
நவ., 14 - நேரு பிறந்த நாள்
நவ., 15 - வினோபா நினைவுநாள்
இந்திய பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேருவும், பிரபல தொழிலதிபர் டாடாவும் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, நேருவிடம், 'இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே செல்கிறதே... இது, நாட்டை பாதிக்காதா?' என்றார், டாடா.
அதற்கு, 'பிறக்கும் குழந்தைகள் வயிறுடன் மட்டுமா பிறக்கின்றன. உழைப்பதற்கு இரண்டு கைகளுடனும் அல்லவா பிறக்கின்றன...' என்று சொல்ல, சுற்றியிருந்தோர், நேருவின் பதிலை ரசித்தனர்.
********
இந்தியா சுதந்திரம் பெறும் முன், தலைநகர் புதுடில்லி அருகில் காசியாபாத் ரயில் நிலையத்திற்கு, நேரு வருகிறார் என, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், கடல் அலையென திரண்டிருந்தது.
ரயிலில் வந்து இறங்கிய, அத்தலைவரை நேரில் காணவும், மாலையிட்டு மரியாதையுடன் வரவேற்கவும் மக்கள் முண்டியடித்து முன்னேறினர்.
ரயில் நிலையத்தை கூட்டிப் பெருக்கும் துப்புரவு தொழிலாளி ஒருவரும், தலைவரைக் காண கூட்டத்தினரிடையே நெருக்கி தள்ளிக்கொண்டு முன்னேற முனைந்த போது, 'இழிந்த வேலை செய்பவன் நீ, ஒதுங்கி நின்று பார்; எங்களுடன் நிற்காதே...' என்று அதட்டினர், கூட்டத்தில் இருந்தவர்கள்.
தன் குலத்தையும், வேலையையும் குறை கூறியதை எண்ணி வருத்தப்பட்ட துப்புரவு தொழிலாளி, தலைவரின் முகத்தையாவது பார்க்கலாம் என, சற்று ஓரமாக நின்று கொண்டிருந்தான்.
மக்கள் வெள்ளத்திற்கு நடுவே, அவர்களது அன்பான மரியாதையை ஏற்றபடி வந்த நேரு, ஓரமாக நின்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்த துப்புரவு தொழிலாளியை கவனித்து, விட்டார். உடனே, கூட்டத்தையும், போலீஸையும் தள்ளிவிட்டு, வேகமாக அந்த துப்புரவு தொழிலாளி நின்ற இடத்தை நோக்கி சென்றார். 'என் இனிய இந்திய சகோதரனே என்னை பார்க்க விரும்பிய நீ ஏன் ஒதுக்குப்புறமாக ஒதுங்கி நிற்கிறாய். இதோ உன் அருகில் நிற்கிறேன். என்னைப்பார், உன் ஆசைத்தீரப் பார்...' என்றவர், துப்புரவு தொழிலாளியின் தோளில் கை போட்டபடி அணைத்து நின்று, புகைப்படக்காரர்களை அழைத்து, தங்களை புகைப்படம் எடுக்க சொன்னார்.
*********
சாமியார் ஒருவருக்கு, அப்போது பிரதமராக இருந்த, நேருவை சந்தித்து, ஆசி கூறி, புகழ்பெற ஆசை! அதனால், அவரை சந்திக்க அனுமதி கேட்டு வந்தார். ஒரு கட்டத்தில், அவருக்கு, 10 நிமிடங்கள் ஒதுக்க சம்மதித்தார், நேரு.
நேருவின் அறைக்குள் நுழைந்தார், சாமியார்.
மரியாதை நிமித்தம், எழுந்து வந்து சாமியாரை வரவேற்றார், நேரு.
சாமியாரோ, தன் சக்தியை காட்ட விரும்பி, 'ஆ... ஊ...' என, மந்திரம் சொல்லி, கைகளை வேகமாய் அசைத்து, ஒரு மாலையை வரவழைத்து, அதை நேருவுக்கு போட நெருங்கினார்.
இது, நேருவை ஆச்சரியப்படுத்தவில்லை; மாறாக கோபப்படுத்தியது.
'வித்தை காட்டுகிற மனிதனா, நீ? நான்சென்ஸ், 'கெட் அவுட்!' எனக்கூறி, அவரை வெளியே விரட்டி விட்டார்.
பத்து நிமிட சந்திப்பு, 10 வினாடிகளில் முடிந்தது.
***********
கமலா பத்மகிரீஸ்வரன் எழுதிய, 'வினோபாபாவே வாழ்வும், வாக்கும்!' எனும் நுாலிலிருந்து:
மஹாராஷ்டிர மாநிலம், கொலபா ஜில்லாவில் உள்ள, காகோதே என்ற கிராமத்தில் பிறந்தவர், வினோபா. இங்கிருந்து, 1916ல், இன்டர்மீடியட் பரிட்சை எழுத, பம்பாய்க்கு புறப்பட்டவர், வழியில் பரிட்சை எழுதப் போவதில்லை என, முடிவு செய்து, சூரத் நகரில் இறங்கி, தந்தைக்கு கடிதம் எழுதினார். அதில்...
'தந்தையே, பரிட்சை எழுத நான் பம்பாய்க்கு செல்லவில்லை. என் விருப்பப்படி வேறு ஒரு இடத்திற்கு செல்கிறேன். எங்கு நான் சென்றாலும், இருந்தாலும் குடும்பத்தினருக்கு தலைகுனிவு ஏற்படும் விதமாக நான் எதுவும் செய்ய மாட்டேன்!' என்று எழுதியிருந்தார்.
சில மாதங்கள், காசியில் தங்கினார்.
பிப்., 4, 1916ல், பனாரஸ் ஹிந்து சர்வகலா சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார், காந்திஜி.
அவ்விழாவில், காந்திஜி பேசிய பேச்சை எல்லாப் பத்திரிகைகளிலும் விபரமாக வெளியிட்டிருந்தன.
இதை படித்த, வினோபா, காந்திஜியை சந்திக்க, 'கொச்சரம்' ஆசிரமத்திற்கு (இது பின்னர், சபர்மதிக்கு மாற்றப்பட்டது) சென்றார். அங்கு, காந்திஜியை சந்தித்தார்.
காந்திஜியின் ஆரவாரமில்லாத பணி, அளவான வார்த்தைகள், வினோபாவை கவர்ந்தன.
காந்திஜிக்கும், வினோபாவின் அறிவும், ஆற்றலும், பண்பும் பிடித்து விட்டது.
வி னோபாவின் இயற்பெயர், வினாயக். இதை, வினோபா என, மாற்றி பெயரிட்டவர், காந்திஜி.
அதே சமயம், வினோபா வீட்டிலிருந்து வெளியேறி விட்டதை அறிந்த, காந்திஜி, 'உன் தந்தைக்கு கடிதம் எழுதி இங்கு இருப்பதாக கூறு...' என்றார்.
அத்துடன், காந்திஜியே, வினோபாவின் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்...
'உங்களுடைய, வினோபா என்னுடன் இருக்கிறான். இந்த சிறு வயதிலேயே உங்கள் மகனுக்கு ஆன்மிகப் பண்பும், பக்குவமும் வந்து விட்டது. இந்நிலையை அடைய நான் எத்தனையோ ஆண்டுகள் முயன்றுள்ளேன்...' என, முடித்திருந்தார்.
*******
காந்திஜி, வார்தாவில் ஆசிரமம் ஒன்றை நிறுவி, அதனை நிர்வகிக்க, வினோபாவை அனுப்பினார்.
இதை, வினோபா எப்படி நடத்தினார் தெரியுமா?
ஆசிரமத்திற்கு தேவையான பொருட்களை, ஆசிரமத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டுமென அயராது பாடுபட்டார்.
அவரவர் சம்பாத்தியத்திற்கு ஏற்பவே உணவு என்ற கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்பினார், வினோபா.
மதிய உணவு எல்லாருக்கும் ஆசிரமத்தில் ஒன்று போலவே இருக்கும். ஆனால், இரவு உணவை அவரவரின் ஊதியத்திற்கு ஏற்ப தான் உண்ண முடியும்.
சில சமயம், சிலர் ரொட்டி சாப்பிடுவதுடன் திருப்தி அடைய வேண்டி வரும். சில சமயம், அரை வயிற்றுக்கு தான் சாப்பாடு கிடைக்கும்.
*****
க டந்த, 1940ல், தனிநபர் சத்தியாகிரகத்துக்கு முதல் வீரராக, வினோபா, காந்திஜியால் தேர்வு செய்யப்பட்டார்.
உலக மகாயுத்தத்துக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப இந்தியர்களை, காந்திஜி அழைத்தபோது, வினோபாவையே முதல் ஆளாக தேர்ந்தெடுத்தார். அவரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அகிம்சையும், சத்தியாகிரகமும் உருவானவர்! என்று கூறினார் காந்திஜி.
இதன் பின் தான், இந்திய அளவில் பிரபலமானார், வினோபா.
******
கா ந்திஜி இறக்கும்போது, 'ஹேராம்' என கூறினார். நவம்பர் 15, 1982ல், காலை 9:15 மணிக்கு இறக்கும் தருவாயில், வினோபா 'ராம் ஹரி... ராம் ஹரி...' என்றபடி உயிர் துறந்தார்.
- நடுத்தெரு நாராயணன்

