PUBLISHED ON : நவ 08, 2026

எழுத்தாளர் மு.அப்பாஸ் மந்திரி எழுதிய, 'நெற்றியடி விஷயங்கள்!' என்ற நுாலிலிருந்து:
ஒருமுறை, புதுடில்லியிலுள்ள அரசு அலுவலகத்துக்கு, 'லிப்ட்' வழியே மேலே சென்றார், முன்னாள் பிரதமர், நேரு. திடீரென, 'லிப்டில்' கோளாறு ஏற்பட்டு, இடையில் நின்று விட்டது.
இதனால், 'லிப்ட்' உள்ளிருந்த நேருவினால், ஒன்றும் செய்யாமல் சும்மா நின்று கொண்டிருக்க முடியவில்லை. அந்த சமயம் அவருக்கு யோசனை தோன்றியது...
'லிப்டின்' மூலையில் சில புத்தகங்களை வைத்தால், இதுபோன்ற நேரங்களில் அவற்றை எடுத்துப் படித்துப் பயன்பெறலாமே என்பது தான் அது.
அதன்படி, 'லிப்டின்' கோளாறு நீங்கி, தன் அறைக்கு வந்தவுடன், அவர் செய்த முதல் காரியம், 'லிப்டில்' சிறிய அலமாரி ஒன்று அமைத்து, அதில் சில புத்தகங்களை வைக்க சொன்னார், நேரு.
கல்லுாரியில் படிக்கும் காலத்தில், மிகவும் குறைவாகவே பேசுவார், நேரு. பிற்காலத்தில் சிறந்த பேச்சாளரானார். இதுகுறித்து அவரே கூறியது...
'மேடை கூட்டங்களில் பேசுவதில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை. லண்டனில், 'கேம்பிரிட்ஜ்' பல்கலையில் படித்த போது, இந்திய மாணவர்கள், 'இந்தியன் மஜ்லீஸ்' என்ற மன்றத்தை தொடங்கி இருந்தனர். அதில், நான் உறுப்பினராக இருந்தேன். அந்த மன்றத்தில் சிறிது பேசியிருக்கிறேன். ஆயினும், கூட்டங்களில் பேசும் ஒரு பேச்சாளனாக நான் இருக்கவில்லை.
'கல்லுாரியில் படிக்கும் காலம் முழுவதும் ஒரு மாணவன், பேசாது இருந்தால், அதற்காக, அவன் இரண்டு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. இந்த அபராதத்தை, இரண்டு ஆண்டுகள் நான் செலுத்தியிருக்கிறேன்...' என்றார், நேரு.
******
டாக்டர் ரா.மோகன் எழுதிய, 'துணுக்கு திரட்டு!' என்ற நுாலிலிருந்து:
இன்று ஒரு கட்சியின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேறு கட்சியில், கூட்டணியில் சேருவது சகஜமாய் உள்ளது. இந்தக் கூத்து முதன்முதலில், ஹரியானா மாநிலத்தில் தான் ஆரம்பித்துள்ளது. அங்கு, கட்சி மாறுவது ஒரு கலையாகவே இருந்துள்ளது.
இதனால், ஒவ்வொரு நாளும், அன்றைய மாநில முதலமைச்சர், தன் கட்சி அலுவலகத்துக்கு போன் செய்து, 'இன்று நம் கட்சியிலிருந்து எத்தனை பேர் வெளியேறினர்?' என, விசாரித்து அறிந்து கொள்வாராம்.
*********
கடந்த, 1976ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், கருணாநிதி. இந்த சூழலில் அவரை சந்திக்கவே பலர் பயந்தனர்.
அத்தகைய சூழலில், கருணாநிதியை சந்தித்தார், எழுத்தாளர் சாண்டில்யன்.
அவரை, ஆர்வமுடன் வரவேற்று பேசினார், கருணாநிதி. இதுபற்றி, சாண்டில்யனிடம் கேட்டனர்.
'நான் ஒரு எழுத்தாளன். நீங்களும் ஒரு எழுத்தாளர். 'முரசொலி'யில், தங்கள் எழுத்து மிகவும் துணிவுடனும், விவேகமுடனும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தைரியமாய் இருங்கள். இதை சொல்லி போகவே வந்தேன்...' என்று கூறி, விடைபெற்றார், சாண்டில்யன்.
இதே, சாண்டில்யன், ஒரு சமயம், கடுமையாக உடல் நலம் குன்றியிருந்த போது, அவர் வீட்டிற்கே சென்று சந்தித்தார், கருணாநிதி.
நடுத்தெரு நாராயணன்
