தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ உனக்காகவே நான்! (15)

 உனக்காகவே நான்! (15)

 உனக்காகவே நான்! (15)


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: சென்னை திரும்பிய, சித்தார்த்தும், நி த்யாவும், ராஜாமணி வீட்டுக்கு சென்று, பால், பழம் சாப்பிட்ட பின், நித்யாவின் அப்பா வீட்டுக்கு கிளம்பினர். இவர்களை பார்த்ததும், சந்தோஷமானாள், நித்யாவின் அம்மா. ஆனால், அவள் அப்பாவோ வழக்கம்போல், தம்பதியரை கேவலமாக பேசியதோடு, நித்யாவுக்கு ஆதரவாக பேசிய, அவள் அம்மாவையும் அடிக்க பாய்ந்தார். அங்கிருந்து, விமான நிலையம் சென்று, சித்தார்த்துக்கு சொந்தமான விமானத்தில், பெங்களூரு செல்ல கிளம்பினர்.

விமானம் கிளம்பியதும், நித்யா சற்று நிலை தடுமாறினாள்.

''ஒண்ணுமில்ல, பயப்படாத. 'பிளேன்' மேலே எழும் போது, அப்படித்தான் இருக்கும். முதல்முறையா, 'பிளேன்ல' வர்ற இல்லையா, அதான். போகப் போக சரியாகிடும்,'' என்றவன், ''ஏதாவது ஜூஸ் குடிக்கறியா?'' எனக் கேட்டான்.

''இங்க எப்படி ஜூஸ் கிடைக்கும். கடையே இல்லையே?'' என்றாள், நித்யா.

''மக்கு... மக்கு,'' என்று, செல்லமாக தலையில் குட்டினான்.

''ஏன்?'' என்று, தில்லானா மோகனாம்பாள் , மனோரமா மாதிரி கேட்டாள்.

''ஆமா, இங்க ஜூஸ் கடை, காய்கறிக் கடை, துணிக்கடை, பாத்திர கடையெல்லாம் இருப்பதற்கு இது என்ன, 'மார்க்கெட்'டா? இது, 'பிளேன்!' அதுவும், 'பிரைவேட் பிளேன்!' நம்மைத்தவிர, வேற யாராவது இருக்காங்களா பார்த்தியா. இது, ஐயாவோட சொந்த, 'பிளேன்!'

''ஆமா, நீ சென்னையில காலேஜ் படிக்கிற பொண்ணா, இல்லாட்டி குக்கிராமத்துல களை எடுக்குற பொண்ணா... அவங்க கூட, உன்னை விட விபரமா இருப்பாங்க. வெறும் புஸ்தகங்களை மட்டும் கொடுத்து, ஏட்டு படிப்பை தவிர, உலக அறிவே இல்லாம ஆக்கி வெச்சது, ராஜாமணியோட தப்பு.''

''அவரு தப்பு இல்லீங்க. எங்கப்பா எங்களை வெளியே விட மாட்டாரு. காலேஜ் விட்டா நேரா வீடு. வீட்டிலேயிருந்து நேரா காலேஜ். கடிவாளம் ஒண்ணு தான் போடல.''

''இப்படியே பேசிட்டிருந்தா, பெங்களூரு வந்துடும். வா, போய், 'காக்பிட்' பார்க்கலாம்.''

''காக்பிட்ன்னா?''

''உன் தலை மாதிரி, 'பிளேனோட' தலை; 'என்ஜின்!' வா காட்றேன்.''

''இருங்க, இருங்க. உங்க கையப் பிடிச்சுக்கறேன். பறக்குற, 'பிளேன்ல' எப்படி நடக்கிறது?''

''ஓடுற டிரெயின்ல நடந்திருக்கல்ல?''

''ம்ஹும்! நான், ட்ரெயின்லேயும் போனதில்ல.''

''ரொம்ப சந்தோஷம்,'' என்றவன் அழைத்து போய், 'காக்பிட்'டை காட்டினான். இரு பைலட்டுகளும் அவனுக்கு, 'சல்யூட்' வைத்தனர்.

''ஹேப்பி மேரிட் லைப் மேம்,'' என்றனர்.

ஒவ்வொன்றாக, நித்யாவிற்கு விளக்கினான். ஒண்ணும் புரியாவிட்டாலும், தலையாட்டியபடி கேட்டுக் கொண்டாள்.

''இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும். 'ஏரோனாட்டிக் இன்ஜினியரிங்' படிச்சீங்களா?''

''மேடம்,'' என்றார், வட இந்தியரைப் போல் வெள்ளை வெளேறென்றிருந்த அந்த, 'பைலட்!'

''இவர், 'இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் கிளப் மெம்பர்!' எல்லா 'ஏரோப்பிளேன்'களையும் பிரமாதமாக ஓட்டக் கூடியவர். 'கிரிக்கெட்டிற்கு' அடுத்து, இவருக்கு பிடிச்சது விமானம் ஓட்டுவது. மேட்ச் இல்லாத நாட்களில், 'பிராக்டிஸ்' முடிந்ததும், விமானம் ஓட்டக் கிளம்பிடுவார். இதுதவிர, இன்னொரு விமானமும் இவருக்கு இருக்கு. நீங்க கூட வர்றதுனால இன்னிக்கு இவர் விமானம் ஓட்டல. இல்லேன்னா இதை இவர் தான் ஓட்டிட்டு வந்திருப்பாரு.''

ஆச்சரியமாக, சித்தார்த்தைப் பார்த்தாள். அவனைப் பற்றி கேள்விப் படப் பட, தான் எந்த விதத்திலும் அவனுக்கு தகுதியில்லாதவள் என்று தோன்றியது. சென்னப்பா சொன்னது, இப்போது, 'பைலட்' சொன்னதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இவர் அம்பானிக்கு இணையான பணக்காரர்ன்னு தெரியுது. இப்படிப்பட்டவர், ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தார்? நான் எந்த விதத்தில் இவருக்குப் பொருத்தமானவள்?

அவளுக்குள் இருவிதமான பயம் தோன்றியது. மெல்ல அவனிடம் கேட்டாள்...

''என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சது?''

''ஏற்கனவே நிறைய தரம் சொல்லிட்டேன். நீ, வானத்திலிருந்து வர்ற மழைத்துளி மாதிரி. கீழே விழாமல் நேராக என் நெஞ்சுக்குள் விழுந்துட்ட. ஒருத்தரைப் பிடிக்கறதுன்னா ஏன், எதுக்குன்னெல்லாம் கேட்டுட்டிருக்க கூடாது. அப்படி, கேள்வியெல்லாம் கேட்டு வர்றதுக்கு பேரு காதலில்ல; கணக்கு! எனக்கு, கணக்கெல்லாம் போடத் தெரியாது. காதலிக்கத்தான் தெரியும். அதுவும் என், நித்யாவை மட்டும்,'' என்று, அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

வி மானம் பெங்களூருவை எட்டி விட்ட அறிவிப்பு வந்ததும், இருவரும் இருக்கையில் அமர்ந்து, 'சீட் பெல்ட்'டை போட்டுக் கொண்டனர். அடுத்த, 10- நிமிடங்களுக்குள் விமானம் தரையில் இறங்கி, 'ரன்வே'யில் ஓடி நின்றது.

சென்னை விமான நிலையத்துக்கு, 'ரோல்ஸ்ராய்ஸ்' கார் வந்த மாதிரி, பெங்களூரு விமான நிலையத்துக்கு கருப்பு, 'பென்ஸ்' கார் வந்திருந்தது. அதை ஓட்டி வந்தவன், இளைஞனாக இருந்தான். வெள்ளை நிற சீருடையும், வெள்ளைத் தொப்பியும் அணிந்திருந்தான். சித்தார்த்தைப் பார்த்ததும், ராணுவ வீரனை போல், 'சல்யூட்' அடித்தான். மிக்க மரியாதையுடன், நித்யாவிற்கு கை கூப்பினான்.

காரில் ஏறிக்கொண்டே கன்னடத்தில் கேட்டான், சித்தார்த்...

''ஷிக்கண்ணா. மழே பார்த்தா இல்லி?''

''அவுது சார். தும்ப ஜோராகி மழே பந்தது. இவாகதானே நில்து.''

அவர்கள் பேசியதை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தாள், நித்யா.

''என்ன பார்க்கறே?''

''நீங்க பேசினது ஒண்ணுமே புரியல.''

''இங்க மழை பெஞ்சுதான்னு கேட்டேன். நல்ல மழை பெய்தது. இப்பதான் நின்னுதுன்னு, சிக்கண்ணா பதில் சொன்னான்.''

''எல்லாரும் இப்படியே பேசினா எனக்குப் புரியாதே.''

''கவலைப்படாதே, நம்ம வீட்டு ஆட்கள் எல்லாரும் தமிழும் பேசுவாங்க. சென்னைல, சென்னப்பா பேசினாரில்ல, அந்த மாதிரி.''

''ஏ.சி.,யை நிறுத்தி, ஜன்னலை திறக்கலாமா?'' என்று கேட்டாள்.

மறுவிநாடி, ஷிக்கண்ணா ஏ.சி.,யை நிறுத்தி, கார் ஜன்னல்களின் கண்ணாடிகளை இறக்கினான். குழந்தையின் ஆர்வத்தோடு வெளியில் பார்த்துக் கொண்டு வந்தாள், நித்யா.

'சிலுசிலு'வென காற்று வீசியது. குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட மாதிரி பெங்களூரு 'குளுகுளு'வென்றிருந்தது. புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அதை கவனித்த, சித்தார்த் கேட்டான்...

''குளுருதா, நித்யா?''

''ரொம்ப.''

''கட்டிப்பிடிச்சுக்கட்டுமா? கதகதப்பா இருக்கும்.''

''ச்சீ, போங்க. உங்களுக்கு விவஸ்தையே இல்ல.''

''பாருடா... என் பொண்டாட்டி, அதுவும் காலைல கல்யாணம் பண்ணிக்கிட்ட புதுப்பொண்டாட்டி. அவளைக் கட்டிக்க என்ன விவஸ்தை வேணும்?''

''ஐயோ எனக்கு குளிரல,'' என்று தோளைச் சுற்றி இழுத்துப் போர்த்தி கொண்ட புடவைத் தலைப்பை விலக்கி, ''போதுமா?'' என்றாள்.

''ஊஹும்... போதாது. மொத்தமா விலக்கு.''

அதைக்கேட்டு லேசாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.

''ரொமான்டிக்கா பேசினா உனக்குப் பிடிக்காதா, நித்யா?''

''அதுக்கு இடம், பொருள், ஏவல் இல்லையா?''

''பேசறதுக்கு எதுக்கு இடம், பொருள், ஏவல். இது வெறும் தியரி. பிராக்டிக்கலுக்குத்தான் வேணும்.''

''போறும்டா சாமி. நான் எதுவுமே பேசல.''

வீ டு வந்தது. இறங்கி அந்த பிரமாண்ட ஹாலில் நுழைந்ததும், சித்தார்த், அவள் கை பற்றி நிறுத்தினான்.

''நித்யா, எனக்காக சின்ன, 'ஹெல்ப்' பண்றியா?''

ஆளுயரத்திற்கு தங்க பிரேமில் அருகருகே மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை காட்டி, ''இது எங்க, அப்பா-அம்மா போட்டோ. கொஞ்சம் நமஸ்காரம் பண்றியா?''

''இது என்ன கேள்வி. வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நமஸ்கரிக்கலாம்.''

இருவரும் ஒன்றாக நமஸ்கரித்தனர். அதற்குள் உள்ளேயிருந்து அவசர அவசரமாக வந்த ஒருவர், ஆங்கிலத்தில், ''சார், எப்ப வந்தீங்க?'' என்று கேட்டார்.

''உள்ளே நுழையறோமே, தெரியல.''

''சார், கொஞ்சம் வெளிய போய் நில்லுங்க, சார். பாட்டி மங்களார்த்தி எடுக்க சொன்னாங்க. எல்லாம் தயாரா வெச்சிருக்கோம். எடுக்காம உள்ள போனீங்கன்னா என்ன ஆகும்ன்னு உங்களுக்கே தெரியும்.''

'மஞ்சு...' என்று குரல் கொடுத்தார். அதற்குள், பெரிய குங்குமப் பொட்டும், கை நிறைய கண்ணாடி வளையல்களும் அணிந்த, பெண்மணி கையில் ஆரத்தி தட்டுடன் வந்தாள்.

மங்களார்த்தி முடிந்ததும் மாளிகை போன்றிருந்த வீட்டின் கீழ் அறையில் நுழைந்து, படுக்கையில் படுத்திருந்த வயதான பெண்மணியை, 'அஜ்ஜி' என்று, ஓடிப்போய் கட்டிக் கொண்டான், சித்தார்த். நெற்றியிலும், இரு கன்னங்களிலும் முத்தமிட்டான்.

''அஜ்ஜி, இது தான், நித்யா.''

நித்யாவின் முகத்தில் பதிந்த பாட்டியின் கண்கள் அப்படியே லயித்துப் போயிற்று.

''என்ன பாட்டி, அப்படி பார்க்கறீங்க? நான் தான் சொன்னேனே... அழகுன்னா அழகு அப்படிப்பட்ட அழகுன்னு. அழகு மட்டுமில்ல, சொக்கத்தங்கம். '22 காரட்' கூட இல்ல. '24 காரட்!' இல்லன்னா உன் பேரன் கல்யாணம் பண்ணி கூட்டி வந்திருப்பானா? எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி.''

இருவரும் பாட்டியின் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

''கல்யாணம் எப்படா ஆச்சு?''

''இன்னிக்கு காலைல... முடிஞ்சதும் நேரா இங்க தான் வர்றோம்.''

''ருத்ரம்மா,'' என்று குரல் கொடுத்தாள், பாட்டி. ஐம்பது வயது பெண்மணி வந்தாள். சித்தார்த்திற்கு கை கூப்பினாள்.

''ருத்ரம்மா, என் பேரன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். இன்னிக்கு ராத்திரி சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணு.''

''ஹை!'' என்று பாட்டிக்கு தெரியாமல், நித்யாவை பார்த்து கண்ணடித்தான், சித்தார்த்.

வி சி லடித்தபடியே, தன் படுக்கை அறையினுள் நுழைந்தான், சித்தார்த். அவனது அறையை தேவலோகமாக மாற்றி வைத்திருந்தனர். சுவரே தெரியாத அளவிற்கு அறையின் மேற்கூரையிலிருந்து தரையைத் தொடுகிற அளவிற்கு அடர்த்தியான மல்லிகை சரங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. தரை முழுதும் செண்பக மலர்கள் மூடிக் கொண்டிருந்தன. கட்டிலில் ரோஜா இதழ்களால் ஆன மற்றொரு மெத்தை. வழக்கமான மின் விளக்குகள் மாற்றப்பட்டு, நீல ஒளி வீசும், சாண்ட்லியர்ஸ். அறையினுள் பரவிய மலர்களின் மணம், 'கும்'மென்று ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது.

மனோரம்யமான அந்த சூழல், உள்ளுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கோபத்தை தான் ஏற்படுத்தியது, சித்தார்த்திற்கு. போதாததற்கு, நித்யாவை தகதகக்கும் பட்டுப் புடவையும், ஜொலிக்கும் வைர நகைகளும் அணிவித்து, அவன் முன் கொண்டு வந்து நிறுத்திய, ருத்ரம்மா மீது எல்லையற்ற ஆத்திரம் வந்தது.

''என்ன, ருத்ரம்மா இதெல்லாம்?'' என்று முகம் சிவக்க கேட்டான்.

பயந்து போன, ருத்ரம்மா, மெதுவான குரலில், ''பாட்டி தான் எல்லாம்...'' என்று இழுத்தாள்.

''செய்யச் சொன்னாங்களா?'' என்று குறுக்கிட்டான்.

அவள் அமைதியாக இருந்தாள். உடனே, நித்யாவை ஏறிட்டான்.

''உன்னை, நீ கண்ணாடியில் பார்த்துக்கிட்டியா, நித்யா?''

'இல்லை...' என்று தலையாட்டினாள். அருகில் போய் கையைப் பிடித்து இழுத்து வந்து முழுநிலைக் கண்ணாடி முன் நிறுத்தினான்.

''பாரு... எப்படி இருக்கு?''

அவளுக்கு பேச்சு எழவில்லை.

''நகைக்கடை விளம்பரம் மாதிரி இருக்கு. நான், உன்னை துரத்தி, துரத்தி காதலிச்சதுக்கு காரணமே உன் எளிமையான அழகு தான். அதை சிதைக்கிற மாதிரி என்ன அலங்கோலம் இது?''

''பாட்டிம்மா தான்...''

''பாட்டி சொன்னா எதுவானாலும் செய்திடுவியா? முதல்ல பாட்டி ரூமுக்குப் போய் இந்த அலங்கோலத்தையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு, சாதாரண நித்யாவாக வா. கூட்டிட்டு போ, ருத்ரம்மா.''

அவர்கள் இருவரும் அகன்றதும் சற்று யோசித்தான்... 'அதீதமாகக் கோபப்பட்டு விட்டோமோ? நித்யா பயந்து போயிருப்பாளோ? வாழ்க்கையின் ஆரம்பம் இது. மிக முக்கியமான நாள். வாழ்நாள் வரை மறக்க முடியாத நாள். இன்று போய் எதற்காக இப்படி கோபப்பட்டோம்? அந்த அலங்காரங்களெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதை அமைதியாக சொல்லியிருக்கலாமே! ருத்ரம்மாவை அனுப்பிவிட்டு, சாந்தமாக நித்யாவிடம் சொல்லி, எல்லாவற்றையும் கழற்ற சொல்லியிருக்கலாம். பாவம். அவள் மருண்டு போயிருப்பாள். புகுந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் இப்படி ஆகியிருக்கக்கூடாது!'

'பரபர'வென்று கீழே ஓடினான்.



- தொடரும்இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us