PUBLISHED ON : செப் 13, 2026

முன்கதைச்சுருக்கம்: நித்யாவின் குடும்பத்தினருக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழையும், சில அன்பளிப்பு பொருட்களையும், சித்தார்த் கவுதம் கொடுக்க வீட்டிற்கு வந்தபோது, அதை நிராகரித்தார், நித்யாவின் அப்பா. கிரிக்கெட் மைதானத்தில், ரசிகர்கள் மத்தியில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிரபல கிரிகெட் வீரர்கள் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.
ரசிர்கர்கள், திருமண பரிசாக, சொகுசு கப்பலில், ஐரோப்பா டூர் செல்ல, 'டிக்கெட்' பதிவு செய்து கொடுத்து, சித்தார்த்தை ஆச்சரியப்படுத்தினர். கப்பல் பயணத்தை, வெகுவாக ரசித்தாள், நித்யா. ''நாம் இருக்கும் இந்த இடத்தையா, 'கேபின்' என்று சொல்றே... இதுவா கேபின்? இது ஒரு, 'மினி' அரண்மனை. இந்த கப்பல், துபாய் ஷேக் ஒருவருடையது. எப்போதாவது கடல்ல போகணும்ன்னு தோணுச்சுன்னா, இந்த கப்பல்ல, இதே இடத்துல தான் பயணிப்பாராம். இதை யாரும் பார்க்க விட மாட்டாராம். திறந்துகாட்ட கூட விட மாட்டாராம்.
எனக்குன்னு சொன்ன உடனே, சந்தோஷமா சாவியைத் துாக்கிக் கொடுத்துட்டாராம். அதுமட்டுமில்லாம கப்பலுக்கு கட்டின பணத்தை ரசிகர்களுக்கே திருப்பிக் கொடுக்க சொல்லிட்டாராம். இது என், 'ட்ரீட்'டாக இருக்கட்டும் என்றாராம். அப்படிப்பட்ட மனிதரோட இடம் இது. இதைப் போய் ரொம்ப சாதாரணமாக 'கேபின்' என்கிறாய்?'' என்றான், சித்தார்த்.
''உங்களுக்கு ஒரு கவிதை சொல்லட்டுமா?'' என்றாள், நித்யா.
''சொல்லு.''
கிழக்கே போனேன்
இடித்தது ஒரு சுவர்
மேற்கே போனேன்
இடித்தது ஒரு சுவர்
வடக்கே போனேன்
இடித்தது ஒரு சுவர்
தெற்கே போனேன்
இடித்தது ஒரு சுவர்
எம்பிக் குதித்தேன்
இடிந்தது கூரை!
''தங்கத்தாலேயே இழைச்சிருந்தாலும் அறை, அறைதானுங்களே... சிறை, சிறை தானுங்களே.''
''அம்மா தாயே,'' என்று கை கூப்பினான், அவன். ''எதுவும் இடிக்காமல் மேலே வானம், கீழே கடல்ன்னு பார்க்கலாம் வா,'' என்றான்.
இருவரும் கப்பலின் மேல்தளத்திற்கு வந்தனர். இருள் கவிழும் நேரமாயிருந்தது. கப்பலின் மேல் தளம் யாருமற்று காலியாக கிடந்தது. அவர்கள் இருவருக்கும் ஏகாந்தம் துணையிருந்தது. ஆளையே துாக்கிப் போகும் அளவுக்கு காற்று வீசியது.
''என் கையை கெட்டியாகப் பிடிச்சுக்க, நித்யா. இல்லன்னா பறந்து போயிடுவ,'' என்றான், சித்தார்த்.
இருவரும் மேல்தளத்தின் நட்ட நடுவில் நின்று, வானத்தை அண்ணாந்து பார்த்தனர். அந்தப் பேரழகில் பிரமித்துப் போனான், சித்தார்த்.
''என்ன அழகு, நித்யா. இயற்கையின் இந்த அழகிற்கு முன்னால் எது நிற்க முடியும்? அதனால் தான், பாரதியார் அப்படி பாடினார் போலிருக்கு.''
''எப்படி?'' என்று கேட்டாள், அவள்...
பட்டு கருநீல புடவை
பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில்
தெரியும் நட்சத்திரங்களடி!
என்று பாடினான்.
அவனை போலவே, அவனது குரலும் இனிமையாக இருந்தது... நெஞ்சை வருடிக் கொடுத்தது.
''ஆமாம், உங்களுக்கு எப்படி, பாரதியாரை தெரியும்?''
''அதை ஏன் கேட்கிற... உன் அழகிலும், அமைதியான கள்ளமற்ற முகத்திலும் மயங்கி, உன்னைப் பற்றின விஷயங்களை யாரிடம் சேகரிக்கலாம் என்று அலைந்த போது, பத்ரி சிக்கினான். அவன் தான் சொன்னான். நீ, ராஜாமணி ரெண்டு பேரும் இலக்கிய பைத்தியங்கள் என்று. உடனே, தமிழ் இலக்கியம் பற்றி, 'கூகுள்' வலைதளத்தில் தேடினேன். முதலில் கண்ணில் பட்டவர், பாரதியார். கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் படித்தபோது, எனக்கே அவர் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. அப்புறம் திருவள்ளுவர், அதன் பின், ஆண்டாள்.''
''மாடர்ன் லிட்ரேச்சர் பக்கம் போகலையா?''
''ஏன் போகல. சுஜாதாவில் ஆரம்பிச்சு, வண்ணதாசன், வண்ண நிலவன், கலாப்ரியா வரை முடிச்சிட்டேன்.''
''அடேங்கப்பா!'' என்று வியந்தாள், நித்யா.
''எல்லாம் உனக்காக தான். நீ என்னை எப்படி ஆட்டிப் படைச்சிருக்க பார்.''
''சாரி,'' என்று அவனது கையை எடுத்து முத்தமிட்டாள்.
கப்பல் மேல் தளத்தின் மோனமும், வானமும், கடல் காற்றும், முற்றும் கவிழ்ந்த இருளும், காதல் கணவனின் அருகாமையும், அவனது குரலின் செழுமையும், பாரதியின் பாடலும் முதல் முறையாக, நித்யாவை கிளர்ச்சியுறச் செய்தன.
தலையை சாய்த்து எல்லையற்ற பிரியத்தோடு, கண்களை மட்டும் உயர்த்தி, அவன் முகத்தை ஏறிட்டாள். நட்சத்திர வெளிச்சத்திலும், நிலவின் ஒளியிலும் அவளது பார்வையின் 'பளபள'ப்பும், அவனைச் சுண்டி இழுத்தது.
''கேபினுக்கு போகலாமா?''
''எதுக்கு?''
''உங்களை துயில விடாமல் செய்வதற்கு!''
''அடி என் கண்ணம்மா. நீயே வாய் விட்டு கேட்டதற்கப்புறம் நான் விடுவேனா? ஆனால், சின்னதா ஒரு, ரிக்வெஸ்ட்!''
''என்ன?''
''முதல் முறையா என் ராணிக்கு, 'மூட்' வந்திருக்கு. ஆனால், ராஜாவுக்கும் சின்னதா வேறு ஒரு, 'மூட்' வந்திருக்கே!''
''என்னது?''
''என் கூட வாயேன்!'' என்று, நித்யாவின் கைப்பற்றி, கப்பலின் கூர்முனைக்கு அழைத்துப் போனான்.
''ரெண்டு பேரும் இந்தக் கூர்முனையின் விளிம்பில் நின்று, பறவை சிறகை விரிக்கிற மாதிரி கையை விரிச்சுக்கலாமா?''
''எ...ன்...ன...து!''
''ஆமா, நித்யா, ஜாக்கும், ரோஸும் அப்படித்தானே நின்னாங்க.''
''ஜாக்கும், ரோஸும்மா... யார் அவங்க?''
''தெரியலையா? டைட்டானிக் பட, 'ஹீரோ, ஹீரோயினை' தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா? நீ அந்தப் படத்தைப் பார்க்கலயா?''
''இல்லையே.''
''ராஜாமணி கூட்டிட்டுப் போகலையா?''
''சினிமா என்றாலே அப்பாவுக்கு பிடிக்காது. அதுவும், ராஜாமணி கூட்டிட்டுப் போயிருந்தா என்னைக் கொன்னே போட்டிருப்பார்.''
''நல்ல காலம். ராஜாமணி உன்னைக் கூட்டிட்டுப் போகல.''
''ஏன் அப்படி சொல்றீங்க?''
''உங்கப்பா உன்னைக் கொன்னு போட்டிருந்தா, என் பொண்டாட்டியா நீ எப்படி ஆகியிருப்ப?''
''அது சரி. கீழே போகலாமா?''
''இரு நித்யா. ஜாக் அண்டு ரோஸ் மாதிரி ரெண்டு பேரும் மேலே ஏறி ஒரு நிமிஷம் நின்னுட்டு கீழ இறங்கிடலாம்.''
''என்ன விளையாடுறீங்களா. இது என்ன ஸ்டேடியம்ன்னு நினைச்சீங்களா. சுத்தி இருக்கிறது ரசிகர்கள் இல்லீங்க, சமுத்திரம். இங்கே நாம ரெண்டே பேரு தான். கால் இடறி கடல்ல விழுந்தா அப்படியே அடிச்சுக்கிட்டு போக வேண்டியது தான்.''
''சரியான, மூட் ஸ்பாய்லர்!''
''இப்ப நீங்க தான் என், 'மூடை ஸ்பாய்ல்' பண்றீங்க.''
''ஓ ஸாரி, பேபி ஸாரி. வா, வா, வா... கீழே போகலாம்,'' என்று, அவளை இரு கைகளாலும் அலாக்காய் குழந்தை மாதிரி துாக்கிக்கொண்டான்.
''ஐயோ என்ன இது? கீழே விடுங்க. யாராச்சும் பார்க்கப் போறாங்க?''
''பார்க்கட்டுமே... நல்லா பார்க்கட்டும். என் பொண்டாட்டி எனக்கே எனக்கு சொந்தமானவ. பாடுபட்டு தேடிப்பிடிச்சவ. அவளை நான் துாக்காம, வேற யார் துாக்குவாங்க,'' என்று அப்படியே படிகளில் இறங்கினான். கேபினுக்குள் நுழைந்தான். படுக்கையில் பூச்சரத்தை வைப்பது போன்று அலுங்காமல் இறக்கி படுக்க வைத்தான். தானும் படுத்து அவளது இடுப்பை வளைத்து அருகில் இழுத்து அணைத்து கொண்டான்.
குளித்து உடை மாற்றி, மெல்லிய மணம் கமழும், 'செண்ட்' அடித்து வெளியில் வந்தவளைப் பார்த்து, அகமும், முகமும் மலர்ந்தான். கண்கள், 'பளபள'த்தன. உதடுகளில் மோகனப் புன்னகை விரிந்தது.
அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த போது, கட்டிலின் அருகில் இருந்த, 'இன்டர்காம்' இனிமையாக ஒலித்தது.
எடுத்தான்...
''மிஸ்டர் சித்தார்த் கவுதம்?''
''எஸ்.''
''உங்களுக்கு ஒரு, 'அர்ஜென்ட்' போன் அழைப்பு வந்திருக்கு.''
''அந்த அழைப்பை இங்கேயே கொடுக்க முடியுமா?''
''சாரி, அந்த வசதி இந்த கப்பலில் இல்லை.''
''சரி, நானே வருகிறேன்,'' என்றான், சித்தார்த்.
'இன்டர்காம்' வைக்கப்பட்டதும், நித்யா கேட்டாள்.
''என்னங்க?''
''சென்னையிலிருந்து அவசர கால். 'கிரிக்கெட் போர்டு' திரும்பி வரச் சொல்லுதோ என்னவோ? இரு பேசிவிட்டு வருகிறேன்.''
கால்மணி நேரத்தில் திரும்பி வந்தான்.
''நித்தி, பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில், 'அட்மிட்' பண்ணியிருகின்றனர். என் மேனேஜர் என்னைத் தொடர்புகொள்ள முடியாமல், ராஜாமணியை தொடர்பு கொண்டு சொல்லியிருக்கிறார். உடனடியாக, ராஜாமணி பெங்களூரு போய், பாட்டியை கவனித்து கொண்டிருக்கிறார்.''
''இப்போது யார் உங்களுடன் பேசியது?''
''ராஜாமணி தான். நடுக்கடலில் இருப்பதை சொன்னேன். அடுத்து வரும் துறைமுகத்தில் இறங்கி, 'பிளைட்' பிடித்து வரச் சொல்கிறார்.''
''அடுத்த துறைமுகம் எப்போது வரும்?''
''நாளை பிற்பகல் என்கிறார், கேப்டன்.''
மறுநாள் பிற்பகல் கப்பலை விட்டு இறங்கி, தனி விமானத்தில் பயணித்து, பெங்களூரு வந்து சேர்ந்தனர். பாட்டியின் உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான், சித்தார்த். பாட்டியில் அருகில் போய், ''அஜ்ஜீ,'' என்றான்.
பாட்டியிடம் சலனமில்லை. இரண்டு மூன்று முறை அதேபோல் அழைத்த பின், பாட்டி மெல்ல கண் திறந்தார். சித்தார்த் கவுதமை பார்த்ததும் பஞ்சடைந்த கண்களில் மின்னலாக ஒரு ஒளிக்கீற்று தோன்றியது.
''வந்துட்டியா, கண்ணுா?''
''அவுது அஜ்ஜீ... உங்களைப் பார்க்க ஓடோடி வந்துட்டேன்.''
''நித்யா எங்கே?''
சற்று தள்ளி நின்றிருந்த, நித்யா அருகில் ஓடி வந்தாள். பாட்டியின் முன் குனிந்து, ''சொல்லுங்க பாட்டி,'' என்றாள்.
பாட்டி தன் நடுங்கும் கையால், நித்யாவின் கையைப் பிடித்து, சித்தார்த்தின் கையில் கொடுத்து, ''நித்யா இவனுக்கு குழந்தை மனசு. கள்ளம் கபடம் தெரியாது. மூணறை வயசிலிருந்து உன் கல்யாணம் வரை நான் பார்த்துக்கிட்டேன். விளையாட்டு பையன். மனசில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசுவானே தவிர, ரொம்ப நல்லப்பையன். அவனை இனிமே நீதான் நல்லாப் பார்த்துக்கணும். பார்த்துப்பியா?''
''பார்த்துப்பேன், பாட்டி. கவலைப்படாதீங்க.''
''இது போதும்மா எனக்கு,'' என்ற பாட்டிக்கு மூச்சு முட்டியது.
''பாட்டி பேசாதீங்க. உங்களால் முடியலை,'' என்றாள், நித்யா. ஆனால், பாட்டி கேட்கவில்லை.
''சொல்ப நீரு பேக்கம்மா,'' புரியாமல் விழித்தாள், நித்யா.
''குடிக்கக் கொஞ்சம் தண்ணி கேக்கறாங்க.''
பிளாஸ்க்கிலிருந்து ஒரு டம்ளரில் சிறிது தண்ணீர் ஊற்றி, ஆற்றி, கொஞ்சம் கொஞ்சமாக பாட்டிக்கு புகட்டினாள்.
அவர்களை பார்ப்பதற்காகவே காத்துக் கொண்டிருந்த பாட்டி கண்களை மெல்ல மூடிக் கொண்டார்.
''உஷ், யாரும் பேசாதீங்க... பாட்டி களைச்சுப் போய் துாங்குறாங்க. எல்லாரும் வெளிய போகலாம் வாங்க,'' என்று, சித்தார்த் சொன்னதும் அவனுடனே அனைவரும் வெளியேறினர்.
இரண்டு நாட்கள் பாட்டி கண்களைத் திறக்கவே இல்லை. 'ஆக்ஸிஜன் மாஸ்'க்கும், 'டிரிப்' பாட்டிலும், 'மானிட்டரின் பீப்' சத்தமும், 'பல்ஸ்' மீட்டரும், ஈ.சி.ஜி., கோடுகளும் பாட்டி இன்னும் சுவாசித்துக் கொண்டிருப்பதை காட்டியது.
இரண்டு நாட்களும் பாட்டியை விட்டு அகலாமல் அமர்ந்திருந்தான், சித்தார்த். இந்த இரு நாட்களும் அவன் சாப்பிடவில்லை, துாங்கவில்லை. எப்போதாவது எழுந்து பாத்ரூம் போவதைத்தவிர வேறு எதற்கும் அசையவில்லை.
அதே ஆஸ்பத்திரியின் எட்டாவது மாடியில், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சற்றும் குறையாத, 'ஸ்வீட்' ஒன்றில், தங்கியிருந்த, நித்யாவும், ராஜாமணியும் அடிக்கடி இறங்கி வந்து, சித்தார்த்துடன் இருந்தனர்.
- தொடரும் - இ.ரங்கநாயகி
