PUBLISHED ON : நவ 01, 2026

எழுத்தாளர் மு.அப்பாஸ் மந்திரி எழுதிய, 'நெற்றியடி விஷயங்கள்!' என்ற நுாலிலிருந்து:
கடந்த, 1940ல் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக, வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது ஒருநாள், அவரது மகள் நன்றாக மது அருந்திவிட்டு, லண்டன் வீதியில் ரகளை செய்து கொண்டிருந்தாள்.
இதை, சர்ச்சிலிடம் சென்று தெரியப்படுத்திய, போலீஸ் உயர் அதிகாரி, 'உங்கள் மகளை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை...' எனக்கூறி, கைகளைப் பிசைந்தார்.
இதை கேட்ட சர்ச்சில், 'பிரிட்டிஷ் நீதி, உலகப் புகழ் பெற்றது. அத்தகைய மாண்பு, என் மகளால் கெடக்கூடாது. நீங்கள் உடனே, அவளைக் கைது செய்து, சட்டப்படி தண்டியுங்கள். அதோடு விடக்கூடாது. இந்த விஷயத்தை எல்லா செய்தித்தாள்களிலும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்...' என்றார்.
*******
தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைஞன் ஒருவன், எழுத்தாளர் ஜெயகாந்தனைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றான்.
ஜெயகாந்தனின் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தவரை பார்த்து, 'ஜெயகாந்தன் இருக்கிறாரா?' என்று கேட்டான், அந்த இளைஞன்.
'நீ யாரு?' என்று கேட்டார், வாசலில் நின்றிருந்தவர்.
'சும்மா அவரைப் பார்த்து பேசிவிட்டு போகலாம்ன்னு வந்தேன்...' என்றான், அந்த இளைஞன்.
'அவர் வீட்டில் இல்லை. ஆபீஸ் போயிருக்கார்...' என்றார், வாசல் ஆசாமி.
'ஆபீஸ் எங்க இருக்கு?' என்று கேட்டான், அந்த இளைஞன்.
'இந்த முகவரி உனக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார், வாசல் ஆசாமி.
'விசாரிச்சுக்கிட்டு வந்தேன்...' என்றான், இளைஞன்.
'அதே மாதிரி விசாரிச்சுக்கிட்டே போ...' என்றார், வாசல் ஆசாமி.
இப்படி சொல்லி, அந்த இளைஞனை திருப்பி அனுப்பிய அந்த ஆசாமி யார் தெரியுமா?
ஜெயகாந்தனே தான்!
*****
கடந்த, 1809ல் எதிரிகளுடன் போரிட, ஆயிரக்கணக்கானோர் அடங்கிய குதிரைப் படையை செல்ல ஆணையிட்டார், நெப்போலியன். அப்போது, அவரது தளபதி அவரைத் தடுத்து, 'வழியில் மிகப் பெரிய, 'டான்யூப்' நதி ஓடுகிறது. அதை இதுவரை யாரும் கடந்து சென்றதாக வரலாறு இல்லை. நம் படையாலும் அந்த நதியைக் கடந்து செல்ல முடியாது...' என்றார்.
அதைக்கேட்டு, 'நதி இங்கிருந்து எவ்வளவு துாரத்தில் இருக்கிறது?' என்று கேட்டார், நெப்போலியன்.
இங்கிருந்து, 75 கி.மீ., துாரத்தில் இருக்கிறது...' என்றார், தளபதி.
அதற்கு, 'அதைப் பற்றி இப்போது ஏன் யோசிக்க வேண்டும். நதியை நெருங்கும் போது பார்த்துக் கொள்ளலாம். புறப்படுங்கள்...' என்றார், நெப்போலியன்.
படை புறப்பட்டது. தடையாக இருந்த, 'டான்யூப்' நதியைத் துணிவுடன் கடந்து, எதிரிப்படையைத் துவம்சம் செய்து, போரில் வெற்றி பெற்றார், நெப்போலியன். அவரின் தன்னம்பிக்கையை கண்டு உலகமே வியந்தது.
******
அ மெரிக்க ஜனாதிபதியாக, ஆபிரஹாம் லிங்கன் இருந்தபோது, அவரது நண்பர் ஒருவர் அவரிடம், 'உங்களது எதிரிகளையும், நண்பர்களாக்கிக் கொள்ள ஏன் இவ்வளவு பாடுபடுகிறீர்கள்? நீங்கள் நினைத்தால், அவர்களை எளிதில் அழித்துவிட முடியுமே?' என்றார்.
அதற்கு, 'அவர்களை என் நண்பர்களாக்கிக் கொள்ளுகிறேன் எனும்போதே, என்னுடைய எதிரிகளை அழித்து விடுகிறேன் அல்லவா?' என்றார், லிங்கன்.
நடுத்தெரு நாராயணன்
