
'ஹெரிடேஜ் டைம்ஸ்' என்ற ஆங்கில நுாலிலிருந்து: சு தந்திரம் அடைந்ததும், நவம்பர் 12, 1947ல், காந்திஜி ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய தீபாவளி செய்தி இது:
சகோதர, சகோதரிகளே, இன்று தீபாவளி. இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தீபாவளி ஏன் ஒவ்வொரு ஆண்டும் ஒளியுடன் கொண்டாடப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ராமருக்கும், ராவணனுக்கும் இடையிலான பெரும் போரில், ராமர் நல்ல சக்திகளையும், ராவணன் தீய சக்திகளையும் அடையாளப்படுத்தினர்.
ராமர், ராவணனை வென்றார். இந்த வெற்றி இந்தியாவில் ராமராஜ்ஜியத்தை நிறுவியது.
ஆனால், இன்று இந்தியாவில் ராமராஜ்ஜியம் இல்லை. அப்படியானால் தீபாவளியை எப்படி கொண்டாட முடியும்?
ராமனை மனதிற்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வெற்றியை கொண்டாட முடியும். ஏனெனில், கடவுளால் மட்டுமே நம் ஆன்மாக்களை ஒளிரச் செய்ய முடியும். அந்த ஒளி மட்டுமே உண்மையான ஒளி, என்றார்.
*******
இந்தியாவின் பெரும் பகுதிகளில் பிரிட்டிஷ் ஆட்சி கொடிக்கட்டி பறந்தது. அதன் ராணுவ அதிகாரத்துக்கு உட்பட்டு கடுமையான சவாலை எதிர்கொண்ட, 1857ம் ஆண்டு அது.
பம்பாயில், 'பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த கலகம் வெற்றி பெற்றிருந்தால், ஹைதராபாத், புனே உட்பட பல பகுதிகளை இழந்திருப்போம். பிறகு, மெட்ராஸிலிருந்தும் வெளியேறி இருப்போம்...' என்று வெளிப்படையாக கூறினார், எல்பின்ஸ்டோன் என்ற ஆங்கில அதிகாரி.
அக்.,15,1857ல் கொண்டாடப்பட்ட தீபாவளி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்திய விடுதலை போராட்ட சிப்பாய்கள், தீபாவளியின் போது, குண்டு போட்டு, பம்பாயை கைப்பற்றி, அவர்களை எதிர்ப்பவர்களையும் கொன்று விட வேண்டும். பிரிட்டிஷாரின் வசிப்பிடங்களை பின் தீ வைத்து கொளுத்த வேண்டும் என்று பல ரகசிய திட்டங்களை தீட்டியிருந்தனர்.
'இது, செயல்படுத்தப்பட்டிருந்தால், நாடு எங்கும் கலவரம் பரவி, மெட்ராசை அடைந்திருக்கும்...' என, கர்னல் ஜி.பி.மல்லேசன் எழுதிய, 'இந்திய கலகத்தின் வரலாறு 1857 - 59' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார்.
பம்பாயில் இருந்த இந்த புரட்சியாளர்கள், முதன் முதலில் ஆகஸ்டு 30, 1857ல், முஹரம் தினத்தன்று, கிளர்ச்சி செய்ய திட்டமிட்டனர். ஆட்சியாளர்களுக்கு இந்த திட்டம் கசிந்து விடவே, கிளர்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியர்களை பொறுத்தவரை, தீபாவளி ஒரு மங்களகரமான நாள். விடுதலைப் போரைத் துவக்க இதை விட சிறந்த நாள் எதுவும் இருக்க முடியாது என கருதினர்.
கிளர்ச்சிக்கான வரைபடம் தயாராக இருந்தது. இதை மோப்பம் பிடித்த, பிரிட்டிஷ் விசுவாசியான ஜமதர் சிங், ஆங்கில ராணுவ கேப்டன், மெக்கோவனுக்கு தெரிவித்து விட்டார்.
இந்திய புரட்சியாளர்கள், கோவில் பூசாரி மற்றும் வேத பயிற்சியாளரான, கங்கா பிரசாத்தை நம்பினர். மேலும், புரட்சியாளர்கள் அவர் வீட்டில் தான் சந்தித்து திட்டம் தீட்டினர்.
பிரிட்டிஷ் அரசு, இந்த கங்கா பிரசாத்தை ரகசியமாய் அழைத்து சென்று, புரட்சியாளர்களின் திட்டத்தை கூறும்படி மிரட்டல் விடுத்தனர். மேலும், ஒரு பெரிய பண வெகுமதி தருவதாக கூறியதால் அவர்களிடம் பணிந்தார், கங்கா பிரசாத்.
அவர் வீட்டிலேயே, ஆங்கிலேய அதிகாரிகள் ஒளிந்து கொண்டனர். ஒருவாரம் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து, புரட்சியாளர்களின் கூட்டங்களை கண்காணித்தனர்.
அக்., 11ம் தேதிக்குள் அனைத்து தகவல்களும் அவர்களுக்கு கிடைத்து விட்டன. பிரிகேடியர் ஜெ.எம்.ஷ்ரோட் அன்றே புரட்சியாளர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புரட்சிக்கு தேர்வு செய்த தீபாவளி நாளையே, புரட்சியாளர்களை தண்டிக்கும் நாளாக தேர்ந்தெடுத்தனர், ஆங்கிலேயர்கள்.
அதன்படி, தீபாவளி அன்று, புரட்சியாளர்களின் தலைவர்கள், பீரங்கியால் சுடப்பட்டனர்.
நடுத்தெரு நாராயணன்