தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (24)

உனக்காகவே நான்! (24)

உனக்காகவே நான்! (24)

2


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: நித்யா கர்ப்பமாக இருப்பதை அறிந்து, பெங்களூரு வந்தனர், ராஜாமணியும், அவன் பெற்றோரும். பேச்சுவாக்கில், பாட்டியைப் பற்றி நினைவூட்ட, குற்ற உணர்ச்சிக்கு ஆளானான், சித்தார்த். நித்யா கர்ப்பமான செய்தியை அறிந்ததும், 'முதலில் பாட்டி மற்றும் பெற்றோர் படத்தின் முன்பும் நின்று, நமஸ்கரித்து, ஆசீர்வாதம் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மறந்து விட்டேனே...' என, வருந்தினான், சித்தார்த்.

சித்தார்த்தை சமாதானப்படுத்தி, அவன் விருப்பப்படியே, பாட்டி மற்றும் அவனது பெற்றோர் புகைப்படத்தின் முன், நித்யாவையும், சித்தார்த்தையும் நிற்க வைத்து நமஸ்கரிக்க வைத்தான், ராஜாமணி.

சித்தார்த்தின் மன உளைச்சலை குணப்படுத்த, 'கிரிக்கெட் போர்டு' தலைவர், ஸ்ரீனிவாசனிடம் சொல்லி, மனநல மருத்துவர், துஷ்யந்தை வரவழைத்தான், ராஜாமணி.

துஷ்யந்தும், இரண்டு நாட்கள் பெங்களூரில் தங்கியிருந்து, சித்தார்த்துக்கு பாட்டியின் நினைவு வராமல் பார்த்துக் கொண்டான்.

மறுநாள், அதிகாலையில் எழுந்து வீட்டில் அமைத்திருந்த ஜிம்மிற்கு சென்று வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி செய்தான், சித்தார்த். சில்லென்ற ஷவரின் அடியில் நின்று, நீண்ட நேரம் குளித்தான். தனக்குப் பிடித்த உடையணிந்து வந்த போது, புதுசாய் உணர்ந்தான்.

''நித்யா... நான், 'பிளையிங் கிளப்' போயிட்டு வரேன். நீ அத்தை, மாமாவைக் கூட்டிட்டு, ராஜாமணி கூட, சதாசிவ நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு போய், அர்ச்சனை பண்ணிட்டு வந்துடு. லஞ்சுக்கு வீட்டுக்கு வந்திடறேன், பை,'' என்று கூறி, காரைத் தானே ஓட்டிக் கொண்டு போனான்.

அன்று என்னவோ அவனுக்கு, 'ஹெலிகாப்டரில்' போக வேண்டும் என்று தோன்றவே, தனக்குப் பழக்கமான, 'ஹெலிகாப்டரில்' ஏறி, மேலே எழும்பி விளையாடினான். மேலே போவதும், கீழே இறங்குவதும் கிரிக்கெட்டை விட, உற்சாகமான விளையாட்டாகத் தெரிந்தது. மேகத்தினுள் புகுந்து வெளியில் வந்தபோது, தன் பக்கத்தில் பாட்டி உட்கார்ந்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான்.

'அஜ்ஜீ?'

'இன்னும் மேலே போ...' பாட்டி சொன்னது போலவே மேலே போனான்.

'இன்னும் மேலே போ...' அதைவிட மேலே போனான்.

அதற்கும் மேலே போய் மேகத்தினுள் நுழைந்த போது, 'நல்லாயிருந்ததுபா...' என்ற பாட்டியின் குரல் மட்டும் கேட்க, அதனுடன் கலந்து, 'ஹெலிகாப்டரோடு' காணாமல் போனான்.

அன்று எந்தவித சங்கடமோ, சலனமோ இன்றி தெளிவாக இருந்தாள், நித்யா. தனக்கு மிகவும் பிடித்த பாடலான, 'என்னாளும் வாழ்விலே, கண்ணான காதலே...' என, கள்ளக்குரலில் பாடியபடியே, நீண்ட நேரம், ஷவரின் அடியில் நின்றாள். சித்தார்த் கவுதமிற்கு மிகவும் பிடித்தமான, கடல் நீல நிறத்தில், சரிகையற்ற பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு, கண்ணாடியில், பார்த்து, பிரமித்துப் போனாள்.

இப்போது, சித்தார்த் கவுதம் வந்து, தன்னைப் பார்த்தால், விடவே மாட்டார். அப்படியே துாக்கி, தட்டாமாலை சுற்றுவார்.

''என்ன, நித்யா... நீயே சிரிச்சுக்கற?'' என்றவாறு உள்ளே வந்த, ராஜாமணி, ''கிளம்பலாமா?'' என்று கேட்டான்.

''அத்தையும், மாமாவும் ரெடியா?''

''அவுங்க எப்பவோ, 'ரெடி' கீழே போகலாமா,'' என்றான்.

''சரி, வாங்க போகலாம்.''

கீழே படியிறங்கி வந்தவளைக் கண்ட, ராஜம், கண்ணிமைக்க மறந்தாள்.

''அடேங்கப்பா, என்ன அழகுடி. இந்த சமயத்துல இப்படி அழகு கூடினா பொண்ணு தான் பொறக்கும்ன்னு சொல்வாங்க,'' என்றாள்.

''ஐயோ அத்தை. அவர் எதிர்ல சொல்லிடாதீங்க. அவர் பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணுன்னு ரெட்டைக் குழந்தைக்கு அடி போடறார்.''

''அவர் இஷ்டம் போல நடக்கட்டும். இரு, திருஷ்டி சுத்திப் போடறேன். அப்புறம் கோவிலுக்குப் போகலாம். யார் கண்ணும் பட்டுடக் கூடாது.''

''இல்லை அத்தை. முதல்ல கோவிலுக்குப் போயிட்டு வந்திடலாம். இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா? கோவில்ல கூட்டம் அதிகமா இருக்கும்.''

கோவிலில் அவளை முன்னிலை படுத்தினர். அவள் கொடுத்த பூமாலையையும், பூக்களையும் சாத்தினர். பின்னர், அர்ச்சனை தட்டைக் கொண்டு வந்து நீட்டி, ''சித்தார்த் கவுதம், பூச நட்சத்திரம், கடக ராசி,'' என்று, சொல்லி நிறுத்தினார்.

''நித்யா, மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி,'' என்று முடித்தாள், ராஜம்.

மற்றவர்கள் பெயர், நட்சத்திரங்களை கேட்டபோது, ''வேண்டாம், அவங்க ரெண்டு பேர் பேர்ல மட்டும் பண்ணுங்க போதும்,'' என்றான், ராஜாமணி.

பட்டர் உள்ளே போய், அர்ச்சனை செய்தபோது, கைகூப்பி, கண்மூடி மனமுருக வேண்டிக் கொண்டாள், நித்யா.

''கோவிந்தா... கோவிந்தா,'' என்று குரல்கள் ஆர்ப்பரிக்க, கற்பூர ஆரத்தி காட்டி, பட்டர் தட்டை நீட்டியதும், பயபக்தியோடு தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

''தீர்க்காயுசா, தீர்க்க சுமங்கலியா, ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் எல்லாம் பெற்று வாழணும்மா.''

''அவர் நல்லாயிருக்கணும்ன்னு பெருமாள்கிட்ட சொல்லுங்க, ஸ்வாமி.''

''தீர்க்காயுசு அவருக்கும், தீர்க்க சுமங்கலி உனக்கும்மா!''

கோவிலிலிருந்து வீடு திரும்பியதும், நித்யாவை சாப்பிடக் கூப்பிட்டாள், ராஜம்.

''புடவையை மாத்திட்டு சாப்பிட வாம்மா. பிள்ளைதாய்ச்சிப் பொண்ணு நேரத்துக்கு சாப்பிடணும்மா.''

''இல்லை அத்தை. அவர் வந்துடட்டும்.''

''அவர் எப்போ வருவாரோ என்னவோம்மா?''

''இல்லை அத்தை, வந்துடுவாரு. கல்யாணமானதும் முதல் முதலா அவர் வாங்கிக்கொடுத்த புடவை. அவருக்கு ரொம்பப் புடிச்ச கலர். அதனால், அவர் வர்ற வரைக்கும் இப்படியே இருக்கேன், அத்தை. அவர் வந்து பார்த்ததுக்கு அப்புறம் அவரோட சேர்ந்து சாப்பிடறேன் அத்தை.

நீங்க எல்லாரும் சாப்பிடுங்க, ராஜு நீங்களும் சாப்பிடலாமே!''

''இல்ல, சித்தார்த் வரட்டும். நாம மூணு பேரும் ஒன்றாகவே சாப்பிடலாம்.''

''சரி, ராஜு. நான் கொஞ்சம் படுக்கறேன். அவர் வந்ததும் எழுந்திருக்கறேன்.''

''சரி, நித்யா. படுத்துக்க.''

நித்யா மாடிக்கு போனதும், சோபாவில் சாய்ந்த ராஜாமணியும் சிறிது நேரம் கண்ணயர்ந்தான். எத்தனை நேரம் துாங்கினோம் என்பதே தெரியாத நிலையில் இருந்த போது, மொபைல் போனில் அழைப்பு வர, கண் விழித்தான்.

''மிஸ்டர் ராஜாமணி?'' கூப்பிட்ட குரலில் மிகுந்த பதட்டம் தெரிந்தது.

''எஸ்!''

''ஐயம் ஸ்ரீனிவாசன்.''

''ஸ்ரீனிவாசன்?'' துாக்கக் கலக்கத்தில் நினைவில் தேடினான், ராஜாமணி.

''கிரிக்கெட் 'போர்ட் சேர்மேன்', சார்.''

''ஸாரி, ஓ... எஸ்... எஸ்... சொல்லுங்க சார்.''

''நீங்க உடனடியா எங்க வீட்டுக்கு வரணும்.''

''உங்க வீடு, சார்?''

''குறிச்சுக்குங்க?''

குறித்துக் கொண்டான்.

''டோன்ட் டிலே ப்ளீஸ். மேட்டர் ஈஸ் வெரி அர்ஜென்ட்.''

சட்டென்று உறக்கம் முழுவதும் கலைந்து இரண்டிரண்டு படிகளாக ஏறி மாடியை அடைவதற்குள், முகம் கழுவி, நித்யாவே பளிச்சென்று எதிரில் வந்தாள்.

''அவர் வந்துட்டாரா, ராஜு?''

''இல்ல, நித்யா.''

''இன்னும் வரலையா?'' அவள் கண்கள் கடிகாரத்தை ஏறிட்டன.

''ஸ்ரீனிவாசன் போன் பண்ணினார். என்னை அவர் வீட்டுக்கு உடனடியாக வரச் சொல்றார்.''

''எந்த ஸ்ரீனிவாசன், ராஜு?''

''கிரிக்கெட் போர்ட்.''

''நானும் வரட்டுமா, ராஜு?''

ஒரு விநாடி யோசித்து, பின், ''சரி, வா,'' என்றான்.

வீ ட்டு வாசலிலேயே காத்திருந்த, ஸ்ரீனிவாசன், நித்யாவைக் கண்டதும் திடுக்கிட்டார். ராஜாமணி, அவளைத் தன்னுடன் அழைத்து வருவான் என்று நினைக்கவில்லை. இவளை ஏன் அழைத்து வந்தான் என்று தோன்றியது. கூடவே, 'எப்படி இருந்தாலும், தெரிய வேண்டியது தானே?' என்று சமாதானப்படுத்திக் கொண்டு, உள்ளே அழைத்து சென்று அமரச் செய்தார். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல், ஒரு விநாடி தயங்கினார்.

அவரின் தயக்கம், நித்யாவையும், ராஜாமணியையும் பயமுறுத்தியது.

''சொல்லுங்க, சார்?'' என்றான், ராஜாமணி.

''பிளையிங் கிளப்பிலிருந்து போன் பண்ணினர்.''

''சார்?''

''சித்தார்த் கவுதம் ஓட்டிச் சென்ற, 'ஹெலிகாப்டர்' காணாமல் போய் விட்டதாம்?''

''அப்படின்னா,'' என்று பதறினாள், நித்யா.

''வழக்கமாக எடுக்கும் விமானத்தை எடுக்காமல் இன்று சின்ன, 'ஹெலிகாப்டரை' எடுத்திருக்கிறார். முதல் அரை மணி நேரம் சாதாரணமாகத்தான் ஓட்டியிருக்கிறார். 'சிக்னலுக்'குள் தான் இருந்திருக்கிறார். இன்னும் மேலே மேலே என்று எல்லை தாண்டி அபாயகரமான உயரத்திற்கு, 'ஹெலிகாப்டரை' மேகத்துக்குள் கொண்டு போன போது, சிக்னலிலிருந்து மறைந்து காணாமல் போயிருக்கிறது.''

''சார், சித்தார்த்?''

''தெரியல, சார். 'ஹெலிகாப்டரும்' இல்ல, அவரும் இல்ல.''

அதைக்கேட்டு மயங்கி விழுந்தாள், நித்யா.

நித்யா மயங்கி சரிந்ததை பார்த்து பதறிப்போனான், ராஜாமணி. ஆனால், நிதானம் இழக்காமல் இருந்தார், ஸ்ரீனிவாசன்.

''கவலைப்படாதீர்கள், ராஜாமணி. இது அதிர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம். நல்ல வேளையாக சோபாவில் அமர்ந்திருந்த போது சரிந்திருக்கிறார். எந்த விதத்திலும் அடிபடாமல் தப்பித்திருக்கிறார். இதுவே நின்றபடி விழுந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.''

அவர் சொன்னதில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டான், ராஜாமணி.

''சார், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லுங்களேன்,'' என்றான்.

ஒரு, 'ஜக்' நிறைய நீரும், கூடவே டம்ளரும் வந்தது. வாங்கி தன் உள்ளங்கையில் சிறிது நீருற்றி, நித்யாவின் முகத்தில் அடித்தான். மெல்ல தலையசைத்தாள், நித்யா.

அதன் பின்னரே, ராஜாமணியின் மூச்சு இயல்பாயிற்று. நித்யா கண்களை திறந்ததும் பெரிதும் நிம்மதியடைந்தான், ராஜாமணி.

மெல்ல சரிந்திருந்த நிலையிலிருந்து மீண்டு சோபாவிலேயே உட்கார்ந்து கொண்டாள். அதற்குள், சமையற்காரார் சூடான காபி கொண்டு வந்து கொடுத்தார்.

''குடிம்மா,'' என்றார், ஸ்ரீனிவாசன். மறுக்காமல் குடித்தாள். காபி கோப்பையை வாங்கிக் கொண்டு அகன்றார், சமையற்காரர்.

''அவருக்கு என்ன ஆச்சு? ஏதாவது தெரிஞ்சுதா?'' என்று, ஸ்ரீனிவாசனையும், ராஜாமணியையும் பார்த்து கேட்டாள்.

''முதல்ல உடம்பு இப்ப எப்படி இருக்குன்னு சொல்லும்மா,'' என்றார், ஸ்ரீனிவாசன்.

''எனக்கு ஒண்ணுமில்ல, சார். அவருக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதுன்னு தான்,'' என்று இழுத்தாள்.

இடைமறித்தார், ஸ்ரீனிவாசன்.

''அவருக்கு ஒண்ணும் ஆகியிருக்காதும்மா. சித்தார்த் நல்லபடியா திரும்பி வருவார். கவலைப்படாதே,'' என்றவர், ராஜாமணியை ஏறிட்டார்...

''கிளம்புங்க, ராஜாமணி. இவங்களை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு, உங்க அப்பா, அம்மாவைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, நாம, 'பிளையிங் கிளப்' வரை போய்விட்டு வரலாம்.''

நித்யாவை வீட்டில் விட்டு, அம்மா, அப்பாவிடம் எந்த விபரமும் சொல்லாமல், ''நித்யாவை சாப்பிட வைத்து படுக்க வைங்கம்மா. இதோ வந்திடறேன்,'' என்று கிளம்பினான்.

''நீயும் சாப்பிடலேயப்பா. ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்,'' என்றாள், ராஜம்.

''வந்து சாப்பிட்டுக்கறேன்,'' என்று கிளம்பி விட்டான்.

காரைக் கிளப்பினார், ஸ்ரீனிவாசன்...

''நல்ல காலமாக இந்த சந்தர்ப்பத்தில், நான் இங்கு இருக்கேன். பெங்களூரில் ஒரு, 'மீட்டிங்'கிற்கு வந்தேன். இல்லாவிட்டால், நீங்கள் தனியாக என்ன செய்வீர்கள் பாவம்,'' என்றார்.

''ஆமாம், சார். கடவுள் தான் உங்களை இங்க அனுப்பி வச்சிருக்கார்.''

''சித்தார்த் நல்லபடியா கிடைச்சுடணும். அதுதான் இப்ப முக்கியம், மிஸ்டர் ராஜாமணி.''

பகீரென்றது, ராஜாமணிக்கு. 'கடவுளே, சித்தார்த்திற்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாதே...' என்று வேண்டிக் கொண்டான்.

'பிளையிங் கிளப்'பில், அவர்களுக்கு வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட செய்தி தான் மீண்டும் கிடைத்தது. பெரிதும் ஏமாற்றமும், சங்கடமும் அடைந்த, ஸ்ரீனிவாசனும், ராஜாமணியும் பெங்களூரு விமான நிலையம் நோக்கி விரைந்தனர்.

விமான நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

''மிஸ்டர் ஸ்ரீனிவாசன், 'ரேடார்' தப்பு சொல்லாது. எங்களுக்கு கிடைத்த கடைசி தகவல், சித்தார்த் குரலில் சொல்லப்பட்ட, 'ஹா அஜ்ஜீ... வந்துட்டேன்...' என்று கரிய மேகத்தினுள் நுழைந்தது மட்டும் தான். அதற்கு பின், 'ஹெலிகாப்டரும்' காணவில்லை; அவரும் காணவில்லை.''

''என்ன சார் இப்படி சொல்கிறீர்கள்... காணாமல் போயிருப்பது ஒரு உயிர். அதுவும் உலகமே கொண்டாடும் கிரிக்கெட் வீரர், சார். உடனடியாக நீங்கள் வேறு விமானம் அனுப்பி தேடக் கூடாதா?''

''எங்கு போய் தேடுவது, எப்படி தேடுவது? இது என்ன ரயிலா, காரா? ரோட்டிலும், ரயில்வே 'டிராக்'கிலும் தேட? வானம். காணாமல் போயிருப்பது, 'ஹெலிகாப்டர்!' எங்கள், 'சிக்னல்' படி அது பெரிய கரிய நிற மேகத்தினுள் சென்றது. மீண்டும் வெளியில் வரவில்லை என்பது மட்டும் தான்.''

''வெளியில் வராமல் எங்கே, சார் போயிருக்க முடியும்?''

''எதிலாவது மோதி வெடித்துச் சிதறியிருந்தால், 'ரேடார்' காட்டியிருக்கும்; சிக்னலில் தெரிந்திருக்கும். அப்படி எதுவும் நிகழவில்லை.''

''அப்படியானால்...''



— தொடரும்

இ. ரங்கநாயகி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us