
காலை வேளை. தன் வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார், நாராயணன்.
அப்போது, 'சார், சார்...' என்று குரல் கேட்க, திரும்பி பார்த்தார். கேட்டின் அருகே, 20 வயதுள்ள இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.
''உள்ளே வாப்பா. யார் நீ, என்ன விஷயம்?'' என்றார்.
''சார், என் பெயர், மணி. கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டும். அப்பா இல்லை, அம்மா, வீட்டு வேலை செய்து கொஞ்சம் பணம் கொடுத்தாங்க. இன்னும் பண தேவையா இருக்கு. அதற்காக உதவி கேட்டு வந்துள்ளேன்,'' பேசிக்கொண்டே தன் பைலைத் திறந்து, அவன் பரீட்சைக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்ற படிவத்தை எடுத்து காட்டினான்.
அவற்றை வாங்கி மேலோட்டமாக படித்து பார்த்த, நாராயணன், ''சரிப்பா. கொஞ்சம் உட்காரு. இதோ வருகிறேன். என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன்,'' என்று உள்ளே சென்று, இரு நுாறு ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார்.
''ரொம்ப நன்றி, சார். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று சந்தோஷமாக பெற்றுக்கொண்டான், மணி.
கிளம்ப தெருப்பக்கம் திரும்பினான்.
''தம்பி மணி. ஒரு ஐந்து நிமிடம் என் கூட பேசிக்கொண்டிருப்பதில் உனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லையே,'' என்றார்.
''பேசலாம், சார்,'' என்றபடியே மீண்டும் வந்து அவர் அருகில் அமர்ந்தான், மணி. உள்ளே திரும்பி மனைவியை அழைத்து ஒரு டம்ளர் மோர் கொண்டு வரச்சொல்லி, அவனிடம் கொடுத்து, ''வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லது குடிப்பா. சரி, இதுவரை எத்தனை வீடுகளில் கேட்டாய்; எத்தனை ரூபாய் கிடைத்தது?'' என்றார், நாராயணன்.
''அதிகம் இல்லை சார், 10 வீடுகளில் கேட்டேன். சிலர் 20, 50 என்று கொடுத்தனர். சிலர், 'எனக்கு இப்போ நேரமில்லை...' என்றும், சிலர், 'எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க...' என்றும் கோபப்பட்டு பிச்சைக்காரனை விரட்டுவது போல விரட்டினர். 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என, நினைத்துக் கொண்டேன், சார்,'' என்று கூறி, லேசாக கண் கலங்கினான்.
''பிச்சை எடுத்தாவது படிக்கணும் என்று நீ நினைக்கிறாய் சரிதான். ஆனால், வேறு விதமாக யோசி. 'பிச்சை புகினும் கற்கை நன்றே'- என்பது கல்வியின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காக, கல்வி எல்லாவற்றிலும் மேலானது என்பதை வலியுறுத்தும் வகையில் சொல்லப்பட்டது. ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாப்பாட்டுக்கே வழியில்லை; பிச்சை எடுத்து தான் சாப்பிட்டாக வேண்டும் என்ற நிலைமை வந்தாலும், கல்வி கற்பதை விட்டு விடக்கூடாது என்பது தான் அதன் உண்மையான அர்த்தம்.
''வருத்தப்படாதே. பணம் இருக்கும் சிலரிடம், கொடுக்கும் மனம் இருக்காது; கொடுக்க மனம் இருப்பவர்களுக்கு கையில் பணம் இருக்காது என்று கேள்விப்பட்டது இல்லையா? ஆனால், ஒரேயடியாக நாம் அவர்களை குற்றம் சொல்லவும் முடியாது. ஒரு நாளில் படிப்பிற்கு, கல்யாண செலவிற்கு, வைத்தியத்திற்கு, கோவில் திருவிழாவிற்கு, அனாதை ஆசிரம செலவுக்கு என்று உதவி கேட்டு நிறைய பேர் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். எத்தனை பேருக்கு கொடுக்க முடியும். அப்போது வார்த்தைகள் இப்படித்தான் வந்து விழும். உதவி கேட்கும் நீ பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இது தான் உலக இயல்பு என்ன செய்வது?'' என்றார்.
''மற்றவர்களின் அலட்சியத்திற்கு ஆளாகாமல் உன் தேவைகளை நீயே பார்த்துக்கொள்ளலாம். அதற்கு சுணக்கம் இல்லாமல் கொஞ்சம் உழைக்கும் எண்ணம் வேண்டும். ஜெயிப்போம், முன்னேறுவோம் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் வேண்டும்,'' என்றவரை புரியாமல் பார்த்தான், மணி.
''சின்னச் சின்ன வேலைகளை செய்து சம்பாதித்து, உன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். யாரிடமும் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு சம்மதம் என்றால் சொல்லு. நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால், அதையே நீ முழு நேர வேலையாக எடுத்துக்கொண்டு உன் படிப்பை கோட்டை விட்டு விடக்கூடாது. என்ன சொல்கிறாய்?''
''அப்படி என்ன வேலை சார் உடனே கிடைக்கும்?''
''ஏன் கிடைக்காது. பொய் சொல்ல கூடாது; திருடக்கூடாது; மற்றவர்களுக்கு உதவியாக, முக்கியமா உன் தன்மானத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வேலை செய்யலாம். காலையில் வீடு வீடாக பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் போடலாம். அதிகபட்சமாக ஒரு மணிநேரம் தான் ஆகும்.
''இன்னைக்கு நீ வருவதற்கு சற்று முன்பு வாடிக்கையான மளிகை கடையில் சில சாமான்கள், 'ஆர்டர்' கொடுத்தேன். 'பேக்கிங் செக்ஷன்'ல ஆள் குறைவாக இருக்காங்க. சாயந்திரத்துக்குள்ள அனுப்பி விடுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க...' என்று சமாதானம் சொன்னார், கடைக்காரர். நீ விருப்பப்பட்டால் தினம் ஒரு ரெண்டு மணிநேரம் அங்கு வேலை செய்யலாம். நான் அவரிடம் பேசுகிறேன்.
''இது முழு ஆண்டு தேர்வு முடிந்து அடுத்த வருடத்திற்கு தயாராகும் நேரம். பெற்றோர் இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில், புத்தகங்களுக்கு அட்டை போட்டு ரெடி செய்வது பெரிய விஷயம். நீ, அவர்களுக்கு அதை முடித்து கொடுக்கலாமே. நீ, ஒத்துக்கொண்டால் நான் இந்த தெருவில் தேவை உள்ளவர்களிடம் பேசுகிறேன். நீ, எங்கள் வீட்டில் அமர்ந்தே வேலை செய்யலாம்.
''வாய்ப்புகள் எப்போதும் வாசல் கதவை தட்டாது; நாமும் தேடிச் செல்ல வேண்டும் யோசித்துப்பார். ஒவ்வொரு வீட்டிலும் சென்று உதவி கேட்டு அலைவதை விட, அந்த நேரத்தில் இந்த வேலைகளை செய்வதால் உனக்கு கொஞ்சம் வருமானமும் வரும். உன் தன்மானத்திற்கு எந்த குறைவும் வராது. மற்றவர்களின் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டாம். உனக்கு இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு. அதற்கான செலவுகளுக்கு என்ன செய்வாய்? கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை; போராடாமல் வெற்றிகள் இல்லை,'' என்றார், நாராயணன்.
''சார், நீங்க ஸ்கூல் வாத்தியாரா?'' என்று கேட்டான், மணி.
''ஏன்பா. 'அட்வைஸ்' பண்றதை வைத்து அப்படியொரு முடிவுக்கு வந்து விட்டாயா. நான் 'பேங்க்-ல' வேலை பார்த்து, சென்ற ஆண்டு தான் ஓய்வு பெற்றேன். என்னால் இயன்ற உதவியை செய்தேன். எனக்கு தோன்றிய எண்ணத்தை சொன்னேன், அவ்வளவு தான். நான் எந்த வகையிலும் உன்னை வற்புறுத்தவில்லை. மீன் வாங்கி கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது நல்லதல்லவா!'' என்று சிரித்தார், நாராயணன்.
''ஆனால், என்னை பொறுத்தவரை நீங்கள் ஒரு வாத்தியார் தான். ரொம்ப நன்றி. நீங்கள் சொன்னபடி செய்கிறேன் சார். என்னை எப்போது மளிகை கடைக்கு அழைத்து செல்கிறீர்கள்,'' என்றான் உற்சாகமாக, மணி.
''ரொம்ப சந்தோஷம். நான் சொன்னவற்றை நல்ல முறையில் புரிந்து கொண்டாயே... அதற்கு, நானும் உனக்கு நன்றி கூறுகிறேன்.''
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே, உள்ளே வந்தார் ஒருவர்.
''வாப்பா கோபால்,'' என்றார், நாராயணன்.
''சார். இன்னிக்கு தண்ணீர்-, 'டேங்க் கிளீன்' பண்ண வரேன் என்று சொல்லி இருந்தேன். என்னோடு எப்போதும் வரும் பையன் ஏதோ அவசர வேலையாக ஊருக்கு போய் இருக்கிறான், சார். வருவதற்கு இன்னமும் ரெண்டு நாளாகும் போல. அதை சொல்லத்தான் வந்தேன். உங்களுக்கு பரவாயில்லையா சார்,'' என்றார், கோபால்.
நாராயணனின் அருகே வந்த மணி, ''சார், வாய்ப்பு வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்திருக்கிறது. இவருக்கு ஓ.கே., என்றால் அவருடன் சேர்ந்து நான் தண்ணீர் தொட்டியை 'கிளீன்' செய்கிறேன். கேட்டு சொல்லுங்க, சார்,'' என்றான் மெதுவாக.
''நன்றே செய்; அதுவும் இன்றே செய் என்ற எண்ணமா. ரொம்ப மகிழ்ச்சி,'' என்று, மணியின் முதுகில் தட்டி கொடுத்த, நாராயணன், ''தம்பி எனக்கு தெரிந்த பையன் தான். உன்னுடைய, 'அசிஸ்டன்ட்' வராத பட்சத்தில், இந்த பையனை உதவிக்கு வைத்துக்கொண்டு வேலையை தடையில்லாமல் முடித்து விடலாமே. அந்த பையனுக்கு கொடுக்கும் பணத்தை இவனுக்கு கொடுத்து விடு, கோபால்,'' என்றார்.
''நீங்களே சொன்ன பிறகு என்ன, சார். அப்படியே செய்து விடலாம். ரெண்டு பக்கெட் தண்ணி மட்டும் பிடித்து வைத்துக்கொள்ளுங்க. 'க்ளீனிங்' ரெண்டு மணி நேரத்தில் முடித்து விடலாம்,'' என்றார், கோபால்.
''சரிப்பா. நீங்க வேலையை ஆரம்பிங்க. நானும், உங்களுக்கு சாப்பாடு செய்ய மனைவியிடம் சொல்கிறேன். நேரம் சரியாக இருக்கும். மதியத்திற்கு மேல் மற்ற வாய்ப்புகளை பார்க்கலாம், மணி. நம்பிக்கையுடன் இரு,'' என்று புன்னகை செய்தார், நாராயணன்.
அவனும் சந்தோஷமாக தலையாட்டினான்.
விஜி ரமேஷ்

