
நாகை மனோகரன் எழுதிய, 'சீர்த்திருத்த செம்மல் ராஜாராம் மோகன்ராய்!' என்ற நுாலிலிருந்து:
கடந்த, 10ஆம் நுாற்றாண்டில், 'சதி' எனும், கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம் நம் நாட்டில் இருந்தது.
இதை கடுமையாக எதிர்த்து போராடி வெற்றி பெற்றார், ராஜாராம் மோகன்ராய்.
இதற்கு பின்னணி உண்டு.
கடந்த, 18 ஆம் நுாற்றாண்டில், ஒருநாள் வங்காளத்தில், ஐதீகமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்தினார். அம்மனிதரை சிதையில் ஏற்றும் நேரம் வந்தது. மனைவி, துக்கத்தில் சிதைந்த ஓவியம் போல் கிடந்தார்.
பிணத்தை எரியூட்டும் நேரம் நெருங்கியது. அன்னத்தின் சிறகுகளை ஒடித்துப் பொசுக்குவதற்கென்றே வந்தவர்கள் போல் சிலர் கம்புகளுடன், தோன்றினர்.
இறந்த மனிதருக்கு எரியூட்டப்பட்டது. தாரை தப்பட்டைகள் முழங்கின.
அந்த பெண்ணையும் எரிக்க சிதையில் தள்ள முயன்றனர். அவள் தப்பி ஓட, தடியோடு வந்தவர்கள், அந்த பெண்ணை அடித்து வீழ்த்தி, அனலில் தள்ளினர்.
அவள் புழுவாய் துடித்து, இறந்தாள்.
இந்த கோர நிகழ்ச்சியை, சிறுவனான, ராஜாராம் மோகன் ராயின் கண்கள் துக்கத்தோடு பார்த்தன.
இறந்தவள், அவர் அண்ணி, 17 வயதே நிரம்பியவர். அதாவது, அவரது அண்ணன் ஜகமோகன் இறந்தபோது, அண்ணி, உடன்கட்டை ஏற்றப்பட்ட அந்த நிமிடம் தான், ராஜாராம் மோகன் ராயின் மனதில், 'சதி'யை ஒழித்துக்கட்டுவேன் என்ற, வைராக்கியம் எழுந்தது.
சாதித்தும் காட்டினார், ராஜாராம் மோகன்ராய். 'சதி'யை ஒழிக்க, பிரிட்டிஷ் அரசு பிரதிநிதியான வில்லியம் பென்டிங் பிரபு, 1829ல் சட்டம் இயற்றினார்.
********
காலச்சுவடு பதிப்பகம் வெளியீடான, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய, 'எழுதாக்கிளி!' என்ற நுாலிலிருந்து:
மதுரை, அம்பேத்கர் சாலையில் மாவட்ட நீதிமன்றம் அருகே, தமிழக முன்னாள் அமைச்சர், கக்கன்ஜிக்கு ஒரு சிலை உள்ளது.
கிழக்கு பக்கமாக திரும்பியிருக்கும், அந்த சிலை.
கக்கன்ஜி சிலைக்கு பின்புறம், மேற்கே திரும்பிய வண்ணம் நடிகர், சிவாஜி கணேசனின் சிலை உள்ளது.
கக்கன்ஜி, இரு கைகளையும் முன்புறமாக தொங்கவிட்டு, கைகளை பிணைத்தபடி, காலில் செருப்பு இல்லாமல் எளிமையாக நிற்பது போல் இருக்கும் அந்த சிலை.
சிவாஜி சிலையோ, இரு கைகளையும் பின்புறம் கட்டியவாறு நிமிர்ந்து கம்பீரமாய் இருக்கும்.
சிவாஜி, முக்குலத்தோர் ஜாதியின் அடையாளம். அதனால், கம்பீரமாய் நிற்கிறார்.
கக்கனோ, அடக்கி ஒடுக்கப்பட்ட, ஜாதியை சேர்ந்தவர். அதனால், கைகளை முன்கட்டி, எளிமையாக நிற்கிறார் என, பலர் கூறுவது உண்டு.
ஆனால், சிவாஜி நிஜ வாழ்க்கையில் அப்படி நடந்து கொள்ளவில்லை.
கடந்த, 1970ல், சிவாஜி கணேசனுக்கு, ஒரு பாராட்டு விழா நடந்தது. அதில், அவருக்கு தங்கச் சங்கிலி வழங்கப்பட்டது.
உடனே, அதை ஏலம் விட்டார், சிவாஜி. ஏலத்தில், 50 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
அந்த பணத்தை, ஏழ்மையில் இருந்த, கக்கன்ஜிக்கு, உடனே வழங்கி விட்டார், சிவாஜி.
******
சுவாமி சுகபோதானந்தா எழுதிய, 'அகமே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' என்ற நுாலிலிருந்து:
யோகக்க லையின் முன்னோடி பதஞ்சலி முனிவர். இவர், கருத்து சொல்வதில் மூன்று ரகம் உள்ளது என்கிறார், அவை:
முதலாவது - தர்க்கம்
இரண்டாவது - குதர்க்கம்
மூன்றவது - விதர்க்கம்.
தனக்கென ஒரு கருத்தை உருவாக்கி வைத்துக் கொள்வது, தர்க்கம்.
தன் கருத்து தான் சரி என, காரணங்களை அடுக்கிக்கொண்டே போவது, குதர்க்கம்.
அதே கருத்துக்கு, மாறுபட்ட கருத்தை உருவாக்கி, இரண்டில் எது சரியானது என, கண்டு உணர்வது, விதர்க்கம், என்று விளக்கமளித்தார்.
நடுத்தெரு நாராயணன்

