
ஜன., 30 காந்திஜி நினைவு நாள்
கடந்த, 1934ல், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், காந்திஜி. திறந்த காரில் நின்றபடியே, திரளான மக்களை பார்த்து, கை அசைத்தபடி வந்தார்.
அப்போது, காரில் இருந்த, அவினாசி லிங்கம் செட்டியார், காந்திஜியிடம், 'பாபுஜி மக்கள் உங்கள் பக்கம் இருக்கின்றனர் என்பது உண்மை தான். அதே சமயம், மக்களோடு மக்களாக யாராவது எதிரியும் இருக்கக்கூடும் அல்லவா? உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்...' என்று கவலையோடு கேட்டார்.
அதற்கு, 'பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவன், உயிரை பற்றிக் கவலைப்படக்கூடாது. அதற்கு பயந்து எப்போதும் பாதுகாவலோடு செல்பவன் பொதுவாழ்க்கையில் ஈடுபட தகுதியற்றவன். இந்த திறந்த கார் போல என் நெஞ்சையும் திறந்தே தான் வைத்திருக்கிறேன். துப்பாக்கியால் சுடுகிறவன் சுடட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை...' என்றார், காந்திஜி.
******
கடந்த, 1942ம் ஆண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, காந்திஜி, கஸ்துாரிபா காந்தி, சரோஜினி நாயுடு மற்றும் அவரது சகாக்களும் சிறை வைக்கப்பட்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆகாகான் மாளிகை. அங்கு, காந்திஜியுடன் பேசிக் கொண்டிருந்தார், சரோஜினி நாயுடு.
'அண்ணலே, தங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். கேட்கலாமா?' என்றார், சரோஜினி நாயுடு.
'ஓ... தாராளமாக கேளுங்கள்...' என்றார், காந்திஜி.
'ஆண்டவன் ஏழைகளிடம் ரொட்டி வடிவில் வருகிறான் என்ற வாக்கியத்தை சொன்னவர் யார்?' என்று கேட்டார், சரோஜினி நாயுடு.
உடனே, 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. ஆனால், எங்கே கேட்டேன் என்று தெளிவாக சொல்லத் தெரியவில்லை. யார் இந்த அழகான நீதியை சொன்னது? அவர் நிச்சயம் நன்கு கற்றறிந்த ஒரு பெரியவராகத்தான் இருக்க வேண்டும்...' என்றார், காந்திஜி.
அதைக்கேட்டு புன்னகைத்த, சரோஜினி நாயுடு, 'அந்தக் கற்றறிந்த பெரியவர் தாங்கள் தான். தங்களின், 'ஹரிஜன்' பத்திரிகையில் தான் இதை முதன் முதலில் எழுதினீர்கள்...' என்றார்.
அதைக்கேட்டு சிரித்தார், காந்திஜி.
*******
எந்த ஒரு பொருளையும் வீணாக்க மாட்டார், காந்திஜி. தனக்கு வரும் கடிதங்களின் மேலுறைகளை பிரித்து, உள்புறம் காலியாக இருக்கும் இடத்தில் குறிப்புகளையோ, கடிதங்களையோ எழுதி அனுப்புவார்.
அப்படி கடிதங்களை பெற்றவர்கள் ஒரு நாள், காந்திஜியை சந்தித்து, 'பாபுஜி, தாங்கள் எங்களுக்கு எழுதும் கடிதங்களை காலம் காலமாக பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், கடிதங்களை இப்படி வீணான காகிதங்களில் எழுதுகிறீர்களே...' என்று குறைபட்டு கொண்டனர்.
அதற்கு, 'பாருங்கள். உங்களுக்கு கடிதம் தான் முக்கியம். காகிதம் எப்படியிருந்தால் என்ன? உங்களுக்கு விஷயங்கள் தெரிந்துவிட்ட பிறகு காகிதத்தை பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள்?' என்றார், காந்திஜி.
*******
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில், காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில், உணவு நேரத்தில், இரண்டு முறை மணி அடிக்கப்படும். சாப்பிட வேண்டிய ஆசிரமவாசிகள் இரண்டாவது மணி அடிப்பதற்குள் உணவுக்கூடத்துக்கு சென்று விட வேண்டும். இல்லையென்றால், இரண்டாவது மணி அடித்ததும் கதவை மூடி விடுவர்.
ஒரு நாள் காந்திஜியே, உணவருந்த தாமதமாகி விட்டார்.
அவருக்கு பின்னே வந்த உபாத்தியாயர் ஹரிபாபு வராந்தாவில், காந்திஜி நிற்பதைப் பார்த்து லேசாக சிரித்து, 'பாபுஜி, இன்று நீங்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே...' என்றார்.
'சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் தானே...' என்று கூறி புன்னகைத்தார், காந்திஜி.
'சற்று பொறுத்திருங்கள். நீங்கள் அமர ஒரு நாற்காலி எடுத்து வருகிறேன்...' என்று சொன்ன, ஹரி பாபுவை தடுத்தார், காந்திஜி.
'வேண்டாம். ஒரு குற்றவாளி தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். தண்டனை நேரத்தில் எந்த சலுகையையும், வசதியையும் எதிர்பார்க்க கூடாது...' என்றார், காந்திஜி.
நடுத்தெரு நாராயணன்

