
அக்., 31 - சர்தார்வல்லபாய் படேல் பிறந்த நாள்
டாக்டர் ஆனைவாரி ஆனந்தன் எழுதிய, 'அஞ்சா நெஞ்சன்!' என்ற நுாலிலிருந்து:
'இ ரும்பு மனிதர்' என்பதற்கு மிகவும் பொருத்தமானவர், சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு, எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பதே குறிக்கோள்.
பொறுப்பிலிருந்து தட்டிக்கழிக்க தெரியாது; யாருக்கும் பயந்து அஞ்சி பேசும் பழக்கம் கிடையாது.
இந்த கடுமையான அணுகுமுறைகள் பற்றி, காந்திஜியிடம் முறையிட்டனர், பலர்.
'படேல் செய்யும் எந்த செயலிலும் நியாயம் இருக்கும்...' என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தினார், காந்திஜி.
******
விஷ்ணு பிரபாகரன் எழுதிய, 'சர்தார் வல்லபாய் படேல்!' எனும் நுாலிலிருந்து:
நாக்பூரில், போர்சத் எனும் தாலுகாவில், மக்கள் மீது, 'தலைவரி' என்ற ஒன்றை விதித்தது, பிரிட்டிஷ் அரசு.
அது என்ன தலைவரி?
இந்த கிராமப் பகுதி களில், கொள்ளையர் கூட்டம் ஒன்று, வீடு வீடாக கொள்ளையடித்தது. இது, ஒரு கட்டத்தில் அதிகமானபோது, 400 காவலர்களை நியமித்தது, பிரிட்டிஷ் அரசு. கொள்ளையர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற ஏற்பாடு செய்யப்பட்ட காவலர்களுக்கு, ஊர் மக்கள் பணம் தர வேண்டும். அது தான் தலைவரி.
'மக்கள், குற்றவாளிகளுக்கு ஊக்கமளிப்பதால், மக்கள் தான் அந்த செலவை ஏற்க வேண்டும்...' என, வாதிட்டது, பிரிட்டிஷ் அரசு.
'அரசாங்கத்தின் நீதிமுறை காரணமாகத்தான், கொள்ளையர்கள் தோன்றுகின்றனர். அதற்கு, நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்?' என்றனர், மக்கள்.
இந்த விஷயம், வல்லபாய் படேலிடம் வந்தது.
படேல், தலையிட்டு, மக்களை அமைதியாகவும், நாணயமாகவும் நடந்துக்கொள்ள சொன்னதோடு, கொள்ளையர்களிடமும் பேசினார்...
'குற்றம் புரிபவர், பொதுமக்களை தொந்தரவு படுத்தும் தொழிலை விட்டு விட வேண்டும். அப்படி முடியவில்லையெனில், இந்த பகுதியை விட்டு வேறு எங்காவது ஓடி விட வேண்டும்...' என்று கண்டிப்புடன் கூறினார், படேல்.
அதன்பின், கொள்ளையர்கள், போர்சத் தாலுகா முழுவதும் எந்த கிராமத்திலும் காணப்படவில்லை.
பின், அரசாங்கத்திடமும் வாதிட்டார், படேல்.
கொள்ளைக்காரர்களை பிடிக்க, அவனைப் போன்ற மற்றொரு கொடிய கொள்ளைக்காரனின் உதவியை நாடி, அவனுக்கு துப்பாக்கி முதலிய ஆயுதங்களை அளித்து, இஷ்டப்படி கொள்ளையடிக்க வைத்தது, அரசு. கொலை, களவு கூட நடந்தது.
ஆக, 'அரசாங்கம் தான் கொள்ளையர்களை உருவாக்கி வருகிறது. அதே அரசு, ஒரு குற்றமும் அறியாத மக்களிடமிருந்து வரி வசூல் செய்து கொடுமைப்படுத்துகிறது...' என, குற்றம் சாட்டினார்.
இதன்பின், நிலைமையை ஆராய்ந்து, உள்துறை செயலர் வாயிலாக தகவல்களை சேகரித்து, தலைவரியை வாபஸ் பெ ற்றது, பிரிட்டிஷ் அரசு.
இதனால், மக்களிடம், படேலின் புகழ் ஓங்கியது.
இச்செய்தியை கேள்விப்பட்டு, 'நிஜ சர்தார் நீங்கள் தான்...' என பாராட்டினார், காந்திஜி.
'சர்தார்' என்பதற்கு, தலைவர் என்று அர்த்தம்.
*****
சுதந்திர இந்தியாவுக்கு யார் பிரதமர் என கேள்வி எழுந்தது. நேருவா, படேலா? என, ஒட்டெடுப்பு நடந்தது.
ஓட்டெடுப்பில், படேல் வெற்றி பெற்றார். ஆனால், 'நேருவுக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள்...' என, காந்திஜி கூற, உடனே, விட்டுக் கொடுத்தார், படேல்.
இது முதல் தடவை அல்ல.
டிசம்பர், 1929ல், லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தலைவர் தேர்தல் நடந்தது. தலைவராக படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், நேருவுக்காக, தலைமை பதவியை விட்டுக் கொடுத்தார், படேல்.
- நடுத்தெரு நாராயணன்

