PUBLISHED ON : ஆக 02, 2026

முன்கதைச் சுருக்கம்: நித்யாவின் வீட்டுக்கு சென்று, அவள் அப்பாவிடம், திருமண விஷயமாக பேசினர், ராஜாமணியும், அவன் பெற்றோரும். வழக்கம் போல், அவர் எடுத்தெறிந்து பேச, 'நித்யாவுக்கு எல்லாமாக இருந்து, நீங்களே திருமணம் செய்து கொடுங்கள்...' என்று, நித்யாவின் அம்மா கூறியதை அடுத்து, வீடு திரும்பினர்.
ராஜாமணியை, மொபைல் போனில் அழைத்து பேசினான், சித்தார்த். திருப்பதியில் திருமண ஏற்பாடுகள் செய்திருப்பதையும், அனைவரும் வர கார் அனுப்புவதாகவும் கூறினான்.
திருமணத்துக்கு முதல் நாள், விஷயம் அறிந்த ஊடகங்களும், ரசிகர்களும் திருப்பதியில் கூடி விட்டனர்.
திருப்பதிக்கு வந்த, ராஜாமணியையும், அவன் பெற்றோர் மற்றும் நித்யாவை வரவேற்று, அழைத்து சென்றான், சித்தார்த்.
திருப்பதியில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கள் உடமைகளை போட்டுவிட்டு, 'பரபர'வென கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
சித்தார்த்தின் நண்பனும், சக விளையாட்டு வீரருமான ரிஷப் ஷெட்டியுடன், முதலமைச்சருக்கு அழைப்பிதழ் கொடுக்க போனான், ராஜாமணி. சுந்தரேசனும், ராஜமும் கல்யாண வேலையில் அலைந்து கொண்டிருந்தனர். நித்யா தனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் கட்டிலில் அமர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல், விழித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, அழைப்பு மணியை அழுத்திய, சித்தார்த் கவுதம், 'உள்ளே வரலாமா?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
''வரலாமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முன், உள்ளே வந்தால் என்ன அர்த்தம்?''
''என் பொண்டாட்டியின் அறைக்குள் நான் நுழைய யார் எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும்?''
''நான் இன்னும் பொண்டாட்டியாகலேயே!''
''நீ அப்படியா நினைக்கிறாய்? எனக்கென்னவோ நீ, என்னோடு ஜென்ம, ஜென்மமாக வாழ்ந்து கொண்டிருப்பது போல தோணுது,'' என்றான், சித்தார்த்.
அதைக்கேட்டு உருகிப் போனாள், அவள்.
கண்களை உயர்த்தி, அவனைப் பார்த்த பார்வையில் எல்லையற்ற காதல் தெரிந்தது. அவளின் அந்தப் பார்வை, அவன் உள்ளத்தைக் குளிரச் செய்தது.
''ஹேய் நித்தி... கல்யாணத்துக்கு முன்னால சின்னதா ஒரு தப்பு பண்ண, 'பர்மிஷன்' தருவியா?''
கலவரப்பட்ட பார்வையோடு கண்களில் பயம் தெரிய, ''என்ன?'' என்று கேட்டாள், நித்யா.
அவன் என்ன கேட்கப் போகிறானோ என்று மனசு படபடத்தது.
''என்ன அப்படி பார்க்கற? 'கல்யாணம் முடிகிற வரை, அத்துமீறல் எதையும் நான் செய்ய மாட்டேன்'னு சத்தியம் பண்ணித் தரட்டுமா?''
''அதெல்லாம் வேணாம். எதுக்கு, 'பர்மிஷன்' கேட்டீங்கன்னு சொல்லுங்க.''
''ஒரே ஒரு, 'பெக், ஸ்காட்ச் விஸ்கி' எடுத்துக்கட்டுமா?''
''என்னது, 'விஸ்கியா?' நீங்க குடிப்பீங்களா?''
''ஹேய்... ஒரு, 'பெக், விஸ்கி' எடுத்துக்கிட்டா, அது குடிகாரன் என்று அர்த்தமா?''
''பின்ன... அதுக்கு என்ன பேர்?''
''தாகத்துக்கு தண்ணி.''
''இருங்க, ஒரு டம்ளர் தண்ணி தர்றேன்.''
''நித்தி, ப்ளீஸ்...''
''யாராவது திருப்பதி மலைக்கு வந்து குடிப்பாங்களா? அதையெல்லாம் கல்யாணம் முடிஞ்சு திரும்பி போகும் போது வெச்சுக்குங்க.''
''அம்மாடியோவ்... அதுக்கு இன்னும் எத்தனையோ மணிநேரமிருக்கு. தாக்கு பிடிக்க மாட்டேன்.''
''பிடிவாதக்கார குழந்தையா இருந்தா என்ன செய்யிறது... சரின்னு சொல்ல வேண்டியது தான்.''
''தாங்ஸ்டா,'' என்று அவளைக் கட்டி அணைத்து கொண்ட போது, ரிஷப் ஷெட்டியும், ராஜாமணியும் உள்ளே வந்தனர்.
''செம்ம கூட்டம், சித். எங்க காரே போக முடியல; போக விடல. அப்புறம் போலீஸ் வந்து தான் வழி ஏற்படுத்தி கொடுத்தாங்க,'' என்றான், ரிஷப்.
''என்னப்பா செய்ய முடியும்... ரசிகர்கள் இல்லேன்னா நாம ஏது? நம்ம பலமே அவங்க உற்சாக கத்தலும், கைத்தட்டலும் தானே! அப்போ சந்தோஷப்படற நாம், இப்பவும் சந்தோஷப்படணும்,'' என்றான், சித்தார்த்.
''இதனால தான் உன்னை, 'தல'ன்னு கொண்டாடுறாங்க,'' என்றான், ரிஷப்.
''சாப்ட்டு கொஞ்ச நேரம் படுத்து துாங்குங்க. அப்போதான் காலையில எழுந்திருக்க முடியும். பெருமாள் திருக்கல்யாணம் அதிகாலை, 4:00 மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுடும்,'' என்றான், ராஜாமணி.
எல்லாரும் அறையை விட்டுச் சென்ற பின், கட்டிலில் படுத்து, சித்தார்த் கவுதம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள், நித்யா. அப்படியே கண்களை மூடியவள், மெல்லத் துாங்கியும் போனாள்.
அதிகாலையில் எழுந்து, 'சிலுசிலு'வென்ற குளிரில் தலை குளித்து, முகூர்த்தத்துக்கென வாங்கிய பட்டுப் புடவையையும், நகைகளும் அணிந்து, ஈரம் போகாத சுருள் முடியை தளரப் பின்னி, அடரக் கட்டிய மல்லிப்பூ வைத்து, மிக சாதாரணமான அலங்காரத்துடன் வெளியில் வந்த, நித்யாவை பார்த்து பிரமித்து போனான், சித்தார்த் கவுதம்.
'பார்லர்' எதற்கும் போகவில்லை, 'மேக்-அப்' எதுவும் போடவிலை, சிகை அலங்காரம் ஏதுமில்லை. ஆனாலும், இவள் எப்படி இயற்கையாக இவ்வாறு ஜொலிக்கிறாள் என்ற ஆச்சரியத்தில், ''என்ன இப்படி அழகு தேவதையாக இருக்கிறாய்,'' என்று கேட்டான்.
''வெறுமனே குளித்து புடவை மட்டும் மாற்றியிருக்கிறேன். வேறு, 'மேக்-அப்' எதுவும் செய்து கொள்ளவில்லையே!''
''அதனால் தான் இயற்கை அழகில் ஜொலிக்கிறே. இதுதான் உன்னைக் காதலிக்கத் துாண்டியது,'' என்றான், சித்தார்த்.
அதற்குள் ராஜமும், சுந்தரேசனும் வந்து, சேர்ந்தனர். ராஜாமணியும், ரிஷப் ஷெட்டியும் பட்டு வேட்டி, அங்கவஸ்திரத்துடன் நடக்க முடியாமல் நடந்தனர். ஷெர்வானி-குர்தாவில் மிக அழகாக இருந்தான், சித்தார்த் கவுதம்.
'த கதக'வென எரியும் ஹோம குண்டத்தின் ஜுவாலைக்கு எதிரில், வெங்கடாசலபதி சாட்சியாக, நித்யாவின் வலது கையை பற்றி, போடப்பட்டிருந்த மணப்பலகைகளில் கழுத்து மாலைகள் அசைய அமர்ந்தனர்.
திருமால், சிவனுக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி, புரோகிதர் சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்னான், சித்தார்த் கவுதம்.
கெட்டி மேளம் முழங்க, கருகுமணி சங்கிலியின் நடுவில் கோர்க்கப்பட்ட நற்பவழங்களும், தாலியும் மின்ன, நித்யாவின் கழுத்தில் அணிவித்து, அவளை மனைவியாக்கிக் கொண்ட அதே தருணத்தில் மெல்ல குனிந்து, நித்யாவின் கன்னத்தில் முத்தமிட்டு, 'ஐ லவ் யு டார்லிங்' என்றான், சித்தார்த் கவுதம்.
இவை எதையும் காண முடியாமல் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் கன்னங்களில் வழியாமலிருக்க கை குட்டையால் துடைத்துக் கொண்டான், ராஜாமணி.
'பெருமாளே... இவர்கள் இருவரையும் சந்தோஷமாக, நிம்மதியாக, நிறைந்த ஆயுசோடும், தீர்க்க சுமங்கலியாகவும் வாழ வை...' என்று வேண்டியவாறு, தன் கையிலிருந்த அட்சதையை அவர்கள் தலையில் படும்படி துாவினர், சுந்தரேசனும், ராஜமும்.
திருமணம் முடிந்த கையோடு, நேராக பெங்களூரு போக வேண்டுமென்றான், சித்தார்த் கவுதம். ஆனால், ராஜம் அதற்கு சம்மதிக்கவில்லை...
''கல்யாணம் ஆனதும் பொண்ணு வீட்டுக்குப் போய் பாலும், பழமும் சாப்பிடணும், மாப்பிள்ளை. அது தான் முறை.''
''பெங்களூர்லேயும் பால், பழம் எல்லாம் கிடைக்கும், அத்தே,'' என்று புன்னகைத்தான், சித்தார்த்.
''அது தெரியும், மாப்பிள்ளை. ஆனா, இதெல்லாம் சம்பிரதாயம். காலம் காலமா செய்துக்கிட்டு வர்ற நடைமுறை. அர்த்தமில்லாமல், நம் முன்னோர் எதையும் சாங்கியமாக வைத்திருக்க மாட்டார்கள். நமக்கு தெரியல. அவ்வளவு தான்.''
''நீங்க சொல்ற மாதிரியே செய்திடலாம். என்ன, கல்யாணம் முடிஞ்ச கையோட போய் பாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம்ன்னு நினைச்சேன். எனக்கு இருக்கும் ஒரே உறவு, அவங்க தானே! பாவம், நடமாடக்கூட முடியாம, கட்டிலோடு கட்டிலாக கிடக்கறாங்க.''
''நீங்க சொல்றதும் சரிதான். ஒண்ணு செய்யுங்க,'' என்று இடையில் புகுந்தான், ராஜாமணி.
''சொல்லுங்க, ராஜாமணி.''
''சென்னை போய் அம்மா சொல்ற மாதிரி பாலும், பழமும் சாப்ட்டு, உடனே பெங்களூரு கிளம்பிடுங்க.''
மெல்ல புன்னகைத்தான், சித்தார்த் கவுதம்.
''என்ன சித்தார்த். ஏன் சிரிக்கிறீங்க?''
''சிரிக்கல. நாமெல்லாம் நம்மளப் பத்தியே நினைக்கிறோம். ஆனா, நித்யாவை பத்தி யாருமே நினைக்கல. அவ என்ன, சாவி கொடுக்கற பொம்மையா? நம் இஷ்டப்படியெல்லாம் நடக்க... அவளுக்குன்னு ஒரு கருத்து இருக்காதா? அதை நாம் யாருமே கேக்கலியே!''
''என்ன சொல்றீங்க, சித்தார்த்?''
''எனக்கு தான் அப்பா-அம்மா இல்ல. ஆனா, நித்யாவுக்கு இருக்காங்க. முதல்ல அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குறது தானே நியாயம்?''
சுரீரென்றது, ராஜாமணிக்கு.
'எப்பேர்ப்பட்ட மனிதன், இவன்! கடவுள், ஒருவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு போகிறார் என்றால், அதற்கான தகுதி நிச்சயம் அவரிடம் இருக்கும். நிஜமான அதிர்ஷ்டசாலி, நித்யா தான். இப்படிப்பட்டவன் கிடைக்க அவள் எவ்வளவோ புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்...' என்று ராஜாமணிக்கு தோன்றியது.
' 'என்ன யோசனை, ராஜாமணி?''
''இல்லை, சித்தார்த். இந்த மாதிரி யோசிக்கணும்ன்னு எங்க யாருக்கும் தோணல பாருங்க.''
''யார் யோசிச்சா என்ன? இப்ப நாம சென்னை கிளம்புவோம். உங்க வீட்டுல பாலும், பழமும் சாப்பிட்ட பின், நித்யா வீட்டுக்கு போகலாம். அவளுடைய அப்பா என்ன திட்டினாலும் நாம் காதுல போட்டுக்க வேண்டாம். அவர் அப்படித்தான்னு தெரிஞ்சப்புறம், நாம் தப்பு கண்டுபிடிச்சிட்டிருக்கக் கூடாது. அவளுடைய அம்மாகிட்டயும், அவர்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கின பிறகு, நாங்க பெங்களூரு போறோம். பாட்டிய பார்த்தப்புறம் திரும்பி வர்றோம்.''
''திரும்பி வரப் போறீங்களா?''
''ஆமாம், ராஜாமணி. நான் சி.எஸ்.கே., அணியின் கேப்டன் இல்லையா? என்னை அந்த அளவு நேசிக்கிற, வாழ வைக்கிற சென்னை ரசிகர்களோட எனக்குத் திருமணமான சந்தோஷத்தை பகிர்ந்துக்க வேண்டாமா? 'கிரிக்கெட் போர்டு' மாபெரும் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருக்கு. எல்லா, 'பிளேயர்சும்' வர்றாங்க. அதுக்காக, உடனே திரும்பியாகணும்.''
''ஓ.கே., கிளம்பலாம். நித்யாவுக்கும், உனக்கும் அலங்கரிக்கப்பட்ட, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் தயாராக இருக்கு. நான், அம்மா, அப்பா மூணு பேரும் பின்னாலேயே வர்றோம்.''
''அடுத்து என்ன, ரிஷப்?''
''நான் இங்கிருந்து பெங்களூரு போய், மும்பை போயிடறேன், சித்.''
''அப்ப என் வரவேற்பு நிகழ்ச்சிக்கு?''
''கல்யாணத்துக்கு வந்த நான், 'ரிசப்ஷனுக்கு' வர மாட்டேனா? 'டோன்ட் ஒர்ரீ...' மும்பையிலிருந்து வந்திடுவேன்,'' என்று கூறி சென்றான், ரிஷப் ஷெட்டி.
ஜன்னலை ஒட்டி உட்கார்ந்திருந்த, நித்யாவைப் பார்த்தான், சித்தார்த். அவள் மும்முரமாக வெளியில் தன் பார்வையை தவழ விட்டுக் கொண்டிருப்பதை கவனித்து, சொன்னான்...
''ஹேய் நமக்கு கல்யாணமாகி, ஆறேழு மணி நேரமாகிவிட்டது.''
வெளியிலிருந்து, தன் பார்வையை மீட்டு, அவனை ஏறிட்டு, மெல்லப் புன்னகைத்தாள், நித்யா.
''இப்படி கதவோரம் ஒடுங்கி உட்காரவா நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க?''
''உஷ்...'' என்று உதட்டில் விரல் வைத்த, நித்யா, அதே ஆள்காட்டி விரலால், வண்டி ஓட்டிக் கொண்டிருந்த டிரைவரை சுட்டிக் காட்டினாள்.
''ஹோ... அவருக்கா பயப்படுற? சின்ன வயசுலயிருந்து அவர் எனக்கு வண்டி ஓட்டி வர்றாரு. ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவரும் இந்த சென்னப்பா தான். என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சவரு... நீயே கேட்டுப்பாரு,'' என்றான்.
ஓட்டுனர், சென்னப்பா நன்றாகத் தமிழ் பேசினார்...
''அம்மா, நீ, என் பொண்ணு மாதிரி. தம்பி நான் பெறாத புள்ள. தம்பி விளையாட்டுப் பிள்ளைம்மா. பேரு, புகழ், பணம் எல்லாம் இருக்கு. உலகமே கொண்டாடுது. ஆனா, இவரு கிருஷ்ண பகவான் மாதிரி.''
''அப்படின்னா நிறைய கோபியருங்க இருக்காங்களாப்பா?'' சடாரென்று கேட்டு விட்டாள், நித்யா.
''இதோ பாரும்மா, நித்யா... ஒரே பார்வையில், ஹிந்திப்பட நடிகைங்க, புகழ்பெற்ற மாடல்ங்கன்னு ஓடி வருவாங்க. ஆனா, தம்பியோட மனசும், பார்வையும் அதுல எல்லாம் போகல. பாரம்பரியமான பணக்காரக் குடும்பம். ஏராளமான சொத்து இருக்கு.
''ஆனாலும், தம்பி ரொம்ப எளிமையா இருக்கும். எங்களையெல்லாம் மதிச்சு நடக்கும். குடும்ப கவுரவம் கொஞ்சமும் குறையாமல் தான் பழகும். தனக்குக் குடும்பப்பாங்கான குத்துவிளக்கு மாதிரியான பொண்ணு வேணும்ன்னு தான் காத்துட்டு இருந்தாரு. உன்னைப் பார்த்தப்புறம் நீ தான்னு முடிவு பண்ணிட்டாரு. நான், கிருஷ்ணன்னு சொன்னது, தீராத விளையாட்டுப் பிள்ளைன்றதுக்காக.''
''ஒரே கேள்வி தான் கேட்டேன். எவ்ளோ நீளமான பதில் சொல்லிட்டீங்க,'' என்றாள், நித்யா.
''உன் சந்தேகம் தீர்ந்து போச்சா, இல்லையா?'' என்று கேட்டான், சித்தார்த்.
''ஐயய்யோ... நான் சந்தேகப்படலீங்க,'' என்றாள், நித்யா.
- தொடரும்
இ.ரங்கநாயகி
