PUBLISHED ON : அக் 11, 2026

அக்., 15 - அப்துல்கலாம் பிறந்த நாள்
கர்னத்தம் ராம.கலியமூர்த்தி எழுதிய, 'அப்துல்கலாமின் அருமையான அறிவுரைகள்!' என்ற நுாலிலிருந்து: செ ன்னை, 'மியூசிக் அகாடமி' அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில், ஆங்கிலத்தில் உரையாற்றியபடி இருந்த, கலாம், தன் பேச்சுக்கு இடையே பூக்கள் பற்றி கூற வந்தவர், 'இப்போது நான் சொல்லப் போவது, நானே அனுபவித்து அறிந்தது. இதை, என் தாய்மொழியிலேயே சொல்ல விரும்புகிறேன்...' என்று கூறி, தமிழில் பேச ஆரம்பித்தார்:
புதுடில்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் தினமும் காலையில் நான், 'வாக்கிங்' செல்வது வழக்கம். வழியெங்கும் பூச்செடிகள் நிறைந்திருக்கும். அந்தப் பூச்செடிகள், யாரும் நம்மை மிதிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் பூத்துக் குலுங்குவதாகத் தோன்றும், எனக்கு.
இதைப் பார்த்தபடி சென்ற எனக்குள், ஒரு கற்பனை குரல் கேட்டதை உணர்ந்தேன்... ஒரு குழந்தைப் பூ, தன் தாய்ப் பூவிடம், 'ஏனம்மா, இந்த மனிதர்கள் ஈவிரக்கமின்றி நம்மை மிதிக்கின்றனர், பறித்து, அழிக்கின்றனர். அப்படியிருந்தும் நீ, ஏன் தொடர்ந்து பூக்களை உருவாக்குகிறாய்; பூத்துக் குலுங்குகிறாய்?' என்று கேட்டது.
இதைக்கேட்ட தாய்ப்பூ சிரித்தபடி, 'நாம் பூத்துக் குலுங்குவதால் தான், மனித மனம் கொடூரமாகிவிடாமல் இருக்கிறது. அங்கு பார் குயில் பாடுகிறது, மயில் ஆடுகிறது. யாருக்காகவும், அவைகள், தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. அதுபோலவே, நாமும் பூத்துக் குலுங்க வேண்டும். மனித மனம் கொடூரமாகி விடாமல் இருக்கவே, நான் பூக்கிறேன். இது, இறைவன் இட்ட கட்டளை!' என்று கூறியது, தாய்ப்பூ.
நமக்காக, இயற்கை பல தியாகங்களை செய்யும்போது, நாமும் இயற்கையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார், கலாம்.
***********
அப்துல்கலாமின் மூன்று தொலைநோக்கு பார்வைகள் என்ன தெரியுமா?
1.சுதந்திரம்: முதல் சுதந்திர போரை நாம் கடந்த, 1857ல் துவக்கினோம். அப்போதே இந்தியா தன் முதல் தொலைநோக்கு பார்வையை பெற்றுவிட்டது!
2.வளர்ச்சி: சுதந்திரம் பெற்ற பின், வளர்ந்த நாடாக முயற்சி செய்கிறோம். இன்னமும் வளரும் நாடாகவே இருக்கிறோம். நம்மை ஒரு வளர்ந்த, சுயசார்புள்ள மற்றும் சுயபலம் பொருந்திய நாடாக மாற்ற வேண்டும்!
3. இந்தியாவின் வீறுகொண்ட எழுச்சி: இந்தியா வீறுகொண்டு எழுந்து பிரகாசிக்க வில்லையென்றால், ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு வலிமை பெறுவோம்.
வலிமையுள்ளவர்கள், வலிமையுள்ளவர்களை தான் மதிப்பர்.
********
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில், ஒரு முறை அப்துல்கலாம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, 14 வயது சிறுமி, அவரிடம், 'ஆட்டோகிராப்' கேட்டாள்.
அந்த சிறுமியிடம், 'வாழ்க்கையில் உன் குறிக்கோள் என்ன?' என்று கேட்டார், கலாம்.
அதற்கு, 'நான் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்...' என கூறியதைக் கேட்டு மலைத்துப் போனார், கலாம்.
நடுத்தெரு நாராயணன்
