PUBLISHED ON : மே 31, 2026

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக சிறையில் இருக்கும் போதெல்லாம், சிறை விதிக்குட்பட்டு தான் நடந்து கொள்வார், காந்திஜி. எந்த ஒரு சிறிய விதியையும் மீற மாட்டார். சிறையில் இருந்த அந்த சந்தர்ப்பத்தில், அவருக்கு செய்தித்தாள்களை படிக்க அனுமதி கொடுக்கவில்லை. ஆகவே, செய்தித்தாள் அவருக்கு கொடுக்கப்பட்டதில்லை.
அந்த ஜெயிலுக்கு காந்திஜியை பரிசோதிக்க வந்து போகும் டாக்டர் ஒருவர், பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு செய்தியை, காந்திஜியின் கவனத்துக்கு கட்டாயம் தெரிய வேண்டும் என்று எண்ணினார். எனவே, தான் கொண்டு வந்திருந்த செய்தித்தாள்களை, மறந்து வைத்து விட்டுப் போவதைப் போல, காந்திஜியின் அறையிலேயே அதுவும் அவருடைய படுக்கையின் மீதே வைத்து விட்டுப் போய் விடுவார்.
மறுநாள், டாக்டர் வந்தபோது, படுக்கையில் அமராமல், அறையில் ஒரு மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த, காந்திஜி, 'நீங்கள் செய்த காரியம் என்னால், இரவு முழுவதும் படுக்கையில், படுக்க முடியாமல், இந்த மூலையிலேயே உட்கார்ந்து கழிக்க வேண்டியதாயிற்று...' என்றார்.
அந்த செய்தித்தாள்களை காந்திஜி, எடுத்து படிக்காமல், சிறை விதிக்குட்பட்டு, டாக்டர் வைத்துவிட்டுப் போன நிலையில் அப்படியே இருப்பதை பார்த்து, ஆச்சரியப்பட்டார், டாக்டர்.
******
எழுத்தாளர், கொத்தமங்கலம் சுப்பு ஒரு கட்டுரையில்... நா ன் சிறுவயதில் தெருக்கூத்து ஒன்று பார்த்தேன். அதில், நடித்தவர், 'சந்தன குடுக்கையிலே விசுவாமித்திரன் தோன்றினான்...' என்று பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொடியைத்தான் காரம் போகாமலிருக்கக் குடுக்கையிலே வைப்பர். சந்தனத்தை குடுக்கையிலே வைக்க மாட்டார்களே... அப்படியும் குடுக்கையிலிருந்து எப்படி, விசுவாமித்திரன் தோன்ற முடியும் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.
பதினைந்து ஆண்டுகளுக்குபின், ராமாயணத்தை படித்து வரும்போது, அரண்மனை விழாவிலே சந்தனத் தாம்பூலம் வழங்கி கொண்டிருக்கும் போது, விசுவாமித்திரன் வந்தார் என்பதை படித்தேன். அதன்பின் தான், பதினைந்து ஆண்டுகளாக எனக்கிருந்த சந்தேகம் நிவர்த்தி ஆனது. ஆம்; சந்தனங் கொடுக்கையிலே... என்பதையே, 'சந்தனக் குடுக்கையிலே...' என்று பாடி இருக்கிறார், அந்த நடிகர். 'கொடுக்கையிலே' என்பது 'குடுக்கையிலே' என்று மாறியதோடல்லாமல், 'சந்தனங்' வரவேண்டிய இடத்தில், 'சந்தன' வந்ததாலும் வந்த கூத்து தான் இது.
*****
ஒ ரு பிரபல அரசியல் தலைவர், ராஜாஜியிடம், பேசிக்கொண்டிருந்த போது, ஒரு விஷயத்தை சொன்னார். அந்த பிரபலமான அரசியல் தலைவர், தன்னுடைய சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக, ராஜாஜியிடம் குறிப்பிட்டார்.
உடனே, 'வேண்டாம். சுயசரிதை எழுதுவதை நிறுத்தி விடுங்கள். வேண்டுமானால், மற்றவர்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதட்டும். எனக்கென்று ஒரு எதிர்காலம் இருப்பதாக நான் நம்புவதை போலவே, உங்களுக்கென்றும் ஒரு எதிர்காலம் இருப்பதாக நம்புகிறேன். சுயசரிதம் எழுதினால், நமக்கு ஒரு சுவையான கடந்த காலம் இருந்தது; ஆனால், பிரகாசமான எதிர்காலம் இருக்கப் போவதில்லை என்று நாமே ஒப்புக்கொள்வதாக தான் அர்த்தம்...' என்று கூறினார், ராஜாஜி.
*****
கிரேக்க தத்துவ ஞானி, டயோஜினிஸிடம், 'சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?' என்று ஒருவர் கேட்டார்.
'நீங்கள் ஒரு பணக்காரராக இருந்தால், விரும்பும் போதெல்லாம் சாப்பிடலாம். ஏழையாக இருந்தால், சாப்பாடு கிடைக்கும் போது சாப்பிடலாம்...' என்றார்.
- நடுத்தெரு நாராயணன்
