PUBLISHED ON : ஆக 02, 2026

'உணவும் உணர்வும்!' என்ற புதிய திட்டத்தை அறிவிக்கப் போவதாக, மீடியாகாரர்களை அழைத்திருந்தார், முதலமைச்சர் வெற்றிகண்டான்.
தொழிலதிபர் ஒருவரின் வீட்டு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள போவதாகவும், தான் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிகளை எல்லா, 'டிவி' சானல்களும், 'லைவ்'வாக ஒளிபரப்ப வேண்டுமென்றும் முதலமைச்சரே கேட்டுக் கொண்டார்.
ஏதோ மாநாடு, கலைவிழா என்றால், 'லைவ்'வாக ஒளிபரப்பலாம்; ஆனால், இப்படி ஒரு திருமண விழாவில் முதல்வர் கலந்து கொள்வதை, 'லைவ்'வாக காட்டச் சொல்கிறாரே, என்று நினைத்தபடி கூடியிருந்தனர், நிருபர்கள்.
புதிதாக பதவியேற்ற மோகத்தில் இதுபோன்ற மலிவான விளம்பரத்திற்கு முதல்வர் ஆசைப்படுகிறாரோ என்றுகூட எண்ணி, தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அ ந்த பிரமாண்ட திருமண மாளிகையில் தடபுடலான வரவேற்புடன், முகத்தில் பிரகாசமான புன்னகையுடன் நுழைந்த முதல்வரை கேமராக்கள் சூழ்ந்து கொள்ள, 'இப்போ வேண்டாம்!' என்று அவர்களை படமெடுக்க அனுமதிக்காமல் அகன்று சென்றார், முதல்வர்.
'மடமட'வென்று திருமண மேடை ஏறி, தம்பதிகளை வாழ்த்தினார். தம்பதிகளுடன் முதல்வர் நிற்க, 'சி.எம்., இதை, 'லைவ்'வா காட்டச் சொல்றார்...' என்று அவரது பி.ஏ., சானல்காரர்களிடம் கூற, அவர்களும் அதை படம் பிடித்தனர்.
'இந்த தொழிலதிபர் அப்படி ஒன்றும் எல்லாரும் அறிந்த பிரபலமானவரல்ல... முதலமைச்சருக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். அதற்காக இந்த தம்பதியை, முதல்வர் வாழ்த்துவதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, 'லைவ்'வாக காட்ட வேண்டியுள்ளதே...' என்ற அலுப்புடன் தான் கேமராக்கள் படம் பிடித்தன.
அதைவிட அவர்களை நோகடிக்கும் விதமாக, முதல்வரின் அடுத்த கோரிக்கை கேவலமாக இருந்தது.
மணமேடையிலிருந்து இறங்கிய முதல்வர், அரக்கப்பரக்க உணவு கூடத்தினுள் நுழைந்தார். அவர் ஓடியது, 'சாப்பிட இப்படி பறக்கிறாரே...' என்று அங்கிருந்தோரை ஆச்சரியப்பட வைத்தது.
டைனிங் ஹாலின் முகப்பில் நல்ல அஜானுபாகுவாக, 'பளபள'க்கும் ஜிப்பா, வேஷ்டியுடன் கை நிறைய மோதிரமும், கழுத்து நிறைய மைனர் சங்கிலியுமாக, முதல்வரை வரவேற்றார், 'கேட்டரிங் கிங்' போஜனராஜன்.
முதல்வரின் பின்னே திருமண வீட்டாரும் சென்றனர். அவர்கள் சாப்பிட்டு வரும் வரை காத்திருக்கலாமென்று, 'மீடியா'க்கள் வெளியே நின்றனர்.
'சி.எம்., உங்களையெல்லாம் கூப்பிடறார்...' என்று பி.ஏ., அழைக்க, 'இதென்னடா இவர் சாப்பிடுவதைக் கூட, 'வைவ்'வாக காட்டச் சொல்வாரோ!' என்ற அலட்சிய மனோபாவத்துடன் கேமரா சகிதம் உள்ளே சென்றது, நிருபர் கூட்டம்.
அவர்கள் நினைத்தபடி முதல்வர், அந்த, 'பபே' எனப்படும், கையேந்தி பந்தியில் தட்டுடன் நிற்கவில்லை. மாறாக அருகே நின்றிருந்த, போஜனராஜனிடம், ''அவங்க வந்துட்டாங்க. இப்போ நீங்க இங்கே வைச்சிருக்கிற ஐட்டங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக சொல்லுங்க; அதை அவங்க, 'லைவ்'வாக ஒளிபரப்புவாங்க,'' என்றார்.
'அட, இது என்ன கூத்து!' என்ற நினைப்புடன் கேமராக்கள் குவிய, படுபெருமிதமாக, ரயில் பெட்டிகளை போல வரிசையாக காட்சி தந்த உணவு வகைகளை ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தார், போஜனராஜன்.
கேமராக்கள் பளிச்சிட்டன.
''முதல்லே ஸ்வீட் வகையிலிருந்து ஆரம்பிக்கலாம். இது, பால் கொழுக்கட்டை, இது, பதிர்பேணி, இது, கோதுமை அல்வா, இது, பெங்காலி பாதாம் ரசமலாய், ரோஸ் குல்கந்து கேசரி, வெற்றிலை ரசமலாய், முந்திரி மைசூர் பாகு, துாத் பேடா, நெய் பூந்தி,'' என்று திகட்ட திகட்ட இனிப்பு வகைகளாக வைக்கப்பட்டிருந்ததை காண்பித்தபோது, சர்க்கரை நோய் உள்ள கேமராக்காரர்களுக்கு மயக்கமே வந்து விட்டது.
போஜனராஜன் அடுத்த உணவு வகைகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்...
நடுநடுவே வைக்கப்பட்டிருந்த முன்பின் பார்த்திராத வஸ்துக்களின் பெயர்களை, போஜனராஜன் சொல்ல, நிருபர்களுக்கு புரியாமல் திரும்ப சொல்லும்படி கேட்டனர்... அவரும், ''புல் புல் பக்கிடி, ஹர ஹர கபாப், கான்பூர் ஜிங்லி,'' என்று அவைகளின் பெயர்களை சொல்லி, அவைகளை முதன்முதலாக புதிதாக தங்கள், 'கேட்டரிங்'கில் அறிமுகப்படுத்துவதாகவும் பெருமைப்பட்டார்.
கடைசியில், 'பசும்பால் தயிர் சாதம், பாதாம் மில்க் தயிர் சாதம், பனங்கல்கண்டு தயிர் சாதம், பழைய சாத தயிர் சாதம்...' என்று தயிர் சாதத்திலும் பலவகைகளை செய்திருந்த சாதனையுடன், போஜனராஜன், 'வத்த குழம்பு, வடுமாங்காய், மோர் மிளகாய்...' என்று அதற்கு மேல், 'நோ மோர்' ஐட்டங்கள் என்பதாக முடித்தார்.
அதன்பின், முதல்வர் முன்னே வந்து நின்றார்...
''மிஸ்டர் போஜனராஜன்! மிக்க மகிழ்ச்சி. இன்றைய டின்னரில் எத்தனை ஐட்டங்களை வைத்துள்ளீர்கள்?'' என்றார்.
''சார்! மொத்தம், 78 ஐட்டங்கள். எங்கள், 'கேட்டரிங்'லே மட்டும்தான் இத்தனை ஐட்டங்கள்,'' என்று பெருமைப்பட்டு கொண்டார்.
இவையாவும், 'டிவி' சானல்களில், 'லைவ்'வாக ஓடிக் கொண்டிருந்தது.
''சி.எம்., இங்கே சாப்பிடலே... அவசரமா அடுத்த ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு போறார். உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லச் சொன்னார். எல்லாரையும் இந்த விருந்தை சாப்பிட்டு, 'என்ஜாய்' பண்ணிட்டு போகச் சொன்னார்... நாளைக்கு ஒரு, 'பிரஸ் மீட்' வைச்சிருக்கார். எல்லாரும் வந்திடுங்க,'' என்று சொல்லி, பி.ஏ.,வும் அங்கிருந்து அகன்றார்.
'இது அபத்தம்...' என்று நிருபர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறை. எல்லா சானல்களிலும், 'லைவ்'வாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்தக் கூத்தை பார்த்த, வெற்றிகண்டான் கட்சித் தொண்டர்களே நொந்து, முகம் சுளித்துக் கொண்டிருந்தனர்.
அன்று இரவு முழுவதும், 'யூடியூப், ரீல்ஸ், மீம்ஸ்' என்று எல்லா, 'சோஷியல் மீடியா'க்களுக்கும் இந்த நிகழ்ச்சி நல்ல தீனி போட்டு, சிரிப்பாய் சிரிக்க வைத்துக் கொண்டிருக்க, எதிர்க்கட்சி சானல்களுக்கும், 'முதல்வரா? 'கேட்டரிங்' கம்பெனி தரகரா?' என்ற தலைப்பில் அன்றைய விவாத, 'மெனு'வானது.
அ டுத்த நாள் சுவாரஸ்யமே இல்லாமல் கூடியிருந்த நிருபர்களின் முன், படு உற்சாகமாக வந்து அமர்ந்தார், முதலமைச்சர் வெற்றிகண்டான்.
''வணக்கம்,'' என்று புன்சிரிப்பு தவழ, கேமரா முன் தோன்றியவர், ''நேற்று எல்லாரும், 'ரீல்ஸ், மீம்ஸ்'ன்னு போட்டு, என்னையும் ரசிக்க வைத்தீங்க. நானும் நல்லா, 'என்ஜாய்' பண்ணினேன். எல்லாருக்கும் ரொம்ப தாங்க்ஸ்!
''ஒரு சமூக நலதிட்டத்தை அறிமுகப்படுத்தவே நேற்று நீங்க பார்த்த, 'லைவ்'வை முன்னோட்டமாக எடுக்கச் சொல்லி, ஒளிபரப்ப சொன்னேன். 'டிவி' சானல்களில் அந்த, 78 உணவு வகைகளை எத்தனையோ ஏழைகள் ஏக்கமாக பார்த்திருப்பர்.
''பெரிய செல்வந்தர்களுக்கு இப்படி ஆர்ப்பாட்டமான விருந்து வைப்பது, அவர்களின் அந்தஸ்தை காட்டுவதாக மாறியுள்ளது. திருமண வரவேற்பு அழைப்பிதழில், இன்னாரது, 'கேட்டரிங்' என்று போடும் அளவிற்கு வந்து விட்டது.
''அறுசுவை விருந்து என்பது, இப்போது ஒவ்வொரு ஐட்டத்திலும், ஆறெழு வகையாக பெருகி, நேற்று நீங்கள் கலந்துகொண்ட விருந்தில், 78 ஐட்டங்களாக சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. அளவிற்கு மீறிய அமிர்தமாக இந்த விருந்துகள் நஞ்சான கலாசாரமாகி உள்ளன.
''இன்றைய பல திருமணங்களில் இந்த விருந்து கலாசாரத்தை பார்த்து, நான் சங்கடப்பட்டுள்ளேன். ஒருவேளை சோற்றுக்கே வசதியில்லாத பல ஏழைகளின் வயிறுகள் வாடும் போது, ஒரு ஜாண் வயிற்றில் திணிக்க, மகா விருந்தென்ற பெயரில் ஏகப்பட்ட ஐட்டங்களை வைத்திருப்பதை பார்க்கும்போது, என் மனதில் ஒரு குற்ற உணர்வோடு, உறுத்தலும் தான் ஏற்படுகிறது.
''இப்படி திருமணங்களுக்கு வரும் பல விருந்தினர்களுக்கு 'ஷுகர், அல்சர்' போன்ற பிரச்னைகள் இருப்பதால், பரிமாறும் ஐட்டங்களில் பாதி வைப்பதும், கொட்டுவதுமாக வீணாகும் உணவுகளே அதிகமாவதையும் பார்த்துள்ளேன். இப்படி சாப்பிடும் பண்டங்களை வீணாக்குவதை ஒரு சமூக குற்றமாகத்தான் என்னால் கருத முடிகிறது. இந்த கலாசாரத்தை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும்.
''முதல்வராக எனக்கொரு அந்தஸ்தை நீங்கள் தந்துள்ளீர்கள். இந்தப் பதவியில் இருக்கும் என்னை தங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைக்க பல செல்வந்தர்கள் வரத் துவங்கியுள்ளனர். அப்படி நேற்று நடந்த கல்யாண வீட்டு பிரமுகர் என்னை கூப்பிட வந்தபோது, அவர் இந்த உயர்தர, 'கேட்டரிங்' பற்றி பெருமையாக கூறினார். அதற்கான செலவு எவ்வளவு என்று கேட்டதற்கு, அவர் சொன்ன, பல லட்ச ரூபாய் தொகை என்னை பிரமிக்க வைத்தது.
''அவர் சென்றதும் யோசித்ததில் ஒரு திட்டம் உருவானது. செல்வ செழிப்பு திருமணங்களில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்றால், அவர்கள் இதுபோன்ற ஆர்பாட்ட விருந்துகளை தவிர்த்து, எளிமையான விருந்தாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
''அப்படியொரு அநியாயமான விருந்தை தவிர்ப்பதால் மிச்சப்படுத்தப் போகும், 'கேட்டரிங்' செலவான லட்சங்களை அவர்கள், நான் அறிவிக்கும் புது நலத்திட்டத்துக்கு நன்கொடையாக தரவேண்டும்.
''இந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் ஒப்புக்கொள்பவர்களின் வீட்டு திருமணங்களில் மட்டுமே நான் கலந்து கொள்வேன். அப்படி நான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் நிகழ்ச்சியை அன்றைய தினம், செய்தி, 'டிவி' சானல்களின் செய்தியாக ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கவுள்ளேன். இப்படி ஒரு ஏற்பாட்டால் ஆர்வமாக இந்தத் திட்டத்தில் பலர் பங்குபெற வாய்ப்புண்டு.
''இதன்மூலம் வழங்கப்படும் நன்கொடை, ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் என்று, ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாத பலருக்கு பயன்தரும், 'உணவும் உணர்வும்' என்ற திட்டத்தில் சேர்க்கப்படும்.
''இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவே நேற்றைய திருமண விருந்தை அந்த தொழிலதிபரின் அனுமதியோடு பயன்படுத்திக் கொண்டேன். அவருக்கு நன்றி!
''இனிவரும் காலங்களில், இத்திட்டத்தில் பங்குபெற்று, பல வறுமை வயிறுகளின் வாழ்த்துகளை பெறப்போகும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.''
முதல்வரின் இந்த நீண்ட நெடிய அறிக்கையால், நேற்றைய சம்பவத்தால் கிண்டலும், கேலியுமாக விமர்சிக்கப்பட்டவர், இன்று எல்லார் மனதிலும் மதிக்கத்தக்கவராக உயர்ந்து நின்றார்.
அகிலா கார்த்திகேயன்
