PUBLISHED ON : ஜூலை 05, 2026

தி.விப்ரநாராயணன் எழுதிய, 'மகாதேவ் தேசாய் - காந்திஜியின் நிழல்' என்ற நுாலிலிருந்து:
ஏ ப்ரல் 6, 1930ல், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நடைபெற்ற இந்திய சுதந்திர விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஒன்றில், உப்பு எடுப்பது பற்றியும், அன்னிய துணிகளை எரிப்பது பற்றியும் பேசினார், மாகாதேவ் தேசாய். இது, பரபரப்பாக பேசப்பட்டது.
உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்களை ஈவு இரக்கமின்றி அடித்தனர், காவல் துறையினர். இது, காந்திஜிக்கு தெரியவர, அவர் உடனே, மகாதேவ் தேசாயை அழைத்து, மக்களைச் சந்திக்க சொன்னார். மகாதேவ் தேசாயும், உடனே சென்று, காயம்பட்டவர்களை விசாரித்தார். இது, நடந்தது, ஏப்ரல் 10 அன்று.
இதற்காக ஏப்ரல், 23 அன்று தேசாயை கைது செய்து, ஆறு மாத சிறைத்தண்டனையும், 250 ரூபாய் அபராதமும் விதித்தது, பிரிட்டிஷ் அரசு. அபராதம் கட்ட மறுத்ததால் மேலும், ஒன்றரை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு செல்லும் வழியில், மகாதேவ் தேசாய்க்கு, மாலையிட விரும்பியது, மக்கள் கூட்டம். அதற்கு மறுப்பு தெரிவித்து, மக்களை அப்புறப்படுத்தினர், ஆங்கிலேய சிப்பாய்கள்.
அதனால், கோபம் அடைந்த மக்களில் ஒருவர், சிப்பாய்கள் மீது கல்லை எறிந்தார். அது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, சார்ஜென்டின் முகவாய் கட்டையில் பட்டு, காயமடைந்தார்.
கோபம் அடைந்த அவர், மக்கள் கூட்டத்தினரை திட்ட ஆரம்பித்தார். அதற்காக, வருந்தினார், தேசாய்.
அப்போது, 'நீ என்னை கல்லால் அடித்து விடு அல்லது என்னிடம் கல்லைக் கொடு. என்னை நானே அடித்து கொள்கிறேன். இதனால், உனக்கு சமாதானம் ஆகட்டும்...' என்றார், தேசாய்.
மகாதேவ் தேசாயின் சத்தியாகிரக மனைப்பான்மையை புரிந்து கொண்டார், அந்த சார்ஜென்ட்.
பின்னர், சார்ஜென்ட்டின் பெயரை, மகாதேவ் தேசாய் கேட்க, அவரிடமிருந்தே பேனா வாங்கி தன் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தார், சார்ஜென்ட். அதற்குள் சிறை வந்து விட்டது.
'என்னுடைய நினைவாக நீ, அந்த பேனாவை வைத்துக்கொள். கல்லை என்னிடம் கொடுத்து விடு...' என்றார், மகாதேவ்.
சார்ஜென்ட் கல்லை கொடுக்க, அதை துாக்கி எறிந்தார், மகாதேவ்.
பின்னர், 'இதன் மூலம், உன்னுடைய இந்த கசப்பான நினைவுகளை எல்லாம் துாக்கி எறிந்து விடு...' என்றார்.
அதற்கு, 'நான் அதை எப்போதோ மறந்து விட்டேன்...' என்றார், சார்ஜென்ட்.
********
மகாதேவ் தேசாய், காந்திஜியின் செயலாளர். அவருடைய கையெழுத்து மிக நன்றாக இருக்கும். அதேபோல், புரியாத கையெழுத்தையும் சரியாக படித்து விடுவார். இதனால், காந்திஜி அவரை, தனக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுத நியமித்துக் கொண்டார்.
இதனால், காந்திஜிக்கு வரும் கடிதங்களைப் படித்து, அவற்றிற்கு பதில் எழுதுவார், மகாதேவ். சில கடிதங்களை காந்திஜிக்கு படித்துக்காட்டி, அவர் சொல்வது போல் பதில் எழுதுவார்.
ஆனால், இதுபற்றி காந்திஜி இப்படி சொன்னார்...
'என்னால் வேலை செய்ய முடியவில்லை என்று பொருளல்ல. மகாதேவ் இருப்பதால், மேலும் இரண்டு பங்கு வேலைகளை நான் செய்ய முடியும்...' என்றார், காந்திஜி.
- நடுத்தெரு நாராயணன்
