PUBLISHED ON : ஆக 16, 2026

காலை நேர பரபரப்பு, வித்யாவை மிகவும், 'டென்ஷன்' ஆக்கியது.
''பிரபு, ரதி... இன்னும் நீங்க ரெண்டு பேரும் குளிக்க வரலையா? ஸ்கூல் பஸ் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துரும், சீக்கிரம். நேற்று இரவு வீட்டு பாடம் செய்யாம இப்ப, நோட்புக்கை திறந்து வைத்து உட்கார்ந்து இருந்தால் எப்படி?'' என, கிச்சனிலிருந்து சத்தம் போட்டாள், வித்யா.
கணவன் குமார் அங்க வந்து, ''என்ன, வித்யா மத்தியானம் லஞ்ச் ரெடி பண்ணிட்டியா; இன்னும் என்ன வேலை பாக்கி இருக்கு?''
''ஆமாம், காலையில் 5:00 மணிக்கு எழுந்து காலை டிபன், மதியம் சமையல் முடித்து, நான் குளித்து, சாமி கும்பிட்டு இந்த பசங்களை ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்புவதற்குள், போதும் போதும்ன்னு ஆகுது. ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு யுகமாக இருக்கு.''
''என்ன பண்றது இதெல்லாம் நாம் செய்ய வேண்டிய வேலை தானே!''
''நல்லா சொல்லுவீங்க. செய்து பார்த்தால் தான் தெரியும்,'' எரிச்சலுடன் பதில் சொன்னாள்.
''சரி, நீ நகரு. நான் காபி போடுறேன்.''
''சரி நீங்களே போடுங்க. நான் போய் பசங்களை கிளப்பணும், ஸ்கூல், 'யூனிபார்ம்' எடுத்துக் கொடுக்கணும்.''
கிச்சனை விட்டு வெளியே வந்தாள்.
மா லை பிள்ளைகள், 'டியூஷன்' போய்விட்டு வந்து, சாப்பிட்டு படுக்க, வாசலில் வந்து கணவன் அருகில் அமர்ந்தாள், வித்யா.
''ரொம்ப கஷ்டமா இருக்குங்க. எவ்வளவு தான் சமாளிக்கிறது. சமயத்தில் எரிச்சலா வருது.''
''அப்படி சொல்ல முடியுமா, வித்யா. இது, நம்ம குடும்பம். நாம் தானே செய்யணும்... இதுக்கெல்லாம் அலுத்துக்க முடியாது. பசங்க பெரியவர்களாயிட்டா, உனக்கு கொஞ்சம் 'ஈசியா' இருக்கும்.''
''பசங்களை பார்த்துக்கொள்வது தான் பெரிய வேலையா எனக்கு இருக்கு. ரகு, 'நைட் ஹோம் ஒர்க்' செய்ய சொன்னா, காலையில் செய்றேன்னு படுத்துட்டான். இனி, நான் காலையில் அவனோடு போராடணும். மத்த வேலைகளையும் பார்க்கணும்,'' என்றாள், வித்யா.
''சரி, சரி... உன் 'பிரண்ட்' ஸ்வேதா, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான்னு சொன்னியே...அவளைப் போய் பார்க்கவில்லையா?''
''ஆமாங்க நேத்து கூட, தோழி ரமா சொன்னா. இந்த சண்டே எல்லாரும் அவ வீட்ல, 'மீட்' பண்ணலாமான்னு கேட்டா. இன்னும் ரெண்டு, 'பிரண்ட்சும்' வருவதாக சொல்லியிருக்காங்க.''
''சரி, நீயும் போயிட்டு வாயேன். உனக்கும் கொஞ்சம், 'ரிலாக்ஸா' இருக்கும்.''
''என்ன விளையாடுறீங்களா? ஞாயிறு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா?''
''இருக்கட்டும், இந்த வாரம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். பசங்களுக்கும் சாப்பாடு வெளியில் வாங்கி தர்றேன். நீ போயிட்டு வா. உன் பிரண்ட்ஸை சந்திச்சுட்டு வந்தா, மனசுக்கு நிம்மதியா இருக்கும்.''
அவன் சொல்வதும் சரி என்று, வித்யாவுக்கு தோன்றியது.
வி த்யா, ரமா மற்றும் மேலும் இரண்டு தோழிகளுடன், ஸ்வேதா வீட்டுக்கு வர, சந்தோஷமாக ஓடி வந்து அவர்களை வரவேற்றாள், ஸ்வேதா.
''அமெரிக்கா போனதும் ரொம்ப அழகா மாறிட்டே. 'ஹேர் கட்' சூப்பரா இருக்கு,'' என்று, சினேகிதிகள் ஆளுக்கு ஒன்று சொல்ல, புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள், ஸ்வேதா.
''எல்லாரும் உட்காருங்க. ரொம்ப நாள் கழிச்சு, 'மீட்' பண்றோம். எப்படி இருக்கீங்கன்னு சொல்லுங்க.''
அவரவர் கல்யாண வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றி பேச ஆரம்பித்தனர்.
''ஸ்வேதா, நீ மட்டும் தான் வந்தியா... உன் கணவர் வரலையா?''
''அவர் வரலை. நான் மட்டும் தான், அம்மா வீட்டில் ஒரு மாசம், 'ரெஸ்ட்' எடுத்துட்டு போலாம்ன்னு வந்திருக்கேன். நாம் அடிக்கடி சந்திக்கணும். என்ன சொல்றீங்க?'' என்றாள், ஸ்வேதா.
தோழிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.
''இன்னைக்கு என் வேலையெல்லாம் விட்டுட்டு தான் வந்திருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, வேலை இருந்துட்டே இருக்கும். ரெண்டு பசங்க வேற இருக்கு,'' என்றாள், வித்யா.
சமையல்கார அம்மா காபியுடன் வர, அதை வாங்கி தோழிகளுக்கு கொடுத்தாள், ஸ்வேதா.
பிறகு, சமையல்கார அம்மாவிடம், ''அம்மா மாடி ரூமில் இருப்பாங்க. அவங்களை இங்கே வரச்சொல்லு,'' என்றாள்.
சிறிது நேரத்தில் கையில், நான்கு வயது சிறுவனை பிடித்தபடி அங்கு வந்த, ஸ்வேதாவின் அம்மா சிரித்தபடி அவர்களை வரவேற்றாள்.
''எல்லாரும் வாங்க. நல்லா இருக்கீங்களா? உங்களை எல்லாம் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. உங்க சினேகிதி வந்தால் தான் வருவீங்களா?''
''அப்படி இல்லம்மா. எல்லாரும் குடும்பம், குழந்தைன்னு, 'பிஸி'யாகி விட்டோம். நேரமில்லை அவ்வளவுதான்,'' என, சிரித்தபடி சொன்னாள், ரமா.
அதற்குள், பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் கையை உதறி, 'அம்மா!' என்று அழைத்தபடி, ஸ்வேதாவை கட்டி பிடித்தான்.
''ஸ்வேதா, இது உன் மகனா?'' என்றாள், ரமா.
''ஆமாம். என் செல்லக்குட்டி. இவன்தான் என் உலகமே!''
''அம்மா எனக்கு, சாக்லேட் வேணும்.'' மழலையில் தடுமாறி, வார்த்தைகளை சொன்னபடி, கையையும், காலையும் ஒரு மாதிரி முறுக்கி, நாக்கை தொங்கவிட்டு, முகத்தை கோணலாக்கி சிரித்தான், அச்சிறுவன்.
அதை பார்த்து அனைவருமே சிறிது அதிர்ச்சி அடைந்து, அதை காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தனர்.
''என்ன பார்க்குறீங்க. இவன், 'ஸ்பெஷல் சைல்ட்!' இவன் பிறந்தப்ப நார்மலாக தான் இருந்தான். ஐந்து மாதம் ஆன பிறகுதான், அவனது இயல்பில் மாற்றம் இருந்ததை உணர்ந்து, டாக்டர்கிட்ட காட்டினேன். அவர் எல்லா, 'டெஸ்ட்'டும் செய்து பார்த்துட்டு, இவன் 'ஸ்பெஷல் சைல்ட்'ன்னு சொன்னப்ப, ஒரு வினாடி உலகமே சுத்தற மாதிரி இருந்தது. 'இனி, உங்கள் கவனிப்பில் தான், உங்க குழந்தையின் எதிர்காலமே இருக்கு. கொஞ்சம், 'எக்ஸ்ட்ரா கேர்' எடுத்து கவனிக்கணும்...' என்றார்.
''என் குழந்தையின் முகத்தை பார்த்தேன்... 'இவன் எனக்கானவன், என்னை நம்பி இந்த உலகத்திற்கு வந்திருக்கிறான். அவனை, நான் நல்ல முறையில் வளர்ப்பேன்...' என, அந்த நிமிடமே என் மனதில் உறுதி எடுத்து கொண்டேன். அன்னையிலிருந்து இப்ப வரைக்கும், அவனுக்கு தேவையானதைப் பார்த்து பார்த்து செய்கிறேன். இதில், எனக்கு எப்பவுமே அலுப்போ, விரக்தியோ வந்ததில்லை.
''கடவுள் நமக்கு எதை அமைத்துக் கொடுக்கிறாரோ, அதை நாம் மனசார ஏத்துக்கணும். அப்ப தான் அந்த வாழ்க்கை அழகானதா, அற்புதமானதாக மாறும். இவனை, என்னால் ஒரு நல்ல மனிதனாக, ஆற்றல்மிக்கவனாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை மனசு முழுக்க இருக்கு. 'ஸ்பெஷல்' ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறேன். ஒரு அம்மாவா கூடுதல் கவனம் அவன்கிட்ட இருக்கு.''
சொல்லி முடித்து, புன்னகையோடு தோழிகளை பார்த்தாள், ஸ்வேதா.
''இவனை பார்த்துக்கிறதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அவனுடைய அன்றாட செயல்களுக்கும், கல்வி கற்பதற்கும், நீங்க உங்க பிள்ளைகளுக்கு தரும் ஆதரவை விட, கூடுதல் கவனிப்பும், வழிகாட்டுதலும் தரணும் அவ்வளவு தான். அன்பான வழிகாட்டுதல் இருந்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளை அவர்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தி, சிறந்தவர்களாக உருவாக்க முடியும். என் மகனும் நாளைக்கு ஒரு சிறந்த, 'சயின்டிஸ்ட்' ஆக வருவான். அந்த அளவுக்கு, அவனுக்கு நான் பயிற்சி கொடுத்து அன்போடு வளர்ப்பேன்.''
அவள் பேச பேச, அவளையே பிரமித்து பார்த்தபடி இருந்தனர், தோழிகள்.
ம றுநாள் காலை, வித்யாவின் வீடு அமைதியாக இருந்தது. கிச்சனில் வேலை பார்த்தபடி, மகன் ரகுவை அருகில் அழைத்து, கணக்கு புரியும்படி பொறுமையாக சொல்லித் தந்தாள்.
'சீக்கிரம் போட்டுட்டு, தங்கச்சியை கூட்டிகிட்டு குளிக்க வா. இன்னும் அரை மணி நேரத்தில், 'ரெடி'யாகிடலாம் சரியா,'' என்றாள், வித்யா.
அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, கையில் நோட்புக்குடன் அங்கிருந்து நகர்ந்தான், ரகு.
அப்போது அங்கு வந்த குமார், ''காலை நேர, 'டென்ஷன்' இல்லாம அமைதியா போற மாதிரி இருக்கு. சரி, நகரு, நான் போய் காபி போட்டுக்கிறேன்.''
''இல்லைங்க. நீங்க போய் உட்காருங்க. உங்களுக்கும், எனக்கும் சேர்த்து நானே காபி கலந்துட்டு வர்றேன். இன்னும் நிறைய நேரம் இருக்கு பசங்களை நான், 'ரெடி' பண்ணி விடுவேன். நீங்க போங்க,'' என்று அமைதியாக சொன்ன, வித்யாவை விழிகள் விரிய ஆச்சரியமாக பார்த்தான், குமார்.
''என்ன வித்யா. உன்கிட்ட நிறைய வித்தியாசம் தெரியுதே!''
''இது என் குடும்பம். நான் தானே எல்லாத்தையும் பார்த்து, பார்த்து செய்யணும். வாழ்க்கை எவ்வளவு அழகானதுன்னு கடவுள் எனக்கு புரிய வச்சிட்டாரு,'' என்று, புன்னகையோடு சொன்னாள், வித்யா.
பரிமளா ராஜேந்திரன்
