sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அம்மாவின் தேவைகள்!

/

அம்மாவின் தேவைகள்!

அம்மாவின் தேவைகள்!

அம்மாவின் தேவைகள்!


PUBLISHED ON : பிப் 15, 2026

Google News

PUBLISHED ON : பிப் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க, நேரமாகுது,'' என, உரக்க குரல் கொடுத்து விட்டுக் காத்திருந்தாள், மனைவி சந்திரா. எந்த சலனமும் இல்லாமல் தன் வேலையில் ஆழ்ந்து இருந்தான், சந்திராவின் கணவன், ஆனந்த்.

நான் சொல்றது காதுல விழுதா இல்லையா. பதில் சொல்லாம இப்படி உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?'' என, தன் பொறுமையை இழந்திருந்தாள், சந்திரா.

''எதுக்கு இப்படி கத்துற? யாராவது கேட்கப் போறாங்க. பொறுமையா பேசு,'' என்றான், ஆனந்த்.

''இவ்வளவு நேரம் நான் பேசுனதுக்கு பேரு பொறுமை தான். புரியலையா?'' என்றாள், சந்திரா கண்கள் சிவக்க.

''சரி... இன்னிக்கு சீக்கிரமே வீட்டுக்கு வர்றேன். கோவப்படாத. நான் குளிச்சிட்டு வர்றேன். டிபன் எடுத்து வை,'' என்றான், துண்டை தோளில் போட்டப்படி.

தினசரி நடக்கும் பெற்றோரின் சண்டையை பார்த்தபடி தோசையை பிய்த்து போட்டு, ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருந்தாள் இவர்களின் ஒரே மகள், தேஷிகா.

ஆனந்த் அவசரமாய் ரெடியாகி, 'டைனிங் டேபிள்' முன் வந்து அமர்ந்தான்.

''எனக்கு ஒரு தோசை போதும் நேரமாச்சு,'' என்ற கணவனை முறைத்தாள்.

''ஒரு தோசை சாப்பிடறதுக்கா, சட்னி அரைச்சு, சாம்பார் வெச்சேன்?''

''சரி, திரும்ப ஆரம்பிக்காத இன்னொரு தோசை ஊத்து,'' ருசியாக இருந்த சட்னி இன்னும் இரண்டு தோசையை சாப்பிட வைத்தது.

''எதுக்கு தான் இந்த வீம்போ!'' என, முணு முணுத்தாள், சந்திரா.

''அம்மா எங்கே? காலையில இருந்து கண்ணுலயே படக் காணோம். எங்கயாவது வெளியப் போய்ட்டாங்களா?'' என்றான், ஆனந்த்.

''அவங்களுக்கு என்ன? மகராசி நல்லா துாங்கி, 11:00 மணிக்கு எந்திரிப்பாங்க,'' என்றாள், சந்திரா.

''தேஷி, பாட்டி ரூம்க்குள்ளப் போய், பாட்டிய எழுப்பி விடு,'' என்றான், ஆனந்த்.

''நான் தான் அவங்க துாங்கறாங்கன்னு சொல்றேனில்ல. நீங்க எழுப்பி விட்டுட்டு, போய்டுவீங்க? அப்புறம் அவங்க எழுந்து வந்து என்னத் திட்றதுக்கா. பேசாம ரெண்டுப் பேரும் கிளம்புங்க,'' என்றாள், கோவத்தோடு, சந்திரா.

''ஆனந்த், வண்டில போறப்ப போன் வந்தா எடுக்க வேண்டாம். ஹெல்மெட் போட்டாச்சு இல்ல. பாப்பா... அப்பாவ கெட்டியா பிடிச்சிக்கோ. 'பை - டா' செல்லம்,'' என, கையசைத்து வீட்டுக்குள் வந்த உடன் தன் அம்மாவிற்கு போன் செய்தாள், சந்திரா.

''ஹலோ, அம்மா. நான்தான்மா, சந்திரா. சாப்டீங்களா?''

''நானும், அப்பாவும் இப்பத் தான் துாங்கி எந்திரிச்சோம். டீ குடிக்கிறோம். நீ சாப்பிட்டியாம்மா,'' என்றாள், சந்திராவின் அம்மா.

''இல்லம்மா இப்பத்தான் அவங்க ரெண்டு பேரும் கிளம்பினாங்க. இனிமேல் தான் சாப்பிடணும்,'' என்றாள், சந்திரா.

''சரிடாம்மா. உங்க மாமியார் எங்க வீட்ல இல்லையா?'' என்று கேட்டாள், சந்திராவின் அம்மா.

''வீட்ல இல்லாம வேற எங்கப் போகும்? நைட் 10:00 மணி ஆனாலும், 'டிவி' சீரியல பார்த்துட்டு தான் துாங்கறது. அப்புறம் எப்படி நேரத்துல எந்திரிப்பாங்க,'' என்றாள், சந்திரா.

''கொஞ்சம் நேரத்துலயே எந்திரிச்சா, உனக்கு கூட மாட ஒத்தாசையா இருக்கலாமில்ல. கொஞ்ச நேரம் குழந்தையையாவது பார்த்துக்கலாமே!'' என்றாள், சந்திராவின் அம்மா.

''உங்களுக்கு தெரியுது என்னோட கஷ்டம். அவங்களுக்கு தெரிய மாட்டேங்குதே. சரிம்மா அப்புறம் பேசுறேன். அவர்கிட்ட இருந்து கால் வருது,'' என, போனை 'கட்' செய்து, ஆனந்துக்கு போன் செய்தாள், சந்திரா.

''சொல்லுங்க? என்ன விஷயம்,'' என்றாள்.

''என்ன பண்ணிட்டு இருக்க? போன் பண்ணா, 'எங்கேஜ்ட்டா' இருக்கு, யார்கிட்ட பேசிட்டு இருந்தே?'' என்றான், ஆனந்த்.

''என் அம்மாவுடன் போன் பேசிட்டு இருந்தேன். என்ன விஷயம்?'' என்றாள்.

''அம்மா எந்திரிச்சிட்டாங்களா?'' என்று கோபமாக கேட்டான், ஆனந்த்.

''நான் தான் சொன்னனே? 10:00 மணி ஆகும்ன்னு. அவங்களுக்கு என்ன? எந்திரிச்ச உடனே வெளிய வர மாட்டாங்க. மகளுக்கு போன் பண்ணி கொஞ்சுவாங்க. அப்புறம் எதிர் வீட்டு அம்மாவிடம் பேச்சு,'' என்றாள், சந்திரா.

''போதும், போதும் ஏதாவது ஒன்னுக்கேட்டா பெரிய பிரசங்கமே நடத்திடு. அம்மா எந்திரிச்சா உடனே எனக்கு போன் பண்ணு,'' என்று, எரிச்சலோடு போனை, 'கட்' செய்தான், ஆனந்த்.

'பா தி ராத்திரிக்கு வேலைல இருந்து வர வேண்டியது. காலைல எந்திரிச்ச உடனே, கம்ப்யூட்டர் பக்கம் போய் உட்காந்துக்க வேண்டியது. குழந்தையிடம் கூட, ரெண்டு வார்த்தை பேசணும்ன்னு தோணுதா அம்மாவுக்கும், மகனுக்கும். எப்பவும் தனி ராஜ்ஜியம் தான்...' என, கோபத்தோடு முணு முணுத்தப்படியே வீட்டை கூட்ட தொடங்கினாள், சந்திரா.

ரூமில் இருந்து வெளியே வந்த, மாமியாரை சட்டை செய்யவில்லை. பல சமயம் கணவன் மீது இருக்கும் கோபமெல்லாம் மாமியாரோடு சண்டைப் போட காரணமாய் அமைந்து விடுகிறது. சந்திராவின் மாமியார் கமலா, காபி போட்டு எடுத்துக் கொண்டு அறைக்குள் போய் கதவை சாத்தினாள்.

ஆ னந்திற்கு அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. அடிக்கடி அம்மாவின் நினைவு மனதில் எட்டிப் பார்த்தது. தினமும் விடிகாலை நேரமே எழுந்து நடைபயிலும் அம்மாவை பார்த்து ஒரு வாரம் இருக்கும் என்று தோன்றியது, வீட்டுக்கு போன் செய்தான்.

''ஹலோ! சந்திரா அம்மா வந்துட்டாங்களா?'' என்று கேட்டான், ஆனந்த்.

''ம்! வந்தாங்க. காபி போட்டு எடுத்துக்கிட்டு ரூமுக்கு போய்ட்டாங்க. இதைக் கேட்கவா போன் பண்ணீங்க,'' என்றாள். போன் சட்டென்று, 'கட்' ஆனது. கொஞ்ச நேரத்தில், 'காலிங் பெல்' சத்தம் கேட்டு, கதவை திறந்தாள்.

ஆனந்த் நின்றிருந்தான். அதிசயமாய் பார்த்தாள்.

''அம்மா எங்க?'' என்று கேட்டான், ஆனந்த்.

''இப்பத் தானே சொன்னேன், காபி போட்டு எடுத்துக்கிட்டு ரூமுக்கு போய்ட்டாங்கங்கன்னு.''

''சந்திரா, அம்மாவுக்கு சாப்ட ஏதாவது கொடுத்தியா?''

''இல்லை... டிபன் வேண்டாம்ன்னுட்டாங்க. கொண்டுப் போய், ஊட்டியா விட முடியும்?'' என்றாள்.

ரூம் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான், ஆனந்த்.

''ஆனந்த், ஆபீஸ் போகலியா?'' மெலிதான குரலில் அந்த சிறிய ரூமில் தள்ளாடிய படியே மெல்ல எழுந்தாள், அவன் அம்மா, கமலா.

''நீங்க சாப்டலியாமே, சந்திரா சொன்னாள்,'' என்றான்.

''ஆமா ஆனந்த், வாய் கசப்பா இருந்துச்சா. அதான் வேணான்னுட்டேன்,'' என்றாள், கமலா.

நெற்றியை தொட்டுப் பார்த்தான், கை சுட்டது.

''சந்திரா! அம்மாவுக்கு காய்ச்சல் அடிக்குது. நான் கால்டாக்ஸிக்கு போன் பண்றேன். அம்மாவும், நீயும் டாக்ஸில மருத்துவமனைக்கு வந்துடுங்க. நான் பைக்ல வந்துடறேன்,'' என்றான், ஆனந்த்.

மாமியாரைப் பார்த்தாள், சந்திரா. கோடுகள் விழுந்த முகத்தில் வாட்டம் தெரிந்தது. ஒரு வாரம் சரியாக சாப்பிடாமல், ரூமை விட்டு வெளியே வராத காரணம் புரிந்தது. குற்ற உணர்வு அவள் நெஞ்சை அடைத்தது.

''அத்தே, டாக்ஸி வந்துடுச்சு வாங்க,'' நடுங்கும் தாயின் கரங்களை கனிவோடு பற்றிக் கொண்டாள். கண்களில் வழிந்த கண்ணீரை மெல்லத் துடைத்துக் கொண்டார், கமலா.

கமலாவை சோதித்து, 'பிளட் டெஸ்ட்'டுக்கு எழுதிக் கொடுத்தார், டாக்டர்.

''காய்ச்சல், 100 டிகிரி இருக்கு. சாதாரண காய்ச்சல் தான். ரொம்ப, 'வீக்'கா இருக்காங்க. நல்லா சாப்பிடக் கொடுங்க,'' என்றார், டாக்டர்.

''அம்மா சாதாரண காய்ச்சல் தானாம். மருந்து சாப்பிட்டு, 'ரெஸ்ட்' எடுத்தா சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னாரு. உங்கள நல்லா சாப்பிட சொன்னாங்க,'' என்றான், ஆனந்த்.

மெல்ல சிரித்துக் கொண்டாள், கமலா.

வீ ட்டுக்குப் போனதும், சந்திரா கொடுத்த கஞ்சியை குடித்து விட்டு, நிம்மதியாக உறங்கினாள்.

ஆட்டோவில் மகளை ஸ்கூலில் இருந்துக் கூட்டி வந்தாள், சந்திரா. அம்மாவை விட்டு நகராமல் உடனிருந்தான், ஆனந்த்.

''நீ போய் துாங்குப்பா நாளைக்கு ஆபீஸ் போகணுமில்ல,'' என்ற அம்மாவிடம், ''உங்களுக்கு சரியாகற வரைக்கும் நான் ஆபீஸ் போறதா இல்ல. அம்மா பாத்ரூம் போறதா இருந்தா என்ன எழுப்பி விடுங்க. தனியா போக வேண்டாம்,'' என்று கூறி அம்மாவின் அருகிலேயே உறங்கினான்.

கமலா மெல்ல எழுந்து, 'பெட்ஷீட்'டை அவனுக்குப் போர்த்தி, தலைமுடியை மெல்ல கோதி விட்டாள்.

ம றுநாள், சந்திரா வைத்துக் கொடுத்த சூடான இட்லி, புதினா சட்னி வாய்க்கு சுவையாக இருந்தது. மாத்திரையை கையில் தந்து நகர்ந்தாள்.

மூன்று நாட்கள் ஆகியும், காய்ச்சல் விட்டப்பாடில்லை. ஆனால், தெம்பாக இருந்தாள், கமலா. திரும்பவும் டாக்டரிடம் கூட்டி போயிருந்தனர். மருந்தை மாற்றிக் கொடுத்தார், டாக்டர்.

''ஒண்ணும் பயப்பட வேண்டாம். ரெண்டு நாள்ல சரியாயிடும். அம்மா முன்ன விட, இப்ப நல்லாவே இருக்காங்க,'' என்று கூறினார், டாக்டர்.

அவர் சொன்னபடி காய்ச்சல் விட்டிருந்தது. நல்ல சாப்பாடும், கவனிப்பும், கமலாவை படுக்கையிலிருந்து எழச் செய்தது. காலை சாப்பாட்டில் இருந்து, இரவு டிபன் வரை அனைவரும் ஒன்றுக் கூடி உண்டனர். வேலை முடிந்து வந்தவுடன் அம்மாவின் மடியில் படுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான், ஆனந்த். சந்திரா தன் சிடுசிடுப்பை விட்டிருந்தாள். கணவனின் அன்பும், புன்னகையும் அவளிடமும் ஒட்டிக் கொண்டது.

அதன்பின், மாதம் ஒரு முறை விடுமுறை எடுத்து, குடும்பத்தினருடன் ஹோட்டல், பார்க், கோவில், சுற்றுலாத் தலங்கள் என, சுற்றத் தொடங்கியிருந்தான்.

ஒ ரு நாள் -

''ஹலோ! ஆனந்த் எப்படி இருக்கீங்க?''

''ஹலோ! டாக்டர் சார், பார்க் கூட வர்றதுண்டா?''

''ம்! எப்பயாச்சும். அப்பாவைக் கூட்டிட்டு வருவேன். அதோ அவர் தான் எங்க அப்பா. உங்க அம்மா எப்படி இருக்காங்க?'' என்றார், டாக்டர்.

''சூப்பரா இருக்காங்க. அங்கே பாருங்க பேத்தியோட எப்படி விளையாடுறாங்கன்னு? இப்ப அம்மாவும், என் மனைவியும் கூட ராசி ஆகிட்டாங்க, டாக்டர். எல்லாம் உங்க கைராசி, உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும், டாக்டர்.''

''இல்ல, மிஸ்டர் ஆனந்த் எல்லா மாற்றத்துக்கும் நீங்க தான் காரணம். அன்னிக்கு உங்க அம்மாவ மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்தப்ப அவங்களுக்கு காய்ச்சல் இருந்துச்சு. சரியான சாப்பாடும், கவனிப்பும் இல்லாம நலிஞ்சுப் போய் இருந்தாங்க. இரண்டாவது தடவை கூட்டிட்டு வந்தப்ப நல்லா தெம்பா இருந்தாங்க. ஆனா, காய்ச்சல் மட்டும் அப்படியே இருந்தது.

''அவங்க மாத்திரை சாப்பிடாதது தான் காரணம். நான், அவங்கள கேட்டப்ப என்ன சொன்னாங்க தெரியுமா? நீங்க அவங்ககிட்டப் பேசியே பல வருஷம் ஆச்சுன்னும் எப்பயும் வேலை, வேலைன்னு ஓடிட்டே இருப்பதாகவும் சொன்னாங்க. உங்க மனைவி உங்க மேல இருக்கற கோவத்தை அவங்க மேல காட்டறதா சொல்லி அழுதாங்க. உங்க மகள் அவங்ககிட்டயே வரதில்லைன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க.

''இப்ப காய்ச்சல் வந்தப் பின்னாடி எல்லாரும் அன்பாக இருக்கறதாகவும், காய்ச்சல் சரியானா எல்லா உறவும் பிரிஞ்சிடும் அப்படின்ற பயத்துல, காய்ச்சல் மாத்திரை சாப்பிடாம இருந்திருக்காங்க. நம்மள துாக்கி சுமந்த அம்மாவ இப்ப ஒதுக்கி வைக்கிறது என்ன நியாயம்ன்னு நாம புரிஞ்சிக்கிட்டாலே போதும், ஆனந்த்.

''நாம சரியா இருந்தா, நம்ம குடும்பமும் சரியா இருக்கும். நமக்கு வேரா இருந்தவங்களுக்கு நாம விழுதா இருந்தா குடும்பம் மகிழ்ச்சியா இருக்கும்,'' என்றார், டாக்டர்.

''நீங்க சொல்றது உண்மை தான் டாக்டர். நான் புரிஞ்சிக்கிட்டேன்,'' என, நா தழுதழுக்க டாக்டரின் கையைப்பற்றிக் குலுக்கினான், ஆனந்த்.

சுதாராணி






      Dinamalar
      Follow us