தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

2


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 27 - அப்துல்கலாம் நினைவு நாள்

ஞா . சந்திரன் எழுதிய, 'ஏவுகணை நாயகன்!' என்ற நுாலிலிருந்து: இந்தியாவின், 11வது ஜனாதி பதியாக, அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 25, 2002ல், பதவி ஏற்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது. பதவி ஏற்பு விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் என்று, அப்துல் கலாமிடமே கேட்க முடிவு செய்தனர், விழா குழுவினர்.

அதன்படி, கலாமிடம் சென்று, 'தாங்கள் எந்த நேரத்தில் பதவி ஏற்க விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார், விழா ஏற்பாட்டாளரான அந்த அதிகாரி.

'எந்த நேரமாக இருந்தாலும் சரி, இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?' என்றார், கலாம்.

'இதுபோன்று உயர் பதவிக்கு வருகிறவர்கள் நல்ல நேரம் பார்த்து தான் பதவி ஏற்பர். அதன்படி விழாவுக்கு தயார் செய்யலாமே, என்று கேட்டேன்...' என்று கூறினார் , அந்த அதிகாரி.

கலாம் சிரித்துக்கொண்டே, 'பூமி, தன்னைத் தானே சுற்றி வருகிறது. அப்படி சுற்றுவதற்கு, 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே சமயம் சூரியனையும் சுற்றி வருகிறது. அதற்கு, 365 நாட்கள் ஆகிறது. நாம் சொல்லும் நேரம், நாள், அனைத்தும் இதன் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. இது சரியாக இயங்கும் வரை, நமக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான்...' என்றார்.

ஜனாதிபதி யாக பதவியேற்ற அடுத்த நாள் , டில்லி ராஜ்கோட்டில் உள்ள, காந்திஜியின் சமாதிக்கு மரியாதை செலுத்த சென்றிருந்தார், கலாம். பொதுவாக, காந்திஜி சமாதிக்கு செல்பவர்கள், காலணி அணிந்து செல்லக்கூடாது. அந்த வழக்கப்படி, ஜனாதிபதி கலாமும், தாம் அணிந்திருந்த, 'ஷூ'களை தாமே கழற்றி வைத்துவிட்டு, உள்ளே சென்றார்.

சமாதிக்கு மரியாதை செய்த பிறகு, திரும்பி வந்த அவர், 'ஷூ'களை தாமே எடுத்து காலில் மாட்டிக் கொண்டார். வழக்கமாக ஜனாதிபதியாக இருப்பவர், இந்த மாதிரி கடமைகளை தானாக செய்ய மாட்டார்கள். ஜனாதிபதியின் உதவியாளர்கள் தான், 'ஷூ'களை அணிவிப்பது வழக்கம். அவர் செய்த காரியம், இதுவரை எந்த இந்திய ஜனாதிபதியும் செய்யாதது.

'பரம்பரை பரம்பரையாக வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்த இந்த, மேல்நாட்டு சம்பிரதாயங்களை உடைத்து விட்டார், கலாம்...' என பேசிக்கொண்டனர், அவருடைய உதவியாளர்கள்.

*********

கர்நாடக மாநிலத்திலிருந்து ஒருவர், தன் 12 வயது மகன் இளம்பிள்ளைவாத (போலியோ) நோயால் கஷ்டப்படுவதாக, கலாமுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரை, மகனுடன், ஹைதராபாத் வருமாறு அழைத்தார், கலாம். நிஜாம் மருத்துவ அறிவியல் நிபுணர்களின் உதவியுடன், வெறும் 400 கிராம் எடையில் ஒரு ஊன்றுகோலை வடிவமைத்து கொடுத்தார்.

போலியோ நோயால் நடக்க முடியாத குழந்தைகளுக்கு கனமில்லாத ஊன்றுகோலை வடிவமைத்தவர், கலாம் தான்.

இதேபோல், இதய ரத்த நாளங்கள் தொடர்பான நோயாளிகளுக்கு, 'பேஸ்மேக்கர்' எனும் இதயத் தமனி அடைப்பு மாற்றும் கருவியை, ராஜ் என்ற மருத்துவருடன் இணைந்து உருவாக்கினார், கலாம்.

***********

அப்துல்கலாமுக்கு பிடித்த மூன்று ஆங்கில நுால்களும் , சுயசரிதை நுால்கள் தான். அவை:

* தத்துவ ஞானி, ஹென்றி டேவிட் தோரோ எழுதிய, 'வால்டன்' என்ற நுால். அதில், 'என்னுடைய பரிசோதனைகள் மூலம் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒருவன் கனவு காண வேண்டும்; அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். அந்தக் கனவு, அவனையும் அறியாமல் நனவாக வந்து அடையும்...' என்று எழுதியிருந்தார், தோரோ. இந்த வாக்கியம், கலாமுக்கு மிகவும் பிடித்தமானது

* சர்சி.வி.ராமன் பற்றி, ஜி.வெங்கட்ராமன் எழுதிய நுால்.

* விஞ்ஞானி சந்திரசேகர் பற்றி, காமேஸ்வர் எழுதிய நுால்.

இம்மூன்று நுால்களையும் அடிக்கடி விரும்பி படிப்பார், கலாம்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us