PUBLISHED ON : ஆக 02, 2026

கடந்த,1861ல், அமெரிக்க ஜனாதிபதி தே ர்தலில், ஆபிரகாம் லிங்கன் நின்ற போது, கிராமப்புறங்களுக்கும் சென்று ஓட்டுக் கேட்டார். அப்படி ஒரு கிராமத்துக்கு சென்ற போது, விவசாயி ஒருவர், தானியங்களை அறுவடை செய்து கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று, 'தாங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்...' என்று கேட்டார், லிங்கன்.
அதற்கு, 'அப்படியே செய்கிறேன். இப்போது நான் சாப்பிடப் போகிறேன். அதுவரை இந்தக் கதிர்களை அறுக்கிறீர்களா?' என்று, லிங்கனிடம் கேட்டார், அந்த விவசாயி.
'ஓ...' என்று சொன்ன, லிங்கன், அவரிடமிருந்து அரிவாளை வாங்கி, கதிர்களை அறுக்கத் தொடங்க, விவசாயி சாப்பிட சென்று விட்டார்.
சாப்பிட்டு வந்த விவசாயி, லிங்கனைக் காணாமல் திகைத்தார். ஆனால், கதிர்கள் அறுக்கப்பட்டு, அழகாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அரிவாளை காணவில்லை.
ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் கலந்து கொள்ள அந்த விவசாயியையும் அழைத்திருந்தார்.
அப்போது, அவரிடம், 'தங்கள் கதிர்களை நான் நன்றாக அறுவடை செய்திருந்தேனா?' என்று ஆவலோடு கேட்டார், லிங்கன்.
'நன்றாகத் தான் அறுவடை செய்திருந்தீர். ஆனால், என் அரிவாளைக் காணவில்லையே... என்ன செய்தீர்கள்?' என்று கேட்டார், விவசாயி.
'உங்கள் பண்ணையில் இருந்த குடிசையின் கூரையில் சொருகிவிட்டு வந்தேனே...' என்றார், லிங்கன்.
விருந்து முடிந்து, பண்ணைக்குத் திரும்பிய விவசாயி, தன் குடிசையின் கூரையில், அரிவாள் சொருக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்.
ஆபிரகாம் லிங்கனின் கடமை உணர்வையும், கண்ணியத்தையும் எண்ணி, ஆச்சரியப்பட்டார், விவசாயி.
*********
வேலை விஷயமாக சென்னைக்கு சென்றிருந்த, சுப்ரமணிய பாரதி, தன் சொந்த ஊரான எட்டயபுரத்துக்கு செல்ல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.
நடைபாதையில் அவர் ஏதோ சிந்தனை வயப்பட்டு நடந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக இடறி விழுந்தார்.
ரயிலுக்காக காத்திருந்த பயணியர், பாரதி கீழே விழுந்ததை பார்த்து, பதறி துடித்து ஓடி வந்தனர்.
அவர்கள் அவரைத் துாக்க முயன்ற போது, அவர்களைத் தடுத்தார், பாரதி.
'என்னை யாரும் துாக்க வேண்டாம். பாரத நாட்டின் இந்தப் புனித மண்ணில், என் தாய் அவதரித்த இந்த மண்ணில், எத்தனையோ மேதைகளும், மகான்களும் பிறந்த இந்த மண்ணில் விழ நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...' என்று சொல்லி, அந்த நடைபாதையில் இங்கும், அங்கும் புரண்டார், பாரதி.
அவரது பேச்சையும், செயலையும் கண்ணுற்ற அங்கிருந்தவர்கள் திகைத்து போயினர். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், பாரதி தன் ஆசை தீர மண்ணில் புரண்டு எழுந்து வந்து, பெட்டியில் ஏறிய பிறகு தான் ரயில் புறப்பட்டது.
******
ஒரு சமயம் கிரேக்க நாட்டு க்கு எதிராக நடந்த போரில், எதிரிகளிடமிருந்து தங்கப் பெட்டி ஒன்றை கைப்பற்றியது, மன்னர் அலெக்சாண்டரின் படை.
அதை, அலெக்சாண்டரிடம் கொண்டு வந்த தளபதி, 'அரசே, விலைமதிப்பற்ற இந்தத் தங்கப் பெட்டியை எங்கே வைப்பது?' என்று கேட்டார்.
உடனே, 'தளபதியாரே, நீங்கள் நினைப்பது போல் இந்தத் தங்கப்பெட்டி ஒன்றும் விலைமதிப்பற்றது அல்ல. இதன் மதிப்பை ஒரு பொற்கொல்லரிடம் கேட்டால், சொல்லி விடுவார். ஆனால், என்னிடம் இருக்கும் புத்தகங்களை பத்திரமாக வைக்க இந்தப் பெட்டியைப் பயன்படுத்துங்கள். அப்போது தான் இந்த தங்கப் பெட்டியின் மதிப்பு விலைமதிப்பற்றது என்று தெரிய வரும்...' என்றார்.
அறிவை விருத்தி செய்யும் புத்தகங்கள் தான் உலகிலேயே விலை மதிக்க முடியாத செல்வம் என்பதை, அலெக்சாண்டரின் மூலம் உணர்ந்த படைத்தளபதி, அப்படியே மெய்சிலிர்த்து நின்றார்.
- நடுத்தெரு நாராயணன்
