லாம் தெரியுமாப்பா?''
''ஏம்மா... நான் என்ன சந்திரமண்டலத்துக்கா போனேன்? குலுமணாலியிலும், 'டிவி' உண்டுமா.''
''அதெல்லாம் பார்த்த, சரி... நித்யா ஏன் நம்ம வீட்டுல இருக்கான்னு கேட்கலியே?''
அப்போது தான் உறைத்தது, ராஜாமணிக்கு. நித்யாவை ஏறிட்டு மெல்லச் சிரித்தான்.
''உனக்கு விடுதலை குடுத்துட்டாரா, நம்ம வீட்டு ஹிட்லர்.''
''ஒட்டுமொத்தமா விடுதலை கொடுத்துட்டார். வீட்டை விட்டே வெளியே அனுப்பிட்டார்,'' என்று நித்யா சொல்ல, நடந்தது முழுவதையும், அம்மா விவரித்தார்.
''நித்யாவைக் கூட்டிக்கிட்டு அந்தப் பையன் நேரா நம்ம வீட்டுக்கு தான் வந்தான். என் கால்லயும், அப்பா கால்லயும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். திருப்பதியில் கல்யாணமாம். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்றேன். ராஜாமணிகிட்டேயும் பேசறேன்னான். உன் மேல ரொம்ப மதிப்பும், மரியாதையும் வெச்சிருக்காம்ப்பா.''
''என்னை அவருக்கு எப்படி தெரியும்?'' என்று, நித்யாவை பார்த்தான்.
''எனக்கே அவரை ரெண்டு, மூணு நாள் முன்னாலத்தான் தெரியும்,'' என்று ஆரம்பித்து, கல்லுாரி, 'பஸ் ஸ்டாப்'பில் காரை நிறுத்தி தன்னிடம் பேசியதிலிருந்து, இந்த நிமிடம் வரை சொன்னாள், நித்யா.
''எனக்கு, 'கிரிக்கெட்'டும் தெரியாது. அவர் யாருன்னும் தெரியாது. ஆனால், அவர் நம்ம வீட்டு விஷயம் மொத்தத்தையும் தெரிஞ்சு வெச்சிருக்கார். உங்களைப் பற்றி, என்னைப் பற்றி, அப்பா பற்றி ஒரு விஷயம் விடாமல் தெரிஞ்சிருக்கு,'' என்றாள், நித்யா.
''உன்கிட்ட மொபைல் கொண்டு வந்து கொடுத்தானே அந்த பையன், அவன் தான் சொல்லியிருக்கணும்,'' என்று நித்யாவிடம் சொன்னாள், ராஜாமணியின் அம்மா.
''யாரும்மா?'' என்று கேட்டான், ராஜாமணி.
''பத்ரி,'' என்றாள், நித்யா.
''ஓ! அவன் பரம, 'தல' பைத்தியம்.''
''தலயா?''
''ஆமாம், நித்யா. சித்தார்த் கவுதமுக்கு 'கிரிக்கெட்' ரசிகர்கள் வெச்சிருக்கற பேரு அது. உனக்குத் தெரியுமா... நான் கூட, தல பைத்தியம் தான்; ரசிகன் தான்.''
''நீங்க கிரிக்கெட்டெல்லாம் கூட பார்ப்பீங்களா?''
''பார்ப்பீங்களாவது... நாங்க, 'கிரிக்கெட் மேட்ச்'சுக்கு கிளம்புறதே, 'பிக்னிக்' போற மாதிரி இருக்கும். அப்போ அந்தப் பையன், பத்ரி பொடியன். கூட வருவான். அவன் இப்போ நம்ம, தலயோட, 'பிரண்டு'ன்றது ஆச்சரியமா இருக்கு. இந்த உலகத்துல கெட்ட விஷயங்கள் தான் சீக்கிரம் நடக்கும்ன்னு நினைச்சேன். ஆனா, நல்ல விஷயங்களும் சீக்கிரம் நடக்குது.''
''ஆமாம்ப்பா. நித்யா பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் அந்தக் கடவுள் தான், கண் திறந்து வழிகாட்டியிருக்கார்.''
''நீ வந்திட்டியா, ராஜு?'' என்றபடி வந்தார், அப்பா சுந்தரேசன்.
''ஆமாப்பா. வந்து அரைமணி நேரமிருக்கும்.''
''எல்லாம் கேட்டாயா?''
''கேட்டம்ப்பா.''
''யாரு உங்க மாமாகிட்ட போய் பேசுறது?''
— தொடரும்இ.ரங்கநாயகி
