
பாண்டி பதிப்பக வெளியீடு, எழுத்தாளர், மு.வேலு எழுதிய, 'இது இந்தக்காலம்!' என்ற நுாலிலிருந்து: க டந்த, 1938ல், சென்னை தங்கசாலைப் பகுதியில் மாநகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட்டார், அண்ணாதுரை. எதிர்த்து போட்டியிடுபவருக்கே அதிக வெற்றி வாய்ப்பு. ஓட்டெடுப்பு நடந்த அன்று, சிவகவி படம் பார்க்க சென்று விட்டார், அண்ணாதுரை. படம் முழுதும் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, அண்ணாதுரை தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, ' கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்களே...' என கேட்டார், நிருபர் ஒருவர்.
அதற்கு, 'என் பாதை நீண்டது; அதில், வெற்றி மட்டும் முக்கியமல்ல...' எனக் கூறினார், அண்ணாதுரை.
இந்த பொறுமை தான், அவரை பிற்காலத்தில் தமிழகத்தின் முதல்வர் ஆக்கியது.
******
கவிஞர், கண்ணதாசன் எழுதிய, 'எனது சுய சரிதம்!' என்ற நுாலிலிருந்து: ஆ ணவத்தால் தொழிலை அலட்சியப்படுத்தியவர்கள் பல பேர் இன்று சோற்றுக்கு அலைகின்றனர். சுமார், 25 ஆண்டுகளாக படவுலகில், சிலரை வளமாகவும், நிரந்தரமாகவும் ஆண்டவன் வைத்திருக்கிறான்.
இசையமைப்பாளர்கள், எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், பாடகர், டி.எம்.சவுந்தரராஜன், பாடகி பி.சுசீலா மற்றும் நான் எங்கள் தொழிலில் காட்டுகிற ஆர்வம், பயம், பணிவு, எங்களையும், கால் நுாற்றாண்டுகளாக வாழ வைத்துள்ளது.
ஒரு பாட்டுக்கு இசை அமைக்கும் போது, ஒரு மெட்டு, இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ பிடிக்கவில்லையென்றால், தம்பி விசுவநாதன், 10 மெட்டுகள் வரை போடுவான். இயக்குனர்களுக்கு பிடித்தாலும், தனக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டே இருப்பான்.
மாமா மகாதேவனும் அதே மாதிரி தான்.
நானும், மற்றவர்களுக்கு திருப்தி ஏற்படும் வரை மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருப்பேன்.
சுசீலாவும், சவுந்தர்ராஜனும் பாட்டு நன்றாக அமையும் வரை அலுப்படையாமல் பாடல்கள் பாடுவர்.
எங்கள் வெற்றியின் ரகசியம் எங்கள் திறமையிலே மட்டும் இல்லை. தொழிலில் உள்ள பொறுப்பு, பயம், ஒவ்வொரு பாட்டும் ரசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை, இந்த தொழில் நம்மை கை விட்டு விடக்கூடாது என்ற கவலை ஆகிய எல்லாமே காரணம்.
*****
'வீ க்லி' பத்திரிகை ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு, எழுத்தாளர், ரபீக் ஜக்காரியாவுடன் சென்றிருந்தார்.
முதல் வரிசையில் காலியாக இருந்த இரு இருக்கைகளில் ஒன்றில் குஷ்வந்த் சிங், அமர்ந்தார். அருகில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்.
அவருடன் பேசிக்கொண்டிருக்கும்படி கூறி விட்டு சென்றார், நண்பர், ரபீக் ஜக்காரியா. தனக்கு அருகில் இருந்த அந்த அழகான பெண், ஒரு நடிகை என்று அறியாத, குஷ்வந்த் புன்னகைத்தபடி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, 'உங்கள் பெயர் என்ன?' எனக் கேட்டார்.
துணுக்குற்ற அந்த பிரபல நடிகை, 'என் பெயர், மீனாகுமாரி...' என்றார். ஹிந்தி பட உலகில் நடிகை, நர்கீஸ் தத் தவிர, வேறு நடிகை யாரையும், குஷ்வந்த் சிங்கிற்கு தெரியாது.
இதனால் நடிகை, மீனாகுமாரியிடம், 'நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என, கேட்டார்.
கடுப்பான நடிகை, மீனாகுமாரி, முகத்தை வெடுக்கென திருப்பி கொண்டார்.
- நடுத்தெரு நாராயணன்

