
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த, நெ.து.சுந்தரவடிவேலு அப்போதைய முதல்வர், ராஜாஜியின் அபிமானத்தை பெற்றவர்.
'பாதி நாள் கல்வி, மீதி பாதி நாள் குலக்கல்வி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார், ராஜாஜி.
இத்திட்டத்தை, மாநிலம் முழுவதும் சென்று விளக்கி அறிமுகப்படுத்துவதை, சுந்தரவடிவேலுவிடம் ஒப்படைத்தார், ராஜாஜி. அவரும் அதை சிறப்பாக செய்தார்.
சுந்தரவடிவேலுவின் சகலை, தி.மு.க.வைசேர்ந்த 'குத்துாசி' குருசாமி. இருவரும் ஒரே தெருவில் குடியிருந்தனர். ஒருநாள் தன் மகன் திருவள்ளுவனுடன், அவர் வீட்டிற்கு சென்றிருந்தார், சுந்தரவடிவேலு.
ராஜாஜியின் புதிய கல்விமுறையில், 'குத்துாசி' குருசாமிக்கு உடன்பாடில்லை. அதை வன்மையாக எதிர்த்தார். சுந்தரவடிவேலு அதனை ஆதரித்து பேசுவதை அறிந்து வருந்தி, ராஜாஜியை கடுமையாக தாக்கி பேசினார், குத்துாசி. அருகில் இருந்த, திருவள்ளுவன் குறுக்கிட்டான்.
ராஜாஜியை நேரில் சந்தித்த அனுபவம் அவனுக்கு, உண்டு.
'குத்துாசி' குருசாமி, ராஜாஜியை தாக்கி பேசிய போது...
'நீங்கள் சொல்வது தவறு, பெரியப்பா. அவர் ரொம்ப நல்லவர்...' என்றான், திருவள்ளுவன்
அதைக்கேட்ட, 'குத்துாசி' குருசாமி சிரித்துக்கொண்டே, 'உனக்கு எப்படி தெரியும், ராஜாஜியை? நீயோ குழந்தை...' என வாயடைக்க முயன்றார்.
'குழந்தைக்கே சரியாகத் தெரியும் அவர் எவ்வளவு பெரியவர் என்று. என்னைப்போலச் சிறிய குழந்தையிடம் அழகாக பேசுவார்; அன்பாக இருப்பார். குழந்தையிடம் அன்பாக இருக்கும் எந்தப் பெரியவரும் கெட்டவராக இருக்க முடியாது...' என்று ஒரு போடு போட்டான்.
'அப்படியானால், ஏழைப்பிள்ளைகளின் படிப்பை ஏன் கெடுக்கிறார்...' என்று மடக்க முயன்றார், 'குத்துாசி' குருசாமி.
'எல்லாப் பெரியவர்களுக்கும் ஏதாவது ஒரு பிடிவாதம் இருக்கும். அவருக்கு படிப்பை பற்றிய பிடிவாதம். அவ்வளவு தான்...' என்றான், திருவள்ளுவன்.
திகைத்து போனார், 'குத்துாசி' குருசாமி.
********
நர்மதா பதிப்பகம் வெளியீடு, அப்பாஸ் மந்திரி எழுதிய, '200 பிரபலங்கள் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்!' என்ற நுாலிலிருந்து: க விஞர் ஒருவர், 'நா ன் ஏன் உயிர் வாழ்கிறேன்' என்ற தலைப்பில், கவிதை எழுதி, தபாலில் பெர்னாட்ஷாவுக்கு அனுப்பி, கருத்துக் கேட்டார்.
கவிதையோ, சுத்த பேத்தலாக இருந்தது. கரு, நடை, கையெழுத்து எதுவும் சரியில்லை. படிக்கும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை.
'கவிஞரே... உன் கவிதையை எடுத்துக்கொண்டு நீயே நேரில் வராமல், தபாலில் அனுப்பி வைத்தாய். அதனால் தான் நீ இன்னும் உயிர் வாழ்கிறாய்...' என்று பதில் எழுதி அனுப்பினார், பெர்னாட்ஷா.
********
ஒரு சமயம், ராமகிருஷ்ண பரமஹம்சரை, ஒருவர் சந்தித்து, 'அன்று ஓர் இரண்யனை அழிப்பதற்காக கடவுள், நரசிம்ம அவதாரம் எடுத்தாரே. இன்று இரண்யனை விட, கொடியவர் பலர் நாட்டில் உள்ளனரே. கடவுள் ஏன் அவதாரம் எடுக்கவில்லை...' எனக் கேட்டார்.
அதற்கு, 'அன்று ஒரு பிரகலாதன் இருந்தான்.இன்று ஒருவர் கூட, பிரகலாதனாக இல்லையே...' என, ராமகிருஷ்ணர் பதிலளிக்க, கேள்வி கேட்டவர், 'கப் சிப்!' ஆனார்.
நடுத்தெரு நாராயணன்

