PUBLISHED ON : ஜூலை 19, 2026

முன்னாள் நீதியரசரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான மு.மு.இஸ்மாயில் எழுதிய, வானதி பதிப்பகம் வெளியீடான, 'பழைய மன்றாடி!' என்ற நுாலிலிருந்து: கல்வியாளரும், பேச்சாளருமான, வி.எஸ் .ஸ்ரீனிவாச சாஸ்திரியார், ஆங்கில பேச்சுத் திறனில் வல்லவர். ஒருமுறை, சென்னை மாநில கல்லுாரி தமிழ் மன்றத்தில், தமிழில் பேசுமாறு சாஸ்திரி அழைத்திருந்தார், அப்போதைய தமிழ் மன்ற செயலாளராக இருந்த, மு.மு.இஸ்மாயில்.
'உங்கள் ஆங்கிலப் பேச்சை எல்லாரும் கேட்டிருப்பர். உங்கள் தமிழ்த் திறமையையும் சுவைக்க தான் அழைக்கிறோம்...' என அவரிடம் பேசி, சம்மதிக்க வைத்து விட்டார்.
இஸ்மாயிலிடம், 'சீனிவாச சாஸ்திரி பேசுகிறாராமே... எங்கே பேச போகிறார்?' என்று கேட்டார், ஆங்கிலேயர் ஒருவர்.
அவரிடம், 'உங்களுக்கு தமிழ் மொழி தெரியுமா? அவர் இன்று, 'இங்கிலிஷ் லெக்சர் ஹாலில்' தமிழ் மொழியில் பேச போகிறார். மொழி புரியவில்லை என்றால் அவர் பேசுவதை, நீங்கள் எப்படி புரிந்து கொள்ள போகிறீர்கள்?' என்ற சந்தேகத்துடன் கேட்டார், இஸ்மாயில்.
அதற்கு அந்த ஆங்கிலேயர், 'அவர் எந்த மொழியில் பேசினாலும், அவருடைய பேச்சை கேட்பதே, மிகவும் மகிழ்வு அளிக்கக்கூடியது தான்...' என்று கூற, திகைத்து நின்று விட்டார், இஸ்மாயில்.
******
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தி.விப்ரநாராயணன் எழுதிய, 'மகாதேவ் தேசாய் - காந்திஜியின் நிழல்' என்ற நுாலிலிருந்து: உப்பு சத்தியாகிரகம் நடந்தபோது, அந்த போராட்டத்தை, முன்னாள் பிரதமர், நேருவின் தந்தை, மோதிலால் நேரு ஏற்கவில்லை. 'ஒரு கையளவு உப்பை எடுப்பதன் மூலம் ஆற்றல் வாய்ந்த அரசாங்கத்தை, காந்தி எவ்வாறு எதிர்க்க முடியும்...' என்று நினைத்தார், மோதிலால்.
இருந்தாலும், 'முயன்று பாருங்கள்...' என, மோதிலாலுக்கு, காந்திஜி கடிதம் எழுதியதால், அவர் போலீசுக்கு, 'குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக, நாங்கள் உப்பு எடுக்கப் போகிறோம்...' என, காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பலன், மோதிலால் நேருவை கைது செய்ய, அவர் வீட்டுக்கே வந்து கதவைத் தட்டியது, ஆங்கிலேய காவல்துறை.
கைதாகி செல்லும் முன், காந்திஜிக்கு, தபால் அட்டையில், பின்வருமாறு எழுதி அனுப்பினார், மோதிலால்.
'முயற்சி செய்வதற்கு முன்னால், இந்தத் திட்டம் கவர்ச்சியாக இருக்காது என எண்ணினேன். ஆனால், இதற்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் என்பதை, இப்போது நான் புரிந்து கொண்டேன்...' என்று எழு தினார்.
******
பிரெஞ்சு நாட்டில், பனிரெண்டாம் லுாயியின் ஆட்சிக் கா லம். அரசு அதிகாரி ஒருவர், ஒரு விவசாயியை தாழ்வாக நடத்தி, அவமானப்படுத்தியதாக வழக்கு வந்தது. விசாரித்த போது, அது உண்மையென்றும் தெரிந்தது. அந்த அதிகாரிக்கு, பனிரெண்டாம் லுாயி மன்னன் அளித்த தண்டனை விசித்திரமானது.
வீட்டுச் சிறையில் வைத்து, மூன்று வேளையும் உணவாக மாமிசமும், ஒயினும் மட்டுமே தரச்சொல்லி உத்தரவிட்டான். உடல் வெப்பத்தை மிகுதியாக்கும் இந்த உணவால் துடித்துப் போன அதிகாரி, தனக்கு ரொட்டி தர வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, மன்னன் சொன்னான், 'உனக்கு ரொட்டி கொடுக்கிற விவசாயிகளை அவமதித்த முட்டாளல்லவா நீ... உனக்கு ரொட்டி கிடையாது...' என்றான்.
******
அயர்லாந்து நாட்டை சேர்ந்த நாடக ஆசிரியரான, பெ ர்னாட்ஷா பள்ளியில் படித்தபோது, அவருடைய ஆசிரியர், மில்டனின் புகழ்பெற்ற கவிதையான, 'சொர்க்கம் மீண்டது' என்பதை நடத்திக் கொண்டிருந்தார்.
வகுப்பு மாணவர்களிடம், 'சொர்க்கம் செல்ல ஆசைப்படுபவர்கள் எழுந்து நில்லுங்கள்...' என்றார்.
பெர்னாட்ஷாவை தவிர மற்றவர்கள் எழுந்து நின்றனர்.
பெர்னாட்ஷாவிடம், 'உனக்கு சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா?' என்று கேட்டார், ஆசிரியர்.
'எனக்கும், சொர்க்கம் செல்ல ஆசை தான். ஆனால், இவர்கள் எல்லாம் அங்கு சென்றால், அது சொர்க்கமாகவா இருக்கும்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்
