PUBLISHED ON : செப் 06, 2026

விழாவிற்கு இன்னும் ஒருமணி நேரம் தான் இருந்தது. பரபரப்பாய் தன் அப்பாவையும், மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார், பாலு. இருவரின் முகமும் கோபத்தை தான் காட்டியது. காரணங்கள் மட்டும் வேறு வேறாய்.
''இன்னும் ஒரு மணிநேரம் தான்பா இருக்கு. சரியான நேரத்துக்கு போக வேண்டாமா? எனக்காக தானேப்பா அங்கே, 'பங்க்ஷன்' நடக்குது. நானே, 'லேட்'டா போனால் எப்படி?'' என்ற மகன், நந்துவை, பரிதாபமாக பார்த்தார், பாலு.
சற்று தள்ளி நின்று, பின்னால் கையை கட்டிக்கொண்டு, பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு நின்றார், அப்பா.
''நீங்க போய் பேசுங்களேன்,'' என்று மெல்ல முணுமுணுத்த மனைவி, ராதாவை சமாதானபடுத்த முடியாமல் அப்பாவின் அருகில் போய் நின்றார்.
''அப்பா,'' என்று ஆரம்பிக்கும் போதே, அவர் இடைமறித்து குறுக்கிட்டார்...
''ஏன்டா, உன் மகனுக்கு அறிவே இல்லையா? இன்னைக்கு அவனுக்கு, 'பங்க்ஷன்' இருக்கு; நேரத்துக்கு போகணும்ன்னு தெரியாதா? நேரத்தோட கிளம்பியிருக்கணுமா இல்லையா? அந்த காலத்துல நீ, இப்படியா இருந்தே?'' என்று அவர் முந்திக் கொள்ள, வார்த்தை அற்று வறண்டு போய் விட்டது நாவு.
இ ன்றைக்கு, நந்து படித்த பள்ளியில் விழா. பிளஸ்2வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்திருந்த, நந்துவிற்கு, பள்ளி சார்பில் விழா ஏற்பாடு செய்துள்ளனர். அதில், நினைவு கேடயமும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட உள்ளது. அதற்கு கிளம்புவதற்கு தான் இத்தனை அக்கப்போரும்.
இங்கிருந்து, 3 கி.மீ., துாரத்தில் தான் பள்ளிக்கூடம் இருந்தது. டாக்சியோ, ஆட்டோவோ பிடித்தால் அதிகபட்சம், 200 ரூபாயை தாண்டாது. நந்துவும் அதைத்தான் எதிர்பார்த்தான். தான் படித்த பள்ளி. இன்று அங்கே அவனுக்காக ஒரு நிகழ்ச்சி. அதற்கு, டாக்சியில் சென்று இறங்கினால் தானே மதிப்பாக இருக்கும். இதைச் சொன்னால், வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பார், தாத்தா.
'நமக்கு கீழே இருக்கிறவங்களை பார்த்து வளரணும்...' என்று உபதேசம் வேறு செய்வார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. டென்ஷனில் இருந்து மெல்ல வாட்டத்துக்கு மாறத் துவங்கியது, நந்துவின் முகம். 'ஒரே பிள்ளை. சாதித்து இருக்கிறான். அவனுக்காக செலவு செய்வதற்கு கூட இத்தனை தயக்கம் காட்டுகின்றனரே...' என்று நினைத்த மாத்திரத்தில், அவனிடம் இருந்த சந்தோஷம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி இருந்தது.
''மணி ஆயிட்டே போகுது, இன்னும் எவ்வளவு நேரத்துக்கு பஸ்சுக்கு காத்துட்டு இருக்கிறது? அசந்தர்ப்பத்தில் கூடவா, டாக்சியில போகக் கூடாது,'' என்று, ராதா சூடாக கேட்கவும், தற்காலிகமாக அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. என்றாலும், டாக்சியில் வரும்போது பெரியவரின் முகமே சரியில்லை.
''பிள்ளையை வளர்க்க தெரியல. கஷ்ட நஷ்டம் தெரியாம வளர்ந்தா எப்படி உருப்படும்? இருந்து அனுபவிக்கப் போறது நீங்க தானே? நானா தலையில கட்டிட்டு போகப் போறேன்? நான் இருக்கிறவரைக்கும் நாலு நல்ல விஷயங்களை சொல்லிட்டுத்தான் இருப்பேன். அது, அனுபவத்துல வர்றது.
''நேத்து உன் மாமா போன் பண்ணி இருந்தார். எதுக்குன்னு கேட்டியா? அவருக்கு மருந்து செலவுக்கு பணம் இல்லையாம். ஏதாவது தந்து உதவ முடியுமான்னு கேட்கிறார்டா. உனக்கு தெரியுமே, அவர் எத்தனை செல்வாக்கா வாழ்ந்தவர்ன்னு. இப்போ என்ன நிலைமைக்கு ஆளாகி இருக்காருன்னு பாரு. காரணம், ஆடம்பரம்.
''இருக்குதேன்னு ரொம்ப ஆட்டம் போடக்கூடாது. அப்புறம் இல்லைன்னு யார்கிட்டயாவது கையேந்துற நிலைமை வரும். எனக்கு தெரிந்ததை நான் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்,'' என்றவர், அதன்பிறகு பேசவே இல்லை.
பாலுவிற்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. அப்பா பேசும் முறை தவறாக இருந்தாலும், அவர் பேசுவதில் நியாயம் இருந்தது.
அ ப்பா என்றால், சிம்ம சொப்பனமாய் திகழும் வீடுகளில், பரந்தாமன் அப்படியாக எல்லாம் இருக்க மாட்டார். வயது முதிர்வால் இப்போது தென்படும் கடுகடுப்பு கூட, சிறு வயதில் அவரிடம் இருக்காது.
ஆனால், சின்ன வயதில் இருந்தே அவர் கற்றுத்தந்த நீதி, வெகு ஆழமானது. தனியார் நிறுவன பணியில் இருந்தவர். தன்னுடைய சொற்ப வருமானத்துக்குள் வாழ்க்கையை அடக்கி வாழ கற்றுத் தந்திருந்தார்.
'சினிமா, டிராமாவெல்லாம் காசு விரயம். பொழுதுபோக்குன்னு வைக்கிறதே இப்படி காசை கரியாக்கத்தான். பொழுது போகாம நிற்கவா போகப் போகுது? இன்னும் கொஞ்சம் வயசாகட்டும். அப்புறம் ஏன்டா இந்த பொழுது இப்படி ஓடுதுன்னு தோணும்...' என்று, 'டோஸ்' விடுவார்.
ந ந்து சின்ன குழந்தையாய் இருந்த சமயம். 'டிவி'யில் வருகிற, 'தீம் பார்க்' விளம்பரத்தை பார்த்துவிட்டு, அங்கே சென்றால் தான் ஆச்சு என்று அழிச்சாட்டியம் செய்ய, அப்பாவின் முணுமுணுப்பை மீறி சென்று விட்டு வந்தனர்.
அந்த நாளிலேயே, ஐயாயிரம் ரூபாய் காலியானது என்றால், போய் வந்த அடுத்த நாளிலேயே, நந்துவுக்கு ஜூரம் வந்து அதற்கு, நாலாயிரம் ரூபாய் செலவையும் இழுத்து வைத்தது.
'மூத்தோர் சொல்லும், முதிர் நெல்லியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும். என் பேச்சை யார் காது கொடுத்து கேட்கறீங்க. பிள்ளைகளுக்கு ஆசை இருக்கும். அதையெல்லாம் நிறைவேற்றி வைக்க புறப்பட்டால், என்ன ஆகும். அவனுக்கு என்ன தெரியும்? இதோ இப்போ காய்ச்சல் வந்து படுத்திருக்கிறான்...' என்று ஆரம்பித்தவர் ஒரு பிடி பிடித்துவிட்டார்.
அதன் பிறகு, அப்பாவை மீறி செய்வதே இல்லை. அதற்காக, அவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
பாலு எப்படி பெரியவருக்கு ஒரே பிள்ளையோ, நந்துவும் இவருக்கு ஒரே பிள்ளை தான். அவன், 'டீன் ஏஜ்'ஜில் அடியெடுத்து வைத்த ஆண்டு. பிறந்தநாளுக்கு என்று கொஞ்சம் அதிகப்படியான செலவாகி விட்டது. அது கூட, ராதாவின் ஆசை தான். ஹோட்டல், கோவில், சினிமா என்று செலவு செய்ய, அது தெரிந்த அப்பா ஒரு பாட்டம் பாடி ஓய்ந்தார்.
'பனிரெண்டு மாதிரித்தான் பதிமூணும். அதிலென்ன, 'டீன் ஏஜ்'ன்னு கொண்டாடறது? என்ன பண்பாடு இதெல்லாம். பிறந்தநாள்னா அந்த நாள்ல கோவிலுக்கு போவோம், புதுத்துணி இருந்தா உடுத்திக்குவோம், வீட்டில ஏதாவது இனிப்பு பண்ணி சாப்பிட்டுக்குவோம். அவ்வளவுதான்?
'பிறந்தநாளும் சாதரணமான ஒரு நாள்தானே? அதுக்கு எதுக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம். இருக்கிறப்போ மானாங்கன்னியா செலவு செய்துட்டு, இல்லைன்னா யார் வீட்டு வாசலிலாவது வந்து நிற்கணும். நான் தான் கிடந்து அடிச்சுக்கறேன். நானா இருந்து அனுபவிக்கப் போறேன்? எப்பவும் நமக்கு கீழே இருக்கிறவங்களை பார்க்கணும். எல்லாத்துக்கும் எவ்வளவு தவிக்கிறாங்கன்னு அப்பத்தான் தெரியும்...'
அவர் வார்த்தைகளில் இருப்பது அத்தனையும் நிஜம் தான். ஆனால், அந்த நிஜத்தை எதிர்காலம் என்ற கத்தி கொண்டே அறுப்பார். பயம் என்ற வஸ்துவுடன் அடிவயிற்றை கீறிப் பார்ப்பார்.
ச ரியான நேரத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. நண்பர்களோடு, நந்து மலர்ச்சியோடு அளவளாவியதில் பெற்றவர்களுக்கும் மகிழ்ச்சி.
''உங்கப்பா பண்ணின அலப்பறையில, நந்து ரொம்பவே, 'டென்ஷன்' ஆயிட்டான். என்னாகப் போகுதோன்னு நானும் கவலைப்பட்டுட்டே இருந்தேன். நல்லவேளை, நந்து இயல்பாகிட்டான்,'' என்ற மனைவியை முறைத்தார், பாலு.
''சத்தம் போடாத, ராதா. அப்பா காதுல விழப் போகுது,'' என்றவர் வார்த்தையில், பிரியமற்று தள்ளி அமர்ந்து கொண்டாள், ராதா.
அப்பா பக்கத்தில் அமர்ந்து பிள்ளைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தார். நிகழ்ச்சி ஆரம்பமாக, முதலிலேயே, நந்துவுக்கு தான் விருது வழங்கினர். பெரியவர் கண்கள் பனித்துப் போனது. அவரையும் மீறிய உற்சாகத்தோடு கை தட்டினார்.
''மாணவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா?'' என்று கேட்டு, வகுப்பாசிரியர் நந்துவிடம், 'மைக்'கை நீட்டினார்.
அவன் கண்கள் தாத்தாவையே கனிவாக பார்த்தது.
''ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எங்க தாத்தா சந்தோஷத்தை கூடுதல் சுமையா பார்ப்பார். அதனால், நான் இழந்தது அதிகம். இனிவரும் மாணவர்கள் அவங்க மாணவப் பருவத்தின் மீதும், படிப்பின் மீதும் ஒரு சேர கவனம் செலுத்தணும். ஏன்னா அனுபவிச்சு கடக்கிறது தான் வாழ்க்கை. எதுவுமே திரும்ப வராது, இந்த நாள் உட்பட,'' என்று சொன்னவனுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.
பரந்தாமன் முகத்தில் ஈயாடவில்லை. விழா முடிந்ததும், 'விடுவிடு' என, எழுந்து வெளியில் வந்தார்.
பஸ்சுக்கு காத்திராமல், டாக்சி பிடித்த போதும், சமைக்க நேரமானதால் கடையில் உணவு வாங்கிய போதும் ஒரு வார்த்தை கூடுதலாய் உதிர்க்கவில்லை.
அ வரின் வார்த்தைகளை தாங்கியவர்களுக்கு மவுனத்தை தாங்க இயலவில்லை. வந்து மொட்டை மாடியில் தனிமையில் அமர்ந்து கொண்டார். தேடிக் கொண்டு வந்து நின்றான், பேரன்.
''தாத்தா.''
''பேசாதே. உங்களை எதையும் அனுபவிக்க கூடாதுன்னா நான் சொல்றேன்? எப்பவும் நமக்கு கீழே உள்ளவங்களை பார்க்கணும். அப்போத்தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும். கடவுள் நமக்கு எவ்வளவு குடுத்திருக்கிறார்ங்கிற உண்மை தெரியும். சிக்கனமா இருங்கன்னு சொல்றது கஷ்டப்படக் கூடாதுங்கிற நல்லெண்ணத்தாலே. இனி நான் எதுக்கு தலையிடப் போறேன்? உனக்காச்சு, உங்க அப்பனுக்கு ஆச்சு,'' என்றவர் திரும்பி அமர்ந்து கொண்டார்.
தாத்தாவின் கைகளை பற்றிக் கொண்டான்.
''ஆடம்பரத்திற்கும், அவசியத்துக்கும் நுாலிழை வித்தியாசம் தான் இருக்கு, தாத்தா. உங்க பார்வைக்கு ஆடம்பரமா தெரியற பல விஷயம் இப்போ அத்தியாவசியமாகி விட்டது. அது, உங்க பார்வைக்கு வரவேயில்லை.
''நீங்க அனுபவத்தால சொல்றீங்க. நாங்க, அனுபவிக்கிற கஷ்டத்தை வச்சு சொல்றோம். இரண்டுமே முக்கியம் தானே! பிற்காலத்துக்கு சேர்த்து வைக்கிறது நல்லது தான் தாத்தா. ஆனால், நிகழ்காலத்துக்கு செலவு பண்றது தானே புத்திசாலித்தனம். எதிர்காலம் இல்லாதவங்களுக்கு கூட, நிகழ்காலம் இருக்கே!
''எப்பவும் நமக்கு கீழே உள்ளவங்களை பார்க்கணும்ன்னு சொல்வீங்க. எனக்கு ஏனோ நமக்கு மேலே உள்ளவங்களையும் பார்க்கணும்ன்னு தோணுது. அப்போ தானே கடவுள் எத்தனை விசால சிந்தனை உள்ளவர்ன்னு புரியும். எச்சரிக்கைங்கிற உணர்வால, சந்தோஷத்தை கூட சுமையா நினைக்கிறீங்க. சின்ன சின்ன சந்தோஷத்தில் கிடைக்கிற நிறைவு, எவ்வளவு அலாதியானதுன்னு உங்களுக்கு தெரியாதா?'' என்று கூறி புன்னகைத்த பேரன் முகத்தை, பெருமை பொங்க பார்த்தார்.
''இப்ப என்னடா சொல்ற?'' என்றார், பொய்யாய் முகத்தை முறுக்கி.
''சாப்பிட கீழே வாங்கன்னு சொல்றேன்,'' என்றவன், அவர் கைப்பற்றி கீழே இறங்கினான். பெரியவரும் பிடிமானத்தில் இருந்து மெல்ல மெல்ல இறங்கி கொண்டிருந்தார்.
எஸ்.பர்வின் பானு
