
ஒரு கூட்டத்தில், தமிழறிஞர், கி.ஆ.பெ.விஸ்வநாதம் பேசியது:
இந்த காலத்து பெண்கள் மெலிந்து, ஒல்லியாக இருப்பதை பார்த்தால், இன்னும் கொஞ்ச காலத்தில், மனித சமூகமே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது...
என் பாட்டியின் தாயார் உலக்கையைப் பிடித்து, உரலில் நெல் குத்தி வந்தாள். என் பாட்டி, ஆட்டுக் கல்லில் மாவு அரைப்பாள். என் தாயாருக்கோ, அம்மியில் துவையல் அரைக்கும் அளவுக்கு பலம் இருந்தது. என் மனைவி கையில் கரண்டி பிடிப்பதோடு சரி. என் மகளோ ஊசியும், நுாலும் வைத்திருக்கிறாள். என் பேத்தி என்ன வைத்திருப்பாளோ தெரியவில்லை.
****
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, ராஜாஜி இருந்த போது, அவர் நண்பர் ஒருவர், குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள, மாவட்ட ஆட்சித் தலைவர் வாங்கும் லஞ்சத்தை குறிப்பிட்டு, அவரை மாற்ற வேண்டும் என்று, ராஜாஜிக்கு கடிதம் எழுதினார்.
'அந்த ஆட்சித்தலைவரை மாற்ற முடியாது. ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்துக்கு நான் மாற்ற விரும்பவில்லை. அந்த ஆட்சித் தலைவர் மீதுள்ள ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை அனுப்புங்கள். நாம், அவரை ஜெயிலுக்கு அனுப்புவோம்...' என்று பதில் எழுதினார், ராஜாஜி.
*****
சு கி. சிவம் எழுதிய, 'சொன்னார்கள்' என்ற நுாலிலிருந்து:
ஒ ருமுறை சட்டசபையில் கலைஞர் கருணாநிதியின் வழுக்கைத் தலை குறித்து பேச்சு வந்தது. பலர் அது முதுமையை காட்டுவதாக கூறினர். உடனே கலைஞர், 'வழுக்கை என்பது முதுமையின் அடையாளமல்ல; இளமையின் அடையாளம். தேங்காய் பறிக்கும்போது, இளசா நாலு காய் பறிக்க சொல்வர். அவன், நாலு வழுக்கைகளை உடனே பறித்து போடுவான். தேங்காயில் வழுக்கை, இளமை! ஆக, என் வழுக்கையும் இளமையாய் இருப்பதையே குறிக்கிறது...' என்றார்.
அனைவரும் அந்த சமாளிப்பை கேட்டு ரசித்தனர்!
*****
தமிழறிஞரான, பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மகிபாலன்பட்டியில் வாழ்ந்த காலம். அப்போது, அந்தப் பகுதியில், திருடர் பயம் அதிகமாக இருந்தது. இரவு நேரத்தில் வீட்டிற்கு காவலாகவும், தமக்கு உதவியாகவும் இருக்கும் பொருட்டு, ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார், பண்டிதமணி.
பண்டிதமணியிடம், 'நீங்கள் காவலுக்கு நியமித்திருக்கிறவர் கால் ஊனம் உள்ளவராயிற்றே! அவரால், எப்படி காவல் புரிய முடியும்?' என்று கேட்டார், உறவினர் ஒருவர்.
சிரித்துக்கொண்டே, 'வேறு ஆள் கிடைக்கவில்லை. மேலும், ஆபத்து வேளையில், அத்தகைய ஆள் என்னை விட்டு போக மாட்டான் அல்லவா?' என்றார், பண்டிதமணி.
- நடுத்தெரு நாராயணன்

