
''அ ந்த, 'டிவி' வால்யூமை கொஞ்சம் கம்மி பண்ணு,'' என, மொபைல் போன் ஒளிர்ந்து ஒலிப்பதை கண்ட சம்பத் ராஜ், தன் மனைவியிடம் கூறியபடி, மொபைலை எடுத்து காதுக்கு கொடுத்தார்.
புது எண்ணாக இருந்ததால், சற்று சுருதி குறைச்சலாக, ''ஹலோ,'' என்றார்.
மறுமுனையின் குரல் கேட்டதும், உடல் ஒரு விரைப்புக்கு வந்தது.
''சார் சொல்லுங்க. நம்பர் புதுசா இருக்கேன்னு தயங்கிட்டேன்.''
''அதை விடு. விஷயம் முக்கியம். அதான் என் பர்சனல் நம்பரிலிருந்து கூப்பிட்டேன். எனக்கு, 'வாட்ஸ்-ஆப்' அழைப்பில் பேசு,'' எனச் சொல்லி, 'கட்' செய்தார்.
அவர் சொன்னபடியே செய்தார், சம்பத் ராஜ்.
''சம்பத், நம்ம பையன் ஒருத்தனுக்கு பிரச்னை. உன் ஸ்டேஷன் லிமிட் இல்ல தான். ஆனா, எனக்கு உன் பேர்ல தான் நம்பிக்கை. இப்ப அவன் உன்னுடன் பேசுவான். அவன் சொல்றதை கேட்டு என்ன பண்ணணுமோ செஞ்சு கொடு.
''இனி என்னோடு பேசும்போது, 'வாட்ஸ் -ஆப்' அழைப்பாவே இருக்கட்டும். அவனும், உன்னை அதில் தான் கூப்பிடுவான்,'' என, பதிலுக்கு காத்திராமல் போனை வைத்து விட்டார். இவரும் மொபைலை, சட்டை பையில் பதுக்கினார்.
சற்று நேரத்தில் மீண்டும் கூவியது.
''ஹலோ!''
''ஹலோ, சார் உங்ககிட்ட பேசச் சொன்னார். நான் ஒரு இக்கட்டுல இருக்கேன்,'' குரலில் இருந்த பதட்டத்தை கண்டு விஷயம் பெரிசு போல என, எண்ணியபடி, ''அப்படியே லைன்ல இரு. நான் மொட்டை மாடிக்கு போறேன்,'' என்றபடி படியேறினார், சம்பத் ராஜ்.
''இப்ப சொல்லு.''
''அய்யா, நான் ஒரு பொண்ணைக் கெடுக்க முயற்சி செஞ்சு, அந்த போராட்டத்துல அவ செத்துப் போயிட்டா.''
'அடப்பாவி...' மனதிற்குள் அதிர்ந்தார்.
''அது சரி. இன்னும் ஏன் அங்கேயே நின்னுக்கிட்டு இருக்க. எங்கியாச்சும் ஓட வேண்டியது தானே?''
''அது இல்லங்கய்யா. இடம் ஒண்ணும் ரொம்ப ஒதுக்குப்புறம் கிடையாது. நம்ம சென்ட்ரல் லைப்ரரிக்கு பின்னால இருக்கற கிரவுண்டில், ஒரு மறைவுல தான்.
''அவளை நான், 'க்ளோசா பாலோ' பண்ணிக்கிட்டு வந்தப்ப, வழியில எங்கியாச்சும் கேமரா இருந்துச்சுன்னா, நான் பதிவாகி இருப்பேன். அதுவுமில்லாம அவளும் மொபைல்போன்ல என்னை போட்டோ எடுத்திருப்பான்னு நினைக்கிறேன்.''
குழம்பினார், சம்பத் ராஜ்.
''சரி, இப்ப அவ மொபைல் போன் உங்கிட்ட தானே இருக்கு?''
''இல்லை, என்னோட போராடினப்ப அவ அதை துாக்கி காம்பவுண்டைத் தாண்டி போட்டுட்டா. அந்த இடம் கால் வைக்க முடியாத அளவுக்கு காடு மாதிரி புதர் மண்டி கிடக்கு.''
எரிச்சலானார், சம்பத் ராஜ். போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இன்று இது தான் பிரச்னை. தன் கடமை என, தனியாக ஏதும் செய்ய முடியாத, அரசியல் வாதிகளின் ஏவலுக்கிணங்க, அவர்கள் வைத்த சட்டபடி ஆட வேண்டிய கூத்தாடியாக தன்னை உணர்ந்தார். ஆனாலும், நல்ல வெகுமதிகள் பெறக் கூடிய கூத்தாடி.
''அய்யா நான் என்ன செய்யட்டும்?'' குரல் கேட்டு, உணர்வுக்கு மீண்டார், சம்பத்ராஜ்.
''முதல்ல ஒரு துணி கிடைச்சா, எங்கயெல்லாம் உன் கைரேகை இருக்கும்ன்னு சந்தேகம் தோணுதோ, அந்த இடத்தையெல்லாம் நல்லா துடைச்சிடு. மறக்காம துணியை தள்ளி போய் வேற இடத்தில எரிச்சிடு.
''அவகிட்ட, நகை ஏதாச்சும் இருந்தா அதையெல்லாம் உருவி எடுத்திடு. திருட்டுக்காக நடந்த கொலையா இருக்கட்டும். உன் கைரேகை கிடைக்காட்டி வழக்கு ரொம்ப குழம்பிடும்.
''அப்படியே கிடைச்சாலும், இந்த பரந்து கிடக்கிற சிட்டில எல்லார் கைரேகையையும் ஒப்பிட்டு பார்க்கறது சாத்தியமேயில்ல. ஆதார் 'டேட்டா பேஸை' தோண்டறது சாமானியமில்ல. பழைய குற்றவாளியா இருந்தா தான் கொஞ்சம் பிரச்னை. பார்ப்போம்.''
''ஐயா, என் கைரேகை, போலீஸ் ரெக்கார்ட்ல இருக்கும்யா. ஏற்கனவே பல கேஸ் என் மேல இருக்கு.''
சம்பத் ராஜுக்கு, 'சே' என்றிருந்தது. ஏதோ பல பட்டம் வாங்கின மாதிரி பெருமை வேற என, நினைத்துக் கொண்டவர், ''சரி, அப்ப ரொம்ப கவனமா சுவர், கதவு, கட்டை மாதிரி இடங்களை நல்லா சுத்தம் செஞ்சிட்டு தலைமறைவாயிடு,'' எனச் சொல்லி, போனை 'கட்' செய்தார்.
பின்னர், தன்னை தொடர்பு கொண்டு ஆணையிட்ட நபரை அழைத்து, ''சார், அவன் பேசினான். சில யோசனைகள் சொல்லி இருக்கேன். மத்ததை நான் பார்த்துக்கிறேன்,'' என்றார்.
''யோவ் பார்த்து சரியா பண்ணுய்யா. அவன் நம்ம கட்சியில பல பேரோட பர்சனலா பழக்கம் உள்ளவன்.
''இந்த விஷயத்துல மாட்டினா, அவன் எங்களோட இருக்கற போட்டோக்களை வெச்சு எதிர்க்கட்சிக்காரங்களோட, 'ஐ.டி., விங்க்' மற்றும் 'சோஷியல் மீடியா'வுல எங்க மொத்த பேரையும் பஞ்சர் ஆக்கிடுவாங்க. சொல்லிட்டேன்,'' என, எதிர்முனை அமைதி ஆனது.
மொபைலை அணைத்து விட்டு படியிறங்கினார். மனம் அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை அசை போட்ட வண்ணம் இருந்தது.
ஹாலுக்கு வந்தவர், மீண்டும் மொபைலை எடுத்து, ''செபாஸ்டின், நான் சம்பத். எங்கயிருக்க வீட்ல தானே? கே.டி.,ரோடு முனைல இருக்கற ராதா பேக்கரிக்கு வா,'' என்றார், சம்பத் ராஜ்.
கைலியிலிருந்து பேன்ட்டுக்கு மாறி, பைக் சாவியை எடுத்து கிளம்பி, ''இதைப் பாரு வீட்டு சாவி ஒண்ணை நான் எடுத்துக்கிட்டு போறேன். இரவு எப்ப வருவேன்னு தெரியாது. நீ பூட்டிக்கிட்டு படு,'' என, மனைவியிடம் சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திராமல் வாசலுக்கு நடந்தார்.
'எப்ப பாரு, ட்யூட்டி, ட்யூட்டி. 24 மணி நேரமும் போலீஸ்காரனா மட்டுமே இருந்தா போதுமா. பொறுப்பான அப்பாவா எப்ப இருக்கப் போறாரு. என் கவலையை யார்கிட்ட சொல்வது...' என உள்ளே, சம்பத்ராஜின் மனைவி புலம்பி கொண்டிருந்தது, காற்றில் கரைந்து போக, வண்டியைக் கிளப்பி புறப்பட்டார்.
ப த்து நிமிடத்தில், ராதா பேக்கரியை தொட்டார்.
''வந்திட்டியா, செபாஸ்டின். வா உள்ள உட்கார்ந்து பேசலாம்.''
மாஸ்டரிடம், ''கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு டீ,'' என சொல்லி, மூலையில் இருந்த டேபிளில் அமர்ந்தனர்.
''செபாஸ்டின், ஒரு முக்கியமான விஷயம். பெரிய இடத்து விவகாரம். அதனால மேல் விபரம் ஏதும் கேட்காதே; எனக்கும் தெரியாது.''
''சரி சொல்லு.''
''இங்கயிருந்து இந்த ரோடு கடைசியில இருக்கற சென்ட்ரல் லைப்ரரி வரைக்கும் எத்தனை, 'சிசிடிவி' கேமரா இருக்கும். நீ தொழில் முறையில் பார்த்து வெச்சிருப்பியே...''
சற்று நேரம் யோசனையில் இருந்தவர், ''ஏழு இடத்தில் இருக்கு. அதுல ஒண்ணு ஒரு வாரமா வேலை செய்யல. ரெண்டு இடத்தில வெறுமே, லைவா பார்க்க முடியுமே தவிர, பதிவு செய்யும் வசதி கிடையாது. மீதி, நாலு இடம் தான் எல்லாம் சரியா இருக்கும்,'' என்றார், செபாஸ்டியன்.
அவரது தோளைத்தட்டி, ''இதுக்குத்தான் உன்னை கூப்பிட்டது. எல்லாத் தகவலையும் விரல் நுனியில் வெச்சிருக்க. சரி விஷயத்துக்கு வரேன். இன்னைக்கு சாயங்காலம், 5:00 மணியிலேருந்து, அந்த நான்கு, 'சிசிடிவி' மூலமா பதிவான எந்த, 'புட்டேஜும்' இருக்கக் கூடாது. காரியத்தை கச்சிதமா செய்யணும். உன்னால முடியும் தானே?'' எனக் கேட்டார், சம்பத் ராஜ்.
''நான் பார்த்துக்கறேன்யா. துரைமங்கலத்தில இது மாதிரி ஒண்ணு, உங்க நண்பர், சையத்துக்கு செஞ்சு கொடுக்கலியா. மேட்டரை எங்கிட்ட விடுங்க.''
''சரி, டீ வந்திடுச்சு. குடிச்சிட்டு கிளம்பு. முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணு - 'வாட்ஸ்-ஆப்'ல,'' எனக் கூறி எழுந்தார்.
வ ண்டியைக் கிளப்பி, மெல்ல உருட்டிக் கொண்டே, காம்பவுண்ட் சுவரைத் தாண்டி துாரத்தில் தெரிந்த லைப்ரரியின் பின்பக்கத்தை வெறித்தார். எந்த இடத்திலும் கூட்டத்தை காணோம். இன்னும் விஷயம் வெளியே தெரியவில்லையா...
'சென்று பார்ப்போமா...' என, எழுந்த விபரீத ஆசையை, பின்னால் எழக் கூடிய பிரச்னையை நினைத்து, மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டார். இந்த விவகாரத்தில், தான் துார நின்று மட்டுமே பணியாற்ற வேண்டும் என, அவர் மனம் எச்சரிக்க, அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் செபாஸ்டியனின் வெற்றி செய்தி கிடைக்க, குதுாகலமானார், சம்பத் ராஜ். விஷயத்தை கேள்விப்பட்டால், குஷியாகி விடுவார், சார். நெடுநாள் கிடப்பில் இருக்கும் தன், 'பிரமோஷனு'க்கும் இதனால் ஒரு விடிவு கிடைத்து விடும். சாரை நேரில் பார்த்து விஷயத்தை சொல்லி விட, மனம் துடித்தது. வண்டியைக் கிளப்பினார்.
வீ ட்டின் அழைப்பு மணியை அடிக்க, கதவை திறந்தவர், ''வாய்யா சம்பத். என்ன நேர்லயே வந்துட்ட. ஏதும் பிரச்னையா?''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல, சார். உங்க உத்தரவுப்படி செய்யும் போது, பிரச்னை வர விட்டுடுவேனா? எல்லாம் கச்சிதமா முடிஞ்சாச்சு. உங்க ஆளுக்கு எந்த பிரச்னையும் வராது,'' என, சந்தோஷமாக சொன்னார், சம்பத் ராஜ்.
''வெரி குட். ஆமா, இன்னும் விஷயம் வெளிய வரல போலிருக்கு. உங்க டிபார்ட்மென்ட்ல எந்த பரபரப்பையும் காணோம். தானா வரும் போது வரட்டும். இப்ப இந்த அறிக்கையை பாரு,'' என, தன் கைப்பட எழுதிய பேப்பரை எடுத்து நீட்டினார்.
அதில், 'தாய்க்குலத்தை தெய்வமாக போற்றும், எங்கள் தலைவரின் ஆட்சிக்கு இழுக்கு தேடித் தரும் கெடு மதி கொண்ட எதிர்க்கட்சிகாரர்களின் சதிக்கு, மேலும் ஒரு சாட்சி, இந்த அறியாப் பெண்ணின் அகால மரணம்.
'இதற்கு காரணமான நபர், எத்தனை பெரிய இடத்தில் இருந்தாலும், சட்டம் தன் இரும்புக்கரம் கொண்டு நசுக்கும். நாடே போற்றும் நல்லாட்சி தரும் எங்கள் அருமைத் தலைவரின் தருமமிகு ஆட்சியில், கடுமையான தண்டனை அவனுக்கு கட்டாயம் கிடைக்கும்!' என்றிருந்தது.
எங்கு பிணம் விழுந்தாலும் அதை வைத்து அரசியல் செய்ய தயாராக இருக்கும் நிலை கண்டு வெதும்பினார், சம்பத் ராஜ். ஆனால், முகத்தில் புன்னகையைத் தேக்கி, ''நல்லா இருக்கு. ஆனாலும், நீங்க ரொம்ப பாஸ்ட், சார்,'' எனச் சொல்லி, அவரோடு சேர்ந்து சிரித்து, ''அப்புறம் சார்... என்னோட பிரமோஷன்,'' என இழுத்தார், சம்பத் ராஜ்.
''உனக்கு இல்லாததாய்யா. நீ போ... ஒரே மாசத்தில நீ எங்கியோ போயிடுவ. என் வாக்கு சீக்கிரமே ஆர்டரா மாறும் கவலைப்படாதே,'' என்றார்.
அவரிடம் விடை பெற்று, வெளியே வந்து, மணியை பார்த்தார், சம்பத்ராஜ். இரவு, 10:50 மணி. இன்னும் சாப்பிடவேயில்லை என்பதே, அப்போது தான் அவருக்கு உறைத்தது. வண்டியை வீட்டுக்கு விரட்டினார்.
வெளி கேட்டைத் திறந்த உடனேயே, மனைவி எதிர்பட்டாள்.
''எங்க போய்ட்டீங்க. எத்தனை தடவை போன் அடிக்கிறது. மாயா இன்னும் வீட்டுக்கு வரலை. போன் செய்தா போகவே மாட்டேங்குது. எனக்கு என்னவோ பயமாயிருக்குங்க.''
''சும்மா அலட்டிக்காத. அவ, இந்த சம்பத்தோட பொண்ணு, 'பிரண்ட்' வீட்டுக்கு போயிருப்பா. வந்துடுவா,'' என, அலட்சியமாக சொல்லியபடி, உள்ளே நுழைய முற்பட்டவரை வழி மறித்து, ''இரவு, 9:00 மணியிலிருந்து எல்லார்கிட்டேயும் போன் செஞ்சு கேட்டாச்சு. எங்கேயும் இல்ல. அவ மத்தியானமே காலேஜிலேர்ந்து கிளம்பிட்டதா சொல்றாங்க,'' என்றாள். சட்டென மனைவியின் மொபைலை வாங்கி, மகளுடைய எண்ணைத் தொடர்பு கொண்டார்.
'ஸ்விட்ச் ஆப்' என்ற பதிவு செய்யப்பட்ட குரல், திரும்பத் திரும்ப கூறியது.
சற்று யோசனைக்கு பின், வேறொரு எண்ணைத் தொடர்பு கொண்டு, ''நான் சம்பத் பேசறேன். ஒரு நம்பர் சொல்றேன். அதோட, 'டவர் லொகேஷனை' கண்டுபிடிச்சு சொல்லு,'' என, மகள் மாயாவின் மொபைல் போன் எண்ணை தந்துவிட்டு, காத்திருந்தார்; மனைவி அவர் முகத்தையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
பத்து நிமிடத்தில் பதில் வந்தது.
''சார், போன் இப்போ, 'ஸ்விட்ச் ஆப்'ல இருக்கு. கடைசியா விஸ்வாஸ் நகர் டவர் ரேஞ்ச்ல தான், 'டிஸ்கனெக்ட்' ஆகியிருக்கு,'' என்றார்.
அவருக்கு சட்டென ஏரியா பிடிபடவில்லை. ''விஸ்வாஸ் நகர். அது எங்கே இருக்கு?'' என கேட்டார், சம்பத் ராஜ்.
''நம்ம சென்ட்ரல் லைப்ரரி இருக்குல்ல. அதிலேயிருந்து கொஞ்ச துாரத்தில் இருக்கு, சார்,'' என்றார், எதிர்முனையில் இருந்தவர்.
இதை கேட்டதும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார், சம்பத் ராஜ்.
கொலை செய்யப்பட்டது தன் மகள் தான் என்றும், தான் பதவி உயர்வு பெற, எவனோ ஒரு கொலைகாரனுக்காகவும், அவனுக்கு துணை போகும் அரசியல்வாதிக்கும் கால் வருடியாக இருந்ததை தாங்க முடியாமல் கதறி அழுதார், சம்பத் ராஜ்.
ஏதோ விபரீதம் என புரிய, அப்படியே மயங்கி விழுந்தார், அவர் மனைவி.
எஸ்.கவுரிலட்சுமி
வயது : 53
கல்வித்தகுதி: எம்.எஸ்சி., கணிதம், எம்.ஏ., எம்.பில்., (பொருளாதாரம்)
பணி: ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை.
இதுவரை, 60க்கும் மேற்பட்ட படைப்புகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளது. தன் படைப்புகளுக்காக, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
கதைக்கரு பிறந்த விதம்: சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தந்த தாக்கமே இக்கதை பிறக்க காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிறைய எழுதி புகழ்பெற வேண்டும் என்பது இவரது லட்சியம்.