தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (23)

உனக்காகவே நான்! (23)

உனக்காகவே நான்! (23)


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: ர ஜாமணியை ரயிலேற்றிய பின் திரும்பிய சித்தார்த், மீண்டும், பாட்டி அழைப்பதை உணர்ந்து குழம்பினான். அந்த நினைப்பை புறந்தள்ளி, வீட்டுக்கு திரும்பியவனுக்கு, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினாள், நித்யா. அதை உறுதிப்படுத்த, அவளை டாக்டரிடம் அழைத்து சென்றான், சித்தார்த். டாக்டரும், நித்யா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய, மிகவும் மகிழ்ந்து, ராஜாமணி குடும்பத்தினருக்கும், நித்யா அம்மாவுக்கும் தகவல் தெரிவித்தான், சித்தார்த். மறுநாளே, ராஜாமணியும், அவனது பெற்றோரும் கிளம்பி, பெங்களூரு வந்தனர். நித்யாவுக்கு பிடித்த நொறுக்கு தீனிகளை தயார் செய்து எடுத்து வந்திருந்தார், அவள் அத்தை. ராஜாமணியின் பெற்றோரை சந்தித்ததும் மகிழ்ந்து போயினர், சித்தார்த்தும், நித்யாவும். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க விரும்பினான், சித்தார்த். அச்சமயம், பாட்டியை பற்றி, நித்யாவின் அத்தை நினைவூட்ட, 'மீண்டும் பாட்டியை மறந்து விட்டேனே...' என்று வருந்தினான், சித்தார்த். 'எ ப்படி மறந்தேன்... பாட்டியின் நினைவு எப்படி மறந்து போயிற்று. நித்யா அந்த சுப செய்தியைச் சொன்னவுடன் நேராகப் பாட்டியின் படத்திற்கு முன்பல்லவா, நித்யாவை அழைத்துப் போயிருக்க வேண்டும்? முதல் ஆசீர்வாதம் அவர்களிடமல்லவா வாங்கியிருக்க வேண்டும். அதன்பின் அம்மா, அப்பாவின் படத்தை நமஸ்கரித்த பிறகு தானே, நித்யாவின் அம்மாவுக்கோ, ராஜாமணிக்கோ போன் பண்ணியிருக்க வேண்டும்?

'ஆனால், நான் என்ன செய்தேன். அத்தை ஞாபகப்படுத்தும் இந்த நிமிடம் வரை, பாட்டியைப் பற்றிய எண்ணமே இல்லாமல் அல்லவா இருந்திருக்கிறேன். பாட்டி கேட்கிற மாதிரி நான் அவர்களை மறந்து தான் போயிருக்கிறேன். மீண்டும் நன்றிகெட்ட தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்...'

அப்படியே அறைந்து நிறுத்தியதைப் போல் நின்றவனைக் கண்டு, ராஜமும், சுந்தரேசனும் பயந்து போயினர். நித்யா பதறி, அவனைப் பற்றி உலுக்கினாள்.

''என்னங்க, என்ன ஆச்சு?''

ராஜாமணி அருகில் வந்து தோளைத் தொட்டான்.

''என்ன சித்தார்த்?''

''ராஜாமணி. மறுபடியும், நான் பாட்டியை மறந்துட்டேன். நித்யா விஷயத்தைச் சொன்ன உடனே, நான் என்ன செய்திருக்க வேண்டும்? பாட்டி படத்தின் முன் நின்று, கைகூப்பி மனதார அவங்க ஆசீர்வாதத்தை வேண்டியிருக்க வேண்டுமல்லவா? அப்புறம் அப்பா, அம்மா படத்தை நமஸ்கரித்திருக்க வேண்டும். ஆனால், நான் எதையும் செய்யல.''

கண்களை மூடி பெருமூச்சு விட்டவனின் கன்னங்களில், கண்ணீர் ஓடிற்று. அனைவரும் பதறிப் போயினர். ராஜாமணி அவன் அருகில் போய், அவன் கையைப் பற்றினான்.

''வாங்க, சித்தார்த். வா, நித்யா... முதல்ல பாட்டிகிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம்,'' என்றான்.

சித்தார்த் தயங்குவதைப் பார்த்து, ''என்ன தயக்கம், சித்தார்த். முதல் முதலாக நீங்கள் இப்போது பாட்டியிடம் தான் ஆசீர்வாதம் வாங்கப் போகிறீர்கள். முதல் ஆசீர்வாதமும், வாழ்த்தும் பாட்டியிடம் தான்,'' என்று இழுத்துப் போய், ஆளுயரப் பாட்டியின் படத்திற்கு முன் நிறுத்தினான்.

''பாட்டி, உங்க பேரனுக்கு குழந்தை பிறக்கப் போறது. ஆசீர்வாதம் பண்ணுங்க, பாட்டி,'' மனமுருக பிரார்த்தனை செய்தான், ராஜாமணி.

ராஜாமணியின் உருக்கமான பிரார்த்தனை, சித்தார்த் கவுதமை கலங்க வைத்தது. மவுனமாக கண்ணீர் சிந்தினானே தவிர, வாய் திறக்கவில்லை.

''என்ன சித்தார்த், சின்னப் பிள்ளை மாதிரி?''

''இல்ல... என்னைக் கொஞ்சம் பாட்டியோடு தனியா இருக்க விடுங்க ப்ளீஸ்... அவங்ககிட்ட நான் மனசார மன்னிப்பு கேட்கணும். காலைப் பிடிச்சுக்கிட்டு அழணும்.''

''சரி, சித்தார்த். உங்க விருப்பப்படி செய்ங்க.''

அவனைத் தனியாக விட்டு வெளியில் வந்ததும், ராஜாமணியிடம் சொன்னாள், நித்யா...

''இவர் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார், ராஜு. இவரை இப்படியே விடக்கூடாது.''

''அதையே தான் நானும் நினைக்கிறேன். ஒரு உலகறிந்த கிரிக்கெட் வீரனுக்குள் இப்படிப்பட்ட பலவீனம் இருக்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. அதுவும் வயதான பாட்டி மீது, தகுந்த அன்பு காட்டவில்லை என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட முடியுமா? உளவியல் மிகவும் புதிரானது.''

''ஆமாம், ராஜு. இவருக்கும், 'கவுன்சிலிங்' தேவைப்படலாம்!''

''அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்,'' என்று கூறினான், ராஜாமணி.

அ ன்றிரவு நடந்த சம்பவம் வீடு மொத்தத்தையும் உலுக்கி விட்டது. எதேச்சையாக கண்விழித்த, நித்யா பக்கத்தில், சித்தார்த்தை காணாமல் திடுக்கிட்டாள். சட்டென்று எழுந்து விளக்கை போட்டாள். எல்லா இடங்களிலும் தேடியும், சித்தார்த் இல்லை என்பது அதிர்ச்சியளித்தது.

கீழே ஓடிவந்து, ராஜாமணியை எழுப்பி, விஷயத்தைச் சொன்னாள். அத்தனை பாதுகாவலர்களும் முடுக்கிவிடப்பட்டனர். ஆளுக்கு ஒரு பக்கம் வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடினர். மொட்டை மாடி வரை சென்று பார்த்தும், சித்தார்த் காணப்படவில்லை என்பது, நித்யாவின் அடிவயிற்றைக் கலக்கியது. அதற்குள், ராஜமும், சுந்தரேசனும் எழுந்து வந்தனர். மிகுந்த பதற்றத்துடன் இருந்த, நித்யாவை சமாதானப்படுத்தினான், ராஜாமணி.

''கவலைப்படாதே, நித்யா... சித்தார்த்திற்கு இங்கு யாரெல்லாம் நண்பர்கள் என்று சொல்.''

''எனக்கு தெரிந்தவரை, ரிஷப் ஷெட்டி ஒருவர் தான். அவரும், மும்பையில் அல்லவா இருக்கிறார்.''

''சரி, சித்தார்த் போகக்கூடிய இடங்கள்?''

''கல்யாணமான தினத்திலிருந்து என்னை விட்டு, அவர் தனியாகப் போன இடங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று, 'கிரிக்கெட் பிராக்டிஸ்' மற்றொன்று, 'பிளையிங் கிளப்!' தான்.''

''இரண்டிற்கும் இந்த அர்த்த ராத்திரியில் போவதற்கான சாத்தியமில்லை. எதற்கும், நான் கார் எடுத்துக்கொண்டு போய் பார்த்து வருகிறேன். கவலைப்படாமல் தைரியமாக இரு.''

போன கால்மணி நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தான், ராஜாமணி. கூடவே சித்தார்த். மகிழ்ச்சி, நித்யாவின் கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது. ஓடிவந்து, சித்தார்த்தை கட்டிக் கொண்டாள்.

''எங்க போயிட்டீங்க?''

''பாட்டி வந்து கூப்பிட்டாங்க. அதனால் கூடப் போனேன்.''

''என்னது?'' என்று பதறிப்போய் கேட்ட, நித்யாவிடம் அமைதியாக சொன்னான், ராஜாமணி...

''இதைப் பாரு, நித்யா. இப்போது இவரிடம் எதுவும் கேட்காதே. தெருவில் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தவரைக் கண்டுபிடித்து, கேட்டபோது, இதே பதில் தான் சொன்னார். உள்ளே அழைத்து போய், சூடாக ஏதாவது குடிக்கக் கொடுத்து, படுக்க வை. எதுவானாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம்.''

அன்றிரவு முழுதும், ராஜாமணி துாங்கவில்லை. மிகப்பிரபலமான கிரிக்கெட் வீரனைப் பற்றி எந்த செய்தியானாலும், காட்டுத்தீயாகப் பரவும். எனவே, இதை முதிர்ச்சியோடும், பக்குவத்தோடும் அணுக வேண்டும். யோசித்து, யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

ம றுநாள் காலை, கிரிக்கெட் 'போர்ட்' தலைவர், ஸ்ரீனிவாசனைத் தொடர்பு கொண்டான், ராஜாமணி.

''சார், நான் சித்தார்த் கவுதமின், மச்சினன்.''

''ஓ... 'ஐ நோ!' நான் தான் உங்களை, 'ரிசப்ஷனில்' சேப்பாக் ஸ்டேடியத்தில் சந்தித்துள்ளேன். சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?''

''ஒண்ணுமில்ல சார். பாட்டி தவறியதிலிருந்து, சித்தார்த் கொஞ்சம், 'டிப்ரஷன்'ல இருக்கார்.''

''பாட்டி தானே சார். இதற்கு ஏன், டிப்ரஷன்?''

''நமக்கு பாட்டி சார். வயசானவங்க தான். போக வேண்டிய வயசு தான். ஆனால், சித்தார்த்துக்கு அப்படியில்லை. சின்ன வயசிலேயே அம்மா, அப்பாவை இழந்தவரை பாட்டி தான் வளர்த்திருக்காங்க. அதனால், பாட்டி மீது பாசம் அதிகம்.''

''ஓ... இப்ப என்ன செய்யலாம்?''

''உங்க, 'பிளேயர்ஸ்'ஸுக்குன்னு தனியா ஒரு, 'சைக்கியாட்ரிஸ்ட்' இருப்பாரில்ல?''

''எஸ், டாக்டர் துஷ்யந்த். அவரும், 'யங்ஸ்டர்' தான். எல்லா 'பிளேயர்ஸ்'கிட்டேயும் நல்லா பழகுவாரு. சித்தார்த்துக்கும் நல்ல நண்பர்.''

''அவர் வீட்டுக்கு வருவாரில்ல?''

''ஒய் நாட்? சித்தார்த்தை நிறைய முறை அவர் வீட்டுல சந்திச்சிருக்காருன்னு நினைக்கிறேன்.''

''அப்படின்னா நாளைக்கு வீட்டுக்கு வரச் சொல்றீங்களா?''

''நாளைக்கு எதுக்கு? இன்னைக்கு சாயந்திரம் 4:00 மணிக்கெல்லாம், துஷ்யந்த் உங்க வீட்டுல இருப்பார்!''

து ஷ்யந்த், சரியாக 4:00 மணிக்கு வந்தார். ராஜாமணியை தனியாக அழைத்து பேசி, முழு விபரங்களையும் தெரிந்து கொண்டார். அப்போது தான் வருவதைப் போல் வந்து, ''ஹாய் சித்தார்த்,'' என்றார்.

''துஷ்யந்த். வாட் ஏ சர்ப்பிரைஸ்,'' என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தான், சித்தார்த் கவுதம்.

''சித்தார்த்,'ஒர்க் பிரஷர்' தாங்க முடியல. 'ஸோ' ரெண்டு நாள் உன்கூட உங்க வீட்டுல இருக்கலாம்ன்னு வந்திருக்கேன். இருக்கலாமா?''

''என்னடா கேள்வி இது?''

''இல்ல, புதுசா கல்யாணமானவன். உன் புது கல்யாண வாழ்க்கைல, ரெண்டு நாள் கடன் வாங்கினா, உன், 'ஒய்ப்' என்ன சொல்வாங்களோ?''

''நித்யா, இதுக்கு நீதான் பதில் சொல்லணும்.''

''ரெண்டு நாள் என்ன, ரெண்டு மாசம் கூட, நீங்க தங்கலாம்.''

''அப்படின்னா எல்லாரும் கிளம்புங்க. ராஜாமணி உங்க அம்மா, அப்பாவையும் கூப்பிடுங்க. ஜாலியா ஒரு பெரிய, 'ரவுண்ட்' அடிச்சிட்டு வரலாம்.''

இரண்டு கார்களில் எல்லாரும் கிளம்பினர். பெங்களூரை வலம் வந்தனர். பின், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவருந்தினர். இரவு வீடு வர, 11:00 மணி ஆனது. மிகுந்த சந்தோஷத்தோடு இருந்தான், சித்தார்த்.

அதுபோல், மறுநாள் காலை, சித்தார்த்தோடு நீச்சல் குளத்தில் பலமணி நேரம் நீச்சலடித்தான், துஷ்யந்த். இருவரும் பகல் சாப்பாட்டிற்கு பின், 'செஸ்' விளையாடினர். அதற்கு பிறகு, ''ஏதாவது சினிமா போகலாம், சித்,'' என்று கூப்பிட்டான், துஷ்யந்த்.

''வீட்டிலேயே, 'ஹோம் தியேட்டர்' இருக்கிறதே,'' என்றாள், நித்யா.

''நோ... நோ... வீட்டிலேயே அடைந்து நாம் மட்டும் பார்ப்பதற்கா சினிமா? தியேட்டர்ல போய், 'ஆடியன்ஸ்'ஸோட பார்க்கணும். ஒரு விளம்பரம் கூட தவற விடக்கூடாது. அப்படி பார்த்தால் தான் அது சினிமா! இல்லையா, மிஸ்டர் ராஜாமணி. சினிமா துறையினரும், அதுக்குத்தானே கஷ்டப்பட்டு படம் தயாரிக்கறாங்க?'' என்று கேட்டான்.

''சரியா, சொன்னீங்க,'' என்றான், ராஜாமணி.

மறுநாள், ராஜமும், சுந்தரேசனும், மேல்கோட்டை செல்வ நாராயணன் ஸ்வாமி கோவிலுக்கு போக விரும்பியதும், அனைவரும் சென்று தரிசனம் செய்து வந்தபின், சொன்னான், துஷ்யந்த்...

''அப்பாடா... 'வெரி குட் ரிலாக்சேஷன்' மனசுல இருந்த இறுக்கமெல்லாம் தளர்ந்து லேசாயிடுச்சு.''

''எனக்கும் ரொம்ப, 'ரிப்ரெஷிங்'கா இருந்தது, துஷ்யந்த்,'' என்று ஆமோதித்தான், சித்தார்த்.

''இது வேணும்ன்னு தான் வந்தேன். கிடைச்சுடுச்சு. கிளம்பட்டுமா?'' என்று கேட்டான், துஷயந்த்.

''இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போயேன். ரொம்ப, 'ரிலாக்ஸ்டா' இருக்கும்,'' என்றான், சித்தார்த்.

''வேணாம் சாமி. இதுக்கு மேல, இருந்தா அப்புறம் கிரிக்கெட், 'அசோஸியேஷன்' நிரந்தரமா என்னை உன்கூடவே தங்க வச்சிடும்.''

''தங்கிடு.''

''அது சரி. எனக்கும், வீடு, வாசல், பொண்டாட்டியெல்லாம் இருக்காங்கப்பா,'' என்று சிரித்தான், துஷ்யந்த்.

இரவு சாப்பாட்டிற்கு பின், கிளம்ப முடிவு செய்யப்பட்டதும், ராஜாமணியையும், நித்யாவையும் தனியாக அழைத்து பேசினான், துஷ்யந்த்.

இது ஒரு மாதிரி மனப்பிராந்தின்னு சொல்லலாம். கொஞ்ச நாளைக்கு சித்தார்த்தை யோசிக்கவே விடாதீங்க. இந்த ரெண்டு நாள் மாதிரி மூளைக்கு வேலை கொடுத்துக்கிட்டே இருங்க. முக்கியமாக பாட்டியை பற்றி ஞாபகமே படுத்தாதீங்க,'' என்று சொல்லி, அனைவரிடமும் விடைபெற்று, கிளம்பி போனான், துஷ்யந்த்.

சட்டென்று, சித்தார்த் மனதில் மீண்டும் ஒரு பள்ளம் விழுந்தது. இரவு நிம்மதியான துாக்கம் இன்றி தவித்தான்.



- தொடரும்.

இ.ரங்கநாயகி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us