sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விலை!

/

விலை!

விலை!

விலை!


PUBLISHED ON : மார் 22, 2026

Google News

PUBLISHED ON : மார் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செடிகள் விற்கும், 'நர்சரி' ஒன்றில்...

''என்ன இது? இத்துணுாண்டு செடிக்கு, 100 ரூபாய் சொல்ற? 50 ரூபாய் தான் தருவேன்,'' என்று, நர்சரி நடத்தும், செந்திலிடம் கறாராகப் பேரம் பேசினாள், அந்தப் பெண்.

''கட்டுப்படியாவாதும்மா,'' என்று மறுத்தான், செந்தில்.

''அப்ப எனக்கு செடியே வேணாம்,'' என்று, அந்தப் பெண் விலக, ''சரி, 75 ரூபாய் குடும்மா,'' என்றான்.

''அம்பது ரூபாய்ன்னா வாங்கிக்கறேன். இல்லேன்னா வேணாம்,'' என, அந்தப் பெண்ணும் விடாமல் பேசினாள்.

''வாங்காத, போ,'' என்று, இப்போது முறுக்கிக் கொண்டான், செந்தில்.

''சரி, உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம். 60 ரூபாய் வெச்சிக்க,'' என்று செடியைக் கையில் எடுத்தாள், அந்தப் பெண்.

''இல்ல. கட்டுப்படியாவதும்மா. 75 ரூபான்னா செடிய கையில எடு. இல்லேன்னா வெச்சிடு,'' என்று பிடிவாதமாக கூறினான், செந்தில்.

அந்தப் பெண்ணுக்கு முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

''ஏன்? 15 ரூபாய் குறைக்க மாட்டியா நீ?'' என்று கோபமாகக் கேட்டாள்.

''நுாறு ரூபாயில, 25 ரூபா கொறச்சி, 75 ரூபாய்க்கு தர்றேன். இஷ்டம் இருந்தா வாங்கு. இல்லேன்னா போயிட்டே இரு,'' என்று கறாராகக் கூறிக் கொண்டே, சொம்பில் வைத்திருந்த தண்ணீரை செடிகளின் மேல் தெளித்தான், செந்தில்.

செந்திலை முறைத்துக் கொண்டே, 75 ரூபாயை அவனிடம் நீட்டினாள், அப்பெண்.

அவனும் அதை வாங்கி, அருகிலிருந்த தன் மனைவி, தேவியிடம் கொடுத்து, அப்பெண் கேட்ட செடியை ஒரு கவரில் வைத்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி பத்திரமாக, தன் இருசக்கர வாகனத்தில் மாட்டிக் கொண்டு, வண்டியைக் கிளப்பி புறப்பட்டாள், அவள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த, தேவி, ''ஏன் மாமா? வர்ற எல்லாரும் இப்படி பேரம் பேசியே வாங்குனா நாம எப்படி பொழைக்கிறது?'' என்று அப்பாவியாய் கேட்டாள்.

''அட என்ன புள்ள நீ. வெவரம் புரியாதவளா இருக்க? ரோட்டுக் கடையில வந்து வாங்கறதே பேரம் பேசி வாங்க தானே...'' என்றான், செந்தில்.

''அதான் கேக்கறேன். நம்மகிட்ட வர எல்லாரும் பேரம் பேசி பேசி வாங்குனா, நாம என்ன செய்யறது?'' என்றாள்.

''கட்டுப்படியானா குடுப்போம். இல்லேன்னா இல்லேன்னு சொல்வோம். வேற என்ன பண்றது?'' என்றான், அவன்.

''அதுக்கு தான் சொல்றேன். நாமளும் ஒரு கடைய பிடிச்சி வியாபாரம் பண்ணுவோம்,'' என்றாள், தேவி.

''கடையப் பிடிச்சி வியாபாரம் பண்ணனும்ன்னா நிறைய பணம் வேணும்ல. நாம சம்பாதிக்கறது வாய்க்கும், வயித்துக்குமே பத்த மாட்டேங்குது. இதுல எங்க கடைய பிடிக்கறது,'' என்று சொல்லியவாறே, வெயிலில் இருந்த கன்றுகளை நிழலுக்கு நகர்த்தினான்.

அப்போது, அவன் அடுக்கி வைத்திருந்த தொட்டிகளை இடித்துக் கொண்டு நின்றது, ஒரு கார்.

''யோவ், யோவ், யோவ்... இன்னாய்யா பண்ற? போச்சு, போச்சு, என் செடில்லாம் போச்சு,'' என்று கத்திக்கொண்டே அந்த தொட்டிகளை காரின் அடியிலிருந்து எடுக்க முயன்றான்.

அதற்குள், காரிலிருந்து இறங்கி வந்தான், இளைஞன் ஒருவன்.

''ஏன்யா? உனக்கு தொட்டி வைக்க வேற இடமே கெடக்கலையா? கார் விடற இடத்தில தான் தொட்டிய வைப்பியா?'' என, செந்திலை பார்த்து கத்தினான், அந்த இளைஞன்.

''யோவ், பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க. செடிங்க மேல வண்டிய விட்டுருக்க, கண்ணு தெரியலயா?'' என்று, செந்திலும் கோபமாக கத்தினான்.

''உன் செடிங்கள விட, என் வண்டிக்கு எவ்ளோ, 'டேமேஜ்' ஆயிடுச்சு பாருய்யா,'' என்றான், அவன்.

அவனைப் பொருட்படுத்தாமல் உடைந்து போன தொட்டியிலேயே கவனத்தை செலுத்தியபடி இருந்தான், செந்தில்.

தேவியும், தன் கணவனருகே வந்து, ''ஐயையோ, நசுங்கிடுச்சே. திருப்பியும் நட்டு வெச்சா வளருமா மாமா?'' என்று அக்கறையுடன் கேட்டாள்.

''ம்ச்! தெரியல புள்ள,'' என்றான், செந்தில்.

''யோவ், என்னய்யா. என்னமோ பெத்த புள்ள அடிபட்டு கெடக்கற மாதிரி, 'சீன்' போட்டுகிட்டு கெடக்கீங்க. இந்த செடி என்ன, பத்து ரூபா இருக்குமா? அட, 100 ரூபாயே இருக்கட்டுமே. என் வண்டியப் பாருயா... எவ்ளோ, 'டேமேஜ்' ஆயிடுச்சுன்னு. இப்ப மெக்கானிக், 10 ஆயிரம் ரூபாயை கொண்டா, 15 ஆயிரம் ரூபாயைக் கொண்டான்னு சொல்லுவான்யா,'' என்று புலம்பினான்.

செந்திலுக்கு, சுறுசுறுவென்று கோபம் வந்தது.

''இந்த செடிக்கு நீ விலை பேசறியா? விலை சொன்னா உன்னால தர முடியுமாயா?'' என்று கோபமாகக் கேட்டான்.

''சொல்லுய்யா, சொல்லு. எவ்ளோ சொல்லப் போற? நுாறா, நுாத்தம்பதா? வாய்ல வந்தத அடிச்சி விட்டு என்கிட்டேர்ந்து பணத்த கறக்கப் போற. அதானே?'' என்று, ஏளனமாக கேட்டான், அந்த இளைஞன்.

''வெல கேக்கறியே. உன் உயிருக்கு என்ன விலையோ அதான் இந்த செடிக்கும் விலை,'' என்றான், செந்தில்.

''நான் சொல்லல. வாய்க்கு வந்ததை அடிச்சிவிடப் போறன்னு,'' என, மேலும் ஏளனமாக கூறினான், அந்த இளைஞன்.

''ஹூம்! உனக்கெல்லாம் இதோட அருமை எங்க தெரியப் போகுது. உனக்கு எப்படி விலை கெடையாதோ, அதே மாதிரி இந்த செடிக்கும் விலை கிடையாதுய்யா. ஏன்னா உனக்குள்ள ஒரு உயிர் இருக்கற மாதிரி, இதுக்கும் உயிர் இருக்குது,'' என்றான், செந்தில்.

''ஆமாமாம், இதெல்லாம் விலை மதிக்க முடியாத உயிரு தான். ஹூம்,'' என்று அங்கிருந்த செடிகளைக் காட்டி இளக்காரமாக கூறினான், அந்த இளைஞன்.

''ஆமாய்யா! இதெல்லாம் விலை மதிக்க முடியாத உயிரு தான். சொல்லப் போனா உனக்கும், எனக்கும் ஏன் இந்த உலகத்துக்கே உயிரைக் குடுக்கற உயிரு இதுதான்,'' என்றான், செந்தில்.

செந்திலை பார்த்து முறைத்தான், அந்த இளைஞன்.

''என்ன மொறைக்கற? உண்மைய தான் சொல்றேன். ஒரு டீக்கடை கூட இல்லாத இந்த இடத்தில உன் காரை எதுக்கு கொண்டாந்து நிப்பாட்டின. சுத்தி வேற எங்கேயும் மர நிழல் இல்ல. இங்க மட்டும் இருக்குதுன்னு தானே, இங்க வந்து நிப்பாட்டின. ரொம்ப துாரம் கார ஓட்டிகிட்டு வந்ததால உன் காரும் சூடாயிருச்சு, நீயும் சூடாயிட்ட.

''கொஞ்சம் சூடு தணியணும்ன்னு தானே மர நிழலா பார்த்து நிப்பாட்டின. அப்ப உனக்கு மரத்தோட நிழல் மட்டும் வேணும். ஆனா, நீ செடி நட்டு வளர்க்க மாட்ட. எவ்ளோ சுயநலம்யா உனக்கு? உன்ன மாறி ஆளுங்கல்லாம், 'மரம் வளப்போம், மழை பெறுவோம்'ன்னு கோஷம் போடுவீங்க. ஆனா, ஒரு ஆணியும்...'' என்று கூறி நிறுத்தி, தன் பல்லைக் கடித்துக் கொண்டான், செந்தில்.

இப்போது அந்த இளைஞன் மவுனமாகி விட்டான். அவனால் பதில் பேசவே முடியவில்லை.

''அரசாங்கம் வண்டி ஓட்டறவங்களுக்கு எல்லாம் வண்டி ஓட்ட, 'லைசன்ஸ்' கட்டாயம்ன்னு சட்டம் வெச்ச மாதிரி, வண்டி வாங்கறவங்க எல்லாரும் கட்டாயம் ஒரு செடியை நட்டு, பாதுகாத்து வளர்த்து, அதை மரமாக்கி காட்டணும்ன்னு சட்டம் கொண்டாரணும். அப்பத்தான் இந்த மாதிரி செடி மேல வண்டிய ஏத்தாம இருப்பீங்க. செடி வளர்க்கறது எவ்ளோ கஷ்டம்ன்னு உங்களுக்கும் புரியும்,'' என்று சொல்லி, நகரப் போனான்.

''ஒரு நிமிஷம்,'' என்று கூறிய அந்த இளைஞன், தன் காரை, 'ஸ்டார்ட்' செய்து, சற்று தள்ளி நகர்த்தி நிறுத்தி, இறங்கி வந்தான்.

வந்தவன், கீழே உடைந்து கிடந்த தொட்டிகளையும், நசுங்கிக் கிடந்த செடிகளையும் அப்புறப்படுத்தி, நசுங்காமல் தப்பித்த செடிகளை பத்திரமாக எடுத்து, அங்கிருந்த காலித் தொட்டியில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினான்.

பின்னர் செந்திலிடம் வந்து, ''நீங்க கேட்ட கேள்வில்லாம் என்னை செருப்பால அடிச்ச மாறி இருக்கு. உண்மைய சொல்லணும்ன்னா இப்ப நான், மரம் வளர்ப்போம்ங்கற தலைப்பில மேடையில பேசிட்டுதான் வரேன். ஆனா, மேடைப் பேச்சோட என் கடமை முடியலன்னு இப்ப எனக்கு புரியுது. இனிமே என் கடமையை நான் பேச்சில காட்டாம, செயல்ல காட்டப் போறேன். அதுக்கு முதல்படியா ரெண்டு செடி வாங்கிக்கறேன்,'' என்று கூறி, இரண்டு தொட்டிகளை எடுத்து அதற்கான பணத்தைக் கொடுத்தான்.

பணத்தை வாங்கியபடி, இளைஞனை பார்த்து புன்னகைத்தான், செந்தில்.

அன்னபூரணி தண்டபாணி






      Dinamalar
      Follow us