தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (21)

உனக்காகவே நான்! (21)

உனக்காகவே நான்! (21)

1


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பாட்டியின் அருகில் சாப்பிடாமல், துாங்காமல் கவலையுடன் அமர்ந்திருந்தான், சித்தார்த். அவனை, சமாதானப்படுத்தினர், நித்யாவும், ராஜாமணியும். பெற்றோரை இழந்தபின், பாட்டியே தன்னை வளர்த்து ஆளாக்கினாள். ஆனால், அவரிடம் அன்பாக தான் பேசியதே இல்லை என்று வருந்தினான், சித்தார்த். இரண்டாவது நாள், பாட்டி இறந்துவிட, ஈமசடங்குகளை செய்து முடித்தான், சித்தார்த். இ றப்பு வீட்டில், அடுப்பு பற்ற வைக்கக் கூடாது என்பதால் வெளியிலிருந்து சாப்பாடு வந்தது. அனைவரும் சாப்பிட்டு சென்ற பின், வீடு வெறிச்சோடியது.

ராஜாமணியையும், சித்தார்த்தையும் சாப்பிட அழைத்தாள், நித்யா.

''எனக்குப் பசிக்கல, நீங்க சாப்பிடுங்க,'' என்றான், சித்தார்த்.

''நல்லாருக்கு... நீங்க சாப்பிட்டு ரெண்டு நாளாகுது. அன்னைக்கு, ஆஸ்பத்திரியில, கொஞ்சமா சாப்பிட்டது தான். இப்படி பட்டினி கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?'' என்று கண்டித்தாள், நித்யா.

அதற்கும், சித்தார்த் பிடி கொடுக்காமல் போகவே, ''சரி நீங்க சாப்பிடலன்னா நானும் சாப்பிடல,'' என்று தன் கடைசி அஸ்திரத்தை ஏவினாள், நித்யா.

''ஏன் நித்யா என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற,'' என்று வேதனையோடு வந்து உட்கார்ந்து சாப்பிட்டதாகப் பேர் பண்ணினான், சித்தார்த்.

ராஜாமணியும், நித்யாவும் சாப்பிட்டு வந்து, சித்தார்த்தின் அருகில் அமர்ந்தனர்.

''நாளைக்குக் கிளம்பலாம் என்றிருக்கிறேன்,'' என்று ஆரம்பித்தான், ராஜாமணி.

''போயே ஆகணுமா, ராஜாமணி?''

''அப்படி அவசரம் ஒண்ணுமில்ல.''

''இன்னும் ஒரு நாலு நாள் என் கூட இருங்களேன், ராஜாமணி. பத்தாம் நாள் பாட்டிக்கு சடங்கு இருக்கிறது. நீங்களும் கூட இருந்தால் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.''

''உங்க மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்ன்னா அவசியம் இருக்கேன்.''

''தாங்க்ஸ், ராஜாமணி,'' என்ற, சித்தார்த், நித்யாவைப் பார்த்து கேட்டான்...

''இப்படியே உன் மடியில தலை வச்சு படுக்கட்டுமா, நித்யா?''

''படுத்துக்குங்க,'' என, அவனை வசதியாகப் படுக்க வைத்தாள். கைவிரல்களால் அவன் தலைமுடியைக் கோதி விட்டாள்.

''நீ எனக்கு எத்தனை நாளாப் பழக்கம், நித்யா?''

''கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்குமா?''

''அப்படி வச்சுக்கிட்டாலும் ஒரே மாசம் பழகிய உன் மேல நான் கொட்டும் அன்பையும், பாசத்தையும், பாட்டி மேல ஏன் காட்டலன்ற கேள்வி என் தொண்டையில் குத்திக்கொண்ட முள் மாதிரி வேதனை படுத்துது.''

''என்ன சித்தார்த்? திரும்பத் திரும்ப ஏன் இதையே பேசுறீங்க?'' என்று குறுக்கிட்டான், ராஜாமணி.

''பெரியவங்க அன்பு நமக்கு ரொம்ப மலிவாகத் தெரியுது, ராஜாமணி. கிடைக்கிற அந்தப் பாசத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எதுவுமே நம் கைவிட்டுப் போன பின் தான், அதன் அருமை தெரிகிறது, ராஜாமணி. இருக்கும் போது தெரிவதில்லை. ஆனால், நான் எனக்குள் படுகிற வேதனை எல்லாம், பாட்டிகிட்ட இன்னும் அன்பாக இருந்திருக்கலாம்; நான், உங்ககிட்ட அன்பாக இருக்கேன்றதை காட்டியிருக்கலாம். அதைச் செய்யாமல் போய் விட்டேனே என்று தான் சங்கடப்படுகிறேனே தவிர, பாட்டி இறந்ததற்காக இல்லை.''

''அது எனக்கு புரிகிறது, சித்தார்த்,'' என்றான், ராஜாமணி.

ஆழமான வலியிலும், வேதனையிலும் அவன் துடிப்பதை உணர்ந்து கொண்டனர், நித்யாவும், ராஜாமணியும்.

இ ரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான், சித்தார்த்.

'சித்துா...'

'அஜ்ஜீ...'

'என்கிட்ட வா...' கைகளை நீட்டிய பாட்டி, துார துார பின்னால் நகர்ந்து மறைந்து போனாள்.

'அஜ்ஜீ...' என்றவாறே சடாரென்று எழுந்து உட்கார்ந்தான், சித்தார்த் கவுதம். முகத்தில் முத்து முத்தாக வியர்வை. அவன் அணிந்திருந்த உடை தெப்பலாக நனைந்திருந்தது.

''என்னங்க, என்ன ஆச்சு?'' என்று கேட்டாள் பதறி எழுந்த, நித்யா.

''ம்... ஒண்ணுமில்ல. பாட்டி வந்து கைநீட்டி, 'என்கிட்ட வா'ன்னு கூப்பிடுறாங்க,'' என்றான், சித்தார்த்.

''என்னது... பாட்டி வந்து கூப்பிடுறாங்களா?'' பயந்து போனாள், நித்யா.

''பயப்படாத, நித்யா. கனவு தான். ஒரு டம்ளர் தண்ணீர் கொடு.''

கொடுத்தாள்.

''பாட்டிக்கு என் மேல ரொம்ப அன்பு. அதான் கனவில் வந்து கூப்பிடுறாங்க.''

''அது தாங்க என் கவலை. அப்படி கூப்பிடக் கூடாதுங்க.''

''அதெல்லாம் மூட நம்பிக்கை. படு.''

படுத்தாளே தவிர, நித்யாவுக்கு துாக்கம் வரவில்லை; துாங்க முடியவில்லை. மனது மிகவும் சங்கடப்பட்டது... 'பாட்டி கனவில் வரலாம். தவறில்லை. ஆனால், 'நீ வா...' என்று கூப்பிடக்கூடாதல்லவா. அது நல்ல சகுனமில்லையே!

'என்ன செய்யலாம்? யாரிடம் சொல்லலாம்? வேறு யார் இருக்கிறார்கள்? ராஜாமணியிடம் தான் சொல்ல வேண்டும்...'

வி டிந்ததும் முதல் வேலையாக, ராஜாமணியிடம் சொன்னாள். சொல்லும்போதே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

''எனக்கு மனசே சரியில்லை, ராஜு. பயமா இருக்கு. அம்மா என்னை திட்டினது ஞாபகத்துக்கு வருகிறது.''

''என்ன திட்டினாங்க?''

''போன அன்னிக்குப் போய், புதன்கிழமை திரும்பி வரப்போற பாருன்னு அடிக்கடி சொல்லுவாங்க.''

''அப்படின்னா?''

''கல்யாணம் பண்ணிப்போன கையோட தாலியறுத்து புதன்கிழமை திரும்புவேன்னு அர்த்தமாம்.''

''சீ, என்ன நித்யா இது? உங்கம்மா ஏதோ கோபத்துல சொன்னாங்கன்னா, அதை இப்ப நினைச்சுக்கலாமா? இதோடு சம்பந்தப்படுத்தலாமா? உங்கம்மா, வாழ்க்கையை தொலைச்சவங்க. அதுக்கு அறியாத்தனமா நீ உதவியிருக்கிறே என்று தாங்கிக்க முடியாமல் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்காங்க. எந்தத் தாயும் தான் பெற்ற குழந்தைகள் கெட்டுப் போகணும்ன்னு நினைக்க மாட்டாங்க, நித்யா. அதுவும், உங்கம்மா பாவம். ரொம்ப வெகுளி. எல்லாரையும் நம்பறவங்க. அவங்க சொன்னதை பெரிசா எடுத்துக்கலாமா?''

''அம்மா சொன்ன போது வானத்து தேவர்கள், 'ததாஸ்து'ன்னு சொல்லி, அப்படி நடந்துட்டா?''

''சீ, போ பைத்தியம். அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது... வேணும்ன்னா கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா.''

ல ஷ்மி நரசிம்மர் கோவிலில் மனம் உருக வேண்டினாள். பின்னர், பாபா கோவிலுக்குப் போய் முறையிட்டாள்.

கண்களில் கண்ணீர் வழிய அவள் வேண்டிக் கொண்டு நிற்பதை பார்த்த பூசாரி, பாபா கழுத்திலிருந்த பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றை எடுத்து வந்து, அவள் கையில் கொடுத்தார். விபூதிப் பிரசாதம் தந்தார்.

'தீர்க்க சுமங்கலி பவ!' என்றார்.

அதைக் கேட்டதும், அவள் நெஞ்சு நிறைந்தது. மனதில் எல்லையற்ற நிம்மதி ஏற்பட்டது. வீட்டிற்கு ஓடோடி வந்தாள்.

சித்தார்த் கவுதமும், ராஜாமணியும் வரவேற்பறையில் உட்கார்ந்து, பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். ஓடிப் போய், சித்தார்த் கவுதம் எதிரில் நின்று, ''எழுந்திருங்களேன்,'' என்றாள்.

அவள் கையில் துாக்க முடியாமல் துாக்கி வந்த பூமாலையை கண்டதும் புரிந்து கொண்டு, எழுந்து நின்றான்.

மாலையை அவன் கழுத்தில் அணிவித்தவள், அப்படியே அவன் பாதங்களில் சரிந்தாள்.

''நித்யா, வாட் ஈஸ் திஸ்?'' என்று பதறினான், அவன்.

''உனக்காகவே நான்னு சொல்லுவீங்களே?''

''ஆமாம்.''

''அது நிஜம் தானே?''

''ஆமாம். நிஜம் தான்,'' என்றவன், 'என்ன ராஜாமணி இதெல்லாம்?' என்று திரும்பி, ராஜாமணியை பார்த்தான்.

''அவ மனசுல தோணினதைக் கேட்குறா. சத்தியமா நீங்க நினைக்கிறதை, அவ விருப்பப்படி கைல அடிச்சு சத்தியம் பண்ணிக் கொடுத்திடுங்களேன். அவ மனசு சாந்தி அடையும்,'' என்றான், ராஜாமணி.

''அப்படின்னா, ஆயிரம் சத்தியம் பண்ணத் தயாரா இருக்கேன்,'' என்று, நித்யாவின் கையில் அடித்து சத்தியம் செய்தான்.

''யார் கூப்பிட்டாலும் போய்விட மாட்டீங்களே?''

''யார் என்னைக் கூப்பிடுவாங்க, நித்யா?''

''பாட்டி, அஜ்ஜீ!''

''பைத்தியம், பைத்தியம்,'' என்று சிரித்த, சித்தார்த் கவுதம், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, முன் நெற்றியில் மிருதுவாக முத்தமிட்டான்.

''நா ன் கொஞ்சம் வெளிய போறேன், நித்யா. மதியானம் சாப்பிட வந்துடறேன்,'' என்றான், சித்தார்த்.

''நானும் உங்களுடன் வரட்டுமா, சித்தார்த். ஊருக்கு போயிட்டு, இரண்டு நாளில் திரும்பி வர்றேன். என்னை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுடுங்களேன், ப்ளீஸ்,'' என்று கேட்டான், ராஜாமணி.

''வாங்களேன்,'' என்றான், சித்தார்த்.

காரை, சித்தார்த் தான் ஓட்டினான். பக்கத்தில் அமர்ந்திருந்த, ராஜாமணி மெல்ல பேசினான்...

''சித்தார்த், ரொம்ப சாதாரணக் குடும்பத்து பொண்ணு, நித்யா. அதுவுமில்லாம எங்க குடும்பம், பழைமையில் ஊறிய குடும்பம். அதிலும், என் மாமா, அதான் நித்யாவோட அப்பா பத்தி உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த பொண்ணுக்கு உங்களுடைய,'ஹைகிளாஸ்' குடும்பம், பெரிய இடத்து மனோபாவம் இதெல்லாம் புதுசு; தெரியாது. அதனால், குழந்தைத்தனமாக அவள் ஏதாவது கேட்டாலோ, செய்தாலோ, மன்னிச்சு மறந்திடுங்க.''

சடாரென்று வண்டியை ஒடித்து ஓரங்கட்டினான், சித்தார்த். திரும்பி, ராஜாமணியை முழுமையாகப் பார்க்கிற வசதியுடன் உட்கார்ந்தான்.

''என்னைப் பத்தி என்ன நினைக்கிறீங்க, ராஜாமணி?''

''ஐயோ, நான் தப்பா ஒண்ணும் சொல்லிடலையே?''

''தப்பில்லை, ராஜாமணி. உங்க அக்கறையை நான் பாராட்டுறேன். அதே மாதிரி என் அக்கறையையும் நீங்க புரிஞ்சுக்கணும். நித்யா பற்றின சகலமும் தெரிஞ்சுக்கிட்டுத் தான் அவளைக் காதலிச்சேன், கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். அவளுடைய வெகுளியான, குழந்தைத்தனமும் எனக்கு ரொம்ப பிடிக்கும், ராஜாமணி. அடிக்கடி நான் அவகிட்ட என்ன சொல்வேன் தெரியுமா? ரோஜா படத்துல வர்ற, மதுபாலா என்று சொல்வேன். ஆனா, ஒரு கனவைப் போய் நிஜம்ன்னு நினைச்சு இத்தனை செய்வான்னு நினைக்கல.''

'நீங்க கண்டது சாதாரணக் கனவில்லை, சித்தார்த்...' என்று சொல்ல நினைத்தவன், நாக்கு நுனிவரை வந்துவிட்ட வார்த்தைகளை உள்ளடக்கிக் கொண்டான். அதற்குள் பஸ் நிலையம் வந்துவிட, ராஜாமணி, கீழே இறங்கி கையாட்டிப் பிரிய, காரை கிளப்பினான், சித்தார்த்.

சிறிது துாரம் போனதும், காரின் முன்பகுதியில் பாட்டி அமர்ந்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான். ஓடுகிற காரின், 'பானெட்' மீது பாட்டி எப்படி வந்து அமர முடியும்? 'பானெட்' சுடாதா?

காரின் வேகத்தை குறைத்து ஓரம்கட்ட நினைத்தவனிடம் பாட்டி சொன்னாள்...

'நிறுத்தாதே, தொடர்ந்து போ...' பாட்டி சொன்ன மாதிரி காரை நிறுத்தாமல், நேராக ஓட்டினான்.

பாட்டி கேட்டாள்...

'நீ என்னிடம் வந்துடு...'

'அஜ்ஜீ, நித்யாவை விட்டுட்டு எப்படி வருவது?'

'நான், உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன். எப்படியெல்லாம் உன்னை வளர்த்தேன். எல்லாம் மறந்துவிட்டதா?'

கண்களைத் துடைத்துக் கொண்ட பாட்டி, மறைந்து போனாள்.

அதிர்ந்து போனான், சித்தார்த்.



— தொடரும்.

இ.ரங்கநாயகி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us