
காமராஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்த போதும், அவை குறித்து போதிய விளம்பரம் ஏதும் செய்யப்படவில்லை என்பது உண்மையே. அன்றைக்கு காங்கிரசை ஆதரித்து எழுதிய பத்திரிகைகள் மிகக் குறைவு. எதிர்க்கட்சியாக வளர்ந்து வந்த தி.மு.க., பத்திரிகை மற்றும் சினிமா துறைகளில் புகுந்து வலுவான பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.
இந்நிலை குறித்து மிகவும் கவலையுற்ற காங்கிரஸ்காரர்கள், காமராஜரை பார்த்து, 'நம் ஆட்சியில் சாதனைகள் ஏராளம். ஆனால், அதைப் பற்றி விளம்பரம் அதிக அளவில் செய்ய வேண்டும்...' என, கேட்டனர்.
விளம்பரம் என்ற வார்த்தையை கேட்ட போதெல்லாம், காமராஜர் கூறி வந்த பதில் இது தான்...
'எதுக்கு விளம்பரம்னேன்? அணைகள் பல கட்டியிருக்கோம். விவசாயிகள் அதனால் பயனடையுறாங்க. பள்ளிக்கூடம் கட்டியிருக்கோம். எல்லா கிராமத்திலும், 'லைட்' எரியுது. பம்ப் செட்டு ஓடுது.
'நிறைய தொழிற்சாலைகள் அமைத்திருக்கோம். ஏராளமான பேருக்கு வேலை கெடைச்சிருக்கு. இப்படி எல்லாரும் பலனை அனுபவிக்கும் போது, நம்ம சாதனை அவங்களுக்கு புரியாதா என்ன? இதுக்கு தனியா விளம்பரம் வேற செய்யணுமா என்ன?' என, கேட்போரை மடக்கி விடுவார், காமராஜர்.
*********
பொ துக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க, மதுரையை கடந்து சென்று கொண்டிருந்தனர், நேருவும், காமராஜரும்.
இருவரும் உரையாடியபடியே சென்ற போது, 'மிஸ்டர் காமராஜ், உங்கள் சொந்த ஊர், இந்த பக்கம் தானே! அப்படியே உங்க வீட்டுக்கு போய், உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்லலாம் அல்லவா?' எனக் கேட்டார், நேரு.
'அதெல்லாம் வேண்டாம். இப்போதே கூட்டத்திற்கு நேரமாகி விட்டது...' என, மறுத்தார், காமராஜர்.
ஆனால், விடுவதாக இல்லை, நேரு.
'இவ்வளவு துாரம் வந்து விட்டு, உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால், நன்றாக இருக்காது. நான் அவர்களை பார்த்தே ஆக வேண்டும். என்னை அழைத்து செல்லுங்கள்...' என, அன்பு கட்டளையிட்டார், நேரு.
பின், ஓட்டுனரிடம் காரை நிறுத்த சொல்லி, வீடுகளே இல்லாத விவசாய நிலங்களில் பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இறங்கினார், காமராஜர்.
நேருவும் பின்னாலேயே இறங்க, களை பறிக்கும் பெண்கள் கூட்டத்திலிருக்கும் வயதான பெண்மணி ஒருவரை பார்த்து, 'ஆத்தா, நான் தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னை பார்க்க நேரு வந்திருக்காரு...' எனக் கூறினார்.
உழைத்து, வியர்த்த முகத்துடன், 'காமராசு வந்திட்டியா, நல்லாருக்கியா?' எனக் கேட்டபடி, மகனை கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வந்தார், காமராஜரின் தாயார்.
தன் அம்மாவை, நேருவுக்கு அறிமுகப்படுத்தினார், காமராஜர். பின், தாயும், மகனும் அளவளாவிய காட்சியை பார்த்து, 'இப்படி ஒரு எளிமையான தலைவரா...' என, பரவசப்பட்டார், நேரு.
*********
ஈ. வெ.ரா.,வும், காமராஜரும் எதிரெதிர் அணியில் இருந்த சமயம். காங்கிரசில் மிகவும் முக்கியமான தலைவராக விளங்கியவர், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு. ஈ.வெ.ரா.,வுக்கும், காமராஜருக்கும் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர். அவருடைய பிறந்த நாள் விழா, நவ., 21, 1955ல், ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.
விழாவில், முதல்வராக இருந்த காமராஜரும் கலந்து கொண்டதும், இருவரும் சந்தித்து கொண்டதும் முக்கியமான நிகழ்வாகும்.
அந்த விழாவில், ஈ.வெ.ரா., பேசிய பேச்சு, மிகவும் குறிப்பிடத்தக்கது.
'காமராஜரிடம் அன்பு கொண்டு, என்னால் முடிந்த வழிகளில் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்ற உணர்வோடும், உணர்ச்சியோடும் ஆட்சி நடத்துகிறார்.
'அதனால், சிலருக்கு பொறாமை ஏற்பட்டு, சில எதிரிகள் இருந்து கொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். அப்படி அவர்கள் கொடுக்கிற தொல்லைகள் ஒரு போதும் வெற்றி பெற்று விடக் கூடாது.
'நான், அரசியல் தொண்டனல்ல; ஒரு சமுதாய நலத் தொண்டன். அதிலும், நம் தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபடுகிற தொண்டன். அதை முன்னிட்டு, அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும், விட்டுக் கொடுக்கவும் நான் துணிவேன்.
'காமராஜருக்கும், எனக்கும் கட்சி அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழர் நலன் என, வரும் போது, இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். மற்றபடி இருவருக்கும் இடையே எந்த சுயநல நோக்கம் எதுவுமே இல்லை...' என, கூறினார், ஈ.வெ.ரா.,
நடுத்தெரு நாராயணன்