PUBLISHED ON : செப் 20, 2026

முன்கதைச் சுருக்கம்: சி த்தார்த்தும், நித்யாவும், தேன் நிலவுக்காக, கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த கப்பலில், ஐரோப்பா டூர் சென்றனர். முதன்முறையாக கப்பலில் பயணம் செய்த இருவருமே, அப்பயணத்தை அணுஅணுவாக ரசித்தனர். அப்போது, சித்தார்த்தின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக, தகவல் வர, உடனே, பயணத்தை, 'கேன்சல்' செய்து, பெங்களூரு திரும்பினர். தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டியை நினைத்து, மிகவும் வருந்தினான், சித்தார்த். சித்தார்த்தின் சோகத்தைத் தாங்க முடியாத, நித்யா அவனருகில் போய் ஆறுதலாக தோளில் கைவைத்து மிகவும் மெல்லிய குரலில், ''கொஞ்சம் ஏதாவது சாப்பிடுங்களேன். ரெண்டு நாளாக ஒண்ணுமே சாப்பிடலையே!''
''வேணாம், நித்யா. பசிக்கல.''
''இப்படி சாப்பிடாம, துாங்காம இருந்தால் எப்படி, சித்தார்த்? நீங்க சாப்பிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய் கொஞ்சம் படுத்து, 'ரெஸ்ட்' எடுங்க. நான் பாட்டியை பார்த்துக்கறேன். கூட, 'ஸ்பெஷல் நர்ஸ்' ரெண்டு பேர் இருக்காங்க,'' என்றான், ராஜாமணி.
''இல்ல, ராஜாமணி. என்னோட, மூன்று வயதிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்தாங்க. நான் அப்பா, அம்மாவை பார்த்த நினைவு இல்லை. போட்டோவுல பார்த்தது தான். பாட்டி தான் எனக்கு அம்மா, அப்பா எல்லாமாகவும் இருந்தாங்க.
''பள்ளி இறுதி வகுப்புவரை என்னை குழந்தையாக தான் நடத்தினாங்க. பள்ளிக்கு போற பஸ்ல என்னை அனுப்பிட்டு, என் பாட்டி, கார்ல என்னை பின் தொடர்ந்து வருவாங்க. 'பஸ்ல மொத்தம், 40 பேர் பாட்டி. அதுல, 39 பேர் வீட்ல யாரும் பின் தொடர்ந்து வரல. உங்க ஒருத்தரைத் தவிர...' என்று நான் சொன்ன பின்னரே, என்னை குழந்தையாய் நடத்துவதை கைவிட்டாங்க. என் மேல் அப்படி ஒரு அன்பு.
''அரண்மனை மாதிரி வீடு. ஏராளமான பணியாட்கள், கணக்கில்லாத பணம், எண்ண முடியாத சொத்து, பெரிய பெரிய கார் எல்லாம் இருந்தும், எனக்குப் பாட்டியும், பாட்டிக்கு நானும் தான். எங்க ரெண்டு பேருக்கும் வேறு யாரும் கிடையாது.''
அருகில் போய், அவன் தோள் மீது கைபோட்டு மெல்ல அழுத்திய ராஜாமணி, பாட்டியை தொந்தரவு படுத்தாத மெல்லிய குரலில் சொன்னான்...
''கவலைப்படாதீங்க, சித்தார்த். பாட்டி நிச்சயம் தேறி எழுந்து வந்திருவாங்க.''
''இல்ல, ராஜாமணி. எனக்கு நம்பிக்கை இல்ல. இதுக்கு முன்பும் ரெண்டு, மூணு முறை ஆஸ்பத்திரியில் இவங்களை சேர்த்திருக்கேன். அப்போதெல்லாம் பத்திரமாக வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன். ஆனா, இந்த முறை அப்படி வீட்டுக்கு கூட்டிட்டுப் போக மாட்டேன்னு தோணுது,'' என்ற, அவன் குரல் தழுதழுத்தது. கண்கள் 'மளமள'வென்று கண்ணீர் சிந்தின.
எப்போதும், துள்ளலும், துடிப்பும், கிண்டலும், கேலியும், சந்தோஷமாகவே இருப்பவனை இப்படிப் பார்த்ததும் தாங்க முடியவில்லை, நித்யாவால். அருகில் போய், தன் புடவை முந்தானையால் கண்ணீரைத் துடைத்தாள். அவன் முகத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டு சொன்னாள்...
''என்ன இது? குழந்தை மாதிரி இப்படியா அழுவாங்க?''
''இது சாதாரண அழுகை இல்ல, நித்யா. குற்ற உணர்ச்சியோடு கூடிய அழுகை.''
''குற்ற உணர்ச்சியா? அப்படி என்ன குற்றம் செய்தீங்க?''
''அவங்க என்னை ஒரு குழந்தையைப் பார்த்துக்கிற மாதிரி எப்படிப் பார்த்துக்கிட்டாங்க. வயசானா, அவங்களும் குழந்தை தானே? அவங்களையும் நான் அப்படித்தானே பார்த்திருக்கணும். ஆனா, செய்யலையே. ஒருநாள் கூட, அவங்களோட உட்கார்ந்து சாப்பிடல. அன்பா பிரியமா பேசல. இந்தாங்க பாட்டின்னு ஒரு பொருள் வாங்கித் தரல.''
''இதையெல்லாமா குற்றம்ன்னு சொல்றீங்க. இப்படியெல்லாம் வெளிக்காட்டினாத்தான் அன்பா?''
''நிச்சயமா! நான் உன்கிட்டே அன்பா இருக்கேன்றதை வார்த்தையாலும், செய்கையாலும் காட்டிக்கிட்டே இருக்கணும்.''
நெகிழ்ந்து போனான், ராஜாமணி. அன்பிற்கு அவன் கூறிய விளக்கம், ராஜாமணியை கரைந்து உருக வைத்தது. பேச நா எழாமல், சித்தார்த் கவுதமின் கரத்தை இறுகப் பற்றினான். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அந்தக் கையின் இறுக்கம் வெளிப்படுத்தியது.
''ஆமா, ராஜாமணி. அன்புக்கு அன்பு தான் பதில். பாட்டியோட அன்புக்கு பதில் அன்பை நான் தரல, ராஜாமணி. பெரிசா என்ன எதிர்ப்பார்த்திருக்க போறாங்க பாட்டி. லேசா தலையைத் தடவி, எப்படி இருக்கீங்க பாட்டி? சாப்பிட்டீங்களா? மருந்து, மாத்திரை தவறாம எடுத்துக்கறீங்களா? இவ்வளவு தானே! இதைக்கூட செய்யாமல் கிரிக்கெட் கிரிக்கெட்ன்னு ஓடிக்கிட்டே இருந்தேன். ஒருநாள் கூட முழுசா அவங்க கூட இருக்க முடிஞ்சதில்ல.''
அதற்கு மேல் தாங்கிக் கொள்ள இயலாதவளாக அருகில் வந்தாள், நித்யா. கலங்கிய கண்களோடு சொன்னாள்...
''ப்ளீஸ். கொஞ்சம் அமைதியாக இருங்களேன். சாந்தப்படுத்திகோங்களேன்.''
''முடியல, நித்யா. ஆனால், எனக்கு ஒரு திருப்தி. என் கல்யாணத்தை நேர்ல பார்க்கா விட்டாலும், வீடியோவில் பார்த்தாங்க. கண்ட கண்ட காகிதப் பூவும் நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. மகாலஷ்மி மாதிரி, லட்சணமா, அமைதியான, குடும்பப் பாங்கான பொண்ணு தான் வரணும்ன்னு சொல்வாங்க. அதனால, உன்னைப் பார்த்ததும் சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க, நித்யா. 'நானே பார்த்திருந்தாலும் இவ்வளவு நல்ல பொண்ணு கிடைச்சிருக்காது'ன்னு ஆனந்தக் கண்ணீர் வடிச்சாங்க. கடைசி காலத்துல இந்த ஒரு சந்தோஷத்தையாவது அவங்களுக்கு கொடுக்க முடிஞ்சதேன்ற திருப்தி தான் எனக்கு.''
''மனசுல இருக்கிற பாரத்தையெல்லாம் இறக்கி வச்சுட்டீங்க இல்ல. பாட்டி பக்கத்துல உட்கார்ந்து தானே அத்தனையும் சொன்னீங்க. பாட்டியின் ஆத்மா அத்தனையும் கேட்டிருக்கும், சந்தோஷப்பட்டிருக்கும். அந்த சந்தோஷத்துல நாளைக்கு காலைல எழுந்து உட்கார்ந்துடுவாங்க?''
''அப்படியா சொல்றீங்க, ராஜாமணி?''
''ஆமாம், நீங்களே நாளைக்கு காலைல ஆச்சரியப்பட்டுப் போவீங்க. இப்பப் போய் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுங்க. கூட்டிட்டுப் போ, நித்யா,'' என்றான், ராஜாமணி.
அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு, பாட்டியின் அருகில் அமர்ந்த போது, ஏனோ அவனுக்குள் சொல்ல முடியாத துக்கம் மேலிட்டது. உதட்டை இறுக அழுத்திக் கொண்டு மவுனமாய் கண்ணீர் வடித்தான், ராஜாமணி.
அ ன்று இரவு முழுவதும் அடித்துப் போட்ட மாதிரி துாங்கினான், சித்தார்த். மறுநாள் பிற்பகல் வரை அவன் எழுந்திருக்கவில்லை; அசையக்கூட இல்லை. அப்படிப்பட்ட ஆழ்ந்த உறக்கம். துாங்கட்டுமென்று விட்டு விட்டாள், நித்யா.
எழுந்து, குளித்து உடை மாற்றி கீழே சென்று பார்த்தாள். முகம் கழுவி பளீரென்று இருந்தான், ராஜாமணி.
''வா, நித்யா,'' என்றவன், ''சித்தார்த் சாப்பிட்டாரா, துாங்கினாரா?'' என்று கேட்டான்.
''அடிச்சுப் போட்ட மாதிரி துாங்கறார். எழுப்ப வேணாம்ன்னு நான், 'ரெடி'யாகி கீழ வந்திட்டேன். பாட்டி எப்படி இருக்காங்க?''
''அப்படியே தான் இருக்காங்க. சித்தார்த்கிட்ட ஆறுதலுக்கு சொல்லிட்டனே தவிர, எனக்கு நம்பிக்கை இல்லை, நித்யா.''
''நோ... நோ... 'நெகட்டிவ்'வாக எதுவும் சொல்லாதீங்க. எப்பவும், 'பாசிட்டிவ்'வாகவே பேசுங்க, ராஜு. மேல இருக்கும் தேவர்கள், 'ததாஸ்து, ததாஸ்து'ன்னு சொல்லிட்டே இருப்பாங்களாம். 'ததாஸ்துன்னா அப்படியே ஆகட்டும்ன்னு அர்த்தம். மறந்திட்டீங்களா, ராஜு.''
''மறக்கல, நித்யா. இருக்கிற நிலமையை சொன்னேன்.''
''பரவாயில்லை. எதையும் நம்ம எண்ணத்தால் சாதிக்க முடியும்ன்னு நீங்க தானே எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்க?''
''ஆமாம், நித்யா. ஆனாலும்...''
''வேணாம், ராஜு. பாட்டி நல்லபடி தேறி எழுந்திருப்பாங்கன்னு மட்டும் நினைப்போம். பாட்டிக்கு முதுமை, வயசாயிடுச்சுன்றதெல்லாம் உண்மை தான். ஆனால், அவருக்காக பாட்டி பிழைத்து எழணும். அவரை இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை. இவ்வளவு இடிந்து போயும், மனசு தளர்ந்தும் இருந்ததே இல்லை. பாட்டிக்கு ஏதாவது ஆனால், அவரைத் தேற்றுவது கடினம். அதற்காகவாவது பாட்டி நல்லபடியாக வேண்டும்.''
அவளது உணர்விற்கு மதிப்பளிப்பவனாக அமைதியாக இருந்தான், ராஜாமணி.
''ராஜாமணி... எனக்கு ஒரு உதவி செய்யணும்.''
''சொல்லு, நித்யா?''
''மல்லேஸ்வரத்துல, ஷீரடி பாபா கோவில் இருக்கு. இங்க பக்கத்துல, லஷ்மி நரசிம்மர் கோவில் இருக்கு. போய் பாட்டி பேர்ல அர்ச்சனை பண்ணி, பிரசாதம் கொண்டு வர்றீங்களா?''
''ஷ்யூர்... இதோ கிளம்பறேன்,'' என்று அவன் எழுந்த போது, பாட்டியிடமிருந்து ஈனமான குரல் ஒன்று கேட்டது.
''சித்துா...''
''பாட்டி... பாட்டி,'' என்று அருகில் ஓடினாள், நித்யா. போய் அவரை எழுப்பி கூட்டிட்டு வாங்க, ராஜு.''
ராஜாமணி ஓடிப்போய் துாங்கிக் கொண்டிருந்த, சித்தார்த்தை உலுக்கி எழுப்பி கூட்டி வந்தான். அதற்குள், டாக்டரும், நர்ஸ்களும் பாட்டியை சூழ்ந்து நின்று, முதலுதவி செய்ய ஆரம்பித்தனர். சித்தார்த்தை கண்டதும் ஒதுங்கி இடம் விட்டனர்.
''அஜ்ஜீ,'' என்று பாட்டியின் கையைப் பற்றினான், சித்தார்த். மெல்ல கண் திறந்த பாட்டி, ''வந்துட்டியா?'' என்று அவனை ஏறிட்டவர், ''நல்லாயிருப்பா,'' என்று சொல்லும் போதே, நா தடுமாறியது. பார்வை மங்கியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. சிறிது நேரம் போராடிய பாட்டி, பின் நிரந்தரமாக கண்களை மூடிக் கொண்டாள்.
ஒரு விநாடி அமைதியாக, பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த, சித்தார்த் மெல்ல பாட்டியின் கைகளை மார்பின் மீது மடக்கி வைத்து, தன் விரல்களால் கண்களை மூடினான்.
''ஐ யம் வெரி சாரி, மிஸ்டர் சித்தார்த்,'' என்ற டாக்டரிடம், ''பரவாயில்லை. இனி ஆக வேண்டியதைப் பார்க்கலாம்,'' என்றான்.
பா ட்டியின் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டது. வீட்டின் முன் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு அமருவதற்கு, 100 பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. கார்கள் வரவும், நிறுத்தப்படவும், தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கர்நாடக முதல்வர், அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், கவர்னர் என, அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் வந்து மலர்மாலை வைத்து, பாட்டிக்கு மரியாதை செய்து, சித்தார்த்திற்கு ஆறுதல் கூறினர். வீட்டிலும், சாலையிலும், 'ஜே ஜே' என்று மக்கள் கூட்டம் கூடியிருந்தது.
சித்தார்த் சாதாரண நுால் வேட்டி கட்டியிருந்தான். பாட்டியின் இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.
இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்ததும், நித்யா, ராஜாமணி இருவரோடும் வீடு திரும்பினான், சித்தார்த். அதற்குள், பணியாட்கள் வீட்டைக் கழுவி, சுத்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— தொடரும்இ.ரங்கநாயகி
