PUBLISHED ON : ஜூலை 26, 2026

முன்கதைச் சுருக்கம்: பி ரபல கிரிக்கெட் வீரர், சித்தார்த் கவுதம், நித்யாவை திருமணம் செய்ய போகும் செய்தி, தொலைக்காட்சி வாயிலாக ஊரெல்லாம் பரவியது.
குலு மணாலியில் இருந்த இயக்குனர், பாலு, அதைப் பார்த்து, ராஜாமணியிடம் சொல்ல, இருவரும் சென்னை திரும்பினர்.
வீடு திரும்பிய ராஜாமணியிடம், சித்தார்த் தன்னை சந்தித்து பேசியதையும், திருமணம் செய்து கொள்ள விரும்பி, அப்பாவிடம் பேசியது, அவர் வீட்டை விட்டு துரத்தியது வரை அனைத்தையும் சொன்னாள், நித்யா.
திருமணம், திருப்பதியில் நடைபெற இருப்பதால், நித்யாவுடன் நாம் அங்கு செல்ல வேண்டும் என்று, ராஜாமணியின் அம்மா கூற, அப்போது அங்கு வந்த அவனது அப்பா, 'நித்யாவுக்கு நாம் என்ன தான் ஆதரவாக இருந்தாலும், பெத்தவங்க இருக்கும்போது, நாம் முன்னின்று நடத்துவது முறையாகாது. அவள் அப்பாவிடம் பேசிப் பார்ப்போம்...' என்றார்.
''எதுக்குப்பா மாமாகிட்ட போய் பேசணும்? நித்யா தன் பொண்ணே இல்லைன்னு எப்பவோ அவரு உதறிவுட்டுட்டாரே! சித்தார்த் கவுதம் எத்தனை பெரிய மனிதர். உலகம் மொத்தத்துக்கும் தெரிஞ்சவரு. அவரே, வீடு தேடி வந்து பொண்ணுகேட்டா, வெளிய போன்னு அனுப்பிட்டாரே. எப்ப, சித்தார்த்தே இங்க கொண்டு வந்து விட்டாரோ, அப்பவே இவ இந்த வீட்டுப் பொண்ணாயிட்டா. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா நீங்க கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கமாட்டீங்களா?'' என்றான், ராஜாமணி.
''இப்ப கூட ரொம்ப சந்தோஷமா செய்வேன், ராஜு... ஆனா, அது சரியில்ல; முறையுமில்ல. நானும் வரேன். ராஜம் நீயும் வா. மூணு பேருமா போய் உங்க அண்ணன்கிட்ட பேசுவோம். பெத்தவங்க இருக்கும் போது நாம் செய்யக்கூடாது.''
''சரிப்பா, நான் போய் குளிச்சிட்டு, 'டிரஸ்' மாத்திட்டு வரேன்.''
மூவரும் போனபோது, நித்யாவின் அப்பா வீட்டில் தான் இருந்தார். முதலில் உள்ளே நுழைந்த, ராஜாமணியைப் பார்த்ததும் முகம் இறுகி, 'கடுகடு'த்தது. குரல் கர்ஜித்தது...
''எங்கடா வந்தே?''
''உங்களை பார்க்கத்தான், மாமா. அம்மாவும், அப்பாவும் கூட வந்திருக்காங்க.''
''ஓஹோ, மூணு பேருமா வந்திருக்கீங்களா?'' என்றவர், நாற்காலியை விட்டு எழுந்தார்.
''ஏன், ராஜம். உன் பையனை படிக்க வெச்சு ஆளாக்குனதுக்கு நீ, செய்யுற நன்றிக்கடன் இது தானா!''
''நீங்க, என் பையனை நல்ல முறைல படிக்க வெச்சீங்க. நான் இல்லேன்னு சொல்லல. அதே மாதிரி உங்க மகளையும் நல்ல முறையில கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு கேட்கத்தான் வந்திருக்கோம்,'' என்று பதிலளித்தார், சுந்தரேசன்.
அதற்குள், நித்யாவின் அம்மா உள்ளேயிருந்து வந்தாள். தன் மனைவியும் வந்து சேர்ந்து கொண்டதும் நித்தியாவின் அப்பாவுக்கு உக்கிரமும், உறுமலும் அதிகமாயிற்று...
''என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாண வயசு வரல. வந்ததும் பத்திரிகை அடிச்சு, ஊர்கூட்டி நான், 'ஜாம் ஜாம்'ன்னு கல்யாணம் பண்ணி வைப்பேன்.'' என்றார்.
''நான் சொன்னது உங்க மூத்த பொண்ணைப் பத்தி.'' என்றார், சுந்தரேசன்.
''அப்படி எனக்கு யாருமில்ல. அவளுக்குத் தலைமுழுகி ரொம்ப காலமாச்சு.''
இடையில் குறுக்கிட்டாள், நித்யாவின் அம்மா...
''இதப் பாருங்கண்ணா, இவருக்கு கரி நாக்கு. வாயில் நல்ல பேச்சே வராது. நித்யா, உங்க வீட்டுல தான் இருக்கான்னு கேள்விப்பட்டதும் மனசு நிம்மதியாச்சு. உங்க பொண்ணா நினைச்சு, நீங்களே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருங்க. நாம் ஒண்ணு நினைக்க தெய்வம் வெறொன்னு நினைக்குது. என்ன செய்ய?''
''எதுக்கு அத்தை பழசெல்லாம் பேசுறீங்க? முடிஞ்சுப் போனதை முடிஞ்சதாகவே விட்டுடணும். என்னை விட எல்லா வகையிலும் உயர்ந்த ஒரு மனிதர் தான், நித்யாவுக்கு கிடைச்சிருக்கார். இதெல்லாம், நினைச்சே பார்க்க முடியாத விஷயம். சினிமாவில் வர்ற மாதிரி, கதைகள்ல படிக்கிற மாதிரித்தான் நம்ம வீட்ல நடந்திருக்கு. 'சிண்ட்ரல்லா மற்றும் ஸ்நோவொய்ட்' டெல்லாம் படிச்சோம். நம்ம வீட்லயே ஒரு 'சிண்ட்ரல்லா'வையும், 'ஸ்நோவொய்ட்'டையும் வெச்சுக்கிட்டு...''
''டேய், நிறுத்துடா. அவளைப் பார்க்க வீட்டுக்கு வர்ற மாதிரி வந்து, அவளை அவனோட கூட்டிக்குடுத்திருக்கியாடா?''
''கூட்டிக்கிட்டு வந்தவங்களுக்குத்தான் கூட்டிக்குடுக்கிறதெல்லாம் தெரியும். எங்களுக்கெல்லாம் தெரியாது,'' என, ராஜாமணி சொல்லி முடிப்பதற்கு முன், அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. கண்ணருகில் பொறி பறக்கிற மாதிரி இருந்தது, ராஜாமணிக்கு.
''வெளில போடா நாயே!''
கன்னத்தை தடவிக் கொண்டே, ராஜாமணி சொன்னான்...
''நான் நாய் தான் மாமா. கடைசி வரை நன்றியோடு இருக்கப் போகிற நாய்.''
நித்யாவின் அம்மா அழுதபடி, அவனருகில் போய் கன்னத்தை தடவிக் கொடுத்தாள். ராஜம்மாவின் கண்களும், 'கரகர'வென்று கண்ணீர் வடித்தன...
''நீ போ, ராஜாமணி. அண்ணனையும் கூட்டிக்கிட்டு கிளம்புங்க அண்ணி. இதுக்கு மேல இங்க இருந்தீங்கன்னா, இவுரு நாராசமாப் பேசுவாரு. எங்களுக்கு பதிலா நீங்க பந்தல்ல நின்னு, தாரை வார்த்துக் கொடுங்க. கற்பூரவாசனை தெரியாதவங்களை வெச்சுக்கிட்டு என்னால வேற என்ன சொல்ல முடியும்.''
''நித்யாவுக்கு நாங்களே கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டோம். ஆனாலும், பெத்தவங்க இருக்குற போது அவங்ககிட்ட சொல்லாம செய்யறது முறையில்லேன்னு தான் வந்தோம். நீங்க கவலைப்படாதீங்க. நித்யா இனி எங்க பொண்ணு. நாங்க பார்த்துக்கறோம்.''
வீ டு திரும்பிய மூவர் முகங்களிலிருந்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை, நித்யாவால். அவர்களும் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே, ஏதோ பேச வாயெடுத்தாள். அதற்குள், ராஜாமணியின் மொபைல் போன் ஒலித்தது. 'வாட்ஸ்-அப்' கால்.
''ஹாய், ராஜாமணி... 'ஐ யம்' சித்தார்த் கவுதம். வீடியோ காலுக்கு வாங்க.''
ராஜாமணியின் முகம் மலர்ந்தது.
'என்னோடு பேசுவது, 'தல'யா? என் பெயரை சொல்லி கூப்பிடுவது சி.எஸ்.கே., அணியின் கேப்டன், சித்தார்த் கவுதமா? இது நிஜமா அல்லது கனவா?'
''என்ன, ராஜு அப்படியே நிக்கறீங்க? அவர் உங்களை வீடியோ கால்ல வரச் சொன்னாரே!'' என்ற, நித்யாவின் குரல், ராஜாமணியின் பிரமிப்பைக் கலைத்தது.
''இல்ல நித்யா... பேசினது அவர்கிட்ட தானான்னு சந்தேகம் வந்தது. என் மொபைல் நம்பர் அவருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு ஆச்சரியமா இருக்கு.''
''இதுல என்ன ஆச்சரியம்? நான் தான் நம்ம வீட்டு விஷயம் மொத்தமுமே அவருக்கு தெரிஞ்சிருக்குன்னு சொன்னனே!''
''வா, நித்யா, இப்படி உட்காரு. முதல்ல அவர்கிட்ட பேசலாம்.''
இருவரும் சோபாவில் அமர்ந்து, சித்தார்த் கவுதமை, வீடியோ காலில் அழைத்தனர். முதலில், நித்யாவைத்தான் பார்த்தான், அவன்.
'ஹாய், நித்யா...' என்று தன் உள்ளங்கை வழியே முத்தம் ஒன்றைக் கடத்தினான். அத்தை, மாமா, ராஜாமணி அனைவர் எதிரிலும் அவன் அப்படிச் செய்யவே, வெட்கத்தால் முகம் சிவக்க, தலையைக் கவிழ்ந்து கொண்டாள், நித்யா.
''ராஜாமணி,'' என்றழைத்தான்.
''ஹலோ, தல. பேசறது நீங்கதான்னு நம்ப முடியல. கிள்ளி விட்டுக்கறேன்.''
''நான் கொஞ்சம், 'சீரியஸா' பேசணும், ராஜாமணி.''
''சொல்லுங்க?''
''உங்களுக்கு என் மேல கோபமோ, வருத்தமோ இல்லையே!''
''எதுக்கு வருத்தப்படணும்?''
''நித்யாவை என்னுடையவளாக்கிக் கொண்டதற்கு.''
''உங்களுடையதை உங்களுடையதாக்கிக் கொண்டீர்கள். எதற்கு கோபமும், வருத்தமும் படணும்? நான் ரொம்ப சந்தோஷப்படறேன். நித்யா பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்ததேன்ற சந்தோஷம். முதல் முறையா அவ மனசுக்குப் பிடிச்சதா ஒண்ணு நடக்குதேன்ற சந்தோஷம்.''
''ரா...ஜா...மணி!''
''சொல்லுங்க.''
''ராஜாமணி, 'யு ஆர் ரியலி எ கிரேட் மேன்!' எந்த ஆம்பிளைக்கும், தனக்குக் கிடைக்காதது இன்னொருவனுக்கு கிடைச்சா, பொறாமை வரும். அந்தப் பொறாமை, கோபத்துக்கு வழிவகுக்கும். கோபம் ஏறுமாறாக ஏதாவது செய்யத் துாண்டும். இதெல்லாம் இல்லாமல் சந்தோஷப்படுறீங்க பாருங்க. அங்க தான் நீங்க எங்கோ போறீங்க.''
''நீங்க அடிக்கற, 'ஏரோப்ளேன் ஷாட்' மாதிரியா?''
''நான் ரொம்ப சீரியஸா பேசறேன், ராஜாமணி. நீங்க அதை லேசாக்கப் பார்க்கறீங்க.''
''சார்,'' என்ற, ராஜாமணியை இடை மறித்தான், சித்தார்த் கவுதம்.
''ப்ளீஸ்... நமக்குள்ள எதுக்கு இந்த, 'பார்மாலிட்டி'யெல்லாம் . நான் உங்களை, ராஜாமணின்னு இயல்பா தானே கூப்பிடறேன். அதே மாதிரி, நீங்க என்னை சித்தார்த்ன்னே கூப்பிடுங்க.''
' 'சரி, சார்.''
''என்ன?''
''சாரி, சாரி, சித்தார்த்.''
''வர்ற, 23ந் தேதி, திருப்பதியில் கல்யாணம். அன்னிக்கே, சுவாமியின் கல்யாண உற்சவத்திற்கும் பணம் கட்டியிருக்கேன். என் பக்கத்திலிருந்து நானும், ரிஷப் ஷெட்டியும் மட்டும் தான். எனக்கு இருக்குற ஒரே உறவு பாட்டி தான். அவங்க வயசு 83. நடமாட்டமில்ல. படுத்த படுக்கை. மாத்தி மாத்தி நர்சுங்க கவனிக்குறாங்க. எனவே, அவங்களால வர முடியாது. நீங்க எத்தனை பேர் வர்றீங்க?''
''நாலே பேர். நான், அப்பா, அம்மா, நித்யா!''
''குட்! நான் என்னிக்கு உங்களுக்கு கார் அனுப்பட்டும்?''
''நீங்க என்னிக்கு அங்க வர்றீங்க?''
''இருபத்திரெண்டாம் தேதி காலை. சரியா இருக்கும் இல்ல?''
''நாங்களும் அப்பவே வந்துடறோம்.''
''நான் இன்னைக்கே கார் அனுப்பிடறேன். 'ஷாப்பிங்' போறதுக்கெல்லாம் உங்களுக்கு வசதியா இருக்கும்.''
''நாங்க, 'ஷாப்பிங்' பார்த்துக்கறோம். வாடகை கார் இருக்கு.''
''நித்யா இப்போ, 'செலிபிரிட்டி'ப்பா... எல்லா, 'டிவி' சானல்லையும் வந்திட்டா. நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதும், 'ரிஜிஸ்டர்' ஆயிடுச்சு. வாடகை கார்ல போறது சரியாகவா இருக்கும்?''
''சாரி, சாரி, அதை மறந்திட்டேன். 'மிடில்கிளாஸ் மென்ட்டாலிட்டி' போகல. ஒண்ணு சொல்ல மறந்திட்டேன், சித்தார்த்.''
''சொல்லுங்க, ராஜாமணி.''
''எங்க டைரக்டரையும் கூட்டிட்டு வரட்டுமா?''
''இது என்ன கேள்வி. பாலுவை நான் கேட்டதா சொல்லிடுங்க. நீங்க கூப்பிடறதையே என் பர்ஸனல் இன்விடேஷனா எடுத்துக்கச் சொல்லுங்க. திருப்பதியில் சந்திக்கலாம். ஓ.கே.,''
''ஓ.கே.,''
''நித்யாகிட்ட கொடுங்க... 'லவ் யு மை ஸ்வீட் ஹார்ட்!' ராத்திரி பேசலாம். பை!''
தி ருமலையில் ஒரு,'காட்டேஜ்' கிடைக்கவில்லை. எந்த ஹோட்டலிலும் அறை இல்லை. ஒவ்வொரு விடுதி, ஒவ்வொரு மடம் என, தங்க இடமின்றி கூட்டம் அலைபாய்ந்தது. இத்தனைக்கும், சித்தார்த் கவுதம் தன் திருமணத்தை ரகசியமாகத் தான் வைத்திருந்தான். ஆனால், காற்று பு காத இடத்தில் கூட, மீடியாக்களும், பத்திரிகைகாரர்களும் புகுந்து விடுவரே! ரகசியம் என்று நினைத்தது, மெல்லக் கசிந்து திருமலை தாங்காத அளவிற்கு கூட்டம்.
''எப்படி இத்தனை பேருக்கு தெரிஞ்சது, ரிஷப்?''
''ஏய், சித்... நீ, 'இன்டர்நேஷனல் செலிபிரிட்டி!' காதோட காது வச்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிடலாம்ன்னு நினைச்சியா?''
''அப்படித்தான் நினைச்சேன். கல்யாணத்தை சிம்பிளா முடிச்சு, ரிசப்ஷனை பெரிசா பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனா, இப்ப இவங்க கல்யாணத்தையே, 'ரிசப்ஷன்' மாதிரி ஆக்கிட்டாங்க. திருப்பதி மலை கொள்ளாத கூட்டமாம். அரசே, 'செக்யூரிட்டி'க்கெல்லாம் ஏற்பாடு பண்ணுது. இதுக்கு மேல பேசாமல் இருக்க முடியாது. நீ நேர்ல போய் சி.எம்.,மை, 'இன்வைட்' பண்ணிடு.''
''சரி, சித்து. நித்யா, ராஜாமணியெல்லாம் எப்ப வர்றாங்க?''
''நீ கேட்டு முடிக்கிறதுக்குள்ள வந்து நிப்பாங்க, பார்.''
அதே மாதிரி, வெங்கடேஸ்வரா, 'கெஸ்ட் ஹவுஸ்' வாசலில் அந்த நீண்ட நெடும் கார் வந்து நின்றது. அதிலிருந்து, நித்யாவும், ராஜாமணியும், ராஜமும், சுந்தரேசனும் இறங்கினர். அறையை விட்டு, சித்தார்த் கவுதமும், ரிஷப் ஷெட்டியும் வெளியில் வந்தனர்.
ஓடி வந்து, சித்தார்த்தை ஆரத் தழுவிக் கொண்டான், ராஜாமணி. அதில், அன்பும், பாசமும், பரிவும், மதிப்பும், மரியாதையும் இழையோடின.
ராஜம்மாவையும், சுந்தரேசனையும் கைகூப்பி வரவேற்ற, சித்தார்த் கவுதம், நித்யாவைப் பார்த்து, ''ஹாய் நித்தி. யு லுக் பேபுலஸ்,'' என்று தோளில் கைபோட்டு அணைத்து, தலை உச்சியில் முத்தமிட்டான்.
கூசிப் போனாள், நித்யா. அத்தனைப் பேர் எதிரில், சித்தார்த் கவுதம் அப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் அவளுக்குப் புதிதாக இருந்தன. ஆனால், ராஜாமணிக்கும், அவனது அம்மா, அப்பாவிற்கும் நெஞ்சு நிறைந்தது. இவனைக் கணவனாக அடைய, நித்யா கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று நினைத்தனர்.
- தொடரும்இ.ரங்கநாயகி
