sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தப்பு(ம்)த் தாளங்கள்!

/

தப்பு(ம்)த் தாளங்கள்!

தப்பு(ம்)த் தாளங்கள்!

தப்பு(ம்)த் தாளங்கள்!


PUBLISHED ON : டிச 07, 2025

Google News

PUBLISHED ON : டிச 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஷ்டப்பட்டு கண்ணை திறந்து கடிகாரத்தை பார்த்தாள், நிரஞ்சனா. மணி 8:00. அம்மா வீடு என்பதால், நிம்மதியான துாக்கம். அடுத்த மாதம் துபாய் கிளம்ப வேண்டும். துபாயில் மருத்துவராக பணிபுரிகிறாள், நிரஞ்சனா. பிள்ளைகள், விடுமுறைக்கு வந்துவிட்டு, அப்பாவுடன் துபாய்க்கு சென்று விட்டனர்.

அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அவர்கள் வீட்டு பணிப்பெண், தங்கம். அவள் அருகில் சென்று, ''தங்கம், நீ பொறுப்பா எல்லா வேலைகளையும் பார்த்து, பார்த்து செய்யுற. பேசாம என்கூட துபாய்க்கு வந்துடேன். நீ வீட்டையும், பிள்ளைகளையும் பார்த்துகிட்டா, நானும், அவரும் நிம்மதியா வேலைக்கு போவோம். அவருக்கும் அடிக்கடி வெளிநாடு போக வேண்டியதிருக்கு,'' என்றாள், நிரஞ்சனா.

''ஏம்மா நெசமாத்தான் சொல்லுதீகளா? நான், உங்க கூட துபாய்க்கு வந்துடவா?'' என்றாள், அவளும் யோசிக்காமல்.

''எனக்கு ஓ.கே., தான். ஆனால், நீ எப்படி உன்னுடைய மகனை விட்டுட்டு வருவ... அவனும் சின்ன பையன்ல,'' என்ற, நிரஞ்சனாவிடம், ''அம்மா, என் கணவர் போய் சேர்ந்து, இரண்டு வருஷமாச்சு. அண்ணன் கூடத் தான் இருக்கேன். அண்ணிகிட்ட வாங்காத வசவு இல்ல. கரிச்சி கொட்டிக்கிட்டே தான் சாப்பாடு போடும். இத்தனைக்கும் உழைக்கிற காசு ஒரு பைசா பாக்கி இல்லாம அவங்க கையில் கொடுக்கேன்.

''அண்ணனை சும்மா சொல்ல கூடாது. பெத்த புள்ள கணக்கா பத்திரமா பாத்துக்கிடுது. அதுவும் பாவம் வருமானத்துக்கு கஷ்டப்படுது. ஆட்டோ ஓட்டம் அதிகமில்ல. நான் கூட, கொஞ்சம் சம்பாதிச்சா இந்த புள்ளைய நல்லா படிக்க வைக்க முடியும்,'' என்றாள், பணிப்பெண், தங்கம்.

''தங்கம், சீக்கிரமா யோசிச்சு ஒரு முடிவை சொல்லு. ஏற்பாடு பண்ணனும். நிறைய, 'பார்மாலிட்டிஸ்' இருக்கு. நம்ம ஊர் பணத்துக்கு மாசம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளமா தர்றேன். அதுபோக, உன் புள்ள படிப்பு செலவையும் ஏத்துக்கிறேன்,'' என்றாள், நிரஞ்சனா.

இ ரவு, தன் மகன் ராஜாவிடம், விஷயத்தை சொன்னதும், அவளை கட்டிக்கொண்டு அழுதான், ராஜா.

''கண்ணா, என் நிலைமைய நல்லா புரிஞ்சுக்கோ. நான், நிரஞ்சனா அம்மா கூட துபாய்க்கு போனால், நீ நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க முடியும். அத்தை உனக்கு நல்ல சாப்பாடு போடும். வாழ்க்கை நல்லா இருக்கும். அப்பப்ப வந்து உன்னை பார்த்துட்டு போறேன்.''

''எனக்கு அதெல்லாம் வேணாம்மா. எனக்கு, நீ தான் வேணும். நீ, என்கூட இருந்தா போதும். நான் நல்லா படிச்சு, வேலை பார்த்து உனக்கு கஞ்சி ஊத்திடுவேன். நான் உன்னைப் பார்த்துக்கிறேன். நீ, எங்கேயும் போக வேணாம்மா,'' என்றான், ஐந்தாம் வகுப்பு படிக்கும், ராஜா.

''தங்கம், புள்ள சொல்றதும் சரிதானே. பேசாம இங்கியே இருந்திடேன்,'' என்றார், அண்ணன் ராமையா.

''இல்லே அண்ணே, என் பையன் நல்லா படிச்சு, பெரிய வேலை பார்க்கணும். கை நிறைய சம்பாதிக்கணும்,'' என்றாள், தங்கம்.

சொன்னது போலவே பிடிவாதமாய் ஒரு மாதத்தில், நிரஞ்சனாவுடன், கிளம்பி துபாய்க்கு போய் விட்டாள், தங்கம்.

அங்குள்ளபடி, வேலையை கற்றுக்கொண்டாள். மகன் நினைப்பு அவளை வாட்டவே செய்தது. ரெண்டுங்கெட்டான் பையன விட்டுட்டு வந்திருக்கோமேங்கற உறுத்தல் மனதை வருத்தத்தான் செய்தது.

த ங்கம் வந்த பிறகு, நிரஞ்சனாவுக்கு வீட்டு பொறுப்பு பெருமளவு குறைந்தது. அவளே பொறுப்பாக பிள்ளைகள், ரக்ஷனா, ரஞ்சித் இருவரையும் பார்த்துக் கொண்டாள். அந்தப் பிள்ளைகளிடம் இருந்த ஒரு வெறுமை, தங்கம் வரவால் பெருமளவு குறைந்தது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், ரக்ஷனா, ரஞ்சித் இருவருக்கும் நிறைய கதைகள் சொல்வாள், தங்கம்.

இருவரும் துாங்குவதற்கு அடம் பிடித்தால், பொறுமையாக கதை சொல்லி, துாங்க வைப்பாள். 'தங்கம்மா... தங்கம்மா...' என்று இருவரும், அவளையே சுற்றி, சுற்றி வருவர்.

மொத்தத்தில், வெகு சீக்கிரமே இருவரும், தங்கத்திடம் ஒட்டிக் கொண்டனர்.

தங்கத்தின் மகன் ராஜாவின் படிப்பு செலவு, துணிமணிகள். பள்ளிக்கூடத்துக்கு தேவையான சாமான்கள் என, அனைத்தும் பார்த்து பார்த்து செய்தாள், நிரஞ்சனா.

ஒ ன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, நிரஞ்சனா, இந்தியா வரும்போது, தங்கத்தையும் கூட்டி வந்தாள். அவளைக் கண்டதும், ராஜா ஓடிவந்து அணைத்துக் கொண்டான். ராஜா வளர்ந்து, கொஞ்சம் சதை பிடிப்புடன் பார்க்க நன்றாக இருந்தான்.

'இதற்காகத்தானே இவ்வளவு பாடு...' என்று நினைத்துக் கொண்டாள், மனதுக்குள். ஆர்வமாக தன்னுடைய மதிப்பெண்களை காண்பித்தான், ராஜா.

''தங்கம் உன் மகன் நல்லா படிக்கிறான். வகுப்பிலேயே அவன் தான் முதல்ல வர்றான். விளையாட்டிலும் கெட்டிக்காரன். இங்க பாரு மெடலு, கப்பு எல்லாம் வாங்கியிருக்கிறான். எனக்கும், நீ ஆட்டோவுக்கு உள்ள பாக்கிய கட்டிட்ட. அதனால, வருமானம் குறைவில்லாம அப்படியே வீட்டுக்கு வந்துருது,'' என்றார், அண்ணன் ராமையா.

''நிரஞ்சனா அம்மா, நல்லா கவனிச்சிக்கிறாங்க. அவங்க குழந்தைகளும் என்கிட்ட பாசமா இருக்கு. ஆனாலும், உங்க எல்லார் நினைப்பும் அடிக்கடி வரும்,'' என்றாள், தங்கம்.

அ தோ... இதோ... என, தங்கம் துபாய்க்கு போய், 10 ஆண்டுகளுக்கு மேலானது.

ராஜா, நன்றாக படித்து நிறைய மார்க்குகள் வாங்கி இருந்ததால், எளிதாகவே நல்ல இன்ஜினியரிங் கல்லுாரியில், 'சீட்' கிடைத்தது. நிரஞ்சனாவே அவனுக்கு, 'பீஸ்' கட்டி, கல்லுாரியில் சேர்த்து விட்டாள்.

நிரஞ்சனா இந்தியா வந்தவள், மூன்று மாதங்கள் தங்கினாள். ரக்ஷனா மற்றும் ரஞ்சித்துக்கும் கல்லுாரி விடுமுறை என்பதால், அம்மாவுடன் வந்து இருந்தனர். அதனால், தங்கமும், மூன்று மாதம் இந்தியாவில் தங்க முடிந்தது.

மனம் முழுக்க ஆர்வத்தோடு இந்த தடவை, மூன்று மாதங்கள் ராஜாவோடு தங்கலாம் என்று ஆர்வத்தில் வந்தாள். ராஜா வளர்ந்து வாட்ட சாட்டமான இளைஞனாய், அவன் அப்பாவை உரித்து வைத்திருந்தான். ஆள் வளர்ந்து மாறியது மட்டுமல்லாது, அவன் குணமும் மாறிப் போய் இருந்தது.

அம்மா என்ற ஒட்டுதல் இப்போது அதிகம் இல்லை. முன்பெல்லாம் ஆர்வமாக அருகில் வந்து உட்கார்ந்து மணிக்கணக்காக பேசுபவன், இப்போது படிப்பு, காலேஜ், நண்பர்கள் என, அவனுடைய வட்டம் பெரியதாகி விட்டது.

அவனுடைய உலகத்தில், தன்னுடைய இடம் எதுவென அவளுக்கே புரியவில்லை. ஆனால், அவள் மனம் முழுவதும் அவன் அன்புக்காக ஏங்கியது.

அன்று, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில், 'செலக்ட்' ஆகி, ''வேலை கிடைச்சிருக்கு மாமா,'' என்று அவன் மாமாவிடம் கூறினான், ராஜா.

அருகில் இருந்த அவன் அம்மா, ''ரொம்ப சந்தோஷம்ப்பா. இந்த ஒரு நேரத்துக்காக தான் நான் இவ்வளவு காலமும் வெளிநாட்டில் கிடந்து பாடுபட்டேன். நீ, நல்ல வேலையில் நல்லபடியா இருக்கணும்ன்னு நினைச்சேன். என் கனவு நிறைவேறிடுச்சு,'' என்றாள், பூரிப்போடு, தங்கம்.

''ஆனா, எனக்கு சந்தோஷமா இல்லம்மா. நான் கேட்டனா இந்த வசதியான வாழ்க்கைய. சின்னப் பிள்ளையா இருக்கையில அம்மாவோட அரவணைப்பு, ஒவ்வொரு பிள்ளைக்கும் எவ்வளவு அவசியம். அந்த நேரத்துல நீ என்ன விட்டுட்டுத்தானே போன. யாரோ பெற்ற குழந்தைகளுக்கு தாயாக மாறி சாப்பாடு ஊட்டின, கதை சொல்லி துாங்க வச்ச, உன் சொந்த பிள்ளை இதுக்கெல்லாம் ஏங்குவான்னு ஏன் நீ நினைச்சு பார்த்தியா?

''என்னுடைய பள்ளிக்கூட கதைகளை பகிர்ந்துக்க கூட நீ கிட்டக்க இல்ல. தாயன்புக்கு ஏங்குன என்னை நீ புரிஞ்சுக்கல. எத்தனை நாள் ராத்திரி நான் அழுதிருக்கேன் தெரியுமா?

''உனக்கு, உன்னுடைய கனவு தான் பெருசா இருந்தது, அம்மா. சிட்டுக்குருவி எவ்வளவு பறக்க முடியுமோ அவ்வளவு பறக்கும். ராஜாளி எவ்வளவு பறக்க முடியுமோ அவ்வளவு பறக்கும். ஆனால், சிட்டுகுருவி, ராஜாளியாக ஆசைப்பட்டு பறக்க முடியாது.

''ஏழ்மையோ, கஷ்டமோ நாம ஒண்ணா இருந்து அனுபவிச்சு இருக்கலாமேம்மா. இளமை பருவத்தில எத்தனை வருஷம் பிரிந்து இருந்துட்டோம். இழந்த சந்தோஷம், வாழ்க்கை இனி, உனக்கோ எனக்கோ திரும்ப வருமா?

''இப்ப கை நிறைய சம்பளம் வரும். வீடு, கார், நல்ல வசதியான வாழ்க்கை... எல்லாம் நீ கனவு கண்டபடி உன் பையனுக்கு வரும். ஆனா, இழந்து போன என்னுடைய குழந்தை பருவம் மட்டும் திரும்ப வராது. அதுக்காக நீ வருத்தப்பட வேண்டாம். நீ, கண்ட கனவை தான் நான் நிறைவேத்திட்டேனே,'' என, மனதில் உள்ளதை கொட்டித்தீர்த்து விட்டு, வெளியே சென்று விட்டான், ராஜா.

அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள், தங்கம். இப்படி ஒரு வலி அவன் மனதில் இருக்கும் என்று அவளால் யூகிக்க முடியவில்லை. அவளும், இதே வலியை மகனை பிரிந்து அனுபவித்தவள் தானே. அன்று அவள் போட்ட கணக்கை இன்று தவறு என்று காலம் கூறும்போது, அவள் கண்களில், கண்ணீர் வழிந்தது. கண்ணீரை மெல்ல துடைத்தது, ஒரு கை. நிமிர்ந்து பார்த்தாள், ரஞ்சித் நின்றிருந்தான்.

''ராஜா கூறியதை கேட்டேன், தங்கம்மா. அவன் சொன்னதை தப்புன்னு சொல்ல முடியாது. அவனுடைய வேதனையை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்க அன்பு கிடைக்கலைன்னா, நானும் ராஜாவைப் போல தான் என் அம்மாவிடம் பேசியிருப்பேன். ராஜா ஏக்கம் எனக்கு புரிகிறது. வருத்தப்படாதீர்கள், தங்கம்மா. அவன் ஒருபோதும் உங்களை வெறுக்க மாட்டான்.

''இப்போது உங்களுக்கு இரு மகன்கள்...பெற்ற மகன் ஒன்று, வளர்த்த மகன் ஒன்று. அந்த நேரத்தில் நீங்கள் செய்தது உங்கள் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில். உங்கள் கோணத்தில் சரியாகத் தெரிந்த ஒன்று, அவன் கோணத்தில் தவறாக போய் விட்டது. கண்டிப்பாக, ராஜா உங்களை ஒருநாள் புரிந்து கொள்வான்,'' என்ற, ரஞ்சித்தின் வார்த்தைகளில் மனம் சற்று அமைதியடைந்தாலும், அவளுக்கு ஒன்று, மட்டும் தெளிவாக புரிந்தது. இளம் பருவத்தில் ஒரு குழந்தைக்கு மறுக்கப்படும் தாய் - தந்தை அன்பு. எவ்வளவு வளர்ந்து எப்படி வாழ்ந்தாலும் அவர்கள் மனதில் உள்ள வெற்றிடத்தை மாற்ற முடியாது என்பதை!

காலம் கடந்து பெற்ற ஞானம் மட்டுமல்ல, கடல் கடந்ததாலும் கிடைத்த ஞானம். விரக்தியில் அவளுக்கு சிரிப்பு வந்தது.

தி.வள்ளி, வயது: 66, இல்லத்தரசி. சொந்த ஊர்: திருநெல்வேலி. இவர் எழுதிய, 200 சிறுகதைகளும், 20 நாவல்களும், 10 குறுநாவல்கள் மற்றும் கவிதை, கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகள் பல போட்டிகளில் பரிசும் பெற்றுள்ளன. இதுவரை, 16 நுால்களை வெளியிட்டுள்ளார். அதில், 'சுந்தர பவனம்' என்ற நுால், நுாறு அத்தியாயங்களை கொண்டது. தன், 55வது வயதில் எழுத ஆரம்பித்து, கடந்த, 10 ஆண்டுகளில், எல்லா பிரிவுகளிலும் எழுதியிருந்தாலும், சரித்திர நாவல் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மேலும், 'வாழ்க்கையின் கடைசி நாள் வரை எழுத வேண்டும், என் எழுத்து, வாசகர்கள் எல்லாராலும் விரும்பி படிக்கப்பட வேண்டும்...' என்பதே தன் லட்சியம், என்கிறார். கதை பிறந்த கதை: இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. அந்த தாயின் மனக்குமுறலே இக்கதைக்கான கரு. 'இக்கதை, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை அந்த தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்...' என்கிறார், கதாசிரியர்.






      Dinamalar
      Follow us