தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (14)

உனக்காகவே நான்! (14)

உனக்காகவே நான்! (14)


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: சித்தார்த் கவுதமுக்கும், நித்யாவுக்கும் திருமணம், திருப்பதியில் கோலாகலமாக நடந்து முடிந்தது. உடனே, பெங்களூரு போய், பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றான், சித்தார்த். ஆனால், நித்யாவின் அத்தை, நம் சம்பிரதாயப்படி, திருமணமான தம்பதியர், முதன் முதலில் தாய் வீட்டுக்கு சென்று, பால், பழம் சாப்பிடுவது தான் முறை என்றார். அதற்கு சம்மதித்த, சித்தார்த், காரில் சென்னை திரும்ப முடிவு செய்தான். காரில் வரும்போது, சித்தார்த்தின் கார் ஓட்டுனர், சென்னப்பா, சித்தார்த் பற்றி வானளாவ புகழ்ந்தார். எங்க சித்தார்த், கிருஷ்ணபகவான் மாதிரி என்று சொல்ல, 'அப்ப, அவருக்கு கோபியர் அதிகம் இருப்பரோ?' என்று கேட்டாள், நித்யா. 'கிருஷ்ணர் போல் விளையாட்டு பிள்ளை' என்று சென்னப்பா கூற, 'இப்ப உன் சந்தேகம் தீர்ந்ததா?' என்று, நித்யாவிடம் கேட்டான், சித்தார்த். ''நீ சந்தேகப்படலைன்னா, அதுக்கு, 'பொசசிவ்நெஸ்' என்று அர்த்தம்.''

தலை கவிழ்ந்தாள், நித்யா.

''இருக்கணும், இந்த, 'பொசசிவ்நெஸ்' இல்லேன்னா அது, 'லவ்'வே இல்ல. நித்யா, ரொம்ப, 'டயர்டா' இருக்கு. உன் மடியில தலைவெச்சு படுத்து துாங்கட்டுமா?''

''என்ன தம்பி, 'பர்மிஷனெல்லாம்' கேக்குறீங்க? நீங்க படுத்து துாங்குங்க!'' என்றார், ஓட்டுனர்.

கால்களை மடக்கி, அவள் மடி மீது தலைவைத்துப் படுத்தவன், ''ஹேய் மெத்து மெத்துன்னு, இருக்கு. மடியே இப்படின்னா...'' என்ற, அவன் உதடுகளை மேலே பேசவிடாமல் தன் விரல்களால் மூடினாள்.

''ஐயோ போதும், துாங்குங்க,'' என்று, மயிலிறகால் வருடுகிற மாதிரி, அவன் கண்களை மெல்ல மூடினாள். தாயின் மடியில் படுத்திருக்கும், குழந்தையாக துாங்கிப் போனான், அவன்.

கா ர் கதவைத் திறந்து, ராஜாமணி குரல் கொடுக்கும் வரை, சித்தார்த் கவுதம் வேறு உலகில் இருந்தான்.

''வீடு வந்திடுச்சு, சித்தார்த்.''

''ஹோ, சென்னை வந்தாச்சா?'' என்று கேட்டான்.

''வீடே வந்தாச்சு.''

உள்ளே போய், ராஜம் கொடுத்த பழத்தை சாப்பிட்டு, பாலைக் குடித்தனர்.

''ராஜாமணி, அப்பாவும்-அம்மாவும், 'ரெஸ்ட்' எடுக்கட்டும். நீங்க கூட வாங்க. நித்யா வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்.''

மூவரும் கிளம்பினர். இவர்கள் போன போது, நித்யாவின் அப்பா வீட்டில் இல்லை. அவர்களைப் பார்த்ததும், அம்மாவின் முகம் எல்லையற்ற சந்தோஷத்தைக் காட்டியது. ஓடிவந்து, நித்யாவை கட்டிக் கொண்டாள்.

''உன்னை இந்த மாதிரி கல்யாணக் கோலத்துல பார்க்க எத்தனை சந்தோஷமாக இருக்குடி, நித்யா,'' என்ற அம்மாவின் கண்கள் கலங்குவதை கண்ட, நித்யாவின் கண்களும் கலங்கின.

''கல்யாணம் நல்லபடியா முடியணும்ன்னு நான் வேண்டாத தெய்வமில்லை.''

''எதுக்கு அத்தை வீணா கவலைப்படறீங்க? நித்யாவுக்கு இனி நான் எல்லாமாக இருப்பேன். கண்ணுல துளி தண்ணி வர விட மாட்டேன். அக்னி வளர்த்து, தேவர்களையும், முனிவர்களையும் சாட்சியாக வைத்து, சத்தியம் செய்ததை ஒரு போதும் மறக்க மாட்டேன்.

''கடவுள் என்னிடம் மிகுந்த கருணை உள்ளவராக இருக்கிறார். நான் ஆசைப்பட்ட அனைத்தையும் தந்திருக்கிறார். நான் விரும்பிய பெண்ணையே மனைவியாக்கி இருக்கிறார். அவள் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன். ஒரு மனுஷன், தன் உயிருக்கு மேலாக எதை நேசிக்க முடியும், அத்தை.''

''இது போதும் எனக்கு. வேறென்ன வேண்டும்?'' என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள், உள்ளே வந்தார், நித்யாவின் அப்பா. நித்யாவையும், சித்தார்த்தையும் கல்யாண கோலத்தில் கண்டதும், கண்கள் சிவக்க, 'நறநற'வென்று பற்களைக் கடித்தார்.

''டேய், ராஜாமணி.''

''சொல்லுங்க, மாமா,'' என்று முன்னால் வந்தான், அவன்.

''மாமா, என்னடா மாமா? அந்த உறவுக்கெல்லாம் நான் எப்பவோ தலைமுழுகிட்டேன். முதல்ல இவங்களை கூட்டிக்கிட்டு வெளியில போடா.''

''நாங்க போயிடறோம், நில்லுங்க. அதுக்கு முன்னால உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போயிடறோம்,'' என, சித்தார்த் சொன்னதை கேட்டு சீறினார், அவர்.

''என் வீட்டுக்குள்ள நுழைஞ்சு, என் சம்மதமில்லாம, போய் திருட்டுத்தாலி கட்டினவனுக்கெல்லாம் ஆசீர்வாதம் தான் பாக்கி.''

''திருட்டுத் தாலி கட்டல. வெங்கடாசலபதி சாட்சியா, அக்னி வளர்த்து, மந்திரம் சொல்லி, முறையா தாலி கட்டித்தான் கூட்டிட்டு வந்திருக்கேன். திருப்பதியிலிருந்து நேராக இங்க தான் வர்றோம்.''

''அவருக்கு ஏன் பதில் சொல்லிட்டிருக்கீங்க, சித்தார்த். தன்னை மாதிரியே எல்லாரையும் எடை போடுறாரு. என் உதவிக்கு கூட்டிட்டு வந்த பொண்ணை, 50 வயசுல திருக்கழுக்குன்றத்துல வச்சு திருட்டுத்தாலி கட்டினது மாதிரின்னு நினைச்சுக்கிட்டாரு.''

''என்னடி குரைக்குற நாயே. 'சப்போர்ட்'டுக்கு ஆளிருக்குற தைரியமா?'' என்று அம்மாவை அறைய ஓங்கின கையை சட்டென்று பிடித்தான், சித்தார்த்.

''இது, 'கிரிக்கெட் பேட்' பிடிக்கிற கை. தாங்க மாட்டீங்க. இனி, அத்தையையோ, குழந்தைகளையோ அடிக்கிற வேலை வெச்சுக்கிட்டீங்க, நடக்குறதே வேற. வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குங்க,'' என்று கையை உதறினான், சித்தார்த்.

''சுசீலா,'' என்று குரல் கொடுத்தான்.

பயமும், மிரட்சியுமாக வந்த, சுசீலாவிடம், ''ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வாம்மா,'' என்றான்.

தண்ணீர் வந்ததும், நடு ஹாலில் கையைக் கழுவினான்.

''உங்களைத்தொட்ட பாவம், இங்கேயே தீர்த்துக்கறேன்,'' என்றவன், நித்யாவின் அம்மாவை பார்த்தான்.

''இவர் என்ன வேணா சொல்லட்டும்மா. ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க இவருக்கு உரிமை இருக்கும் போது, சட்டபடியும், தெய்வம், தேவர்கள் சாட்சியா முறையா அக்னி வளர்த்து, அருந்ததி பார்த்து கல்யாணம் பண்ணிக்க, நித்யாவுக்கு உரிமை இல்லையா என்ன? நித்யா எப்போதெல்லாம் உங்களைப் பார்க்கணும்ன்னு நினைக்கிறாளோ அப்போதெல்லாம் கூட்டிட்டு இங்கு வருவேன். அதை இவர் தடுக்கவே முடியாது.

''கட்டின பொண்டாட்டி இருக்கும் போது, இவர் திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு நீங்க ஒரு, 'கம்ப்ளெய்ன்ட்' குடுத்தீங்கன்னா போதும். இவரைத் துாக்கி,'உள்ள' வெச்சிடுவாங்க. அதனால், கவலையோ, வருத்தமோ படாதீங்க. தைரியமா இருங்க. நான் வர்றேன். வர்றேன், சுசீலா. வாங்க, ராஜாமணி போகலாம்.''

கம்பீரமாக நித்யாவின் கைப்பற்றி அழைத்து அவன் வெளியில் வந்த போது, ராஜாமணிக்கு அவன் மீதிருந்த மதிப்பும், மரியாதையும் அதிகமாயிற்று.

'இந்த மாதிரி பேசி தன்னால் நடந்து கொண்டிருக்க முடியுமா?' என்று பிரமித்துப் போனான்.

ரா ஜாமணியை வீட்டில் இறக்கிவிட்ட பின், காரிலிருந்தவாறு கேட்டான், சித்தார்த்.

''நாங்க இப்படியே கிளம்பவா?''

''சித்தார்த், 'ஐ யம் வெரி சாரி!' மாமா உங்களை நடத்தின விதம் மனசை ரொம்ப சங்கடப்படுத்துது. புதுசா கல்யாணம் பண்ணி ஆசீர்வாதம் வாங்க வந்தவங்க பரம விரோதியே ஆனாலும், 'நல்லா இருங்க'ன்னு வாழ்த்தறது தான் நம்ம பண்பாடு.''

''விடுங்க, ராஜாமணி. அதை நினைச்சு கவலைப்படல. ஆனா, மனுஷங்க ஏன் இப்படி இ ருக்காங்கன்னு தான் புரியல. அடி மனசுலேயிருந்து வர்ற அன்பைத் தவிர, மத்தவங்க மேல வெச்சிருக்கிற பாசத்தை தவிர, வேறு எதுவுமே பெரிசில்லன்னு எப்ப தெரிஞ்சுக்கப் போறாங்கன்றது தான் என் ஏக்கம்.''

''அன்பு இருந்த மனசுல இப்போ காசு பணம் நிறைஞ்சு போயிடுச்சு. பாசம் இருந்த இடம் சொத்து சுகமாயிடுச்சு. இது மாறும்ன்னு எனக்குத் தோணல. இளைய தலைமுறையை நினைச்சு தான் கவலைப்படறேன், பயப்படறேன்,'' என்று நிஜமான வருத்தத்தோடு கூறினான், ராஜாமணி.

''இல்லை, ராஜாமணி. நீங்க சொல்றது உண்மைன்னாலும் மொத்தமும் உண்மையில்லை, ராஜாமணி. இந்த நிலைமை மாறும்ன்றது தான் என் அபிப்பிராயம்.''

''நீங்க எல்லாத்தையும், 'பாசிட்டீவ்'வாகவே பார்க்கறீங்க, சித்தார்த்.''

''நான் ஒரு, 'ஸ்போர்ட்ஸ்மேன் மற்றும் கிரிக்கெட் கேப்டனும்' கூட. 'ஜெயிக்கணும், ஜெயிப்போம்...' என்ற உறுதியான எண்ணத்துடன் தான் 'பீல்டில்' இறங்குவேன். அப்பத்தானே ஜெயிக்க முடியும்,'' என்று சிரித்து, ''ஓ.கே., கிளம்புறோம், நேரமாயிடுச்சு. 'பிளைட் வில் பி வெயிட்டிங்' ராஜாமணி.''

''எத்தனை மணி பிளைட்?''

''பிரைவேட் பிளைட் ராஜாமணி. அரைமணி நேரத்துல பெங்களூரு போயிடுவோம்.'' காரின் மீது சாய்ந்திருந்த, ராஜாமணி நகர்ந்து வழி விட்டான். காரைக் கிளப்பினார், சென்னப்பா.

''திரும்ப எப்ப வர்றீங்க?''

''ரெண்டே நாள்.''

கார் கிளம்பியது.

''சென்னப்பாகாரு. எங்களை 'ஏர்போர்ட்டில்' இறக்கி விட்டுட்டு நீங்க பெங்களூரு கிளம்பிடுங்க.''

''சரி, தம்பி.''

வி மான நிலையம் நெருங்க நெருங்க, நித்யாவின் மனதை பயம் பிடித்து ஆட்டிற்று. அந்தக் கலவரம் முகத்தில் தெரியவே, அவள் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, காதருகில் போய் மெல்லக் கேட்டான்...

''ஹேய், என்ன ஆச்சு? ஏன் முகமெல்லாம் மாறி போச்சு?''

''பயமா இருக்கு.''

''என்ன பயம். எதை நினைச்சு பயம்?''

''நான் இதுவரை 'ஏர்போர்ட்' உள்ள கூட போனதில்ல. 'பிளேன்' பறக்கிறதை அண்ணாந்து பார்த்திருக்கேன். அவ்வளவு தான்.''

அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான்.

''இது தான், இந்த வெகுளித்தனம் தான் எனக்குப் பிடிச்சது. உன்னைப் பார்க்கிற போதெல்லாம், ரோஜா படத்துல நடித்த, மதுபாலா தான் ஞாபகத்துக்கு வருவாங்க.''

''ஏன்?''

''உன்னை மாதிரியே அழகு; உன்னை மாதிரியே அப்பாவி.''

''இதுக்கு முன்னால, 'பிளேன்ல' போனதில்ல; கிட்ட போய்க் கூடப் பார்த்ததில்ல. 'பிளேனுக்குள்ள' எப்படி இருக்கும்ன்னு கூடத் தெரியாது.''

''இப்ப பார்க்கப் போற. 'பிளேன்ல' போகப் போற. 'பிளேனை' தெரிஞ்சுக்கிற மாதிரி, கல்யாணம்ன்னா என்னன்னும் தெரிஞ்சுக்கப் போற.''

''அதான் தெரிஞ்சுக்கிட்டேனே!''

''என்ன தெரிஞ்சுக்கிட்ட?''

தாலியை எடுத்துக் காட்டினாள்.

''மண்டு, மண்டு,'' என்று நெற்றியில் செல்லமாக முட்டினான்.

''ஏங்க?'' என்றாள், அப்பாவியாக.

''கல்யாணம்ன்றது இது மட்டுமில்லை. இன்னிக்கு ராத்திரி நான் காட்றேன்.''

''சீ, போங்க,'' முகம் சிவந்தாள்.

செண்பகப்பூ முகம், சிவப்பு ரோஜாவாக மாறும் வர்ணகோலத்தை ரசித்தான்.

'இளசுகள் ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். தீர்க்காயுசா இதே அன்போட வாழணும்...' என்று மனதுக்குள் மனசார வேண்டிக் கொண்டு, விமான நிலைய வாசலில் அவர்களை இறக்கி விட்டு கிளம்பினார், சென்னப்பா.

கா ரை விட்டு இறங்கிய உடனே, அவனை அடையாளம் கண்டு, மக்கள் அவனைச்சுற்றி கூடினர். 'செல்பி' எடுத்துக் கொண்டனர். கை குலுக்கினர். புன்னகையோடு அவர்களை எதிர்கொண்டு, அன்பினைப் பரிமாறிய பின், நித்யாவின் கைபிடித்து உள்ளே அழைத்துப் போனான். விமான நிலைய அதிகாரிகளும் வந்து கைகுலுக்கினர். திருமண வாழ்த்து தெரிவித்தனர்.

விமான நிலையத்தினுள் நுழைந்தது முதல், திருவிழாவிற்கு வந்த சிறுமியைப் போல பார்த்துக் கொண்டு வந்தாள், நித்யா. பஸ் ஏறி விமானத்தை நெருங்கியதும் பெரிய இருக்கைகள் கொண்ட பிரமாண்டமான உலோகப் பறவையை பார்த்து பிரமித்தாள்.

''வானத்துல பார்க்குறப்போ சின்னதா இருக்கு. நேர்ல பார்க்குறப்போ எவ்வளவு பெரிசாக இருக்கு!'' என்று வியந்தாள். சித்தார்த் கவுதமை தொடர்ந்து, விமானப் படிகளில் ஏறி உள்ளே நுழைந்ததும் உள் அமைப்பும், இ ருக்கைகளும் பரவசப்படுத்தின.

''என்ன அப்படி பார்த்திட்டு நிக்குற. வா, வந்து ஜன்னல் பக்க சீட்டுல உட்காரு. வெளிய பார்க்க வசதியாக இருக்கும்.''

அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள். அவனும் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அவளுக்கு, 'சீட் பெல்ட்'டை போட்டு காட்டினான்.

'மைக்கில்' கேப்டன் குர ல் கேட்டது.

'' வெல்கம் சார். 'ஹேப்பி மேரீட் லைப்' இன்னும், 40 நிமிடங்களில் பெங்களூருவை அடைவோம்.''

விமானம் மேலே கிளம்பிய போது, நித்யாவின் அடி வயிற்றை என்னவோ செய்தது. காது, 'ஙொய்' என சப்தமிட்டது...

''என்னங்க இது?'' என்று, அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டாள், நித்யா.



- தொடரும்இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us