தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (22)

உனக்காகவே நான்! (22)

உனக்காகவே நான்! (22)


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: த ன்னுடைய பாட்டி இறந்ததிலிருந்து, நிலைகுலைந்து காணப்பட்டான், சித்தார்த். தன் கனவில், பாட்டி வந்து அழைப்பதாக, சித்தார்த் கூறியதைக் கேட்ட, நித்யாவுக்கு பயம் ஏற்பட்டது. இது, நல்ல சகுனம் இல்லையே என்று நினைத்து, கோவிலுக்கு சென்று, பிரசாதம் வாங்கி வந்து, சித்தார்த்திடம் கொடுத்தாள், நித்யா. ராஜாமணி சென்னை திரும்புவதாக கூறியதும், அவனை ரயிலில் ஏற்றிவிட சென்றான், சித்தார்த். திரும்பவும் காரை எடுக்க வந்தபோது, காரின் முன்பகுதியுள்ள, 'பானட்' மீது, பாட்டி அமர்ந்து, தன்னை வரும்படி அழைப்பது போல் தோன்ற, தடுமாறினான், சித்தார்த். 'ப டுத்த படுக்கையாய், நடக்கவே முடியாத பாட்டி, எப்படி வந்து, கைகளை அகல விரித்து என்னைக் கூப்பிடுகிறார்... 'நித்யாவை விட்டு என்னால் எப்படி வர முடியும்?' என்றதற்கு, 'நான் உனக்கு எத்தனை செய்தேன்? எல்லாவற்றையும் மறந்து விட்டாயா?' என்று வேறு கேட்கிறார்...

'இதெல்லாம் நிஜமா? இறந்தவரை நான் தானே மண்ணில் புதைத்தேன். எப்படி எழுந்து வர முடியும்? இதெல்லாம் என் கற்பனையோ?

'எதுவானாலும் இப்படி வந்து கூப்பிட்டால் என்ன அர்த்தம். பாட்டி என் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும், பாசத்தையும் மறக்க முடியாமல் திண்டாடுகிறாரோ... அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக கண்ணெதிரில் புலப்படுகிறாரோ?

'இதை நிச்சயம், நித்யாவிடம் சொல்லக்கூடாது. ஏற்கனவே, அவள் பயந்து போயிருக்கிறாள். இதையும் சொன்னால், பாவம் உடைந்து போய் விடுவாள்...'

நேராக, 'பிளையிங் கிளப்'பிற்கு சென்றான்.

'ஹே சித்...' என்று நண்பர்கள் சூழ்ந்து, சந்தோஷமாக பேசினர். அதில் மனபாரம் குறைந்து, பாட்டியை மறந்து லேசானான்.

''சித்... வர்றீங்களா, ஒரு ரவுண்ட் போகலாம்?'' என்று கேட்டான் நண்பன், அஸ்வத்.

அப்போதைய மனநிலையில், பறப்பது பெரிய விடுதலையாக இருக்கும் என்று தோன்றியது. அஸ்வத்தின் பயிற்சி விமானமும் தயாராக இருந்தது.

அஸ்வத் சில மாதங்களுக்கு முன் தான் விமானம் ஓட்டப் பழகியிருந்தான். இன்னமும் பயிற்சியாளன் தான். சித்தார்த் மாதிரி முற்றிலும் தேர்ச்சி பெற்றவனல்ல. சித்தார்த், 'போயிங்' வகை விமானங்களையும், நான்கு, 'என்ஜின்'களைக் கொண்ட விமானங்களையும் அநாயசமாக ஓட்டக் கூடிய, விமானி.

ஆகவே, அஸ்வத்தின் குட்டி, 'கிளைடர்' விமானம் அவனுக்கு ஆரம்பத்தில் குழந்தையாக தெரிந்தது. தானும் ஆரம்பத்தில் இதே விமானத்தில் தானே பறந்தோம் என்பது நினைவுக்கு வந்தது.

கிரிக்கெட் விளையாடுவதைப் போலவே, வானில் பறப்பதும் இனிமையானது என்று நினைத்து கொண்டான். அஸ்வத்தின் பக்கத்தில் உட்கார்ந்து, சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்தான். அவனது சில தவறுகளை திருத்தினான். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பறந்து தரை தொட்ட போது, பழைய சித்தார்த்தாக உற்சாகமானவனாக, சிரிப்பும், சந்தோஷமுமாக மாறிப் போனான். அனைவரிடமும் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பி வந்த போது, தினமும், 'பிளையிங் கிளப்'பிற்கு போய் ஒரு மணி நேரமாவது பறக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

நித்யாவோடு உட்கார்ந்து சாப்பிட்ட போது, ''நான் எங்கு போனேன் தெரியுமா, நித்யா?'' என்றான்.

''எங்கே?''

''விமானம் ஓட்ட, 'பிளையிங் கிளப்' போனேன். ஒருமணி நேரம் வானத்தில் பறந்தது அத்தனை சந்தோஷமாக இருந்தது, நித்யா. அதுவும், 'கிளைடர்' விமானம். அஸ்வத் என்ற சின்னப் பையன் புதிதாக விமானம் ஓட்டப் பழகுபவன். அவனோடு பறந்ததே சந்தோஷம் என்றால், உன்னோடு பறந்தால் எப்படி இருக்கும், நித்யா?''

''ஐயோ... வேணாம் சாமி. முதல்ல இந்த பறக்கிற ஆசையை விடுங்க.''

''பறப்பதை விடுவதா, என்ன சொல்ற, நித்யா? இன்னும் கொஞ்ச நாள்ல பறக்கும் காரெல்லாம் வரப்போகுது... நீ என்னைப் பறக்க வேணாம்ன்னு சொல்ற? நாளைக்கு நீ என் கூட, 'பிளையிங் கிளப்'புக்கு வர்ற... நாம் ரெண்டு பேரும் பறக்கிறோம், என்ன?''

சற்று யோசித்தாள், நித்யா.

'பாட்டி மறைந்ததிலிருந்து இன்று தான் இவர் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிகிறது. பழைய மனநிலைக்குத் திரும்பியிருக்கிறார். பாவம். இவர் சந்தோஷத்தை இப்போது கெடுக்கக் கூடாது. பறப்பது மன நிம்மதி தரும் என்றால் பறக்கட்டுமே...'

''என்ன நித்யா யோசிக்கிறாய்?''

''வரேங்க. நாம் ரெண்டு பேர் மட்டுமா பறக்கப் போறோம்?''

''ஆமாம், நித்தி. ஓட்டிப் பழகுபவர்களுக்கான குட்டி விமானத்தில் போகலாம்; முடிந்தால் நாளைக்கு உன்னை 'ஹெலிகாப்டரில்' கூட்டிப் போகிறேன்,'' என்றான்.

ம றுநாள், 'ஹெலிகாப்டர்' கிடைத்தது. நித்யாவோடு பறப்பது அதிசுகமாக இருந்தது. மேலே போனான். சர்ரென்று கீழே இறங்கினான். மேலே போன போதும், கீழே இறங்கிய போதும், நித்யாவின் அடிவயிற்றில் பயம் பந்தாக சுருண்டது.

''ஐயோ, வேண்டாங்க. பயமாக இருக்குங்க,'' என்றாள்.

''பயப்படாதே... ஐயா கிரிக்கெட்டில் எப்படி கில்லாடியோ, அதே மாதிரி விமானம் ஓட்டுவதிலும் கில்லாடி. தைரியமாக வா. பயத்தை விட்டு வானத்தைப் பார். பஞ்சு மூட்டைகளாக நகரும் மேகங்களைப் பார். கீழே வீடுகள் எத்தனை சின்னச் சின்னதாக பொம்மைகள் மாதிரி தெரிகிறது பார். இதையெல்லாம் ரசிக்கிறதை விட்டு, எப்பப் பார்த்தாலும், பயம் பயம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கே.''

அதற்கு பிறகும் அவளுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், எதுவும் சொல்லவில்லை. அவன் சொன்ன மாதிரி வானத்தையோ, பூமியையோ ரசிக்க முடியவில்லை. ரசிக்கிற மாதிரி பாவனை தான் செய்தாள்.

அ ன்றிரவு அவன் பழைய சித்தார்த்தாக மிகுந்த சந்தோஷத்தோடு, அவளைக் கட்டியணைத்துக் கொண்டான்.

''ஏய், இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?'' அவளது இடுப்பை அணைத்து, அவளை அருகில் இழுத்தான்.

''இழுக்காதீங்க... இழுக்காதீங்க... உள்ளுக்குள்ள இருக்கிற உங்க குழந்தைக்கு வலிக்கும்.''

''ஏய்... எப்போ இது? ஏன் என்கிட்ட சொல்லல?''

''பத்து நாள் தள்ளிப் போயிருக்கு. 40 நாள் தான் ஆகுது. நாளைக்கு டாக்டர்கிட்ட, 'செக்' பண்ணா தெரிஞ்சுடும்.''

ம றுநாள், நித்யாவை பரிசோதித்த டாக்டர், அவள் கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தினார். அளவற்ற சந்தோஷத்தோடு வீட்டுக்கு வந்த, சித்தார்த் கவுதம், ராஜாமணிக்கு போன் பண்ணினான்.

''ராஜாமணி, நீங்க மாமாவாகப் போறீங்க,'' என்ற சித்தார்த்தின் குரலில் வழிந்தோடிய எல்லையற்ற சந்தோஷம், ராஜாமணியையும் தொற்றிக் கொண்டது.

''அப்பாவாகப் போகும் எங்கள் சி.எஸ்.கே., கேப்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,'' என்றவாறு அம்மாவிடம், விஷயத்தை சொல்லி, மொபைல்போனை கொடுத்தான்.

''ரொ ம்ப சந்தோஷம் மாப்ளே.... நாங்க நேரே வர்றோம்,'' என்றார், ராஜம்.

அடுத்து, நித்யாவின் அம்மாவுக்கு போன் பண்ணினான்.

''அத்தை துார்வாசர் கிளம்பி போயிட்டாரா?''

''ரெண்டு நாளாச்சு. துார்வாசர் வீட்டுக்கு வந்து... சகுந்தலா கூடவே தங்கிடறார்.''

''போகட்டும் விடுங்க. நீங்க நிம்மதியா இருங்க. அத்தே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.''

''நான் பாட்டியாகப் போறேன், அதானே.''

''போங்கத்தை... சஸ்பென்ஸை உடைச்சுட்டீங்க; நான் அப்பாவாகப் போறேன்.''

''ரொம்ப சந்தோஷம். இந்த மாதிரி நேரத்துல ஒரு பொண்ணுக்கு அம்மா கூட இருக்கணும்,'' என்று கரகரத்த குரலில் கூறியதைக் கேட்ட சித்தார்த், ''கவலைப்படாதீங்க அத்தை. நித்யாவுக்கு நீங்க எல்லாருமா நான் இருப்பேன். அந்த வாண்டு சுசீலா எங்கே?''

''இதோ என்கிட்டருந்து போனைப் பிடுங்கறா... தரேன்.''

''உங்களுக்கு ஒரு குட்டித் தல பொறக்கப் போறதா? வாழ்த்துகள், தல,'' என்றாள், சுசீலா.

''குட்டி தல மட்டுமில்ல, குட்டி நித்யாவும் கூட.''

''பாவம் அக்கா. ஒண்ணும் தெரியாத அப்பாவி... அவளைப் போட்டு இப்படி பாடாய்ப்படுத்துறீங்க,'' என்று கிண்டலடித்தாள், சுசீலா.

''படுத்தறனா, சந்தோஷமா வச்சிருக்கனான்னு உங்கக்காகிட்ட நீயே கேளு,'' என்று, நித்யாவிடம் மொபைல் போனை கொடுத்துவிட்டு நகர்ந்தான், சித்தார்த்.

கூ டை நிறைய பழங்கள், மல்லிகைப்பூ பந்து, வீட்டில் செய்த திரட்டுப்பால், ஜாங்கிரி, மைசூர் பாகு, முறுக்கு, தேன்குழல் மற்றும் 'மிக்ஸர்' இவற்றோடு, பட்டுப்புடவை, பட்டு வேஷ்டியும், ஒரு ஜோடி வைர வளையல்களும் வாங்கிக் கொண்டு, எல்லையற்ற சந்தோஷத்தை மனதில் சுமந்து கொண்டு, காரிலேயே வீட்டு வாசலில் வந்து இறங்கினர், ராஜாமணியும், அவன் பெற்றோரும்.

சாப்பிடும் பொருட்களை எடுத்து வைத்த போது, மலைத்துப் போனாள், நித்யா.

''என்ன அத்தை இவ்வளவு... ஒரு கடையே வைத்து விடலாம் போலிருக்கிறதே?'' என்றாள்.

''உனக்குப் பிடித்த ஓமப்பொடி, வெல்ல திரட்டுப்பால், கைமுறுக்கு எல்லாம் நானே செய்து கொண்டு வந்திருக்கிறேன். மாப்பிள்ளைக்கு கொடு. நீயும் சாப்பிடு. அப்புறம் எல்லாருக்கும் கொடு,'' என்றாள், ராஜம்.

''மாப்பிள்ளை எங்கம்மா?'' என்று கேட்டார், சுந்தரேசன்.

''கிரிக்கெட், 'பிராக்டீஸ்' போயிருக்காரு, மாமா... இப்ப வந்திடுவாரு. ராஜாமணி, அம்மா, அப்பாவை கூட்டிட்டு அவங்க ரூமை காட்டுங்க. குளிச்சு தயாராகி நீங்க சாப்பிட வர்றதுக்குள்ள அவர் வந்திடுவார்,'' என்றாள்.

''ஏம்மா, இது வீடா இல்ல அரண்மனையாம்மா?'' என்றாள், அத்தை.

''இது ஒண்ணு மட்டும் இல்லீங்கத்தை. இந்த மாதிரி பல இருக்கு. என்னை மாதிரி ஒரு, 'மிடில் கிளாஸ்' பெண்ணை அவருக்கு எப்படித்தான் பிடிச்சுச்சுதுன்னே தெரியல?''

''ஏன் நித்யா? காதல் என்ன, அந்தஸ்து பார்த்து, ஜாதி பார்த்து, பணம் காசு பார்த்தா வரும்? சித்தார்த்துக்கு உன்மேல ஏற்பட்டது, உண்மையான காதல், நித்யா. நீ ரொம்ப கொடுத்து வச்சவ. உன் குழந்தை மனசுக்கும், கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்துக்கும் இறைவன் கொடுத்த பரிசு.''

அத்தை சொல்லி முடிப்பதற்கும், சித்தார்த்தின் கார், 'போர்டிகோ'வில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. உள்ளே வந்து, ராஜாமணியையும், அத்தை, மாமாவையும் பார்த்ததும் அதி உற்சாகமானான்...

''அத்தை, மாமா... எப்ப வந்தீங்க. இந்த வீட்டுக்கு முதல் முறையாக வர்றீங்க இல்லையா. ரொம்ப சந்தோஷம்,'' என்றவன், 'டப்பா, டப்பா'வாக வைக்கப்பட்டிருந்த பட்சணங்களைப் பார்த்து மலைத்தான்...

''ஏன் ராஜாமணி, உங்க அம்மாவும், அப்பாவும் இங்க ஏதாவது 'ஸ்வீட்' கடை வைக்கப் போறாங்களா?'' என்று கேட்டான்.

''பிள்ளைதாய்ச்சி பொண்ணு, வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணும், மாப்பிள்ளை. அவ, என்ன அம்மாகிட்டயா கேட்க முடியும்? அதனால, நாங்களே செய்து கொண்டு வந்திருக்கோம். ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை. கிருஷ்ணர் வீட்டுக்கு, குசேலர் கொண்டு போன மாதிரி,'' என்றாள், ராஜம்.

''கிருஷ்ணருக்கு அவல் பிடிக்கும். எனக்கும், அவல் பிடிக்கும் அத்தை,'' என்றான், சித்தார்த்.

அதற்குள் தட்டில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், புடவை, வேட்டி, வளையல் பெட்டி எல்லாம் வைத்து, ''வாங்க, வந்து ஜோடியா ரெண்டு பேரும் வாங்கிக்குங்க,'' என்ற, ராஜம், சுந்தரேசனிடம், ''நீங்களும் வந்து நில்லுங்க. ரெண்டு பேருமா குழந்தைகளை வாழ்த்தலாம்,'' என்றாள்.

''அத்தை, தப்பா நினைக்காதீங்க. நான் மட்டும் நமஸ்காரம் பண்றேன். நித்யா குனிந்து நிமிர்ந்தா குழந்தைக்கு வலிக்கும்,'' என் றான், சித்தார்த். நிஜமான கரிசனத்தோடு.

''என்ன மாப்பிள்ளை நீங்க. இந்த மாதிரி நிலைமையில் தான் குனிஞ்சு நிமிரணும். நிறைய வேலை செய்யணும். இதெல்லாம் பாட்டி இருந்திருந்தா சொல்லியிருப்பாங்க.''

இதைக்கேட்டதும், சுரீரென்று, நெஞ்சில் சூடிழுத்த மாதிரி ஆயிற்று, சித்தார்த் கவுதமுக்கு.

- தொடரும்.இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us