தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்பு திருவிதாங்கூர் பகுதியில், மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய பத்மநாபசாமி கோவிலுடன் தொடர்புடைய எட்டு நாயர் பிரபுக்களின் குடும்பங்களைச் சார்ந்த, 'எட்டு வீட்டுப் பிள்ளைமார்' என்னும் தமிழ்க்குடியில் பிறந்தவர், செண்பகராமன் பிள்ளை.

அரசியல் ஆர்வலர் மற்றும் புரட்சியாளர்; 'ஜெய்ஹிந்த்' என்ற சொல்லை உருவாக்கியவரும் இவர் தான்.

முதலாம் உலகப்போரின் போது, ஆங்கிலேயருக்கு எதிராக, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, எம்டன் கப்பல், சென்னை மீது குண்டு வீசியபோது அந்த கப்பலில் இருந்தவர், இவர்.

இவர் ரகசியமாக புரட்சி இயக்கம் ஒன்றையும் நடத்தி வந்தார். இதை அறிந்த பிரிட்டிஷ் அரசு, இவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனாலும், எவரும் அவரைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை.

கடந்த, 1908ல், 'இந்தியா என்று சுதந்திரம் அடைகிறதோ அன்று தான், இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைப்பேன்...' என்று சூளுரைத்து, ஜெர்மனிக்கு சென்றார்.

உலக புகழ்பெற்ற அழகிகளை வைத்து, இங்கிலாந்துக்கு எதிரானவர்களை அடிமைப்படுத்தி வந்தது, பிரிட்டிஷ் அரசு. அதில் ஒரு அழகியின் பெயர், மாதா ஹரி.அவள் அழகில் மயங்காதவர்களே இல்லை என்பர். அடக்குமுறையால் சாதிக்க முடியாத பல காரியங்களை, இவளை வைத்தே சாதித்தது, இங்கிலாந்து அரசு.

செண்பகராமனை பிடிக்கவும் இந்த அழகியை பயன்படுத்தினர். ஆனால், அவளின் சல்லாப வார்த்தைகள், சாதுர்யம் எல்லாம், செண்பகராமனிடம் தோற்றுப் போயின. செண்பகராமனின் துணிவும், அவரது நேர்மையும், ஜெர்மன் மன்னர் கெய்ஸரை வியப்பில் ஆழ்த்தியது.

அச்சமயம் ஜெர்மனியில் முக்கியத்துவம் பெற்ற தலைவராக உருவாகி கொண்டிருந்தார், ஹிட்லர். ஒரு கூட்டத்தில், இந்தியர்களை, மிலேச்சர்கள் என்றும், அவர்கள் தொண்டு செய்யும் அடிமைகளாக இருக்கவே தகுதியானவர்கள் என்றும் இழிவாக பேசினார்.

மிலேச்சர்கள் என்றால் பண்படாத மக்கள் என்று பொருள். உடனே சினம் கொண்ட, செண்பகராமன் பிள்ளை படுவேகமாக எழுந்து உரத்த குரலில், 'ஹிட்லர் மன்னிப்பு கேட்க வேண்டும்...' என்று முழங்கினார்.

செண்பகராமனின் கடுமையான எதிர்ப்பை கண்டு, தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார், ஹிட்லர்.

*******

'இலக்கிய சாதனையாளர்கள்!' என்ற நுாலிலிருந்து: க டந்த, 1942ல், 'கல்கி' பத்திரிகை நடத்திய முதல் சிறுகதை போட்டியில், எழுத்தாளர், க.நா.சுப்ரமணியத்தை ஒரு நீதிபதியாக நியமித்து, 1,500 சிறுகதைகளை, எழுத்தாளர், பகீதரன் மூலம் சிதம்பரத்திலிருந்த அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தது, 'கல்கி' நிர்வாகம். அதை, பகீரதன் நட்ட நடு நிசியில், க.நா.சு., வீட்டுக் கதவை தட்டி, இறக்கிவிட்டு போனார்.

ஆனால், அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு, க.நா.சு., ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார் என சந்தேகித்து, அவரது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை; சிறுகதைகளைத் தவிர!

******

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய, 'கலைஞர் கடிதம் தொகுதி -8!' என்ற நுாலிலிருந்து: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சுதந்திர தின உரையில் கூறியது:

முதன் முதலில், சுதந்திர தினம் கொண்டாடிய ஆகஸ்டு 15, 1947 அன்று, கணக்குத்தீர்த்த நாள். அடுத்தடுத்த ஆண்டுகளில் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 15ம் நாள் கணக்குப் பார்க்கும் நாள்.

ஆமாம், ஆகஸ்ட் 15, 1947ல் அன்னிய ஆதிக்கத்தின் கணக்கை தீர்த்த நாள். அதற்கடுத்து, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர இந்தியாவின் சாதனைகளின் கணக்கை பார்க்கும் நாள் ஆகிறது. எனவே, இந்த நாளில் நாம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, இனி நடக்க வேண்டிய பாதைக் குறித்து உறுதியுடன் அடியெடுத்து வைப்போம்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us