
விடுதி உணவறையில், இரவு உணவை முடித்து, அறைக்குள் நுழைந்தாள், அபிநயா.
எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த, மீனாவின் அருகில் வந்தமர்ந்தாள்.
''மீனு, என்னாச்சு? சாப்பிட போகலயா? வார்டன், நீ சாப்பிட வரலைன்னு சொன்னாங்க,'' என்றாள், அபிநயா.
நிமிர்ந்து பார்த்து, ''பசிக்கலக்கா,'' என்றாள், அழுத்தமான முகத்துடன், மீனா.
''ப்ச், ஏன் பசிக்கல. என்னாச்சு ? முகமே சரியில்லையே... காலேஜ்ல ஏதாவது பிரச்னையா?'' என்றாள்.
''அதெல்லாம் இல்லக்கா. சாப்பிடத் தோணலை.''
''ஏய், என்ன பிரச்னை?'' என, மீனாவின் தோளை அவள் தொட்டதும், கண்களில் சட்டென நீர்ப்படலம் சூழ்ந்தது.
சன்னமான குரலில் ஆரம்பித்தாள்...
''அம்மா, கால் பண்ணியிருந்தாங்க, அக்கா. என் அப்பா வழி அத்தை பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம். ரொம்ப நெருங்கின சொந்தம். கல்யாணத்தை பத்தி முன்னாடியே எங்களுக்கு தகவல் தெரியும். அம்மாவும் பத்திரிகை வைக்க வருவாங்கன்னு எதிர்பார்த்துட்டே இருந்தாங்க.
''ஆனா, இன்னைக்கு சாயங்காலம் போன் பண்ணி, 'கல்யாண வேலையில பத்திரிகை வைக்க மறந்துட்டோம். கோவிச்சுக்காம நாளைக்கு கல்யாணத்துக்கு வந்துரு...' என்று சொன்னாங்களாம்.
''கல்யாணம் திருப்பதியில. ஊர்ல இருந்து அம்மா போறதுக்கே, 14 மணி நேரமாகும். கல்யாணத்துக்கு நாங்க வரக்கூடாதுன்னு இப்படி பண்றாங்க. அம்மா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க, அக்கா. அதான், அப்படியே உட்கார்ந்துட்டேன்,'' என்றாள், மீனா.
''ஏன் மீனு, அத்தை வீட்டோட ஏதாவது பிரச்னையா?''
''பிரச்னை எல்லாம் எதுவும் இல்லக்கா. அவங்க நல்ல வசதியானவங்க. நாங்க எதுவுமே இல்லாதவங்க. அதனால தான், எங்க ஊர்ல இருக்குற இன்னொரு வசதியான சொந்தக்காரங்களுக்கு பத்திரிகை வைக்க தெரிஞ்சவங்களுக்கு, எங்களுக்கு வைக்க ஞாபகம் இல்லாமப் போயிடுச்சு.
''ரொம்ப அவமானப்பட்டது மாதிரி அம்மா கலங்கிட்டாங்க. ச்சே இந்த காசு, பணம் தானாக்கா இங்க உறவுகளை நிர்ணயிக்குது?'' என்றவளின் வார்த்தை அணை உடைந்து, விழிகளில் நீர் கசிந்தது.
''ப்ச், மீனு சொந்தக்காரங்க எல்லாம் அப்படித்தான். மத்தவங்களோட செய்கைக்காக வருத்தப்பட்டு நாம, நம்மள தண்டிச்சுக்குறது எந்த விதத்துலேயும் நியாயம் இல்லாதது. நீ போய் முதல்ல சாப்பிட்டு வா,'' என, வலுக்கட்டாயமாக, மீனாவை சாப்பிட அனுப்பி வைத்தாள், அபிநயா.
மீனாவும், அபிநயாவும் சென்னையில் பெண்கள் விடுதி ஒன்றில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள்.
பெரியதொரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள், அபிநயா. இது, அதிக கட்டணம் வசூலிக்கும் பிரபல பெண்கள் விடுதியாக இருந்தாலும், மீனாவின் பள்ளி ஆசிரியர் ஒருவரின் நண்பரோட விடுதி என்பதால், அவருடைய சிபாரிசில் குறைந்த கட்டணத்தில் இங்கு தங்கி, கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள், மீனா.
கடந்து செல்லும், மீனாவை பார்த்து பெருமூச்சு விட்ட, அபிநயாவின் விழிகள் ஒருநொடி எங்கோ வெறித்து, இதே போல் தன்னுள்ளும் அழுந்திக் கிடக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. தன்னுடைய மொபைல் போனை எடுத்து, அந்தக் குறிப்பிட்ட நினைவிற்கு சாட்சியாய் இருக்கும் புகைப்படத்தை பார்த்தாள்.
எட்டு ஆண்டுகளுக்கு முன், அபிநயாவின் சித்தி மகளின் திருமணம். அபிநயாவின் அம்மாவுடன் பிறந்த அக்கா, தங்கைகள் மொத்தம், ஆறு பேர். ஆறு பேருக்கும் ஒரே மாதிரி புடவைகளுக்கு, 'ஆர்டர்' தந்திருந்தார், அபிநயாவின் பெரியம்மா. புடவையை தந்த போது, பெரிதாய் மகிழ்ந்து போனார், அபிநயாவின் அம்மா, கமலா.
திருமணத்தன்று, ஆறு பேரும் ஒரே மாதிரி புடவையில் வந்தபோது, அபிநயாவின் அம்மா கமலாவின் புடவை மட்டும் தனித்து, அழகற்று தெரிந்தது.
மற்றவரின் புடவையை தன்னுடையதோடு ஒப்பிட்டு, கமலா குழப்பமாய் பார்க்க, 'அடடா, இந்தப் புடவை உனக்கு வந்துருச்சா, கமலா? 'ஆர்டர்' பண்ணி வந்ததுல ஒண்ணுல மட்டும் முந்தானை தப்பா நெய்துட்டாங்களாம். கடைசி நேரத்துல மாத்தித்தர நேரமில்லன்னு சொல்லிட்டாங்க. சரி விடு இதுவும் நல்லா தான் இருக்கு...' என, இயல்பாக சொல்லி நகர்ந்தார், புடவையை தேர்ந்தெடுத்த, சென்னை பெரியம்மா.
இந்நிகழ்வு வருத்தமானதாக இருந்தாலும், பெரியப்பாவுடன், பெரியம்மா பேசிய வார்த்தைகள் அபிநயாவையும், அவள் அம்மாவையும் கூனி, குறுக வைத்தது.
'நீங்க தான் இந்த ஆறு புடவையை ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே நெய்து வாங்கிட்டீங்கள்ல. அப்புறம் என்ன, தப்பா நெய்த ஒண்ணையும் மாத்தியிருக்கலாம்ல. மத்ததைப் பார்க்குறப்ப ரொம்ப வித்தியாசமா தெரியுதே, அந்தப் புடவை...' என, மேடைக்கு பின், நின்றிருந்த பெரியப்பா கேட்டார்.
'அதெல்லாம் மாத்த நேரம் இருந்துச்சு. கடைக்காரனும் மாத்தித் தரேன்னு தான் சொன்னான். ஆனா, இதையே வச்சுக்கிட்டா, 900 ரூபாய் தள்ளுபடி பண்றேன்னு சொன்னான். கிட்டத்தட்ட நாம், 'ப்ரீயா' வாங்குனோங்குற மாதிரி தான். சரி, கமலாகிட்ட தள்ளிடலாம்ன்னு நாங்க தான் யோசிச்சோம். இப்ப என்ன, அவளுக்கு புதுப் புடவை கிடைச்சதே பெருசு தான். முந்தானை மாறியிருந்தா என்ன, கலர் ஒண்ணா தானே இருக்கு...' என்றார், பெரியம்மா.
இந்த பதில் எதிர்பாராமல், அபிநயா மற்றும் அவள் அம்மாவின் காதுகளில் விழுந்து, கூர் ஊசியால் குத்தி சென்றது நினைவுக்கு வந்தது.
அன்றைய திருமணத்தில் அக்கா, தங்கை என, அவர்கள் ஆறு பேரும் ஒரே புடவையில் ஒன்றாய் நின்று எடுத்துக் கொண்ட, புகைப்படத்தை தன் மொபைல் போனில் கூர்மையாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள், அபிநயா.
மீனா அறைக்குள் வந்ததும், ''மீனா, இப்ப, 'நார்மல்' ஆகிட்டியா? ' என்றாள்.
''ம்...'' என்ற மீனாவிடம், ''சரி இந்த போட்டோவை பாரேன்,'' என, மொபைலை அவள் கையில் கொடுத்தாள், அபிநயா.
சில நொடிகள் ஆழ்ந்து பார்த்து, ''அக்கா, இதுல கடைசியா நிக்குறவங்க உங்க அம்மா தான. வேற ஒரு போட்டாவுல நீங்க காமிச்ச ஞாபகம் இருக்கு,'' என்றாள், மீனா.
''இது, எட்டு ஆண்டுகளுக்கு முன், என் சித்தி பொண்ணோட கல்யாணத்துல எடுத்த போட்டோ. இதுல இருக்குற மத்த, ஐந்து பேரும் என் அம்மாவோட கூடப் பிறந்தவங்க. எல்லாருமே ரொம்ப வசதியானவங்க. அந்த ஒரே காரணம் தான் எல்லாருக்கும் ஒரே மாதிரி புடவை எடுக்கணும்ன்னு வந்தப்ப, தப்பா நெய்த புடவையை மாத்த வழியிருந்தும், மாத்தாம என் அம்மாவுக்கு கொடுத்தாங்க.
''நீ சொன்ன மாதிரி தான், காசு, பணம் இருந்தா தான் இந்த சொந்தமெல்லாம் மதிக்கும். அந்தக் கல்யாணத்துக்கு போயிட்டு வந்த அந்த நாளை என்னால மறக்க முடியாது. அப்ப நானும், உன்ன மாதிரி இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தேன்.
''பல பேர், என் அம்மா கட்டியிருந்த புடவையை மட்டும் வினோதமா பார்த்து பேசிய, அந்த வேதனைய என்னால இப்ப வரைக்கும் மறக்க முடியாது. அப்ப நான், பிளஸ்1 படிச்சுட்டு இருந்தேன். எந்த எண்ணமும் இல்லாம என் போக்குல ஏனோ தானோன்னு இருந்தேன். ஆனா, அன்னைக்கு இரவு தான் எனக்குள்ளேயே என்னைத் தேட வச்சது.
''ஏன், என்னோட அம்மா மட்டும் இப்படி அவமானப்படணும்ன்னு யோசிச்சேன். அம்மாவோட காலம் அவ்வளவு தான். கணவன் சரியில்லை, சரியான படிப்பு இல்லை, கை கொடுத்து துாக்க எந்தப் பிடிமானமும் இல்ல. இனி, அவங்களால எதையும் மாத்த முடியாது.
''ஆனா, படிப்பு என்ற உரத்தை கஷ்டப்பட்டு எனக்காக தந்துருக்காங்க. இனியும் மண்ணுக்குள்ளேயே மக்கிப் போறதோ, இல்ல எங்களை சுத்தி ஒரு தோட்டத்தை உருவாக்கிக்கறதோ என் கையில் மட்டும் தான் இருக்குன்னு அன்னைக்கு புரிஞ்சது.
''பிளஸ்2ல நல்ல மார்க் எடுத்து, மெரிட்ல கவர்மென்ட் காலேஜ்ல சீட் வாங்கணுங்கறதை மனசுல நிறுத்திக்கிட்டேன். எப்பவாச்சும் மனசு துவண்டு போறப்ப, இந்த போட்டோவை எடுத்து பார்த்துக்குவேன்.
''படிப்புல நிறைய கவனம் செலுத்தினேன். பிளஸ்2ல நல்ல மார்க் வந்துச்சு. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துல சீட் கிடைச்சது. கடன் வாங்கி தான் சென்னைக்கே அனுப்புனாங்க, அம்மா. ஆரம்பத்துல படிப்புல நிறைய புரியல. ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. ஆனா, இந்தப் பாதைய விட்டா கடைசி வரை என் குடும்பம் கரை சேராதுங்குற எண்ணம் வந்து எல்லாத்தையும் கத்துக்க வச்சது.
''இப்ப நல்ல வேலை, நல்ல சம்பளம். இது, எல்லாத்துக்கும் ஆதி காரணம் அந்தப் புடவையும், அது தந்த அவமானமும் தான். நீ, சொன்ன மாதிரி காசு, பணம் இல்லேன்னா உறவுகள் நிச்சயமா மதிக்க மாட்டாங்க. ஆனால், அதே நேரம் நம்ம மனசுக்குள்ள இருக்குற வீரியத்தை சொந்தக்காரங்கள தவிர, வேற யாராலயும் ஆழமா துாண்டி விட முடியாது.
''உன்னோட சொந்தக்காரங்களோட புறக்கணிப்பை நினைச்சு இப்படி உடைஞ்சு போயிடாம, அதையே ஒரு பிடிமானமா வச்சு, உன்னை நீ உருவாக்கிக்கிறதுல தான் புத்திசாலித்தனம் இருக்கு. இப்ப எதையும் யோசிக்காம நிம்மதியா துாங்கு.''
''இந்த ஞாயிறன்று நான் வெளியே போகும்போது, நீயும் என்னோடு வா,'' என, மீனாவிடம் சொன்னாள், அபிநயா.
ஞாயிறு காலை அந்த பட்டுப்புடவை கடையில், மீனாவுடன் காத்திருந்தாள், அபிநயா.
''வந்து ரொம்ப நேரமாச்சா, அபி,'' என்றபடியே படியேறி வந்த, அபிநயாவின் சென்னை பெரியம்மா, ''என்ன அபி திடீர்ன்னு புடவை, 'செலக்ட்' பண்ணித் தாங்கன்னு வரச் சொல்லியிருக்க. கல்யாணத்துக்கு சேர்க்கப் போறீயா என்ன?'' எனக் கேட்டார்.
''ஐயோ, இல்ல பெரியம்மா. நான் ஒரு அஞ்சாறு புடவை, 'செலக்ட்' பண்ணி வச்சுருக்கேன். இதெல்லாம் நல்லா இருக்கான்னு பாருங்களேன்,'' என, எடுத்து வைத்திருந்த பட்டுப் புடவைகளை காட்டினாள்.
''எல்லாமே நல்லா இருக்கு. விலை ரொம்ப அதிகமாக இருக்கே!''
''ஆமா, பெரியம்மா. அம்மாவுக்கு எடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எல்லாத்தையுமே, 'பில்' போட்டுடலாம், பெரியம்மா,'' என, அவள் சொன்னபோது, பெரியம்மாவின் முகம் ஒரு நொடி இருண்டு மீண்டது.
'சரி' என்பதற்கு அடையாளமாக தலையை மட்டும் ஆட்டியவரின் விழிகள் நிலைகொள்ளாது தவித்ததிலிருந்தே, அவருக்கும் பழைய நிகழ்வு நினைவில் வந்து சென்றிருக்க வேண்டும் என புரிந்து கொண்டாள், அபிநயா.
''பெரியம்மா, இந்த கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்ன்னு உங்களுக்காக, 'செலக்ட்' பண்ணி வச்சிருந்தேன்,'' என, ஒரு அழகான புடவையை பெரியம்மாவின் கையில் தந்தாள்.
''வேண்டாம், அபி. எதுக்கு?'' என மறுத்தவரிடம், ''என்னோட ஆசைக்காக வாங்கிக்கோங்க, பெரிம்மா, ப்ளீஸ்,'' என கொடுத்தாள், அபிநயா. எவ்வுணர்வை வெளிப்படுத்துவதென தெரியாமல் தவித்த பெரியம்மாவிடம் விடைபெற்று புறப்பட்டாள்.
வெளியில் வந்ததும் புன்னகைத்த மீனா, ''சரியான பதிலடி அக்கா,'' என்றாள்.
''இது பதிலடி இல்ல, மீனு. யாரும் என்னைக்கும் குப்பையிலேயே கிடந்துடற போ றதில்லங்கிற உண்மைக்கான ஒரு சாட்சி. ஒருவேளை வேலைக்கு போனதும், நான் இதை செஞ்சிருந்தா, அது பதிலடியா இருந்துருக்கும். முதல்ல படிப்புக்கு வாங்குன கடனை கட்டி முடிச்சு, அம்மாவுக்காக வீடு கட்டி முடிச்சு, இப்ப இந்தப் புடவைய எடுக்கறப்ப அத்தனை நிறைவா இருக்கு.
''அன்று புடவை தந்த அவமானம்னாலும், நம்மளோட பயணம் எல்லா விதத்துலேயும் நம்மள உயர்த்தணும்,'' என்று கூறி புன்னகைத்தாள்.
''அவ்வளவு காயப்படுத்துன உங்க பெரியம்மாவுக்கு புடவை எடுத்ததுக்கு காரணம் என்னக்கா?'' என்றாள், மீனா.
''மீனு, அவமானத்தால பட்ட காயத்துக்கு அவமானப் படுத்துனவங்களாலேயே மருந்து போட்டாச்சு. பெரியம்மாவுக்கு எடுத்து தந்த புடவை, அவங்க மேல என மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலையில இருக்குற அன்போட வெளிப்பாடு தான்,'' என்றபடி நடந்தவளின் முகத்திலிருந்த தெளிவு, மீனாவின் மனதிற்கு புத்துயிர் தந்திருந்தது.
புனிதா பார்த்திபன் வயது : 32, படிப்பு: பி.இ., பணி : கணிப்பொறியாளர். சொந்த ஊர் : பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல். இவர் எழுதிய, சிறுகதை தொகுப்பு நூல் மற்றும் குறுநாவல் ஒன்றும் வெளியாகியுள்ளன. 'குக்கூ' வானொலியில், 'கொடையூர்புரத்து ரகசியம்' என்ற வரலாற்று புனைவு நாவல் ஒலி வடிவில் வலம் வருகிறது. தமிழ் வார, மாத இதழ்களில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன. கதை பிறந்த விதம்: வாழ்வில் எந்நிலையும் மாறக்கூடியது. அதற்கு, முன்னிலையாய் அமைந்து, நம்மை முடுக்கி விடுபவை அவமானங்கள் தான். 'என் தோழிக்கு நேர்ந்த அனுபவமே, இக்கதைக்கு உயிரும், உருவமும் தந்தது...' என்கிறார். முழுநேர எழுத்தாளராகி, காலத்தால் அழியாத படைப்புகளை எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.

