தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புது வாழ்வு!

புது வாழ்வு!

புது வாழ்வு!

3


PUBLISHED ON : ஆக 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2026

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த, மணிமாறனின் முன் வந்து நின்றாள், மணிமேகலை.

''கிளம்பிட்டயாப்பா?''

''ஆமாம்மா... என்ன விஷயம்?''

''உன்கிட்ட கொஞ்சம் பேசணும். சாயங்காலம், நீ வந்ததும் கோவிலுக்கு போகலாமா?''

மணிமாறனுக்கு தெரியும், அம்மா என்ன பேசப் போகிறாள் என்று.

''சரிம்மா... போகலாம். இப்ப நான் கிளம்பறேன்.''

கதவைச் சாத்தி, தாழிட்டவள், நேரே பூஜை அறைக்கு சென்றாள்.

'கடவுளே... நான் நல்லது நினைத்து எடுக்கப் போகும் முடிவு. நீதான் துணையிருந்து, நல்லபடியாக முடிச்சுத் தரணும்...' என, மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

ம ணிமேகலையின் ஒரே பிள்ளை, மணிமாறன். கணவர், மனோகரன் தனியார் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், ஏழு ஆண்டுகள் நன்றாக இருந்தவர், ஒரு நாள், உட்கார்ந்தபடியே உயிரை விட்டார். நல்ல வேளையாக, அவர் இருக்கும்போதே, மணிமாறன் கல்யாணமும் முடிந்து விட்டது.

மருமகள், மஞ்சரி நல்ல பெண் தான். அவளுக்கும், மணிமேகலைக்கும் இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது. சொல்லப் போனால், இருவருக்குள்ளும் பாசப் பிணைப்பு அதிகம். மஞ்சரியை ஒரு வேலை செய்ய விடமாட்டாள், மணிமேகலை.

'தாயில்லாப் பொண்ணா வளர்ந்துட்ட. இப்பதான், நான் இருக்கேனே, அம்மாவா. என் பொண்ணாயிருந்தா கஷ்டப்பட விடுவேனா? எனக்கும் உடம்புல தெம்பு இருக்கு...' என்று விதவிதமாய் சமைத்து, அத்தனை வேலைகளையும் செய்து வைப்பாள். தினம் புது புது சிற்றுண்டி செய்து வைப்பாள்.

மனோகரன், மணிமேகலை, மணிமாறன், மஞ்சரி என்று பெயர் பொருத்தங்களை சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவாள்.

மஞ்சரியும், மணிமேகலையை அம்மாவாகவே தான் நினைத்திருந்தாள்; 'அம்மா' என்று தான் கூப்பிடுவாள்.

அடிக்கடி, புதுப் புடவை, இனிப்பு, ஸ்படிக மாலை, கதைப் புத்தகம் என்று சிறிய பரிசுகள் கொடுப்பாள். ஆபீசிலிருந்து சீக்கிரம் வந்து விட்டால், கோவிலுக்கு அழைத்துச் செல்வது, உட்கார வைத்து, இரவு சாப்பாடு பரிமாறுவது என்று, அன்பில் திளைக்க வைத்தாள். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மாமியாரும், மருமகளுமா என்று காலனியே கொண்டாடியது அவர்களை.

மணிமாறன் கேலி செய்திருக்கிறான்... ''என்னை விட, உனக்கு அம்மா தான் முக்கியம்,'' என்று. ஒரு ஆண்டு ஓடியதே தெரியவில்லை.

கண்பட்டு விட்டது; எல்லாம் மாறிப் போனது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருவரிடையே பேச்சுவார்த்தை குறைய துவங்கியது. எப்போது, எப்படி ஆரம்பித்தது என்றே தெரியவில்லை.

இருவரிடையே இடைவெளி அதிகமாக ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் மணிமாறனும், மஞ்சரியும் பேசிக்கொள்வது முற்றிலுமாய் நின்று போனது.

மஞ்சரி ஆபிசிலிருந்து, 'லேட்'டாக வருவது, அறைக்குள் முடங்குவது, மணிமாறன் தொலைக்காட்சியில் மூழ்குவது என்று ஆனது. மணிமேகலையும் ஜாடையாகவும், நேராகவும் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டாள். இருவருமே அதைப் பற்றி பேச விரும்பவில்லை. கடைசியில், ஒருநாள் மஞ்சரி, தன் அம்மா வீட்டுக்குப் போகப் போவதாக சொல்லிக் கிளம்பியவள், பெரிய பெட்டியோடு கிளம்பினாள். திகைத்துப்போன, மணிமேகலை சுதாரிப்பதற்குள், சட்டென்று வெளியேறி விட்டாள். மணிமாறனும் அங்கேதான் இருந்தான். என்றாலும், பேச ஒன்றுமில்லை என்பது போல இருந்து விட்டான்.

அ தற்கு பிறகு, வாரம் இரு முறையாவது, மணிமேகலையை தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள், மஞ்சரி. பொதுவான விஷயங்களாக இருக்கும். மணிமேகலையே பேச்சை ஆரம்பித்தாலும், பிடி கொடுக்காமல் நழுவி விடுவாள், மஞ்சரி.

'நீங்க இருந்து எனக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லக் கூடாதா? இப்படி விட்டுட்டுப் போயிட்டீங்களே... நான் என்ன செய்வேன்?' என்று புகைப்படமாக இருக்கும் தன் கணவரிடம் புலம்புவாள்.

'உன்னால முடியாதா, மணிமேகலை? நான் உனக்குள்ளதான இருக்கேன்; தைரியமா இரு...' புகைப்படத்திலிருந்து ஆசீர்வதிப்பார், மனோகரன்.

மணிமேகலை தைரியம் கொண்டாள். வேறு வழியில்லை.

தானே, மஞ்சரியின் அப்பாவிற்குப் போன் பண்ணினாள்-. மஞ்சரி இல்லாத நேரத்தில். போனை எடுத்தவர், அழுது விட்டார்...

'என்னம்மா இது? ஒண்ணும் புரியல. பொட்டியோட வந்து நிக்கறா. கேட்டா, பதிலும் சொல்ல மாட்டேங்கறா. அவ அம்மா இருந்திருந்தா இப்படி விட்டிருப்பாளா?'

மணிமேகலையை தவிக்க வைத்த, அதே உணர்வுகள். ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லி போனை வைத்தாள்.

அதன்பின் அடிக்கடி, மணிமேகலையும், பரமசிவமும் தொலைபேசியில் பேசி, தங்கள் ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டனர். ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், ஏதோ பேச்சுத் துணை, மன ஆறுதல், உறவை விட்டுக் கொடுக்க விரும்பாத எண்ணம் என்று பேச்சு தொடர்ந்தது. இருவருமே, பிள்ளையிடமோ, பெண்ணிடமோ தாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வதைப் பற்றி சொல்லவில்லை.

ம ணிமேகலை இப்போது ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள். மணிமாறன் ஆபீசுக்கு கிளம்பி விட்டான். பரமசிவத்திற்குப் போன் பண்ணி, மஞ்சரியும் ஆபீசுக்கு கிளம்பி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டாள். வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பி, ஆட்டோவில், பரமசிவம் வீட்டில் போய் இறங்கினாள், மணிமேகலை.

''வாங்க சம்பந்தியம்மா,'' என, வாய் நிறைய வரவேற்றார், பரமசிவம்.

''இந்த வயசான காலத்தில நம்மள இப்படி தவிக்க விடுதுங்களே!''

இருவரும் சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். மஞ்சரி சமைத்து வைத்து போயிருந்தாள். இருவரும் சாப்பிட்டனர்.

மணிமேகலை மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்... பரமசிவம் திகைத்துப் போனார்...

''என்னம்மா, என்னென்னமோ பேசறீங்களே? இதெல்லாம் சரியா வருமா? ஊர் உலகம் என்ன பேசும்? நம்ம வயசுக்கு இதெல்லாம் சரிப்படுமா? நம்ம பசங்க நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?''

''இல்லை சம்பந்தி. நிதானமா யோசிச்சுப் பாருங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி இதுதான். ஊர், உலகத்தை பத்திக் கவலைப்படாதீங்க. அந்த வயசை நாம தாண்டிட்டோம். நம்ம பசங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துப் பார்க்கலாமேன்னு தான் சொல்றேன். நல்லது நடக்கும்ன்னு நம்பறேன்.''

''வேண்டாம்மா... எனக்கு இது சரியாய் படல.''

''இல்லை. யோசியுங்க நிதானமா. எனக்கு இதுதான் சரியாப்படறது. நம்ம வயசே நமக்கு பாதுகாப்பு. யாரும் தப்பா பேச முடியாது. பேசினாலும், கவலை இல்லை. குழந்தைகள் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தாலும், சேரலைன்னாலும், என் முடிவில் மாற்றமில்லை. நீங்க யோசிச்சு நல்ல முடிவை சொல்லுங்க. நான் கிளம்பறேன்.''

பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தார், பரமசிவம். பெண்ணின் மன ஆழம் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையாகவே, இது அதிர்ச்சி தரும் வைத்தியம்தான். ஒரு வாரம் யோசித்தார். மணிமேகலை சொல்வது சரியென்றே தோன்றியது. முடிவு எடுத்து விட்டார். மணிமேகலையை அழைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டார்.

இ ன்று நல்ல நாள். மணிமேகலை, மகனைக் கோவிலுக்கு அழைத்தாள். அவனுக்குமே நிம்மதி தேவைப்பட்டது. உடனே கிளம்பி விட்டான்.

பரமசிவமும், மகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, கோவிலுக்கு வந்திருந்தார். மணிமாறனும், மஞ்சரியும் ஒருவருக்கொருவர் லேசாகப் புன்னகைத்ததோடு சரி. பெரியவர்கள் இருவர் மட்டும் சாதாரணமாகப் பேசிக் கொண்டனர்.

''கொஞ்ச நேரம் கோவில் மண்டபத்தில் உட்காரலாமா?''

நால்வரும் மண்டபத்தில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக அமர்ந்தனர். பரமசிவம் கொஞ்சம் தயக்கத்தோடும், பதட்டத்தோடும் இருந்தார். மணிமேகலை சாவதானமாக இருந்தாள். அவளே பேச்சை ஆரம்பித்தாள்...

''மணிமாறா, மஞ்சரி! உங்களுக்குள் என்ன பிரச்னைன்னு எனக்கு தெரியாது. பேச்சு வார்த்தைதான் இல்லையே தவிர, அன்பு குறையல. அது, உங்களோட கண்களிலேயே தெரியுது. மஞ்சரிக்கும், எனக்குமோ அல்லது உனக்கும், அவ அப்பாவுக்குமோ எந்தப் பிரச்னையும் இல்ல. மரியாதையும், அன்பும் நிறையவே இருக்கு. இப்படியே நீங்க ரெண்டு பேரும் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போறீங்கன்னு தெரியல. அதனால, நானும், உன் அப்பாவும் ஒரு முடிவு எடுத்திருக்கோம்,'' என்று கூறி நிறுத்தினாள், மணிமேகலை.

இருவரும் புரியாமல் பார்த்தனர்.

''நிறைய யோசித்து எடுத்த முடிவு தான் இது. நானும், உன் அப்பாவும் தனியா ஒரு வீடு எடுத்து ஒண்ணா இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். எனக்கு ஆண் துணையும், அவருக்குப் பெண் துணையும் தேவை. இந்தத் துணை மனசுக்கு தான். அது எங்க ரெண்டு பேருக்கும் தெரியும்; உங்களுக்கும் புரியும். ஊர், உலகம் என்ன பேசுமோ என்கிற கவலை எங்களுக்கு இல்லை. நாங்க அந்த வயசைக் கடந்தாச்சு. நான் சொல்றது சரிதானே?''

'இதென்ன புதுக் கதை? முடியுமா, ஒத்து வருமா? எதிர்பார்க்கவேயில்லையே! எப்போது பேசினர், எப்போது முடிவெடுத்தனர்? ஒண்ணுமே தெரியாமல் கூடவே இருந்திருக்கோமே!'

திகைத்துப் போயினர், மணிமாறனும், மஞ்சரியும்.

''எங்க முடிவை சொல்லிட்டேன். உங்க சம்மதத்தைக் கேக்கல. ஆனா, நீங்க நல்ல முடிவை சொன்னா, நாம நாலு பேருமே ஒண்ணா இருக்கலாம். நான், உங்களை நிர்பந்திக்க மாட்டேன்.''

தீர்மானமாக சொல்லி, பரமசிவத்தை பார்த்தாள், மணிமேகலை. அவர், கண்களாலேயே நன்றி தெரிவித்தார்.

''சரி. நாங்க ரெண்டு பேரும் கோவிலை சுத்திட்டு வர்றோம். நீங்க யோசிச்சு முடிவு சொல்லலாம். ஒண்ணும் அவசரமில்லை.''

பரமசிவமும் எழுந்தார்.

தனித்து விடப்பட்ட, மணிமாறனும், மஞ்சரியும் செய்வதறியாது மலைத்துப் போயிருந்தனர்.

'ஒரு முடிவோடுதான் வந்திருக்கின்றனர் இருவரும். ஆனால், இதெல்லாம் சாத்தியமா, நடைமுறையில் ஒத்து வருமா?

'கணவன்-மனைவி நாமிருவரும் சேர்ந்து இல்லாமல், நம் பெற்றவர்கள் சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால், நாம் எங்கே இருப்பது?

'அம்மா பேசுவதைப் பார்த்தால், நாளைக்கே தனிக் குடித்தனம் போய் விடுவார் போலிருக்கிறதே!

'அப்பாவும் எங்கிட்ட ஒண்ணுமே சொல்லலியே? அவரும் தீவிரமாத்தான் இருக்கார்.'

வாய் திறந்து பேசவில்லை இருவரும். கண்களும், மனங்களுமே பேசிக் கொண்டன.

இதற்கு என்னதான் முடிவு? வேறு வேறு சூழ்நிலையில் வாழ்ந்த சம்பந்திகள் இருவருமே ஒத்துப்போக முடிவு செய்து விட்டனர். நாமளும் கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதானோ?

இருவருக்குமே ஆறுதல் தேவைப்பட்ட நிலையில், இருவரது கைகளும் தானாகவே பற்றிக் கொண்டன. அந்த நொடியில், இருவர் மனங்களும் இணைந்தன.

''மஞ்சரி, நாமும் கோவிலை சுத்திட்டு கிளம்பலாம், வா,'' என்று, மணிமாறன் கையை நீட்ட, நிம்மதியுடன், அவன் கை களை பிடித்து, எழுந்து கொண்டாள், மஞ்சரி.

உஷா பாலசுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us