PUBLISHED ON : ஜூன் 07, 2026

தி.மு.க.,வை ஆங்கிலத்தில், டி.எம்.கே., என்கின்றனர்; ஆனால், ஆரம்பகாலத்தில், இந்தக்கட்சி, தன் பெயரை, டி.பி.எப்., என்று தான் குறிப்பிட்டு வந்தது. அதாவது, 'திராவிடியன் புரோகிரசிவ் பெடரேஷன்' என்பதே இக்கட்சியின் ஆங்கிலப் பெயர். இது எப்படி டி.எம்.கே., ஆயிற்று?
சொன்னால், ஆச்சரியப்படுவீர்கள்... திராவிட இயக்கக்காரர்களுக்கு அப்போது, பகை ஏடாக விளங்கிய, 'இந்து நாளேடு' சூட்டிய பெயர் தான் இது.
கடந்த, 1953ல், மும்முனைப் போராட்டம் ஒன்றை நடத்தியது, தி.மு.க., அப்போது, தமிழக முதலமைச்சராக இருந்த, ராஜாஜியின் புதிய கல்வித் திட்டத்தை, 'குலக் கல்வித் திட்டம் என்று குறை கூறி, அதை எதிர்த்து, ராஜாஜி வீட்டு முன் போராட்டம்...
டால்மியாபுரத்திற்கு, கல்லக்குடி என்று பெயர் மாற்றக்கோரிப் போராட்டம்...
பிரிவினைவாதிகளான திராவிட இயக்கத் தலைவர்களை, 'நான்சென்ஸ்' என்று சொன்ன, நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் நிறுத்தப் போராட்டம் என, மூன்று போராட்டங்களை ஒரே நாளில் நடத்தியது, தி.மு.க.,
இந்தப் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு சம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது, தி.மு.க.,வை, டி.எம்.கே., என்றே கேலியாக குறிப்பிட்டது, 'இந்து' ஆங்கில நாளிதழ்.
அதைக் கண்ட உடன்பிறப்புகள், 'பாருங்க, எப்படி கிண்டல் பண்றான்...' என்று, தி.மு.க., கட்சி நிறுவனர், அண்ணாதுரையிடம் சென்று குறை கூறினர்.
அண்ணாதுரையும், 'நியாயம் தான்... நம் கட்சிக்கு, தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் எதற்கு? அதனால், நம் கட்சிப் பெயரை, நாமும், டி.எம்.கே., என்றே போடலாம்...' என்று கூறிவிட்டார்.
அன்று முதல், தி.மு.க.,காரர்களும், தங்கள் கட்சியை, டி.எம்.கே., என்றே குறிப்பிடலாயினர்.
********
'அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை!' என்ற நுாலிலிருந்து... ஆ ங்கில கவிஞர், டாக்டர் ஜான்சனிடம், 'ஒரு நல்ல கவிஞர், ஒரு நல்ல சமையல்காரைவிட, சமூகத்துக்கு இன்றியமையாதவர் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார், ஒரு நண்பர்.
அதற்கு, 'இந்த நகரத்தில் உள்ள எந்த நாயைக் கேட்டாலும் அது அப்படித்தான் சொல்லும்...' என்றார், ஜான்சன்.
கேள்விகேட்ட நண்பர், 'கப்சிப்!'
******
உலகப் போரில், ஜெர்மன் நாட்டு அதிபர், ஹிட்லர் செய்த அட்டூழியங்களை, ஓவியங்களாக வரைந்து, கண்காட்சி வைத்தார், ஓவியர் பிகாஸோ.
அதை, ஹிட்லரும் வந்து பார்த்தார். கடும் கோபம் அடைந்த ஹிட்லர், பிகாஸோவிடம், 'இதெல்லாம் உங்கள் கைவண்ணமா?' என, கோபத்துடன் கேட்டார்.
அதற்கு, 'இல்லை... இதெல்லாம் தாங்கள் செய்தவை. உங்கள் கைவண்ணம் தான். அதற்கு ஏன் என்னை கோபித்துக் கொள்கிறீர்கள்?' என்று, பிகாஸோ கூற, பதில் ஏதும் கூறாமல், அங்கிருந்து சென்று விட்டார், ஹிட்லர்.
- நடுத்தெரு நாராயணன்
