PUBLISHED ON : நவ 15, 2026

தமிழ் பேரறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய, 'எனது நண்பர்கள்!' என்ற நுாலிலிருந்து:
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஓமந்துாரார் என அழைக்கப்பட்ட, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார், நேர்மையானவர். 'அநீதியை எதிர்க்காதவன் ஆண் மகன் அல்ல...' என, பேசியவர்.
மனதில் துணிச்சலுடனும், உறுதியுடனும் நேர்மையை கையாண்டால், வாழ்க்கையிலும் சரி, பணியிடத்திலும் சரி, அது தரும் மனநிறைவும், மரியாதையும் தனித்துவமானது என, வாழ்ந்தவர். கடந்த, 1947ல் முதலமைச்சராக அவர் இருந்த போது, அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியினரே அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதன் பலனாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், அவர்.
அப்போது, அவரிடம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தது. இன்றைக்கு, அது பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். அவை அனைத்தையும், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நிலையத்திற்கும், உயர்நிலைப் பள்ளி மற்றும் முதியோர் இல்லத்திற்கும் எழுதி, அதை, தொழிலதிபர் நா.மகாலிங்கம் தலைவராக உள்ள குழுவிடம் ஒப்படைத்தார்.
*******
பயணக் கட்டுரையாளர் பிலோ இருதயநாத் எழுதிய, 'இமயமலை வாசிகள்!' என்ற நுாலிலிருந்து:
சீன ஆட்சிக்குட்பட்ட, திபெத் தன்னாட்சி பகுதியில் வாழும் மக்கள், அதிகமாக அலுமினிய பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். காரணம், இமயமலையை ஒட்டி அமைந்துள்ளதால் திபெத்தில் குளிர் அதிகம். 'பாத்திரம் விரைவில் சூடுபிடிக்க வேண்டுமானால், அலுமினிய பாத்திரம் தான் வசதியாக இருக்கும்...' என்கின்றனர்
* திபெத் நாட்டில், வீட்டிற்கு விருந்தாளி வந்தால், ஒரு தட்டில் மிட்டாய்களை கொட்டி அதை அவர்கள் முன் வைப்பர். அவற்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்களை, எடுத்துக்கொண்ட பிறகுதான், பேச ஆரம்பிப்பர். வந்தவர்களை இனிமையாக வரவேற்கவே இந்த ஏற்பாடு
* திபெத்தியர் வளர்ந்து முதிர்வு நிலையை அடையும் முன், ஆறு-ஏழு முறை தங்கள் பெயரை மாற்றிக் கொள்வர்.
குழந்தைக்கு கடுமையான நோய் ஏற்பட்டால், உடனே பெயரை மாற்றி விடுகின்றனர். இதற்கான காரணம் கேட்டால், எமன் வந்தால், 'நாம் உயிரை எடுக்க வேண்டியவன் இவன் இல்லை...' என, திரும்பச் சென்று விடுவானாம்
* திபெத்தியர் வழக்கப்படி, திருமணத்தின் போது, மாப்பிள்ளையை விட, பெண், வயதில் பெரியவளாக இருக்க வேண்டுமாம். கணவனை இழந்த பெண்கள், ஒரு ஆண்டுக்கு பின், வேறொருவரை திருமணம் செய்து கொள்ளலாம்.
*****
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகள், லீலாவதி, எம்.ஜி.ஆரது வளர்ப்பு மகன் சுப்புவின் சகோதரி, ராதா மற்றும் லீலாவதியின் தங்கை, விஜயலட்சுமி ஆகிய மூவரும் மாணவியராக இருந்த பருவத்தில், ஒன்றாகப் பள்ளிக்கு ரிக்ஷாவில் சென்று திரும்புவர்.
அந்த ரிக்ஷாவை ஓட்டியவர், பெயர் இருசப்பன்.
அவரை, இந்த மூவரும், 'இருசப்பா, இருசப்பா...' என்று பெயர் சொல்லியே அழைத்தனர்.
ஒருநாள் அதைக் கவனித்த, எம்.ஜி.ஆர்., மூன்று சிறுமியரையும் அழைத்து, 'நீங்கள் மூவரும் சிறு வயதினர். இருசப்பனுக்கு, 30 வயது இருக்கும்; உங்களை விடப் பெரியவர். அவர், ரிக்ஷா ஓட்டுபவர் என்பதற்காக அவரைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. இனிமேல், அவரை மரியாதையோடு தான் அழைக்க வேண்டும்...' என்று கண்டிப்பாக கூறினார்.
அதன்பின், அச்சிறுமியர், 'இருசப்பண்ணே...' என்று மரியாதையோடு அழைத்தனர்.
நடுத்தெரு நாராயணன்
