
சாகித்திய அகாடமி வெளியீடு, சந்திர சென்குப்தா எழுதிய, 'பக்கிம் சந்திர சட்டர்ஜி' நுாலை, தமிழாக்கம் செய்து, அசோகமித்திரன் எழுதியது: 'வ ந்தே மாதரம்' பாடலை எழுதியவர், பக்கிம் சந்திர சட்டர்ஜி.
வந்தே மாதரம் பாடல், 'ஆனந்த மடம்' என்ற, அவர் எழுதிய நாவலில் இடம் பெற்றிருந்தது.
இதுபற்றி, 'வங்காளத்துக்கு வெளியே மேடைக்கு மேடை இப்பாட்டை பாடிய ஆயிரக்கணக்கானோரும், இதன் கோஷத்தை ஒலித்த லட்சக்கணக்கானோரும், இது வெளியான கதையை பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை...' என்றார், இந்தியாவின் முதல் ஜனாதிபதி, ராஜேந்திர பிரசாத்.
பக்கிம் சந்திரர், 'வங்க தரிசனம்' என, ஒரு பத்திரிகை நடத்தினார். இது, வங்காள மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது.
இதில், படைப்புகளில் உயர்தரம், யதார்த்தமான தன்மை, அப்பழுக்கற்ற புலமை இருந்தது என, பாராட்டினர்.
கடந்த, 1894ல், பக்கிம் சந்திரர் இறந்த பின் இந்த, 'வங்க தரிசனம்' இதழுக்கு, ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியரானார்.
ஆனாலும், பழைய பெருமைகளை அது திரும்ப பெறவில்லை.
********
இலக்கிய சித்தர் தங்கவயல் லோகிதாசர் எழுதிய, 'உலக மகா இலக்கிய மேதைகள்' நுாலிலிருந்து: ஆ ங்கில மொழியின் மிகப்பெரிய முதல் அகராதி, கி.பி., 1755ல், வெளிவந்தது. இதை, எட்டு ஆண்டுகள் உழைத்து வெளியிட்டவர், சாமுவேல் ஜான்சன். நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர்.
அகராதியில், ஓட்ஸ் என்ற தானியத்திற்கு, அவர் கொடுத்திருக்கும் விளக்கம் புகழ்பெற்றது.
ஓட்ஸ் இங்கிலாந்தில், குதிரைகள் உண்ணும் தானியம்; ஸ்காட்லாந்து மக்களை உயிர்வாழச் செய்யும் முக்கிய பொருள் என, விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், சிகரெட், முட்டாள்களின் வாயில் காணப்படும் ஒரு பொருள் என, அதில் குறிப்பிட்டுள்ளார்.
***********
பி ரான்ஸ் நாட்டு பிரபல எழுத்தாளரும், தத்துவ ஞானியுமான வால்டேர், மரணப்படுக்கையில் கிடந்த போது அவருக்கு, பாவ விமோசனம் அளிக்க தானாகவே முன் வந்தார், பாதிரியார் ஒருவர்.
'உங்களை யார் அனுப்பி வைத்தது?' என, பாதிரியாரிடம் கேட்டார், வால்டேர்.
'ஏன் கடவுள் தான், அன்புள்ள வால்டேர்...' என்றார், பாதிரியார்.
'அப்படியென்றால், அறிமுகக் கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பி இருப்பாரே. அது எங்கே?' என கேட்டு சிரித்தார், வால்டேர்.
தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைப்பதில், வால்டேருக்கு ஈடு இணையில்லை.
*********
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, சந்தான லட்சுமி எழுதிய, 'நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னிபெசன்ட்' நுாலிலிருந்து: பி ரம்ம ஞான சங்கத்தின் தலைவியாக இருந்த போது, மக்களிடையே மிகப் பிரபலமானார், அன்னிபெசன்ட் அம்மையார்.
இந்தியா குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் அவருடைய சொற்பொழிவுகள் அனைவரையும் கவர்ந்தன. அதே சமயம், இந்தியா சுயாட்சிக்கு தகுதி உடையது. அதை ஆங்கிலேய அரசு தர வேண்டும் என்பதை வலியுறுத்த, போராட்டத்தை துவங்க ஏதுவாய், 'ஹோம் ரூல்' இயக்கத்தை துவங்கினார், அன்னி பெசன்ட்.
அச்சமயம், காந்திஜியும், இந்திய விடுதலைக்காக, பல புதிய சாத்வீக முறைகளை கையாளத் துவங்கினார். அன்னி பெசன்ட்டுக்கு இது பிடிக்கவில்லை.
முதல் உலகப்போர் துவங்கியது. 'இந்தியாவுக்கு விடுதலை வழங்க உறுதி கூறினாலும், கூறாவிட்டாலும், ஆங்கிலேய பேரரசுக்கு ஆதரவாக இந்தியர்கள் உதவ வேண்டும்...' என்றார், அன்னி பெசன்ட்.
'உதவக் கூடாது...' என்றனர், இந்திய தலைவர்கள். மக்களும் இதையே ஆதரித்தனர். இருந்தாலும், இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற, அன்னி பெசன்ட்டின் மனநிலையை மனதில் கொண்டு, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'இந்திய விடுதலைக்காக ஒரு ஐரோப்பிய பெண்மணி போராடுகிறார்...' என, பத்திரிகைகள் அவரை புகழ்ந்தன.
காந்தியின், சட்ட மறுப்பு இயக்கத்தை எதிர்த்தார், அன்னி பெசன்ட். அத்துடன், மக்களும் எதிர்க்க வேண்டும் என, துாண்டினார்.
விளைவு, அன்னி பெசன்ட்டை வெறுக்க ஆரம்பித்தனர், மக்கள்.
காந்திஜியின் கொள்கைகளை தொடர்ந்து தாக்கி எழுதி வந்தார், அன்னி பெசன்ட்.
ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல், அரசியலை விட்டு விலகி, பிரம்ம ஞான சங்கத்தில் மறுபடியும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார், அன்னி பெசன்ட்.
நடுத்தெரு நாராயணன்