PUBLISHED ON : நவ 22, 2026

நவ., 24 - திருக்கார்த்திகை தீபம்
மனிதர்களுக்கான தீபாவளி, ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை கிருஷ்ணரும், சத்யபாமாவும் இணைந்து வதம் செய்த நாள் இது.
இதே போல தெய்வங்கள் ஒன்று கூடி, திருக்கார்த்திகையன்று, கங்கைக்கரையில் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இந்த விழா, 'தேவ் தீபாவளி' எனப்படுகிறது. தெய்வங்களுக்கான தீபாவளி என்பது, இதன் பொருள்.
தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற அசுரர்கள், தங்கள் தவபலத்தால், மூன்று பறக்கும் கோட்டைகளை, பிரம்மாவிடம் பெற்றனர். இவர்கள் இஷ்டம் போல பறந்து எங்காவது ஓரிடத்தில் இறங்குவர். அப்போது, கோட்டையின் அடியில் சிக்கும் நுாற்றுக்கணக்கான மக்களும் மற்ற உயிரினங்களும் இறந்தன. இந்த கொடுமை குறித்து, சிவனிடம் புகார் சென்றது. திரிபுரங்கள் எனப்பட்ட அந்த கோட்டைகளையும், அசுரர்களையும் அழித்தார், சிவன். கார்த்திகை பவுர்ணமியன்று இந்த வெற்றி கிடைத்தது. தங்களைக் காத்த சிவனை வாழ்த்தி, தீபங்கள் ஏற்றி உலகமே கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சி, காசியில் கங்கைக்கரையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் கங்கையிலுள்ள, 84 படித்துறைகளிலும் ஏற்றப்படுகின்றன. இது, 'கின்னஸ்' புத்தகத்தில் சாதனையாக இடம் பெற்றுள்ளது. மேலும், கங்கையில் ஆயிரக்கணக்கான மண் விளக்குகள் மிதக்க விடப்பட்டு, கங்காதேவிக்கு மரியாதை செய்யப்படும். அன்று மாலை, 21 பூஜாரிகள் மற்றும் 24 பெண்கள் இணைந்து, கங்காதேவிக்கு பிரமாண்டமான தீபத்தட்டுகள் கொண்டு தீபாராதனை நடத்துவர். இதை, படகுகளில் சென்று மக்கள் பார்த்து மகிழ்வர்.
கடவுளை, ஒளி வடிவில் வணங்குவது தொன்று தொட்டு வரும் பழக்கம். கற்களைத் தட்டி நெருப்பை உருவாக்கிய காலம் முதலே அதை வழிபட்டான், மனிதன். பிற்காலத்தில், ஆன்மிக வளர்ச்சியால் நெருப்பு வழிபாடு பிரபலமானது. அருட்பெருஞ்ஜோதி என, இறைவனை குறிப்பிட்டார், வள்ளலார். 7ம் நுாற்றாண்டில் கார்த்திகை விழாவை, 'விளக்கீடு' என்றனர். சம்பந்தர், தன் பூம்பாவை பதிகத்தில், 'விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய்' என்று குறிப்பிடுவது, திருக்கார்த்திகை விழாவைத் தான்.
இந்த பழம்பெரும் விழா, தமிழகத்திலும், 'கின்னஸ்' சாதனை படைக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் தீபங்களாகக் காட்சி அளிக்க வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளை பக்தி இயக்கங்கள் முன்நின்று முயற்சிக்குமானால், நெருப்பாய் காட்சி தரும் சிவன், இந்த நிகழ்வின் வெற்றிக்கு உதவுவார்.
— தி. செல்லப்பா
