PUBLISHED ON : ஜூன் 14, 2026

இந்தியாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர், ஹிந்தி பட இயக்குனர், மிருணாள் சென். அவர், மிர்கயா என்ற ஹிந்தி படம் எடுத்தார். அந்தப் படம், பீகார் மாநிலத்தில் உள்ள மலை ஜாதியினரின் வாழ்க்கை முறையை மையக் கருத்தாக கொண்டிருந்தது.
அதில் கதாநாயகனாக நடித்தவரை, மலைவாழ் மக்களிடம் பழக விட்டு, அவர்கள் எவ்வாறு வில்லை பிடித்து, அம்பு எய்து வேட்டையாடுகின்றனர் என்பதை கற்றுக்கொள்ள செய்தார், சென்.
அந்த நடிகரும், அந்த பாத்திரத்தை திறம்பட ஏற்று நடித்தார். காட்சி படமாக்கப்பட்ட போது, குறி தவறாமல் அம்பு எய்து, மானை வீழ்த்தினார். சென்னுக்கு ரொம்ப சந்தோஷம்.
காட்சி படமாக்கப்பட்டவுடன், அங்கிருந்த ஒரு மலை கிராமப் பெரியவரை அழைத்து, கருத்து கேட்டார், சென்.
'நாயகன் வில்லைப் பிடித்த முறை சரியில்லை...' என்றார், பெரியவர்.
'ஏன்?' என்று கேட்டார், சென்.
அதற்கு அந்த பெரியவர் சொன்னார்...
'இங்குள்ள மலைவாழ் மக்கள், நாண் ஏற்றி அம்பு எய்கிறபோது, அம்பின் மீது கட்டை விரல் படாமல் தான் அம்பு எய்வர்; ஆனால், உங்கள் கதாநாயகன் கட்டை விரலை பயன்படுத்தி, அம்பு எய்கிறார்...' என்றார்.
'ஏன் கட்டைவிரலை பயன்படுத்துவதில்லை?' என்று கேட்டார், சென்.
அதற்கு, 'துரோணரை மானசீகக் குருவாக கொண்டு, வில் வித்தையில் தேர்ச்சி பெற்றான், ஏகலைவன். ஆனால், துரோணரோ, அவனுடைய கட்டை விரலை காணிக்கையாகப் பெற்று, அவனுடைய வில் வித்தையின் சாதனைகளை குறைக்க முயன்றார்.
ஏகலைவனின் பரம்பரையில் வந்த நாங்கள் அதை சவாலாக ஏற்று, கட்டை விரலை பயன்படுத்தாமலேயே, வில் வித்தையில் தேர்ச்சி பெற்று வருகிறோம். அதனால், உங்கள் கதாநாயகன் அம்பு எய்ய, கட்டை விரலை பயன்படுத்தியது சரியில்லை...' என்றார், அந்த பெரியவர்.
'ஏகலைவனுக்கு, துரோணாச்சாரியார் இழைத்த கொடுமையை, அந்த மலைவாழ் மக்கள் இன்னமும் மறக்கவில்லை...' என்றார், மிருணாள் சென்.
******
நோபல் பரிசு பெற்ற, வங்காள மொழி கவிஞர், ரவீந்திரநாத் தாகூருக்கு, கல்கத்தாவில் பாராட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் உட்பட பல பெரிய மனிதர்கள் வந்திருந்தனர். மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஒருவர் மட்டும் தமிழில் கையெழுத்திட்டிருந்தார். அவர் இயற்பியலாளர், சர் சி.வி.ராமன்.
*****
இசையமைப்பாளர், சுப்பையா நாயுடுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த ஆபத்தான நிலையில், தன் பிள்ளையை போன்ற இசையமைப்பாளர் எம். எஸ்.விஸ்வநாதனிடம், தன் மனதில் இருந்த ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று விரும்ப, அதைக் கேள்விப்பட்ட விஸ்வநாதன், அவரைக் காண ஓடோடி வந்தார்.
அதற்குள், அவரிடம் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல், சுப்பையா நாயுடுவின் உயிர் பிரிந்து விட்டது. அவர் எழுதி வைத்திருந்த உயிலில், 'எனக்கு குழந்தைகள் கிடையாது... விஸ்வநாதன் என் பிள்ளையாக இருந்து வருகிறான். ஆகவே, நான் இறந்த பின், அவன் தான் எனக்கு கொள்ளி வைத்து, என் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்...' என்று எழுதியிருந்தார்.
தந்தையை சிறு வயதிலேயே இழந்த தனக்கு, தந்தையாகவும், குருவாகவும் இருந்தவரின் இறுதி விருப்பத்தை, இதய சுத்தியோடு நிறைவேற்றினார். மேலும், கணவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்று இருந்த அவரது துணைவியாரை, தன் வீட்டிலேயே தங்க வைத்து, கடைசி காலம் வரை பராமரித்ததோடு அவர் இறந்த போது, தன் கையாலேயே கொள்ளியிட்டு, குருநாதருக்கு நன்றிக்கடன் செலுத்தினார், விஸ்வநாதன்.
நடுத்தெரு நாராயணன்
