
நாடகம் ஒன்றில், ஆணவம் மிக்க ஜமீன்தாராக நடித்தார், அண்ணாதுரை. 'ஏய் இங்கே வா...' என்று பணியாளை அழைப்பார்.
பணியாளும், பதறி ஓடிவந்து நிற்பான். 'இந்தா, என் காலை எடுத்து நாற்காலி மீது வை...' என்பார்.
தன் காலை அசைக்க கூட, வேலைக்காரனை அழைக்கும் ஆணவத்தை, அற்புதமாய் வெளிப்படுத்த, கூட்டம், அவர் நடிப்புக்கு கை தட்டியது.
இன்னொரு முறை, 'சந்திரதோயம்' நாடகத்தில், துரைராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், அண்ணாதுரை.
கதைப்படி அவர் விஷம் குடிக்க வேண்டும். உருக்கமாக பேசிக்கொண்டே, விஷக் கோப்பையை கையில் எடுத்தார்.
பார்த்தவர்கள் பதறினர். அதில் ஒருவர் பதறி எழுந்து, 'அண்ணா விஷம் குடிக்காதீங்க... அண்ணா குடிக்காதீங்க...' என கத்தி, நாடகத்தையே நிறுத்தி விட்டார்.
அந்த அளவுக்கு, அண்ணாதுரை நடிப்பு தத்ரூபமாக இருந்ததாம்.
ர ஷ்ய நாட்டில், இந்திய நடிகர் மற்றும் நடிகையரை அழைத்து, பாராட்டி விருது வழங்கி கவுரவித்தது, அந்நாட்டு அரசு. அதில் பங்கேற்றவர்களில் என்.எஸ்.கிருஷ்ணனும் ஒருவர். இதற்காக, அவர் சொந்த ஊரான நாகர்கோவிலில் உள்ள, 'டென்னிஸ் கிளப்பில்' பாராட்டு விழா நடந்தது.
அந்த கிளப்பில் பெரிய பணக்காரர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். சிலர் அவரை பற்றி பேசும் போது, 'என்.எஸ்.கிருஷ்ணன், தங்கள் கிளப்பில் நிரந்தர தலைவராக இருக்க வேண்டும்...' என்று பேசினர்.
அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன், 'நான் இந்த டென்னிஸ் கிளப்பில் சிறு வயதில் வேலை செய்திருக்கிறேன். எனக்கு மாத சம்பளம், மூன்று ரூபாய். இதை வாங்கி கொண்டிருந்த என்னை இந்த கிளப்புக்கு தலைவராக இருக்கும்படி கூறியது, உண்மையில் என்னை பெருமைப்படுத்துவதாக உள்ளது.
'இப்போது உள்ளவர்களுக்கு என்னுடைய பழைய கதை எதுவும் தெரியாது. எனக்கு அப்போது சம்பளம் கொடுத்த மேனேஜர், இப்போதும் இருக்கிறார், அதே மேனேஜராக...' என்றார்.
***********
விகடன் பிரசுரம் வெளியீடான, பா.முருகானந்தம் எழுதிய, 'குஷ்வந்த் சிங்' நுாலிலிருந்து: குஷ்வந்தின் நெருங்கிய நண்பர், மன்சூர் காதிர். பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இதனால், பாகிஸ்தான் சென்றார், குஷ்வந்த் சிங். அங்கு, ஜின்னாவின் பிறந்த நாள், நுாற்றாண்டு விழாவாக நடந்தது; அதில் பேசினார், குஷ்வந்த் சிங். விழா முடிவில் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது.
'பாகிஸ்தான் வளர்ச்சி குறித்தும், இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் உங்களால் ஒப்பீடு செய்ய முடியுமா?' என்று கேட்டனர்.
அக்கேள்விக்கு, குஷ்வந்த் சிங் நகைச்சுவையாக இப்படி கூறினார்...
'இந்திய நேரத்தை விட பாகிஸ்தானியர்கள், 30 நிமிடம் பின் தங்கியிருக்கிறீர்கள். ஆனால், தேச முன்னேற்றத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான், 30 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது...' என்றார்.
அவர் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து அரங்கமே சிரித்தது!
தொடர்ந்து... 'பாகிஸ்தானில் மசூதிகள் தான் அதிகம் கட்டப்படுகின்றன. இந்த முனைப்பை, பாகிஸ்தானியர் தொழிற்சாலைகள் அமைப்பதிலும், உள் கட்டமைப்பை உருவாக்குவதிலும் காட்டினால் தான் முன்னேற முடியும்...' என, குஷ்வந்த் சிங் கூற, இதையும், வரவேற்று கைதட்டியது, கூட்டம்.
நடுத்தெரு நாராயணன்

